Wednesday, March 2, 2016

கந்தரலங்காரம்-53

கந்தரலங்காரம்-53

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்
பாடிக் கசிந்து உள்ள போதே கொடாதவர் பாதகத்தால்
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணாக்கிமாய்ப்பவரே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 53)

(வேடவப் பெண்ணின் கொங்கையை விரும்பிய குமரனே! உண்மையான அன்பினால், உன்னைப் பாடி, கசிந்து, இருக்கும்போது கொடுக்காதவர், பாதக வழியில், தாம் தேடிப் புதைத்து வைத்த பொருள்களை, திருட்டில் கொடுத்துவிட்டு, திகைத்து, உடல் இளைத்து, வாடி, வாட்டம் என்னும் துக்கம் அடைந்து, வாழ்நாளை வீணாக்கி அழிப்பார்கள்!)

வேடிச்சிகொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக்கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப்புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக்கிலேசித்து வாழ்நாளை வீணாக்குமாய்ப்பவரே.
(கந்தரலங்காரம்-53)


கந்தரலங்காரம்-52

கந்தரலங்காரம்-52

சிகர அத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந் தமிழால்
பகர் ஆர்வமீ பணி பாச சங்கராம பணா மகுட
நிகராட்சம் பட்ச பட்சி துரங்க ந்ருபாகுமரா
குக ராட்ச்ச பட்ச விட்சோப தீர குணதுங்கனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 52)

(சிகரம் என்னும் மலையையே கூறிட்டுப் பிளந்த வேலையும், செஞ் சேவலையும், செம்மையான தமிழால் சொல்லும் ஆர்வத்தை கொடுப்பாயாக! பாசக் கயிறு போன்று, பாம்பின் மகுடத்தை தூள் ஆக்குகிற நிகரில்லா ராட்சச பறவையின் சிறகுகளைக் கொண்ட மயில் வாகனத்தை உடையவரே! குகையில் வசிக்கும் இராட்சசர் மீது வெறுப்பை காட்டுபவனே! தீர வீரனே! குணமுள்ளவனே!)

சிகராத்ரிகூறிட்ட வேலுஞ் செஞ்சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணிபாச சங்கராம பணாமகுட
நிகராட்சம பட்சபட்சி துரங்கந்ருபாகுமரா
குகராட்ச்சபட்ச விட்சோபதீர குணதுங்கனே.
(கந்தரலங்காரம்-52)


கந்தரலங்காரம்-51

கந்தரலங்காரம்-51

மலை ஆறு கூற் எழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்கே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரரங்காரம் பாடல்-51)

(மலையே ஆறு கூறுகளாக விழும்படி வேல் ஏறிந்தவனை வணங்கி, அன்பின் நிலையான பெரும் தவத்தை செய்வீர்! உம்மைத் தேடி வரும் தொலையா வழிக்கு கட்டுச் சோறு எப்படி நல்ல துணையாக இருக்குமோ அதுபோல செய்யும் மா தவம் துணை செய்யும். பசி என்று கேட்டவனுக்கு, இலைச் சாப்பாடாக இருந்தாலும் சரி, வெந்தது எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பகிர்ந்து உண்ணுங்கள்!)

மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கியன்பி
னிலையான மாதவஞ் செய்குமினோ நும்மைநேடிவருந்
தொலையாவழிக்குப் பொதிசோறுமுற்ற துணையுங்கண்டீ
ரிலையாயினும் வெந்ததேதாயினும் பகிர்ந்தேற்றவர்கே.
(கந்தரலங்காரம்-51)


கந்தரலங்காரம்-50

கந்தரலங்காரம்-50

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்தது அஞ்சல் என்பாய் பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயிலேறும் இராவுத்தனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-50)

(திருப்புகழைப் படித்து போற்றுபவன்; கூற்றுவன் என்னும் எமன் வந்து பாசக் கயிற்றை வீசிப் பிடிக்க வரும்போது, "அஞ்சாதே" என்று வந்து நிற்பாய்! பெரிய பாம்பில் நின்று கொண்டு நடிக்கும் பிரானான திருமாலின் மருமகனே! கொடுமையான சூரனை நடுங்க வைக்க, வெற்பு என்னும் பெரும் மலையையே இடித்து கலாபத் தனி மயிலில் ஏறிவரும் இராவுத்தனே!)

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுது வந்தஞ்சலென்பாய் பெரும்பாம்பினின்று
நடிக்கும் பிரான் மருகா கொடுஞ்சூரனடுங்க வெற்பை
யிடிக்குங் கலாபத்தனி மயிலேறு மிராவுத்தனே.
(கந்தரலங்காரம்-50)


Tuesday, March 1, 2016

கந்தரலங்காரம்-49

கந்தரலங்காரம்-49

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம்
சாரில் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வமெல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-49)

(சூரன் மீதும், கிரி என்னும் மலைமீதும் கதிர்வேலை எறிந்தவனான உன் தொண்டர்களின் கூட்டத்தை சார்ந்து இருப்பதைத் தவிர வேறு கதி இல்லை என்று காண்பாயாக! தண்டு தாவடி என்னும் படைகளுடன் போய், தேரிலும், கரி என்னும் யானையிலும், பரி என்னும் குதிரையிலும் திரிபவர்களின் செல்வம் எல்லாம் நீரில் பொறித்த எழுத்தாக ஆகும் என்று அறியாத பாவியாக உள்ள நெடு நெஞ்சமே!)

