நமச்சிவாயத் திருப்பதிகம்
(திருநாவுக்கரசர் அருளியது)
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருதக் கைந்தொழுக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே. ---------(1)
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே. ---------(2)
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே. ---------(3)
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோமல்லோம்
அடுக்கற் கீழ்கிடக் கினுமருளின் நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நவச்சிவாயவே. ---------(4)
வெந்தநீ றருங்கலம் விரதிகட் கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழும் நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே. ----------(5)
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமிலராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே. --------- (6)
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று ருவங்காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. --------------(7)
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. -------------(8)
முன்னேறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னேறியே சரணாதல் திண்ணமே அன்னேறியே
சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே. ----------------(9)
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தான்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.-------(10)
(திருநாவுக்கரசர் அருளிய நமச்சிவாயத்
திருப்பதிகம் முற்றிற்று)
திருச்சிற்றம்பலம்.
பாடல்களின் பொருள்:
வேதங்களின் சொற்களை
அருளியவன் அதற்குத் துணையானவன்; ஒளி வடிவானவன்; பொன் போன்ற திருவடியை நாம் கைகூப்பி தொழ, கல்லுடன்
சேர்த்து கட்டி, கடலில் நம்மை தள்ளினாலும், நமக்கு நல்ல துணையாக வந்து காப்பது சிவனின் திருநாமமான நமச்சிவாயவே! --(1)
பூக்களுக்கு ஆபரணம்
விரிந்த தாமரை மலர்; பசுக்களுக்கு ஆபரணம்
சிவனின் வழிபாட்டுக்குறிய பஞ்சகவ்வியம்; அரசனுக்கு ஆபரணம்
வளையாத செங்கோல் ஆட்சி; நமது நாக்குக்கு ஆபரணம்
சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாயவே! --(2)
விண்ணை முட்டும் அளவு
விறகுக் கட்டைகளை அடுக்கி இருந்தாலும், ஒரு தீப்பொறி பட்டால்,
அவையெல்லாம் சாம்பலாகிவிடும்; இந்த உலகில்
நாம் செய்த எல்லாப் பாவங்களையும் சுட்டெரிக்கும் திருநாமம் நமச்சிவாயவே! --(3)
எப்படிப்பட்ட
இடுக்கண் என்னும் துன்பம் வந்தாலும், என்னை விடுவிக்கும்படி
நான் யாரிடமும் சென்று கெஞ்ச மாட்டேன்; மலையின் அடியில்
மாட்டிக் கொண்டாலும், எனக்கு நடுக்கமே வராது; என் சிவபெருமான் நாமம் நமச்சிவாயவே துணை இருக்கும்போது! --(4)
விரதத்தை
மேற்கொண்டவர்களுக்குவெந்தநீறு என்னும் திருநீறு அருங்கலமாகும்; நான்மறை ஓதுவது அந்தர்க்கு அருங்கலமாகும்: திங்கள்
என்னும் சந்திரனுக்கு சிவனின் நீண்ட முடியில் அமர்வது அருங்கலமாகும்; எங்களுக்கு சிவனின் நாமமான நமச்சிவாயமே அருங்கலமாகும்! --(5)
சலனமில்லாத சங்கரன்
என்னும் சிவன் தன்னை சார்ந்த அடியவர்களுக்கு நன்மை செய்வான்; மற்றவர்களுக்கு நன்மை அளிக்க மாட்டான்';நற்குலத்தில் பிறக்காதவரும், சிவனின் நமச்சிவாய
நாமத்தை சொன்னால் அவன் நன்மை அடையலாம்! --(6)
வீடுபேறு என்னும்
முக்தியை அடைய, இந்த உலக பற்றுக்களை விட்டு
விடுபட்டு, சிவனை பற்றி சிந்தித்தனர்; நானும்
அப்படியே சிவனின் நமச்சிவாய என்னும் நாமத்தை பற்றிக் கொண்டேன்; எனக்கு அவன் அருள் கிடைத்தது;--(7)
வீட்டில் உள்ள
விளக்கு இருளைப் போக்கும்; நம் அகமான உட்புறத்தை
தெளிவிப்பது சிவனின் சோதியாகும்; பல சமயத்தையும் விளக்குவது
பலரும் காட்டியது; இவைகளில் நல்ல விளக்காவது சிவனின்
நமச்சிவாய என்ற நாமமே! --(8)
எல்லாவற்றுக்கும்
முதன்முதல் ஆனவன் முக்கணன் ஆகிய சிவபெருமான்; அவன் காட்டிய வழியை அடைவதே
சிறப்பு; அந்த நெறியே வீடுபேற்றை அடைய வழிகாட்டும்; அந்த நன்னெறியாவது சிவனின் நமச்சிவாயமே!--(9)
மாப்பிணை (மானை)
தழுவிக் கொண்டு, தன் இடப்பாகத்தில் உமையாளை தனது
உடலின் ஒருபாகமாக ஏற்றுக் கொண்டவன் சிவன்; அவனின் பூப்போன்ற
திருவடியை மலர் தூவி வழிபட்டு, நம் நாவில் அவனின் நாமமான
நமச்சிவாயத்தை புகழ்ந்து பாடினால் இடுக்கண் என்னும் துன்பம் நம்மை நெருக்காது;--(10)
திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்!
**
No comments:
Post a Comment