Tuesday, September 29, 2015

பாவுடனே கூடிய

தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங்
கோவுடனே கூடிவருங் குருட்டாவு மூர்புகுதும்
பூவுடனே கூடியதோர் புனிதர்முடிக் கணியாமால். 
(சேக்கிழார் நாயனார் புராணம்)

அன்பினால் அடியேன்

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனோர்கைம் மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரசே. (திருவருட்பா)

மண்ணின் நல்ல வண்ணம்

மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. (திருவருட்பா)

 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை இல்லை
கண்ணின் நல்ல துறங் கழமல வளர் நகர்
பெண்ணின் நல்லாளோரும் பெருந்தகை இருந்ததே.

Thursday, September 24, 2015

சேக்கிழார் நாயனார் புராணம்:


சேக்கிழார் நாயனார் புராணம்:

திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவேதியரரனை வழிபட்ட புராணமோ ரிரண்டுகுரைகழன்மா மாத்திர்ரொன் ற்றுவர்முடி மன்னர்குறுநிலமன் னவரைவர் வணிகர்குலத் தைவரிருமைநெறி வேளாளர் பதின்மூவ ரிடையரிருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர்பரதவர்சான் றார்வண்ணார் சிலைமறவர் நீசர்பாணரிவ ரோரொருவ ராம்பகருங் காலே.

திருமறை என்னும் வைதீக மறையவர்களாகி அடியார் புராணம் பதிமூன்று
சிவபிரானுக்கு தொண்டு செய்து முத்தி பெற்ற ஆதிசைவ மறையவர் புராணம் இரண்டு
சத்திக்காநின்ற வீரகண்டை அணிந்த மாமாத்திரர் என்னும் மறையவர் குலத்து அடியவர் புராணம் ஒன்று
அரச வமிசத்தர் ஆகிய அடியார் புராணம் ஆறு; குறுநில மன்னர் அடியவர் புராணம் ஐந்து
வணிகர் குலத்தினராகிய அடியார்கள் புராணம் ஐந்து
இம்மை மறுமைக்குரிய நல்லொழுக்கத்தை உடைய வேளாள மரபின் அடியார்கள் புராணம் பதிமூன்று
இடையர் குலத்தவராகிய அடியார்கள் புராணம் இரண்டு
சாலியர் குயவர் செக்கார் பரதவர் சான்றார், வண்ணார், வில்லையுடைய வேடர் நீசர் பாணர் இம்மரபினராகிய அடியார்கள் புராணம் தனித்தனியே ஒவ்வொன்றும், என மரபறிந்தார் புராணம் ஐம்பத்தாறென உணர்க.


அசுவமேத யாகம்

குரு வசிட்டரின் அருளினால், அவர் ஆசிரமத்தில் இருந்த நந்தினி பசுவின் பாலை திலீபன் மன்னன் குடித்து அதனால் அவன் மனைவி கற்பவதியானாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் அழகில் மயங்கி, அந்த ஆண் குழந்தைக்கு ரகு என பெயரிட்டான். அவனும் வளர்ந்து வாலிபன் ஆனான்.

திலீபன் மன்னர் அசுவமேத யாகம் செய்தான். அதில் குதிரைக்கு பாதுகாப்பாக தன் மகன் இரகுவையே நியமித்தான். ஏற்கனவே 99 அசுவமேத யாகங்கள் நடந்து விட்டன. 100 வது யாகம் முடிந்தால் இந்திர பதவி கிடைக்கும். எனவே இந்த 100-வது அசுவமேத யாகம் நடத்தப்படுகிறது. அதில் அவிழ்த்து விட்ட குதிரையானது தன் இஷ்டமாக சுற்றித் திரிந்தது. அதை திலீபன் மன்னின் மகன் இளவரசன் இரகு காவல் காக்க பின்னே சென்றான். திடீரென்று இரகுவின் கண்கள் மங்கிவிட்டன. அந்த நேரத்தில் அந்த குதிரையை இந்திரன் கடத்திச் சென்று விட்டான். அந்த செய்தி தெரியாமல் இரகு தவிக்கிறான். அங்கு நந்தினி பசு வருகிறது. அந்த பசுவின் சிறுநீரில் கண்களைக் கழுவிக் கொண்டான் இரகு. அப்போது அவனின் கண்கள் கூர்மை அடைகின்றன. அவன் ஆகாயத்தில் பார்க்கிறான். அங்கு இந்திரன் இந்த குதிரையை கொண்டு சென்ற விபரம் தெரிகிறது.