சூரிற்கிரியிற் கதிர்வேலெறிந்தவன் றொண்டர்குழாஞ்
சாரிற்கதியன்றி வேறிலைகாண்டண்டு தாவடி போய்த்
தேரிற்கரியிற் பரியிற்றிரிபவர் செல்வமெல்லா
நீரிற்பொறியென் றறியாத பாவிநெடுநெஞ்சமே.


கந்தரலங்காரம்-48

கந்தரலங்காரம்-48

புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில் புகட்டி அன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன் முதுசூர் நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடு படக்
குத்திய காங்கேயனே வினையேற்கு என் குறித்தனையே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-48)

(புத்தியை வேறுவழிக்குப் போகவிடாமல், நல்வழியில் வாங்கி, அதை உன் பாதங்களில் செலுத்தி, அன்பாய் முக்தியை பெற எனக்குத் தெரியவில்லையே! முது சூரனை நடுங்க வைக்க, சக்திவேலை வாங்குவதற்கு தரமாகுமா! குவடு என்னும் மலையையே தவிடு படும்படி குத்திய காங்கேயனே! வினையை ஏற்கும் நிலையில் உள்ள என்னை என்ன செய்வதாக குறித்து வைத்துள்ளாய்?)

புத்தியை வாங்கிநின் பாதாம்புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்கவறிகின்றிலேன் முதுசூர்நடுங்கச்
சத்தியைவாங்கத்தர மோகுவடுதவிடுபடக்
குத்திய காங்கெயனே வினையேற்கென்குறித்தனையே.


கந்தரலங்காரம்-47

கந்தரலங்காரம்-47

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-47)

(பக்தியுடைய ஆறு திருமுகங்களுடன், பன்னிரண்டு தோள்களுமாய் (பன்னிரு கைகளுடன்) தித்திப்பாக இனிக்கும் அமுதம் கண்டேன்! என் உயிரின் செயல்கள் மாண்டு (இறந்து) அடங்கிவிட, புத்தி (அறிவு) என்னும் தாமரையில் உருகிப் பெருகிப் புவனம் என்னும் இந்த பிரபஞ்சம் முழுவதும் கடந்து, தவழ்ந்து கரை புரண்டு ஓடும் பூரண இன்பமான சமுத்திரத்தையே!)

பத்தித்திருமுகமாறுடன் பன்னிருதோள்களுமாய்த்
தித்தித்திருக்குமமுது கண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக்கமலத்துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே.


கந்தரலங்காரம்-46

கந்தரலங்காரம்-46

நீயான ஞான வினோதம் தனை என்று நீ அருள்வாய்
சேயான வேல் கந்தனே செந்திலாய் சித்ர மாதர் அல்குற்
ஓயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த
மாயா வினோத மனோ துக்கமானது மாய்வதற்கே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-46)

(நீயான ஞான வினோதம் தன்னை என்று நீ எனக்கு அருள்வாய்? சேய் என்னும் குழந்தையான வேல் கந்தனே செந்திலாய்! அழகிய மாதர் அல்குலை விரும்பி, உருகி பருகிப் பெருகித் துவளும் இந்த மனத்தின் மாயமான வினோதமான மனத்தின் துக்கம் மாயும்படி செய்வதற்கே!)

நீயான ஞானவினோ தந்தனை யென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்தனே செந்திலாய் சித்ரமாதரல் குற்
றோயாவுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா வினோத மனோதுக்கமானது மாய்வதற்கே.


கந்தரலங்காரம்-45

கந்தரலங்காரம்-45

ஒரு பூதரும் அறியாத் தனிவீட்டில் உரை உணர்வு அற்று
இருபூத வீட்டில் இராமல் என்றான் இரு கோட்டு ஒருகைப்
பொருபூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்
குரு பூதவேலவன் நிட்டூர சூர குலாந்தகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-45)

(ஒருவரும் அறியாத தனி வீடான, உணர்வு இல்லா ஏகாந்தமான இருபூத வீட்டில் இருப்பாயாக என்றான்; இரு கொம்புகளும், ஒரு கை என்னும் துதிக்கையும் உடைய மலை போன்ற யானையின் தோலை உரித்துஅதையே அணிந்து கொண்ட திரிபுராந்தகரான சிவனுக்கே குருவாக இருந்த வேலை உடைய, சூரனின் குலத்தையே நிட்டூரம் செய்த, சூர குலாந்தகனே!)

ஒருபூதருமறியாத் தனிவீட்டிலுரையுணர்வற்
றிருபூதவீட்டிலிராம லென்றானிரு கோட்டொருகைப்
பொருபூதரமுரித் தேகாசமிட்ட புராந்தகற்குக்
குருபூதவேலவனிட்டூர சூரகுலாந்தகனே.


