Showing posts with label இதோபதேசம். Show all posts
Showing posts with label இதோபதேசம். Show all posts

Monday, March 7, 2016

இதோபதேசம்



இதோபதேசம்
(கழுகும் பூனையும் கதை)

கங்கையாற்றங்கரையில் கிருத்திரகூடம் என்னும் மலை இருக்கிறது; அங்கு இருக்கும் ஒரு மரப் பொந்தில் கண்களும் நகங்களும் இல்லாத ஒரு கழுகு இருக்கிறது; அந்த கழுகின் பெயர் சரற்கவன்; அந்த மரத்தில் மற்ற மற்ற பறைவைகளும் வாழ்ந்து வருகின்றன; அந்த கழுகின் மீது இரக்கப்பட்டு, மற்ற பறவைகள், தங்கள் தங்கள் உணவில் ஒரு சிறு கவளத்தை அந்தக் கழுகுக்கு தினம் தினம் கொடுத்து வந்தன;

ஒருநாள் ஒரு பூனை அங்கு வந்தது; அதைப் பார்த்த மற்ற பறவைகளின் குஞ்சுப் பறவைகள் எல்லாம் பயந்து அலறி நடுக்கின; அந்த அலறலைக் கேட்ட கழுகு, "இங்கு வந்தவன் யார்?" என்று கேட்டது; வந்த பூனையோ, பயந்து, "என் உயிர் பிழைத்தல் அரிது; கிட்ட நிற்பதால், விலகி ஓடவும் முடியாது; வருவது வரட்டும்; நம்பிக்கையுடன் இருப்பேன்" என்று எண்ணிக் கொண்டு, கழுகின் கிட்டப் போய், "சுவாமி, நமஸ்காரம்!" என்றது அந்தப் பூனை; கழுகோ, இது பூனைதான் என்று சத்தத்தை வைத்துத் தெரிந்து கொண்டு, "இங்கு உனக்கென்ன வேலை? தூரப்போ! இல்லையென்றால், உன்னைக் கொன்று விடுவேன்" என்று விரட்டியது;

அதற்குப் பூனையோ, "என் வார்த்தையை சற்றே நீங்கள் கேட்க வேண்டும்; கேட்டபின்னரும், நான் கொல்லப்பட வேண்டியவன் என்று நீங்கள் நினைத்தால், என்னை நீங்கள் கொல்லலாம்" என்று கூறியது;

இதனால், கழுகு சிறிது மன நிம்மதியடைந்து, பூனை சொல்வதைக் கேட்டது;

"நான் இந்தக் கங்கையில் எப்போதும் தீர்த்தமாடி வருகின்றேன்; நான், மாமிசத்தை ஒருபோதும் சாப்பிடுவதில்லை; பிரமச்சரியம், சாந்திராயணம், முதலிய விரதங்களை எல்லாம் அனுட்டித்து வருகிறேன்; உங்களின் நற்குணங்களும், தரும சாத்திர உணர்வுகளும், உங்களை மற்ற பறவைகள் பாராட்டி பேசுவதையும் கேட்டிருக்கிறேன்; எனவே, வயதிலும், அறிவிலும், முதிர்ந்த உங்களின் தரும உபதேசத்தை கேட்டு அறியும்படி உங்களிடம் வந்திருக்கிறேன்; தரும ஞானியாகிய நீங்கள், அதிதியாகிய என்னைக் கொல்ல மாட்டீர்கள் என்று தெரியும்; இல்வாழ்க்கையில் இருப்பவரின் தருமங்களை சொல்கிறேன் கேளும்; வீட்டுக்கு வந்தவன் பகைவனாக இருந்தாலும் அவனுக்கு அதிதி சற்காரஞ் செய்தல் வேண்டும்; மரமானது தன்னை வெட்டிபவனுக்கும் நிழல் கொடுக்கின்றது; வீட்டிலே உணவு இல்லையாயின் இன் சொல்லாவது கூறி அதிதியை வழிபடல் வேண்டும்; அதிதி எல்லோராலும் போற்றத்தக்கவன்; வீட்டிற்கு வந்த அதிதி வெறுப்புடன் வெளியேறிப் போனால், வீட்டில் வாழ்பவனுக்குப் பாவம் வந்து சேரும்; செய்து வைத்த புண்ணியமும் நீங்கிவிடும்: அதிதி எல்லாத் தேவர்களின் வடிவாகவும் இருக்கின்றான்" என்றது அந்தப் பூனை;

