Thursday, December 8, 2016

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து...

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து
கவினுறு கடிதடம் முத்துத்
தாமமும் சாந்தும் அணிகளும் சுமந்த
தனபரம் தண்விரை நாநத்
தாமதி சுகந்த அளகமென்று இன்ன
ஆகிய தாங்கும் அணி இழையார்
ஏமரு வேனில் தாபம் அது அகற்றி
இளைஞருக்கு இன்பம் ஊட்டுவரால்!
 (இருது சங்கார காவியம்) பாடல்-4

காஞ்சி = மேகலை
கடிதடம் = அரை
தாமம் = மாலை
அணி = ஆபரணம்
விரை = வாசனைப்பொடி
நாநம் = ஸ்நானம், நீராடல்
ஏமரு = கலக்கத்தை ஏற்படுத்துகின்ற
தாபம் = வெப்பம்



விரைதவழ் உற்று விழைதகு மாடத்து...

விரைதவழ் உற்று விழைதகு மாடத்து
உம்பரும் இன்னனார் முகத்து
விரைதரு சுவாசத்து அசைவுறு மதுவும்
மேவும் இவ் வேனிலம் போது
நிரை தரு யாமத்தின் பினை மூட்ட
நேர் வரு வீணை இன்னிசையும்
புரை தவிர் காதல் காளையர்க்கு எல்லாம்
போகமும் நுகர்ச்சியும் தருமால்!
(இருது சங்கார காவியம்) பாடல்-3

விரை = வாசனை
விழைதகு = விரும்பத்தக்க
உம்பர் = மேல் நிலம்
மாடத்து உம்பர் = நிலா முற்றம்
நேர்வரு = ஏற்றதாகிய


மண்டிய நீல படலம் அது அகற்றி...

மண்டிய நீல படலம் அது அகற்றி
மதிதிகழ் நிசிகளும் தாரை
கொண்டியல் நீராவி மண்டப வகையும்
குளிர்மணி விதங்களும் சாந்தின்
அண்டிய தேய்வை செறிபனிக் குழம்பும்
அடுத்த இவ் வேனிலங் காலை
வண்டிவர் கோதாய் மாந்தருக்கு இதமாய்
மனமகிழ் பூப்பவாய்ந்தனவே!
 (இருது சங்கார காவியம்) பாடல்-2

நீலபடலம் = கரிய முகிற் கூட்டம்
நிசி = இரவு
தாரை கொண்டு இயல் = நீர்த்தாரையைச் சொரியும் குளியல் மண்டபம்
தேய்வை = அரைத்த சந்தனம்
வண்டிவர்  கோதாய் = வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணே!



செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்...

செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்
தெண்ணிலா மனமகிழ் விளைப்பப்
பொங்கதி தாபம் போக்கிய பல்காற்
பூம்புனலாடலும் பொலியத்
தங்கு திவாவின் கடை இனிதாகத்
தணிவுறக் காதலின் வேகஞ்
சங்கதிர் முன்கைத் தையனல்லாய் காண்
தழல்முது வேனில் சார்ந்ததுவே.
(இருது சங்கார காவியம்) பாடல்-1

செங்கதிர்ச்செல்வன் = சூரியன்
தெறுகரம்  = சுடுகின்ற கிரணம்
போக்கிய  = போக்கும்படி
தங்கு = நிலைத்த, நீண்ட
திவா = பகல்
கடை = இறுதி
தழல் = சுடுகின்ற
சங்கு அதிர் = சங்கு வளையல் ஒலிக்கின்ற
தையல் நல்லாய் = பெண்ணே