Thursday, March 17, 2016

கந்தா! கடம்பா!! கார்த்திகேயா!!!


கௌமாரம்
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானதுதான், இந்தப் பிரிவான கௌமாரம்; கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள்; இவர்களே முருக பக்தர்கள்! தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், மலேசியாவிலும் இந்த கௌமார மதத்தை சேர்ந்த இந்துக்கள் அதிகம்; இங்குதான் முருகனுக்கு அதிகமான கோயில்களும், வழிபாடுகளும் உள்ளன; தமிழும் முருகனும் ஒன்று; தமிழே முருகன், முருகனே தமிழ்; எனவே முருகன் தமிழ்கடவுள்; தமிழைக் காத்தவனும் இந்த கார்த்திகேயனே! அகத்தியர் முதல் ஔவையார் வரை முருகனையும் தமிழையும் ஒன்றாக்கியே நமக்கு காட்டி உள்ளார்கள்;
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த இரண்டாவது மகன்தான் இந்த கார்த்திகேயன்; (மூத்தவனே கணேசன் என்கிற விநாயகன் என்கிற பிள்ளையார் என்கிற ஐங்கரன்); இந்த கார்த்திகேயனைப் பற்றி வியாசர் எழுதிய காவியமே வடமொழி “ஸ்கந்த புராணம்”; அதன் ஒரு பகுதியே தமிழ்க் “கந்தபுராணம்”. இந்த கார்த்திகேயனே, பிரம்மனை சிறையில் அடைத்தான்; விஷ்ணுவை, அசுரர்களிடமிருந்து காப்பாற்றினான்; தன் தந்தையான சிவனுக்கு ப்ரணவ மந்திரத்தை (ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை) உபதேசித்தான்; தந்தைக்கு உபதேசித்து அவருக்கே குருவாய் இருந்ததால் இவனைத் “தகப்பன் சாமி” என்றும் சொல்வர்; இப்படியாக இந்த மும்மூர்த்திகளுக்கும் முதல்வனானவன் இந்த கந்தன் என்கிற கார்த்திகேயன் என்கிற குமரன் என்கிற முருகப்பெருமான்; இந்த முருகனை வழிபடுவோர் எல்லோரையும் “கௌமாரர்கள்” என்பர்;
தமிழ்நாட்டில் முருகனுக்கு சிறப்பாக ஆறுபடை வீடுகள் உண்டு; இவனின் பக்தர்களான கௌமாரர்கள் தமிழ் மாதத்தின் தைப் பூசத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்; ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி; இந்த சஷ்டியும் இந்த குமரனுக்கு உரிய நாள்; எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்;
ஆறுபடைவீடுகள்: தமிழ்நாட்டின் வடபகுதியில் திருத்தணியும், மேற்குப் பகுதியில் பழனியும், மத்தியபகுதியில் பழமுதிர்சோலையும், பக்கத்திலேயே திருப்பரங்குன்றமும், தென்கடல் ஓரத்தில் திருச்செந்தூரும் உள்ளன;
“குமாரசம்பவம்” என்ற காவியத்தை மகாகவி காளிதாசன் இயற்றி உள்ளார்; முழுக்க முழுக்க கார்த்திகேயன் என்ற குமரனின் கதை; குமரனின் சம்பவம் என்பதால் கௌமாரம் என்று ஆகி இருக்கலாம்;
ஆதிசங்கரரும், இந்த கார்த்திகேயனிடம் மனதைப் பறிகொடுத்து, அவனைத் துதித்து சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலை இயற்றி இருக்கிறார்;
அருணகிரிநாதர், இந்த கந்தனைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து, துதித்து, உருகி பாடல்கள் புனைந்துள்ளார்; அவை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி பாரட்டுக்குறியன; தமிழின் அழகு நூல்கள்;
வள்ளி:
முருகன் வள்ளியைத் திருமணம் செய்தது வள்ளிமலை என்ற ஊரில்; அது இப்போதுள்ள காட்பாடிக்குப் பக்கத்தில் உள்ளது; இந்த வள்ளி, விஷ்ணுவுக்கும் அவர் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவள்; லட்சுமியின் வேர்வைத்துளி இங்குள்ள ஒரு புல் வெளியில் விழுந்து அதில் தோன்றியவளேஇந்த வள்ளி; அந்த புல்லை ஒரு மான் தின்கிறது; பின்னர் அந்த மான் தான் வள்ளியைப் பெற்றெடுக்கிறது; அங்கிருந்துதான் முருகன், வள்ளியை களவுத் திருமணம் புரிந்து, அவளை அழைத்துக் கொண்டு திருத்தணி ஓடிப் போய், அங்கு வசிக்கிறான்;
தெய்வானை:
தெய்வானைக்கு தேவசேனா என்றும் பெயர்; இவர்தான் முருகனின் முதல் மனைவி; இவள், இந்திரனின் மகளாம்; இந்திரன் தன் மகளான தேவசேனையை கார்த்திகேயனுக்கு (முருகனுக்கு) திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறான்; தெய்வானையை, திருப்பரங்குன்றத்தில்தான், முருகன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான்;
**



No comments:

Post a Comment