Friday, March 25, 2016

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்.....


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்.....

ஆலயம் = ஆ+லயம்; (ஆ=ஆன்மா; லயம்=சேர்தல், ஒடுங்குதல்); ஆன்மா ஒடுங்குவதற்குறிய இடம்;

கோயில் = கோ+இல்; (கோ=கடவுள், அரசன்; இல்=இல்லம், தங்குமிடம்); ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு இறைவன் தங்கும் இடம்;

சைவ சமயக் கோயில்கள் (கோவில்கள்) ஆகம விதிகளின்படியே அமைக்கப்படுகின்றன; சைவ ஆலயங்களில், சிற்பம், ஓவியம், தத்துவம், ஞானம், முதலிய பேருண்மைகளை உணர்த்தும் கலைகளையும், நுண்பொருள்களையும் காணலாம்;

அந்த அமைப்புகள், ஆன்மாக்களுக்கு, பேரறிவுகளையும், உலகத் தோற்ற, ஒடுக்க, விசித்திரங்களையும், பக்தி, வைராக்கியம், ஞானம், முதலியவற்றையும் உதிக்கச் செய்கின்றன;

ஆலயங்களில் ஆகமவிதிப்படி அமைந்த விமானம்-தூபி-சிகரம், கோபுரம், கொடிஸ்தம்பம் முதலிய பல அங்கங்கள் அமையப் பெற்றவையாய், சித்திர, ஓவியச் சிறப்புக்களுடன் விளங்குபவைகளையே முறைப்படி அமைந்த் கோயில் எனவும், அவ்வாறு தூபி அமைக்கபடாமல், விதிப்படியோ, அல்லாதோ அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்படும் கோயில்களையே, மட ஆலயங்கள் என பெரியோர் வகுப்பர்;

இவ்வாறாகிய அமைப்புகளைவிட, இருதய கமல ஆலயத்தை விரித்து, ஞானப் பொருள் அமைய விதிப்படி விளக்கும் இருதயப் பிரஸ்தார ஆலயத்தின் அமைப்புகள் இவைகளிலும் விநோதமாய் அமைக்கப்-பட்டிருக்கும்; அவ்வாறு அமைந்ததே “சிதம்பர ஆலயமாகும்.”

(விமானம்-தூபி-சிகரம் = இது கோயிலில் மூலஸ்தானத்தில் இருந்து மேல்நோக்கி, தாமரைப் பூ வடிவமாய் அமைந்து, முடிவில் ஒரு கலசம் உடையதாய் இருக்கும்;

துவசத்தம்பம்—கொடிமரம் = கொடி ஏற்றாமல் இருக்கும்போது, சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களாகிய புறச்சார்பை நோக்காது; சர்வ சங்கார காலத்தின் முடிவில், சிவபெருமான் தமது சத்தியை அடக்கிக் கொண்டு நிற்கும், சொரூப நிலையைக் குறிப்பதாகும்;

கோபுரம் = திருவடி அதாவது பாதத்தைக் குறிப்பது; கோவிலின் வாயிலில் கட்டப்பட்டிருப்பது; “வாய் கோபுர வாசல்” என்று திருமூல நாயனார் கூறியுள்ளார்; அசல அல்லது தூல்லிங்கம் எனவும், ஆலயத்துக்குள் சென்று வழிபட இயலாதவர்கள், தூரத்தில் காண்பரவகளும், சிவனை காண்பதாகக் கருதி, வணங்கும பொருட்டாக அமைந்தே கோபுரம்; கோபுர வணக்கம் திருவடி தரிசனம் ஆகும்;)

அண்ட பிண்ட சமம்:
காணும் பிரபஞ்ச உலகம் அண்டம், காணும் உடல் பிண்டம்; அண்டத்தில் அமைந்திருப்பவை பிண்டத்திலும், பிண்டத்தில் அமைந்திருப்பவை அண்டத்திலும் அமைந்துள்ளன என்பதே சைவ சமய நூற் கொள்கைகள்; இவ்வுண்மையை சாதாரண மக்களாகி நாம் ஒப்பாவிட்டாலும், யோகிகளும், ஞானிகளும், நன்கு அறிவர்; அதனால் அவர்கள் கோயில் வழிபாட்டை வெறுப்பதில்லை;

“எண்டரும் பூதமைந்தும் எய்திய நாடி மூன்றும்
மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே
பிண்டமும் அண்டமாகும் பிரமனோடு ஐவராகக்
கண்டவர் நின்றவாறும் இரண்டிலும் காணலாமே!”

(கா.அருணாசலம் அவர்கள் எழுதிய “சைவ சமய சிந்தாமணி” என்ற நூலில் இருந்து ஒரு பகுதி)
**


No comments:

Post a Comment