உடனே இரகுவுக்கு கோபம் வருகிறது;
"இந்திரனே! எல்லா யாகத்திற்கும் சென்று நீ அவிபாகம் கொடுப்பாய்; அப்படி இருக்கும்போது, என் தந்தை திலீபன் மன்னனின் யாகத்தை கெடுக்கத் துணிந்தாய். நீயே நீதி தவறினால், வேறு யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது? உலகம் உன்னை இகழாதா? எனவே எங்களின் யாகக் குதிரையை எங்களிடம் கொடுத்துவிடு.
.... தொடரும்.....


நந்தினி பசுவைப் பார்க்கிறான்


அரசனே திலீபா! உனக்குத்தான், அழகிய சரீரம், இளமை, அரசியல் முதலிய சிறப்புகள் எல்லாம் உள்ளன. நீ இறந்து விட்டால், இந்த நந்தினி என்னும் பசு மட்டும்தான் உயிர் பெற்று எழும்; ஆனால், உன்னை நம்பியுள்ள மக்கள் எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கி வருந்துவர். எனவே நீ இறக்க வேண்டாம். இந்த பசுவே இறந்துவிட்டுப் போகட்டும். நீ உன் மக்களைக் காப்பாற்ற உயிருடன் இருந்தாக வேண்டும்; உன்னால் இந்தப் பசுவைக் காப்பாற்ற முடியவில்லை என்று உன் குரு வசிட்டரிடம் சொல்லிவிடு; உன்னிடம்தான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் உள்ளனவே! அதில் ஏதாவது ஒன்றை உன் குருவுக்கு பால் கொடுக்கும் பசுவாகக் கொடுத்துவிடு. அவருக்கும் உன்மீது கோபம் வராது.
"சிங்கமே, நான் ஒரு சத்திரியன். சத்திரியன் என்றால் சதத்தினின்று காப்பவன் என்று பொருள். சத்திரியனாக நடவாத அரசனின் அரசியல் பயன்தராது. கோடி பசுக்கள் கொடுத்தாலும் என் குரு வசிட்டருக்கு கோபம் தணியாது. நீ நினைப்பதுபோல, இந்தப் பசு சாதாரண பசு அல்ல; காமதேனுவின் கன்று; எனவே என் உயிரைக் கொடுத்தாவது இந்தப் பசுவை மீட்பேன். இது ஆசிரமத்துக்கு திரும்பிச் செல்லவில்லை என்றால், அதன் கன்று, தன் தாயைக்  காணாமல் வருந்தும். என் குருவின் யாகமும் பால் இல்லாமல் வழுவும். இதை காக்கும்படி என்னிடம் ஒப்படைத்த என் குரு முன்னால், இந்தப் பசு இல்லாமல் எப்படிப் போய் நிற்பேன். என் உடம்பு அழிந்தால் என்ன. இந்த உடம்பு, மண், நீர், முதலிய பஞ்சபூதங்களைக் கொண்ட மாய உடம்புதான். இது போலிதான். இதன்மேல் எனக்கு விரும்பம் இல்லை. மேலும், இவ்வளவு நேரம் நாம் பேசிக் கொண்டிருப்பதால், நாம் இருவரும் நண்பர்கள் ஆகி விட்டோம். எனவே நண்பனின் வார்த்தையை நீ மீறக்கூடாது என்று கெஞ்சினான்.
சிங்கமும், சரி என்று சொல்லிவிட்டது. உடனே அது நந்தினி பசுவை விட்டுவிட்டது. பசு எழுந்தவுடன், திலீபன் மன்னன் கீழே விழுந்து மாண்டான்.
இதை மேலிருந்து பார்த்த வித்தியாதரர்கள் மலர் மாரி பொழிந்து, "மகனே நீ எழுந்திரு" என்று அருளினர். அரசனும் உயிருடன் எழுந்து விட்டான்.
அரசன் திலீபன், நந்தினி பசுவைப் பார்க்கிறான்.
நந்தினி அரசனிடம் பேசுகிறது;
"இந்த மாயமெல்லாம் நானே செய்தேன்; வசிட்டர் மகிமையால் யாரும் என்னை நெருங்கி விட முடியாது. அரசனே நீ குருவின் மீது வைத்திருக்கும் பக்தியும், என்னிடம் வைத்திருக்கும் அன்பும் என்னை மகிழ்விக்கின்றன. நீ என்ன விரும்புகிறாய் என்று என்னிடம் கேள். நான் பால் மட்டும் கொடுக்கும் பசு என்று எண்ணிவிடாதே. விரும்பிய பொருள்களை எல்லாம் கொடுப்பேன். எனக்கு காமதேனு என்று பெயருண்டு." (காமம் என்றால் விருப்பம்; தேனு என்றால் கொடுப்பது);
"தாயே! என் குலம் விளங்க எனக்கு ஒரு புத்திரர் வேண்டும்; அந்தப் புத்திரர் என் மனைவி சுதக்கிணையிடம் தோன்ற வரம் தர வேண்டும்."
"அவ்வாறே வரம் தந்தேன்; என் பாலை, ஒரு தொன்னையில் கறந்து நீ குடிக்க வேண்டும்."
"உன் கன்றும் குடித்து, என் குருவின் யாகத்துக்கும் உபயோகமாகி, மீதம் உள்ள பாலை நான் குடிக்க விரும்புகிறேன்"
இருவரும் ஆசிரமம் திரும்புகின்றனர்.
அவ்வாறே அங்கு பாலைக் குடித்து மனைவியுடன் உறங்கி, காலையில் குருவின் அருள் பெற்று, நந்தினியையும் வணங்கி நாடு திரும்புகிறான்.
.... தொடரும். ....


