கைலாசத்தில் சிவபெருமானின் அடியவர்களில் ஒருவர் ஆலாலசுந்தரர்; அங்கு உமாதேவியர்களுக்கு துணையாக சேடிப் பெண்கள்
இருந்தார்கள்; அந்தப் பெண்களில் இருவர் மீது, இந்த ஆலாலசுந்தரர் ஆசை கொண்டுள்ளார்; இது தெரிந்த சிவபெருமான்,
"நீ, பூலோகத்தில் போய் பிறப்பாயாக" என்று
கட்டளை இடுகிறார்; இதைக்கேட்ட ஆலாலசசுந்தரர், கைலாசத்தை விட்டு, சிவபெருமானின் அடியை விட்டுப் போகிறோமே
என்று அழுகிறார்; இதைக் கண்ட சிவபெருமான், "உன்னை, நான் பூலோகத்தில் வந்து ஆட்கொள்வேன், கவலைப்படாதே" என்று ஆறுதல் சொல்கிறார்;
ஆலாலசுந்தரர், பூலோகத்த்தில்,
திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் பிறக்கிறார்; அங்குள்ள சடையார்-இசைஞானியர் தம்பதியருக்கு மகனாகப் பிறக்கிறார்; அதேபோல, கைலாசத்தில் இபரவர் சந்தித்த சேடிப் பெண்கள் இருவரும்,
பரவையார், சங்கிலியார் என்ற பெயருடன் பூலோகத்தில்
பிறக்கிறார்கள்; பரவையார் திருவாரூரிலும், சங்கிலியார் திருவொற்றியூரிலும் பிறக்கிறார்கள்;
ஆலாலசுந்தரத்துக்கு இந்தப் பூவுகில் சுந்தரமூர்த்தி எனப் பெயர்; வளர்ந்து மணப் பருவம் அடைகிறார்; அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அப்போது அங்கு ஒரு
கிழவன் வேடத்தில் சிவபெருமான் அங்கு வருகிறார்; அங்கு வந்து,
ஒரு ஓலையைக் கொடுக்கிறார்; இந்த மணமகன் எனது அடிமை;
இதோ அடிமைசாசனம் என்று அந்த ஓலையை அங்கு உள்ளவர்களிடம் காண்பிக்கிறார்;
என் அடிமை, என்னைக் கேட்காமல் திருமணம் செய்யக்
கூடாது என்று தடுக்கிறார்; பின்னர், அவரை
தனியே அழைத்து தானே சிவபெருமான் என்று அவருக்கு தன்னைக் காட்டி, அருள் செய்கிறார்; அதுமுதல் சிவனைப் பாடி சிவதலங்களுக்கு
சென்று வருகிறார்;
அப்படிப் பாடிக் கொண்டு சிவதலங்களுக்குச் செல்லும்போது, ஒருமுறை திருவாரூர் வருகிறார்; தனக்கு கைலாயத்தில் பெண்கள் மீது ஆசை வந்த செயலை நினைத்து வருந்துகிறார்;
ஆனாலும் முன் ஜென்ம வாசனை விடவில்லை; திருவாரூரில்
உள்ள பரவையாரைப் பார்க்க நேர்கிறது; அந்த பெண்மீது காதல் கொள்கிறார்;
அதற்கு சிவனையே தூது அனுப்புகிறார்; அதில் வெற்றி
கொண்டு, பரவையாருடன் சிலகாலம் வாழ்கிறார்;
பின்னர், திருவொற்றியூருக்கு வருகிறார்;
அங்கு வசிக்கும் சங்கிலியார் என்ற பெண்ணையும் பார்க்கிறார்; அவருடன் வசிக்க ஆரம்பிக்கிறார்; அவரிடம்,
"நான் வேறு பெண்களைப் பார்க்க மாட்டேன்" என்று சத்தியம் செய்து
கொடுத்திருக்கிறார்; ஆனாலும் அவர் அதில் நிலைத்து நிற்கவில்லை;
பொய் சத்தியத்தின் பலனாக இவருக்கு கண்பார்வை போய்விடுகிறது; அப்போது சிவபெருமானை நினைத்து பதிகம் பாடி, மீண்டும்
பார்வையைப் பெறுகிறார்; அப்போது, "உன் வினையை நீ அனுபவித்தே தீர்க்க வேண்டும்"
என்று சிவன் அவரிடம் கூறுகிறார்; சிவனிடம் நட்புடன் இருந்தும்,
தவறுக்கு தண்டனை கொடுக்கத் தவறவில்லை சிவன்;
இப்படி இருக்கும்போது, சுந்தரமூர்த்தியின்
பெருமைகளைத் தெரிந்த சேர மன்னர் சேரமான் பெருமான் நாயனார் என்பவர் அவரை அழைத்து தன்
அரண்மனையில் வைத்து விருந்து அளித்து அவருடன் நட்பாய் இருந்தார்;
சுந்தரமூர்த்திக்கு அப்போது 18 வயதுதான் ஆகிறது; அப்போது திருவஞ்சைக்களத்தில் சிவனை வணங்குவதற்காக கோபுர வாசலை
அடைகிறார்; அப்போது கைலாசத்திலிருந்து சிவகணங்களுடன் ஒரு வெள்ளை
யானையானது அவர் முன்னே வந்து நிற்கிறது; அது கைலாசத்தில் இருந்துதான்
வந்துள்ளது என்பதை அறிந்த சுந்தரமூர்த்தி, அந்த யானைமீது ஏறி
அமர்ந்து கொள்கிறார்; அது அவரை ஏற்றிக் கொண்டு விண்ணில் பறக்கிறது;
இதைப் பார்த்த சேரமான் பெருமானும் தன் குதிரையை வரவழைத்து அதன் காதில் ஸ்ரீபஞ்சாச்சரத்தை
ஓதுகிறார்; அந்தக் குதிரையும் இவரைச்
சுமந்து கொண்டு விண்ணில் பறக்கிறது; குதிரை, சுந்தரமூர்த்தி செல்லும் யானையைக் கடந்து வந்து, அதைச்
சுற்றி வந்து முன்னே சென்றது; இப்படியாக இருவரும் கைலாசம் சென்று
சிவபதம் அடைகிறார்கள்;
சுந்தரமூர்த்தியின் பெருமைகள் பல;
ஒரு முதலை, ஒரு சிறுவனை விழுங்கி
விட்டது; அதை அழைத்த சுந்தரமூர்த்தி, முதலையிடம்,
அந்தச் சிறுவனை வெளியே உமிழச் செய்து மீட்கிறார்:
தலைக்கு வைத்துப் படுத்திருந்த செங்கற்கள் விடியற்காலையில் பொன்னாக மாறிவிட்டது; அதை மணிமுத்தா நதியில் விடுகிறார்; பின்னர் அதை திருவாரூர் கமலாலயக் குளத்தில் தேடி எடுக்கிறார்: அப்போது திருவாரூரில்
பரவையருடன் இருக்கிறார்; அவர், இவரின் செயலை
கேலி செய்கிறார்; "ஆற்றில் விட்ட பொன்னை, இங்கு குளத்தில் வந்து தேடுகிறீர்களே" என்று கேலி செய்கிறார்;
**