Tuesday, January 3, 2017

சுக்ரீவன்

விஷ்ணு, இராவண சங்காரத்தின் பொருட்டு, விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு இராமனாகப் பிறக்கப் புறப்படுகிறார்; அப்போது, அவர் இங்கு வருவதற்கு முன் ஏற்பாடாக, சில தேவர்களை இந்த மண்ணுலகில் முன்பே பிறப்பதற்கு அனுப்பி வைக்கிறார்; அப்போது ஒரு தேவர், சூரியனின் அம்சமாகப் பிறக்கிறார்; அவரே சுக்ரீவன் என்பவர்;
சுக்ரீவன் பம்பைக் கரையில் உள்ள இடத்தில் பிறக்கிறார்; இந்த சுக்ரீவனை துணையாக வைத்துக் கொள்ளும்படி, இராமனுக்கு சொல்கிறான் கவந்தன் என்பவன்; சுக்ரீவனைச் சந்திக்கிறார் இராமன்; இராமனின் வில் வித்தையைச் சோதிக்க நினைக்கிறார் சுக்ரீவன்; அப்போது, ஏழு மாமரங்கள் வேறு வேறு இடத்தில் இருப்பதை, தனது ஒரே அம்பால் துளைத்து விடுகிறார்; சுக்ரீவன், இராமனின் வில்லாண்மையை நம்புகிறார்;
இருக்ஷவிரஜன் என்ற மன்னருக்கு இரண்டு புத்திரர்கள்; ஒருவர் வாலி; மற்றவர் சுக்ரீவன்; இந்த சுக்ரீவனின் அண்ணனே வாலி; சுக்ரீவனின் மனைவி பெயர் உருமை; சுக்ரீவனின் நாட்டையும், அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்ட வாலி, தம்பி சுக்ரீவனை விரட்டி விடுகிறான்; அப்போதுதான், சுக்ரீவன் பம்பை நதிக்கரையில் வசிக்கிறார்;
இராமன் மீது நம்பிக்கை வந்தவுடன், சுக்ரீவன், தன் கஷ்டங்களை கூறுகிறார்; இராமர், வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்று, அவன் அபகரித்த நாட்டை, சுக்ரீவனுக்குக் கொடுக்கிறார்;
மன்னர் பதவி திரும்பக் கிடைத்தவுடன், தன் நாட்டிலேயே சுகபோகமாக வாழ ஆரம்பிக்கிறார்; இராமனைக் கண்டுகொள்ளவில்லை; நன்றி மறக்கிறார்; இராமர், தன் தூதுவனை அனுப்பி, அவர் நாட்டின் மீது படையெடுக்கப் போவதாக அறிவிக்கிறார்; அதனால் பயந்து கொண்டு, தானும் தன் படைகளும் சேர்ந்து வந்து இராமனைச் சரண் அடைகிறார் சுக்ரீவன்; இராமருக்கு உதவுவதாக வாக்கு அளிக்கிறார்;
சுக்ரீவனின் படை இலங்காபுரிக்குச் செல்கிறது; அங்கு, ஒரு பெரிய மலையை பெயர்த்து எடுத்துவந்த சுக்ரீவன், அந்த மலையை இராவணனின் மார்பின் மீது மோதுகிறார்; இராவணனோ, கோபம் கொண்டு, தன் வேலை எடுத்து சுக்ரீவன் மீது எறிகிறார்; அந்த வேலை, அனுமன் பிடித்து, தன் முழங்காலில் வைத்து ஒடித்து வீசுகிறார்; இராவணனும் ஒரு மலையைப் பெயர்த்து, சுக்ரீவன் மீது மோத, சுக்ரீவன் விழுந்து மூர்ச்சை ஆகிறார்; அப்போது இராவணன், சுக்ரீவனை தன் கையில் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு போக, மயக்கம் தெளிந்த சுக்ரீவன், இராவணனின் இடுப்பை தன் நகங்களால் கிழித்து, பற்களால் கடித்து குதறிவிடுகிறார்; அப்போது கிடைத்த இடைவெளியில் சுக்ரீவன், இராவணனின் பிடியில் இருந்து தப்பிக்கிறார்;
**



No comments:

Post a Comment