Wednesday, September 23, 2015

நந்தினி

திலீபன் மன்னனுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று, மந்திரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காட்டில் இருக்கும் தன் குலகுருவான வசிட்டரை பார்க்கச் சென்றான். அவன் தேவலோகம் சென்ற போது கற்பக மரத்தின் நிழலில் படுத்திருந்த காமதேனு பசுவை வணங்காமல் வந்ததால், அது சாபம் இட்டதால், தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை வசிட்டர் மூலம் தெரிந்து கொண்டான்; எனவே அதற்குப் பரிகாரமாக காமதேனுவின் கன்றான நந்தினியை வணங்கும்படி கேட்டுக் கொண்டார்.

காமதேனுவையும், அதன் கன்று நந்தினியையும் தேடுகிறான். ஆனால், அவைகள் அங்கு இல்லை; பாதாளத்தில் வருண பகவான் நடத்தும் தீர்க்க சத்திர யாகத்தில் நின்கின்றனவாம். "நந்தினியை பக்தியோடு வழிபட்டால்  உனக்கு புத்திரப்பேறு கிடைக்கும்" என்று வசிட்டர் வழி சொல்லியுள்ளார்.

வசிட்டர் வேண்ட, அங்கு காமதேனு பசுவும் அதன் கன்றான நந்தினியும் வந்தது.

