Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts

Saturday, July 23, 2016

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பாவம் போக்க)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

தெளிவுரை
திருமகளாய் விளங்கும் அபிராமியே, வேறு எவரும் படித்துப் பொருள் தெரிந்து கொள்ள முடியாத வேதத்தின் உட்பொருளை, அதன் சாரத்தை நான் அறிந்து கொண்டேன்; அவ்வாறு அறிந்தமையால் உனது திருவடியில் இரண்டறக் கலந்து விட்டேன்; உனது பெருமையை உணர்ந்தும் அடியவர்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை; மனதாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் மனிதரையே நாடிக் கொண்டிருந்தது; இப்போது அதை நான் தெரிந்து கொண்டு விட்டேன்; அதனால் தீயவழியில் செல்லும் மனிதரை விட்டுப் பிரிந்து விட்டேன்; இனி தாயே நீயே எனக்குத் துணை.
(மறை=வேதம்).

(நன்றி: திரு வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரைஎன்ற நூலிலிருந்து).


அபிராமி அந்தாதி பாடல்-2

அபிராமி அந்தாதி 2-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(தெய்வத் துணை கிடைக்க)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் பாசங்குசமும் கையில்
அணையுந் திரிபுரசுந்தரி யாவது அறிந்தனமே.

தெளிவுரை
எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும், விளங்குகின்ற அபிராமி அன்னையை, நான்துணைஎன்று அறிந்து கொண்டேன்; வேதங்களில் தொழிலாகவும் அவற்றின் கிளைகளாகவும், வேராகவும், வேதங்களில் சாகை, உபநிஷதம், பிரணவம் ஆகிய எல்லா நிலைகளிலும் நிலைபெற்று அபிராமி இருக்கிறாள்; அவளது நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகள் ஐந்தும், கரும்புவில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கைகளில் கொண்டு விளங்குகின்ற அந்தத் திரிபுரசுந்தரியாகிய அபிராமவல்லியே எனக்கு என்றும் துணையாவாள்.

(சுருதி=வேதம்; பணை=பொருள்).

(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரைஎன்ற நூலிலிருந்து)