Saturday, August 13, 2016

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பிறரைத் தன் வசப்படுத்த)
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின்அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே!
தெளிவுரை
செந்நிறத் திருமேனியை உடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் பதிந்திருப்பது உன்னுடைய பொன்னான திருவடியே ஆகும்; என் மனத்திலே எப்பொழுதும் பதிந்திருப்பது உன்னுடைய திருமந்திரமே ஆகும்! உன்னையே தியானிக்கும் உன்னுடைய அடியார்களுடன் கலந்து நான் தினந்தோறும் முறைப்படி பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம நெறியே ஆகும்;
(பன்னியது=திரும்பத் திரும்ப பேசுவது)

(நன்றி: திரு.வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)


அபிராமி அந்தாதி 5-ம் பாடல்

அபிராமி அந்தாதி 5-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(மனக் கவலை தீர)
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே!
தெளிவுரை
அம்மா அபிராமியே, உயிர்களிடத்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே! செப்பை உவமையாகக் கொண்ட தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியே! நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமான் அருந்திய விஷத்தை அமுதம் ஆக்கிய அம்பிகையே! தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் அழகியே! அனைத்து இடங்களிலும் நிறைந்து இருப்பவளே! தாமரை மலர் போன்ற உன்னுடைய மென்மையான திருவடிகளை என் தலை மீது வைத்துக் கொண்டுள்ளேன்;
(அம்புயம்=தாமரை; அந்தரி=அந்தரத்தில் இருப்பவள்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(உயர்ந்த நிலையை அடைய)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
தெளிவுரை
மனிதர்களும், தேவர்களும், மரணமில்லாத முனிவர்களும், வந்து தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களை உடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றை மலரையும், குளிர்ச்சியைத் தருகின்ற இளம்பிறைச் சந்திரனையும், பாம்பினையும், கங்கையையும் அணிந்து விளங்குகின்ற புனிதராகிய சிவபெருமானும் நீயும் என் மனத்தில் எப்பொழுதும் தங்கி அருள்புரிந்து ஆட்சியருள வேண்டும்;
(மாய=மரணமில்லாத; புந்தி=மனம்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை என்ற நூலிலிருந்து)