Showing posts with label நமச்சிவாயத் திருப்பதிகம். Show all posts
Showing posts with label நமச்சிவாயத் திருப்பதிகம். Show all posts

Saturday, March 19, 2016

நமச்சிவாயத் திருப்பதிகம்


நமச்சிவாயத் திருப்பதிகம்
(திருநாவுக்கரசர் அருளியது)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருதக் கைந்தொழுக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே. ---------(1)

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே. ---------(2)

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே. ---------(3)

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோமல்லோம்
அடுக்கற் கீழ்கிடக் கினுமருளின் நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நவச்சிவாயவே. ---------(4)

வெந்தநீ றருங்கலம் விரதிகட் கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழும் நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே. ----------(5)

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமிலராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே. --------- (6)

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று ருவங்காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. --------------(7)

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. -------------(8)

முன்னேறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னேறியே சரணாதல் திண்ணமே அன்னேறியே
சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.  ----------------(9)

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தான்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.-------(10)

(திருநாவுக்கரசர் அருளிய நமச்சிவாயத் திருப்பதிகம் முற்றிற்று)
திருச்சிற்றம்பலம்.

பாடல்களின் பொருள்:

வேதங்களின் சொற்களை அருளியவன் அதற்குத் துணையானவன்; ஒளி வடிவானவன்; பொன் போன்ற திருவடியை நாம் கைகூப்பி தொழ, கல்லுடன் சேர்த்து கட்டி, கடலில் நம்மை தள்ளினாலும், நமக்கு நல்ல துணையாக வந்து காப்பது சிவனின் திருநாமமான நமச்சிவாயவே! --(1)

பூக்களுக்கு ஆபரணம் விரிந்த தாமரை மலர்; பசுக்களுக்கு ஆபரணம் சிவனின் வழிபாட்டுக்குறிய பஞ்சகவ்வியம்; அரசனுக்கு ஆபரணம் வளையாத செங்கோல் ஆட்சி; நமது நாக்குக்கு ஆபரணம் சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாயவே! --(2)

விண்ணை முட்டும் அளவு விறகுக் கட்டைகளை அடுக்கி இருந்தாலும், ஒரு தீப்பொறி பட்டால், அவையெல்லாம் சாம்பலாகிவிடும்; இந்த உலகில் நாம் செய்த எல்லாப் பாவங்களையும் சுட்டெரிக்கும் திருநாமம் நமச்சிவாயவே! --(3)

எப்படிப்பட்ட இடுக்கண் என்னும் துன்பம் வந்தாலும், என்னை விடுவிக்கும்படி நான் யாரிடமும் சென்று கெஞ்ச மாட்டேன்; மலையின் அடியில் மாட்டிக் கொண்டாலும், எனக்கு நடுக்கமே வராது; என் சிவபெருமான் நாமம் நமச்சிவாயவே துணை இருக்கும்போது! --(4)

விரதத்தை மேற்கொண்டவர்களுக்குவெந்தநீறு என்னும் திருநீறு அருங்கலமாகும்; நான்மறை ஓதுவது அந்தர்க்கு அருங்கலமாகும்: திங்கள் என்னும் சந்திரனுக்கு சிவனின் நீண்ட முடியில் அமர்வது அருங்கலமாகும்; எங்களுக்கு சிவனின் நாமமான நமச்சிவாயமே அருங்கலமாகும்! --(5)

சலனமில்லாத சங்கரன் என்னும் சிவன் தன்னை சார்ந்த அடியவர்களுக்கு நன்மை செய்வான்; மற்றவர்களுக்கு நன்மை அளிக்க மாட்டான்';நற்குலத்தில் பிறக்காதவரும், சிவனின் நமச்சிவாய நாமத்தை சொன்னால் அவன் நன்மை அடையலாம்! --(6)

வீடுபேறு என்னும் முக்தியை அடைய, இந்த உலக பற்றுக்களை விட்டு விடுபட்டு, சிவனை பற்றி சிந்தித்தனர்; நானும் அப்படியே சிவனின் நமச்சிவாய என்னும் நாமத்தை பற்றிக் கொண்டேன்; எனக்கு அவன் அருள் கிடைத்தது;--(7)

வீட்டில் உள்ள விளக்கு இருளைப் போக்கும்; நம் அகமான உட்புறத்தை தெளிவிப்பது சிவனின் சோதியாகும்; பல சமயத்தையும் விளக்குவது பலரும் காட்டியது; இவைகளில் நல்ல விளக்காவது சிவனின் நமச்சிவாய என்ற நாமமே! --(8)

எல்லாவற்றுக்கும் முதன்முதல் ஆனவன் முக்கணன் ஆகிய சிவபெருமான்; அவன் காட்டிய வழியை அடைவதே சிறப்பு; அந்த நெறியே வீடுபேற்றை அடைய வழிகாட்டும்; அந்த நன்னெறியாவது சிவனின் நமச்சிவாயமே!--(9)

மாப்பிணை (மானை) தழுவிக் கொண்டு, தன் இடப்பாகத்தில் உமையாளை தனது உடலின் ஒருபாகமாக ஏற்றுக் கொண்டவன் சிவன்; அவனின் பூப்போன்ற திருவடியை மலர் தூவி வழிபட்டு, நம் நாவில் அவனின் நாமமான நமச்சிவாயத்தை புகழ்ந்து பாடினால் இடுக்கண் என்னும் துன்பம் நம்மை நெருக்காது;--(10)

                         திருச்சிற்றம்பலம்!
**



Thursday, February 18, 2016

நமச்சிவாயத் திருப்பதிகம்


நமச்சிவாயத் திருப்பதிகம்

(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்ஆஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழ நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

முன்னேறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
இந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்கண் இல்லையே.
**