Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Friday, March 25, 2016

வடிவுடை வாள் தடங்கண் உமை...

வடிவுடை வாள் தடங்கண் உமை
அஞ்சவோர் வாரணத்தைப் 
பொடியணி மேனி மூட உரி
 கொண்டவன் புன்சடையான்
கொடி நெடு மாடம் ஓங்கும்
குழகன் குடமூக்கிடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தானவன்
எம்மிறையே!”

(அழகிய வாள் போன்ற கூரிய விழிகளை உடைய உமையான பார்வதியே அஞ்சும்படி, யானை வடிவ அரக்கனை கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவன், உடலெல்லாம் திருநீறு அணிந்த ஜடாமுடி தரித்த சிவன்! உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த குடமூக்கு எனும் கும்பகோணத்தில் குடியிருக்கிறார்; இடிக்கும் வானத்தின் தேவர்கள் போற்றி வணங்கும் எமது இறைவன்!)
(ஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
**

Tuesday, February 16, 2016

திருஞானசம்பந்தர் தேவாரம்

திருஞானசம்பந்தர் தேவாரம்

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நாக்
கைமல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

கையது வீழினுங் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை யுருவழிய
அப்படி யழலெழ விழித்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல்அலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ண்ணுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.
**