"பூனைகள் எல்லாமே மாமிசம் சாப்பிடும்; இங்கு பறவைக் குஞ்சுகள் இருக்கின்றன; அதனால்தான் நான், உன்னை விரட்டி விடுவதற்காக, அப்படிச் சொன்னேன்" என்றது கழுகு.

இதைக் கேட்ட பூனை, தன் காதுகளைப் பொத்திக் கொண்டு கூறியது;
"கிருஷ்ணா! கிருஷ்ணா!! நான் தரும சாத்திரம் கேட்டிருக்கிறேன்; என்னிடத்தில் அவா (ஆசை) என்பதில்லை; சாந்திராயண விரதமும் முடித்திருக்கிறேன்; கொல்லாமையே பெரும் தருமம் என்பது சமயிகள் யாவருக்கும் சம்மதம்; கொலை செய்யாதவரும், பரோபகாரிகளும் சொர்க்கம் போகின்றனர்; தருமம் என்னும் நண்பன் ஒருவனே  மரணத்தின் பின்னும் தொடர்கிறான்; மற்றவை எல்லாம் உடல்போலவே இங்கே அழிந்துவிடும்: காட்டிலே முளைக்கும் புல் முதலியனவற்றை, உண்டு வாழும் மிருகங்களை எவன் கொல்லுவான்?" என்றது அந்தப் பூனை.

இவ்வாறு பூனை கூறி, ஒருவாறு, கழுகுக்கு விசுவாசத்தை உண்டாக்கி விட்டது; அதனால், அந்த பொந்திலேயே அந்த பூனையும் வசித்து வந்தது;
சிலநாட்களில், இரகசியமாக இந்த பூனை வெளியேறி வந்து, யாருக்கும் தெரியாமல், பறவைக் குஞ்சுகளை தூக்கிக் கொண்டுவந்து உண்டு வந்தது;

குஞ்சுகள் காணாமல் போனதை அறிந்த பறவைகள் அழுது புலம்பின; விசாரனை ஆரம்பித்தது; விசாரனை ஆரம்பமாகிறது என்று அறிந்த பூனை, மெதுவாக பொந்தை விட்டுக் கிளம்பி வெளியேறி விட்டது; குஞ்சுகளைத் தேடிய ஒரு பறவை, இந்த பொந்தில், பறவைக் குஞ்சுகளின் எலும்புகள் கிடப்பதைப் பார்த்தது; அதற்கு கழுகுமேல் ஒரு சந்தேகம் வந்துவிட்டது; மற்ற பறவைகளுக்கும் இதைச் சொன்னவுடன், அவைகள் ஆத்திரம் அடைந்து, அந்த கழுகைக் கொன்று விட்டன;
"இரக்கம் தனக்கே வினையாகிவிடும்".
**
(இதோபதேசம் என்பது இதம்+உபதேசம்; இதம் என்னும் நன்மைதரும் உபதேசம் ஆகும்; இதை  பல நீதிக்கதைகளாக விஷ்ணுசர்மா என்ற பண்டிதர், அரச குமாரர்களுக்கு கூறியதாகச் சொல்லப்படுகிறது.)


