Wednesday, March 23, 2016

அத்தி தல முருகன் பிள்ளைத் தமிழ்-4

அத்தி தல முருகன் பிள்ளைத் தமிழ்-4
(முருகன் திருவிளையாடல்)

மஞ்சு தவழ் மேருகிரி வந்திருந்து மொய்ம்பருடன்
மகிழ்ந்து விளையாட வெண்ணி
மதியினொடு கதிர்கோள் நாள் மலைகளொடு வாரிதிகள்
மாற்றியமை கண்டு வானோர்
வெஞ்சினத் தராகியடல் கொள்கின்ற போதவரை
வீரன்நீ மாய்த்த வன்று
வியாழகுரு வேண்டவருள் சுரந்தவரு மாவிகொள
விழைந்து பொன் மேரு மேலே
விஞ்சுபுகழ் கொளும் விஸ்வ ரூபவொளி காட்டிடவும்
விண்ணோரும் வேண்டி நிற்பர்
விரகுபெறு சூரகிளை தொலைக்கவென வதற்கிசையும்
வித்தகனே வெற்றி வேலா
செஞ்சொலிசை கொஞ்சவரு பைந்தமிழின் தெய்வதமே
செங்கீரை யாடி யருளே
செழுமைபெறு மத்தி தலம் விளங்கவரு மொருகுமர
செங்கீரை யாடி யருளே!

(மஞ்சு = மேகம்;
மொய்ம்பர் = வீரர்
மதி = சந்திரன்
கதிர் = சூரியன்
கோள் = கிரகம்
நாள் = நட்சத்திரம்
வாரிதி = சமுத்திரம்
அடல் = போர் செய்தல்
விஞ்சு = மிக்க
விஸ்வரூபம் = பரமேஸ்வடிவம்
விரகு = வஞ்சனை
சூரகினை = சூரனுடைய இனத்தவர்)

மேகங்கள் தவழும் மேரு மலைக்கு வந்திருந்து வீரர்களுடன் மகிழ்ந்து விளையாட எண்ணி, சந்திரனோடும், சூரியனோடும், கிரகங்களோடும், நட்சத்திரங்களோடும், கடல்களோடும், விளையாடுவதைக் கண்டு வானவர்களான தேவர்கள் கோபம் கொண்டு போர் செய்யத் துணிந்தவர்களான அசுரர்களை, வீரரான நீ, அவர்களை மாய்த்து கொன்றாயே! வியாழகுருதேவர் வேண்டிக் கொண்டதால் இரக்கம் கொண்டு, பொன் மலையின் மேலே நின்று உன் விஸ்வரூபத்தைக் காட்டினாய்! அதை பார்த்து விண்ணவர்களும் உன்னை வேண்டி வணங்கி நின்றனர்! வஞ்சனையுடைய சூரர்களின் கூட்டங்களை அழிக்கத் துணிந்து வித்தகனே! வெற்றி வேலவனே! செம்மையான சொல்லாலும் இசையாலும், பாடப்படும் பைந்தமிழின் தெய்வமே! செங்கீரை ஆடி அருளே! செழுமை பெறும் அத்தி தலத்தில் விளங்கி வரும் குமரா செங்கீரை ஆடி அருளே!
(செங்கீரைப் பருமானது குழந்தையின் 5ம் மாதப் பருவம்; மொழி தெரியாத குரலில் பேசும் குழந்தைப் பருவம்)
**


No comments:

Post a Comment