திருநாவுக்கரசு நாயனார்
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இவரின் பெற்றோர்; தகப்பனார் புகழனார்; தாயார் மாதினியார்;
இவரின் சிறுவயதுப் பெயர் (இயற்பெயர்) மருணீக்கியார்;
இவர் சிறு வயதிலேயே பல கலையும் கற்றார்; இந்தப் பிரபஞ்ச வாழ்வு நிரந்தரமில்லாதது என்று உணர்ந்தார்; எனவே துறவறம் ஏற்று, சமண மதத்தில் இணைந்தார்; அப்போது இவரின் பெயர் தருமசேணர் என்று அழைக்கப்பட்டார்;
அப்போது இவருக்கு கடுமையான வயிற்றுவலி நோய் ஏற்பட்டு அவதிப்பட்டார்; சமண ஆச்சாரியர்கள் இவருக்கு எவ்வளவோ மந்திர வித்தைகளைச் செய்தும் அந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை;
இவருக்கு ஒரு சகோதரி உண்டு: அவரின் பெயர் திலகவதியார்; இவரின் வயிற்றுவலியைக் கேள்விப்பட்டு, அவரை தன்னிடம் அழைத்த திலகவதியார், அவருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்யப்பட்டு அவரின் வயிற்று வலியான சூலை நோயைப் போக்கி இருக்கிறார்; இந்த நோய் தன்னிடமிருந்து நீங்கியதற்கு பரமசிவனே காரணம் என தெளிந்த திருநாவுக்கரசர், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறி விட்டார்; அதுமுதல் சிவ பக்தியில் சிறந்தவராகி, வீரட்டானேஸ்வரரை அடைந்து அவர் சந்நிதானத்திற்கு சென்று அவரை வணங்கி எழுந்து நின்றபோது, அன்புமயமான தமிழ்ச்செய்யுள் பாடும் அற்புதம் கிடைத்தது; அவ்வாறு பாடும்போது தேவராம் பாடினார்: அதனால் அவர் திருநாவுக்கரசு எனப் பெயர் பெற்றார்;
இதைக் கேள்விப்பட்ட சமணர்கள், அரசனிடம், இவர்மீது குற்றம் கூறி, இவரை ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் தூக்கிப் போட்டு விட்டனர்; ஆனாலும், அவர் அந்த கல்லையே தெப்பமாகக் கொண்டு மிதந்தார்;
பின் ஒருமுறை, சுண்ணாம்புக் கால்வாயில் தூக்கிப் போட்டு விட்டனர்; அதிலும் எந்த வித தீக்காயமும் இல்லாமல் பிழைத்து வெளியே வந்தார்; பின்னர் ஒருமுறை இவருக்கு விஷம் கொடுத்தனர்; அதிலும் தப்பித்தார்;
திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பாடல்கள் மொத்தம் ஐந்து லட்சத்து முப்பத்தேழாயிரம் ஆகும்; அவற்றுள் அழிந்தன போக, மீதி உள்ளவை மொத்தம் மூவாயிரத்து நானூற்று எழுபத்தாறு மட்டுமே!
**