தட்சிண கைலாசம்
நைமிசாரண்ய வாசிகளாகிய சௌனகர் முதலான முனிவர்கள் கோமதி ஆற்றங்கரையில்
தீர்க்கசத்திரம் என்னும் பெயருடைய யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினார்கள். அப்போது,
சூதபௌராணிகர் அந்த யாகத்தை பார்க்க விரும்பம் தெரிவித்து அங்கு வருகிறார். அதைக்
கண்ட முனிவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். அவரை வரவேற்று, வணங்கி, ஆசனத்தில்
வீற்றிருக்குச் செய்கிறார்கள்.
“சூதக முனிவரே! மாகனுபாவரே! சகல தருமங்களையும் உணர்ந்தவரே! தக்ஷிண
கைலாசம் உத்தர கைலாசம் என்னும் இரண்டும் எல்லா மோட்சங்களையும் அளிக்கும் என்று
கூறி உள்ளீர்கள். அவ்விரண்டின் தோற்றத்தினையும் வைபவத்தையும் கூறுங்கள்” என்று
முனிவர்கள் கேட்கிறார்கள்.
“அன்புடன் கேளுங்கள்! இரு கைலாசங்களின் வரலாறும் மகிமையும்
முற்காலத்தில் பக்திமானகளும் தலைவராகிய திருநந்தி தேவருக்கு சிவபெருமான்
அருளினார். அந்த நந்திதேவர், அதை சனற்குமாரருக்கு உபதேசம் செய்தார். சனற்குமாரர்,
அதை வியாசருக்கு கூறினார். வியாசர் அதை அன்புடன் எனக்குக் கூறினார். நான் அதை
உங்களுக்கு கூறுகிறேன்.
புராணங்கள் பதினெட்டு. அவை, பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம்,
பவிஷியம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்கினேயம், பிரமகைவர்த்தகம், லிங்கம், வராகம்,
காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், காருடம், பிரமாண்டம் ஆகியன. இதில்--
பிரமமும், பதுமமும், பிரமபுராணம்.
ஆக்கினியம் அக்கினி புராணம்.
பிரமகைவர்த்தம் சூரிய புராணம்.
நாரதீயம், பாகவதம், காருடம், வைணவம் என்னும் நான்கும் விஷ்ணு
புராணங்கள்.
சைவம், பவிஷியம், மற்சம், லிங்கம், கூர்மம், வாமனம், மார்க்கண்டேயம்,
பிரமாண்டம், காந்தம், வராகம் எனும் பத்தும் சைவ புராணங்கள்.
இதேபோல உப-புராணங்களும் பதினெட்டு. அவை –
வாமனம், சன்ற்குமாரம், தௌர்வாசம், நாரசிங்கம், சிவதருமம், பவிஷியம்,
நாரதீயம், காபிலம், காந்தம், பிரமாண்டம், காளீகம், ஆமகேசம், சௌமியம், பார்க்கவம்,
சௌரம், பாராசரம், மாரீசம், வாருணம் என பதினெட்டு.
இந்த 18 உப-புராணங்களையும், முனிவர்கள், மக்களின் உலக நன்மைக்காக
அருளினர்.
அங்கம், வங்கம், கலிங்கம், காம்போசம் முதலிய 56 தேசங்கள் உள்ளன. எந்த
தேசத்தில் கல்வி அபிவிருத்தி இல்லையோ, எந்த தேசத்தில் பொருள்வரவு இல்லையோ, எந்த
தேசத்தில் ஆன்ம சுகம் இல்லையோ, அப்படிப்பட்ட தேசத்தில் ஒருநாளேனும் வசிக்கக்
கூடாது. இடையூறு செய்யும் பந்துக்களையும், கோடூரமான முகத்தை உடைய மனையாளையும்,
ஞானமில்லாத குருவையும், நீக்குதல் வேண்டும். அவ்வாறே கருணையற்ற தேசத்தையும் நீக்குதல்
வேண்டும்.
இதன்பாதிப்பால், தேசாந்தரம் செல்வோரும், தீவாந்தரம் செல்வோரும்,
தீர்த்த யாத்திரை செல்வோரும் புண்ணியசாலிகள் ஆவர். தவமும், மரணமும், வாசமும்,
புண்ணிய தேசத்தில் விசேஷம் அடையும்.
மேரு மலையானது, பூமிக்கு நடுவில் இருக்கின்றது. சேது முதல் கைசாலம்
வரை உள்ள இடம் கர்மபூமி என்று அறிந்து கொள்க. இதன் அகலம் ஒன்பதினாயிரம் யோசனை
ஆகும். அதன் நீளம் நூறாயிரம் யோசனை ஆகும். மேருவுக்கு தென்பாகத்தில் சேதுவுக்கும்
இமயத்துக்கும் நடுவில் காமாசலம் வரை உள்ள இடமே பாரத தேசம் எனப்படும். முன்னர், பாரத தேசம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
அரசன் நீதியில், அரசன், உலக பரிபாலனத்துக்காக ஆறில் ஒரு பாகம் திறை
வாங்கினால் அவன் துர்ப்புத்தி உடையோன் ஆவான். அந்த அரசன், அவன் புத்திரன்
முதலியோருடன் பிரமகற்பம் வரையில் நரகத்தையே அனுபவிப்பான். பத்தில் ஒரு பாகம் திறை
வாங்கும் அரசனே நல்ல அரசன். கன்னியரை விற்கும் மூர்க்கர்கள், மகாபாதம் செய்தவர்
ஆவர். அவர்கள் இவ்வுலகம் உள்ளவரை கோரமான நரகத்தில் மூழ்குவார்கள்.
கடனாலும், பூமியை அபகரித்துக் கொள்வதாலும், புத்திரி, பசு இவர்களை
விற்பதாலும், வீண் வைரத்தாலும், வாக்கு தோஷத்தாலும், உண்டாகும் ஐந்து வகையான
பாவங்களினாலும் குலநாசம் ஆகும்.
அயோத்தி, மதுரை, அவந்தி, மாயை, காஞ்சி, துவாரகை, தக்ஷிணகைலாசம்
என்னும் இவ்வெட்டு தலங்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு மோட்சமளிக்கும். குமரி
என்னும் பெரிய கண்டமானது கர்மபூமி எனப்படும். இதில் ஆயிரத்து எட்டு சிவதலங்களும்,
நூற்றி எட்டு விஷ்ணுதலங்களும் இருக்கின்றன. இதில் 18 சிவ சேத்திரங்கள் இவ்வுலகில்
முக்கியமானவை.
(நன்றி: சி.நாகலிங்கம் பிள்ளையின் தக்ஷிண கைலாச புராணம் நூலிலிருந்து)