"அரசனே! நீ பரிசுத்தமானவானாய் ஆனாய். இலை, காய், கனி, முதலியவற்றை உண்டு விரதம் பூண்டு இந்த நந்தினியை வழிபாடு செய். இந்த நந்தினி விடியற்காலையில் புல் மேய்வதற்கு காட்டுக்குப் போகும். அங்கு நீயும் போ. அது நின்றால் நீயும் நில். அது படுத்தால் நீயும் படு. அது நீர் குடித்தால் நீயும் குடி. உனது மனைவியும் விடியற்காலையில் எழுந்து இந்த நந்தினியை வழிபட்டு அதை ஆசிரம எல்லைவரை கூட்டுக் கொண்டு போய் விட்டு வரச் சொல். சாயங்காலத்தில் அது திரும்பி வரும்போது உன் மனைவி அதை ஆசிரம எல்லையில் நின்று வழிபட்டு ஆசிரமத்துக்கு அழைத்து வர வேண்டும். இவ்வாறு வழிபடுங்கள். நந்தினி அதில் மகிழ்ந்து உங்களுக்கு அருள் செய்யும். அப்படி செய்தால், உங்களுக்கு புத்திர உற்பத்தி உண்டாகும்" என வசிட்டர் கூறினார்.

அப்படியே அரசனும் செய்து வந்தான்; அவன் மனைவியும் செய்து வந்தாள்; 21 நாட்கள் ஓடிவிட்டன. 22ம் நாள். அன்று அந்த நந்தினி, அரசனின் அன்பை பரிசோதிக்க நினைக்கிறது. மலைச் சாரலை அடைகிறது. அங்கு இளம் புற்களை மேய்ந்து கொண்டே ஒரு குகைக்குள் புகுகிறது. நந்தினியை விட்டுவிட்டு அவன் மலையின் சாரலை ரசித்துக் கொண்டிருக்கும்போது அது குகைக்குள் புகுந்து விட்டது. யார் இந்த நந்தினிக்கு தீங்கு செய்ய நினைப்பான் என மன்னன் அலட்சியமாக இருந்துவிட்டான்.

அந்த நேரத்தில் அங்கு ஒரு சிங்கம் ஒன்று, திடீரென்று பாய்ந்து அந்த நந்தினியைப் பிடித்துக் கொண்டது. நந்தினி கீழே விழுந்தது. அரசன் இதை பார்த்து, தன் வில்லை எடுத்து அம்பை தொடுக்கிறான். ஆனால், அவன் தன் கைகளை இயக்க முடியவில்லை. திகைத்து நிற்கிறான்.
இதை சிங்கம் பொறுமையாகப் பார்க்கிறது. அரசனைப் பார்த்துச் சில வார்த்தைகளைச் சொல்கிறது.

"அரசனே! நீ எடுத்த முயற்சிகள் போதும். நீ அம்பை எய்திருந்தாலும் அது என்னை தொட்டிருக்காது. வலிமை மிக்க தெய்வம் வந்து என்னுடன் போரிட்டாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் சிங்கம் இல்லை. சிவனுக்கு சேவை செய்யும் கும்போதரன். நான் ஒரு பூதத்தலைவன். இங்கு நிற்கும் தேவதாரு மரத்தைப் பார். அதற்கு, உமாதேவியார் நீர் வார்த்து தம் பிள்ளையைப் போல் வளர்த்தார். இதனை காட்டு யானைகள் வந்து சொறிந்து கொள்வதற்காக தேய்த்து, அதனால் அந்த மரத்தின் தோல்கள் தேய்ந்து விட்டன. அந்த மரத்துக்கு காவலாக சிவன் என்னை இங்கு அனுப்பி உள்ளார். இங்கு வெகுகாலம் காவல் இருக்கிறேன். ஒரு பிராணியும் வரவில்லை; பசியாக இருக்கிறது. இன்று இந்த பசு வந்தது. எனவே அதை அடித்து உண்ண நினைக்கிறேன். எனவே உன்னால் என்னை தடுக்க முடியாது. உன் குரு சொன்னபடி இதை காப்பாற்றவும் முடியாது.

"தோல்வியடைந்த நான் சொல்வது உனக்கு சிரிப்பாகவே இருக்கும். என்னை உணவாக எடுத்துக் கொள். உன் பசியைப் போக்கிக் கொள். இந்த பசுவை விட்டுவிடு. மாலையில், என் தாய் வந்து எனக்கு பால் தரும் என நினைத்து இருக்கும் இதன் கன்று என்ன பாவம் செய்தது. என் குருவுக்கும் இது பால் தரும். எனவே இதை விட்டுவிடுவாயாக்.
தொடரும்......



