கந்தரலங்காரம்-107 (அதிகப்பாடல்-107)
சூலம் பிடித்து எம பாசம்
சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கு ஒருக்காலும்
அஞ்சேன் கடல் மீது எழுந்த
ஆலம் குடித்த
பெருமான் குமரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே
நமக்கொரு மெய்த் துணையே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-107)
“சூலாயுத்தை கையில்
வைத்துக் கொண்டு, எமனின் பாசக் கயிற்றை சுழற்றிக் கொண்டு தொடர்ந்து வரும் காலன்
(எமனின் தூதன்) என்பவனுக்கு ஒரு காலத்திலும் அஞ்ச மாட்டேன்; கடலில் உண்டாகிய ஆலகால
விடத்தை குடித்த பெருமானான சிவனின் குமாரனான ஆறுமுகனின் வேலும், திருக்கரமும் இருக்கிறது!
நமக்கு உண்மையான துணையாக!”
சூலம் பிடித்தெம பாசஞ்
சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் றனக்கொரு காலுமஞ்சேன்
கடன்மீதெழுந்த
வாலங்குடித்த
பெருமான் குமரன றுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே
நமக்கொரு மெய்த்துணையே.
**
கந்தரலங்காரம் மொத்தம் 100 பாடல்கள் மட்டுமே; கடைசிப் பாடலான 101-வது பாடல் நூற்பயன் பாடல்; மேலும் அதிகமாக, ஆறு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன; ஆக மொத்தம் 100+1+6 = 107 பாடல்கள் ஆகும்.
(கந்தரலங்காரம் முற்றும்)