Thursday, March 24, 2016

சினம் அடங்கிய பின்னரே...

தம்பீ பீமனே!
தீபமானது எப்படிப் பொருள்களை விளக்கிக் காட்டுகின்றதோ, அப்படியே விவேகிகளுக்குச் சாத்திரங்களே நன்மை தீமைகளை நன்கனம் எடுத்துக் காட்டும் விளக்காகும்; ஒரு கருமத்தை முற்ற எண்ணாது சிறிது எண்ணிய துணையானே பகைஞரிடம் ஒருவன் தனது ஆண்மையைக் காட்டுதல், அவரையே தத்தமிடத்தில் நிலைபெறச் செய்யும் நெறியாகவே முடியும்.

அறவொழுக்கங்களில் சிறந்த பீமனே!
வேத நெறியில் பிறழாது ஒழுகா நின்ற நமக்கு நேர்ந்த இத்துணை அல்லலும் தெய்வ சங்கற்பத்தால் நிகழ்ந்ததன்றி மனிதரால் வந்ததன்று; ஊழ்வினையால் விளைந்த விபத்தைப் பெரியதொரு சம்பத்து என்றே எண்ணிப் பொறுத்திருக்க வேண்டும்; வெற்றியை விழைபவன் முதற்கண் சினங் காக்க வேண்டும்; சினம் அடங்கிய பின்னரே, போருக்கான உபாயங்கள் செவ்விதிற் புலப்படும்; சினம் என்னும் அறியாமை ஒழியுமளவும் ஒருவன் வெற்றியின் நிழலையும் காண்டல் அரிது; செற்றமுடையானுக்கு (கோபத்தில் இருப்பவனுக்கு) ஆண்மையால் எய்தும் பயன் ஏதும் இல்லை; காலத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி ஆண்மையையும் பொறுமையையும் கையாளுபவனுக்கு இஞ்ஞாலமே கருதினும் கைகூடும்;

ஓரிடத்தும் நிலைத்திராத செல்வம் எங்கே? மனத்தை ஓயாது அலைக்கும் ஐம்புலன்கள் எங்கே? கூதிர்காலத்துக் கொண்டல் போலவும், நீருட் குமிழி போலவும், தோன்றி மறையும் மின்னல் போலவும், நிலையாச் செல்வத்தைப் புலன் அடக்கமில்லாத ஒருவன் எவ்வாறு காக்க முடியும்? எண்ணிறந்த சாத்திரங்களைக் கற்றும் உள்ளத்திற் கள்வர் எனக் கரந்து உறையும் காமமாதிய ஆறு பகைவர்களை வெல்ல முடியாதவர்களோ அமர்க்களத்து அஞ்சா நெஞ்சுடைப் பகைஞரை வென்று வாகை சூடுகின்றவர்? இலக்குமிக்குச் சபலை (நிலை இல்லாதவள்) என்ற பழிப்பெயரும் நின்போன்ற சினங்காவா அரசர்களாலேயே வந்தெய்தியது; காலமும் இடனும் கருதாது சீற்றங் கொண்டவன் யாக்கையுந் தளர்ந்து வலியும் குன்றி வறிதே அழிந்து படுகின்றான்; சினத்தாற் கெட்டழிந்தார் கோடி கோடி;
**


No comments:

Post a Comment