கந்தரலங்காரம்-44

கந்தரலங்காரம்-44

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளை முதுகு ஓட்டிக் கைநாற்றி நரம்
பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி துளைத்தோன் இரு தாள் அன்றி வேறில்லையே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-44)

(தோலால் சுவர் எழுப்பி, நாலும் ஆறும் சேர்த்து பத்து வகை கால் என்னும் வாயுக்களால் சேர்த்து வைத்து, இரண்டு கால்களை தூண்களாக ஏற்படுத்தி நடக்க வைத்து, வளையும் முதுகையும் ஏற்படுத்தி, கையை தொங்கவிட்டு, நரம்புகளால் சேர்த்து, தசை கொண்டு மேய்ந்து உருவாக்கி இருக்கும் இந்த அகம் என்னும் வீட்டை விட்டு போகும்போது (உயிர் விடும்போது) வேல் கொண்டு கிரி என்னும் மலையைத் துளைத்தவனின் இரு தாள் என்னும் பாதங்களைத் தவிர வேறு வழி இல்லையே!)

தோலாற் சுவர்வைத்து நாலாறுகாலிற் சுமத்தியிரு
காலாலெழுப்பி வளைமுதுகோட்டிக் கைநாற்றிநரம்
பாலார்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்தவகம்பிரிந்தால்
வேலாற்கிரி துளைத்தோனிருதாளன்றி வேறில்லையே.


கந்தரலங்காரம்-43

கந்தரலங்காரம்-43

கவியால் கடல் அடைத்தோன் மருகோனைக் கணபணக் கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறல் அரக்கர்
புவியார்ப்பு எழத் தொட்ட போர் வேல் முருகனைப் போற்றி அன்பால்
குவியாக் கரங்கள் வந்து எங்கே எனக் இங்ஙன் கூடியவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-43)

(கவி என்னும் வீரர்களைக் கொண்டு கடலையே அடைத்து அணை கட்டியவனான இராம வடிவான திருமாலின் மருமகனே! கணபண என்னும் பாம்பினை அணிகலனாகக் கொண்ட கோமானான சிவனின் மகனே! திறல் அரக்கர்களை அச்சம் உண்டாக்க, இந்தப் பூமி எல்லாம் ஒலி எழுப்பி, போர் புரியும் வேலாயுத்தை உடைய முருகனே போற்றி அன்பால் அவனை வணங்காத கைகள் எனக்கு ஏன் வந்து சேர்ந்தன! )

கவியாற் கடலடைத்தோன் மருகோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப்பெழத் தொட்டபோர்வேன் முருகனைப் போற்றியன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கேயெனக் கிங்ஙன் கூடியவே.


கந்தரலங்காரம்-42

கந்தரலங்காரம்-42

நிணம் காட்டும் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்க நிற்கும்
குணங்காட்டி ஆண்ட குருதேசிகன் அம் குறச் சிறுமான்
பணங்காட்டு அல்குற் குருகும் குமரன் பதாம்புயத்தை
வணங்காத்தலை வந்திதெங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-42)

(கொழுத்த தசைகளை உடைய இந்த உடலை விட்டு முக்தி என்னும் வீட்டை அடைய நினைக்கும் குணங்களைக் காட்டி, என்னை ஆண்ட குருதேசிகனான, அந்தக் குற இளம் மானான, பணம் என்னும் பாம்பு படம் போன்ற அல்குற்கு உருகும் குமரனின் தாமரைப் பாதத்தை வணங்காத தலை வந்து இங்கு எனக்கு எப்படி வாய்த்ததுவே!)

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்
குணங்காட்டியாண்ட குருதேசிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டுமல்குற் குருகுங்குமரன் பதாம்புயத்தை
வணங்காத்தலை வந்திதெங்கேயெனக்கிங்ஙன் வாய்த்ததுவே.


கந்தரலங்காரம்-41

கந்தரலங்காரம்-41

பாலே அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றி என்றும்
மாலே கொண்டு உய்யும் வகை அறியேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே இலாத கணபணத்தின்
மேலே துயில் கொள்ளும் மாலோன் மருக செவ்வேலவனே.

(பால் போன்ற மொழிபேசும் பெண்களின் இன்பத்தை விரும்பி எப்போதும் மயக்கம் கொண்டு, தப்பிக்கும் வழி அறியாமல் இருக்கிறேன்; உன் மலர் போன்ற பாதத்தை தருவாய்; கால் என்னும் காற்றை மிக உண்டு, காலே இல்லாத கணபணம் என்னும் பாம்பின் மேலே துயில் கொள்ளும் மாலோன் என்னும் திருமாலின் மருமகனே! செவ்வேலவனே!)

பாலேயனைய மொழியார்தமின்பத்தைப் பற்றியென்று
மாலேகொண்டுய்யும் வகையறியேன் மலர்த்தாடருவாய்
காலேமிகவுண்டு காலேயிலாதகணபணத்தின்
மேலேதுயில் கொள்ளுமாலோன் மருக செவ்வேலவனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-41).