Tuesday, September 22, 2015

இரகுவம்சம்

இரகுவம்சம்
திலீபனும் அவன் மனைவி சுதக்கிணையும்;
விவச்சுவான் என்னும் ஆதித்தனின் புத்திரன் வைவச்சுதன் என்னும் அரசன்.
அவன் மரபில் வந்தவன் திலீபன் என்னும் அரசன் இருந்தான். இவன் பிறந்ததை, பாற்கடலில் சந்திரன் வந்து உதித்ததைப்போல இருந்ததாம். இவன் மிகப் பெரிய பலசாலியாம். இவனுக்கு மகத மன்னனின் புதல்வியான சுதக்கிணை என்பவள் மனைவியானாள்.

திலீபனுக்கு குழந்தை ஏற்படவில்லை;
திலீபனுக்கும் அவன் மனைவி சுதக்கிணைக்கும் வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லையாம். இதனால் திலீபன் வருந்தி பெருந்துயர் கொண்டானாம். எனவே அரசாட்சியை அவனின் மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டில் இவனின் குலகுருவான வசிட்ட முனிவரிடம் சென்றுள்ளான். அங்கு அவரை வணங்கினான். அவரும் அவனை வரவேற்று உணவளித்து உரையாடினார். 

"உங்கள் அருளால் எனக்கு எந்தக் குறையும் இல்லை; எனக்கு பகையே இல்லை; நாட்டில் பஞ்சம் இல்லை; ஓமகுண்டத்தில் மக்கள் சொரிந்த நெய்தான் மழையாகப் பெய்து, பயிர்கள் வளர்கின்றன; எனவே மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்; இவையெல்லாம் இருந்து, எனக்கு மட்டும் புத்திர பாக்கியம் இல்லை; எனக்கு புத்திரர் இல்லை என்பதால், உலகம் என்னை இகழ்வாகப் பார்க்கிறது; எனக்கு பின்னர் எனக்கு பிண்டம் கொடுக்க மகன் இல்லை; என் பிதிரர் நான் கொடுக்கும் பிண்டத்தையும் நன்றாக உண்ண மறுக்கின்றனர்; நான் கொடுக்கும் தருப்பண நீரையும் இனிக் கொடுக்க ஆளில்லையே என்று அவர் வருந்தி, அவர்கள் விடும் பெருமூச்சால் அதிகம் சூடாகி விடுகிறது, அதையே அவர்களும் அருந்துவர்; தவமும் தானமும் என்று சொல்வதுபோல, இம்மை சுகம் மறுமை சுகம் என்னும் இரண்டையும் ஒருங்கு கொடுக்கும் புத்திரப்பேர் இல்லாத என்னை உங்கள் முன்னே, காயாமரம் போல நிற்கிறேன். எனவே என்னை இந்த பிதிரர் கடனில் இருந்து எப்படியாவது என்னை நீக்கி அருள் புரியவேண்டும்" என்று குருவிடம் கேட்கிறான். 

வசிட்டர்:
"அரசனே! நீ முன்னர் ஒரு நாள், தேவலோகம் போய் இந்திரனைக் கண்டு திரும்பி வரும் வழியில் கற்பக மர நிழலில் காமதேனு படுத்திருந்தது. நீ, அதை வணங்காமல் மனைவியின் ருதுகாலத்தையும் புத்திர உற்பத்தியையும் நினைவிற்கொண்டு விரைவில் வந்தாய்; அதனால் அந்த காமதேனு கோபம் கொண்டு "சந்ததியை நினைத்து, என்னை வணங்காமல் செல்கிறாயா; அரசனே! என்னுடைய சந்ததியை வணங்காமல் உனக்கு சந்ததி கிடைக்காது" என்று சாபம் இட்டது. 

வணங்க வேண்டியவர்களை வணங்காமல் வந்தால் இப்படியான நிந்தனைகளால் தடை ஏற்படும்.