Saturday, February 20, 2016

பணக்கார எலியும் ஏழை சந்நியாசியும்

எலியின் இதோபதேசம்
எலி சொல்கிறது:
சம்பகாவதி என்னும் நகரில் சந்நியாசிகள் வசிக்கும் இடம் ஒன்று உண்டு; அங்கு சூடாகருணன் என்னும் பெயருடைய ஒரு சந்நியாசி இருந்தார்; அவர் எப்போதும் தன் பிச்சைப் பாத்திரத்தில் உள்ள உணவை சாப்பிட்டுவிட்டு, மீதியை அந்தப் பிச்சைப் பாத்திரத்திலேயே வைத்து, அதை, சுவற்றின் இருக்கும் ஒரு நாகதந்தத்தில் தூக்கிக் கட்டிவிட்டு தூங்கச் செல்வார்; அதை நான் (எலி) தினந்தோறும் அதை எடுத்துச் சாப்பிட்டு வந்தேன்; இது அந்த சந்நியாசிக்குத் தெரியாது என்று நினைத்தேன்;
ஒருநாள், சூடாகர்ணன் என்ற இந்த சந்நியாசியைத் தேடி, அவருடைய நண்பர் வீணாகர்ணன் வந்தார்; வந்த நண்பரோ, முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்; அந்த நேரத்தில் நான் (எலி) அங்கு வருவதைப் பார்த்துவிட்ட சந்நியாசி, தன்னிடமிருந்த ஒரு உடைந்த மூங்கில் குச்சியை தரையில் தட்டி என்னை மிரட்டுவதுபோல எச்சரித்தார்;
இதை அங்கு வந்த நண்பர் வீணாகர்ணன் பார்த்தார்: தன் பேச்சைக் கேட்காமல், ஏதோ குச்சியை வைத்து தட்டுகிறாரே என்று கோபம் வந்தது
"நண்பரே! நான் சொல்லும் விஷயத்தில் கவனம் இல்லாமல், நீர் குச்சியுடன் விளையாடிக் கொண்டு என்னை அலட்சியப் படுத்துகிறீர்" என்று கோபித்துக் கொண்டார்
"நமது நண்பர் ஒருவர் ஆர்வமாகப் பேசும்போது, முகம் மலர்ந்திருக்க வேண்டும், கண் விழித்திருக்க வேண்டும், விரைந்து பார்த்திருக்க வேண்டும், இன்சொற்கள் கூறல் வேண்டும்" என்பதே இலக்கணம்" என்று சற்று கோபமாகவே கூறினார்;
உடனே அவர், "நண்பரே! நான் உங்களை அவமானப் படுத்தவில்லை; இந்த எலி, நான் பிச்சைப் பாத்திரத்தில் வைத்திருக்கும் அன்னத்தை வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கிறது" அதனால் அதை மிரட்டுவதற்காகவே மூங்கில் குச்சியால் தரையைத் தட்டினேன்" என்று கூறினார்.
"எப்படி, இவ்வளவு உயரத்தில் உள்ள நாகதந்தத்தை இந்த எலி தாவிப் போய் சாப்பிடுகிறது, ஆச்சரியமாக இருக்கிறதே" என்று கேட்டார்:
அவரே சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, இப்படிக் கூறுகிறார்:
"ஒரு சிறு எலிக்கு எங்கிருந்து இவ்வளவு பலம் வந்திருக்க முடியும்? செல்வம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்! செல்வம் (திரவியம்) அதிகமாக வைத்திருப்பவன் பலம் பொருந்தியவன்; செல்வம் வைத்திருப்பவன், எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பலம் பொருந்தியவன்; செல்வமே ஒருவனை பிரபுவாக வைத்திருக்கும், அரசனிடம் சென்று பேசும் தைரியத்தையும் கொடுக்கும்" என்று கூறினார்.
எனவே இந்த எலியும் திரவியங்களை வைத்திருப்பதால்தான்இவ்வளவு துணிச்சலுடன் இயங்குகிறது என்று நினைக்கிறேன், என்று சொல்லிவிட்டு, ஒரு கடப்பாரையை எடுத்து என் எலிப் பொந்தை தோண்டி அது சேர்த்து வைத்திருக்கும் எல்லாத் திரவியங்களையும் எடுத்துக் கொண்டார்;
அதுமுதல், நான் (எலி), என்னுடைய தைரியம் குறைந்து, பலம் குறைந்து, முயற்சியும் குறைந்து, ஆகாரமும் குறைந்து, அச்சத்தோடு மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே திரிந்தேன்; முன்னைப் போல, தாவிக் குதிக்க முடியவில்லை;
இப்படி பலம் குன்றித் திரியும் என்னைப் (எலியை) பார்த்து, ஒருநாள்  சூடாகருணன் என்னும் அந்த சந்நியாசி சொல்கிறார்:
"எலியே! உன் திரவியம் குறைந்ததால், நீ உன் சாதிக்கு சமமாகி வந்து விட்டாய்; ஒருவன் செல்வத்தில் பலவான் ஆகிறான்; செல்வத்தினால் பண்டிதனும் ஆகிறான்; திரவியம் உடையவன் மனிதன்; திரவியம் உடையவனுக்கே சிநேகிதரும் உண்டு; சுற்றமுண்டு; திரவியத்தை இழந்த மனிதன் அப்பொழுதே வேறு ஒருவனாக தோன்றுகிறான்; திரவியம் இல்லாதவனின் செயல்கள் எல்லாம், கோடைகாலச் சிற்றாறு போல சிறிது காலத்தில் அழிகின்றன; திரவியம் இல்லாமையால், வரும் துயரமோ, மரணத்தின் துயரத்தைவிடப் பெரியது; திரவியம் இல்லாத வீடு முழுவதும் சூனியம்" என்று என்னிடம் (எலியிடம்) அந்த சந்நியாசி கூறுகிறார்;
இந்த வார்த்தையெல்லாம் நான் (எலி) கேட்டு, "இங்கே இருத்தலும், திரவியம் இழந்த செய்தியைப் பிறர்க்கு சொல்லுதலும் நல்லதல்ல" என்று யோசிக்கிறேன்; என் சுற்றத்தாருக்கு இது தெரியக் கூடாது; திரவிய நஷ்டம், மனத்துயர், வீட்டில் கலகம், அவமானம், வஞ்சிக்கப்பட்டமை, தவம், தானம், வயசு முதலியவைகளை பிறர்க்குச் சொல்லக் கூடாது" என்று நினைத்துக் கொண்டேன்.
திரவியம் செலவாவதற்க்கு மூன்று வழிகள்தான் உண்டு:

பிறருக்குக் கொடுத்தல், தான் அனுபவித்தல், அழித்தல் என்ற இந்த மூன்று வழிகளில்தான் செலவாகும்; பிறருக்கு கொடுக்காமலும், தானும் அனுபவிக்காமலும் இருக்கும் திரவியமானது, திருடரையாவது, அரசரையாவது, தீயையாவது போய்ச் சேரும்; கொடுக்காமல் வைத்திருக்கும் செல்வந்தரை யாரும் செல்வர் என்று சொல்லமாட்டார்; எனவே பிறருக்கு கொடுத்து தானும் அனுபவிக்கும் செல்வந்தரே செல்வர்

Saturday, February 13, 2016

இதோபதேசம்-3

இதோபதேசம்-3


கூட்டத்தில் இருந்த ஒரு புறா கேள்வி கேட்கிறது;
"ஒவ்வொரு செயலுக்கும் அதன் பாதகங்களை ஆராய்ந்து வாழ முடியுமா? ஆபத்து காலத்தில் வேண்டுமானல் மூத்தவர் வார்த்தையைக் கேட்டுக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு விஷயத்துக்கும் முன் எச்சரிக்கை ஏற்படுத்த நினைத்தால், நாம் நினைக்கும் காரியங்கள் எதையும் முயற்சி செய்யவே முடியாதே? நமக்கு, அன்னமும் தண்ணீரும் தீங்கில்லாமல் எங்கு கிடைக்கும்? முன் எச்சரிக்கை என்று நினைத்தால், எப்படி நாம் உயிர் வாழ முடியும்?

உலகில், பொறாமை உள்ளவன், உலோபம் உள்ளவன், மனம் திருந்தாதவன், கோபம் உள்ளவன், நித்திய சந்தேகி, பிறர் பொருள்களில் ஜீவன் செய்பவன் என்னும் இந்த ஆறுபேரும் துன்பத்தில்தான் வாழ்வார்கள்" என்றது அந்தப் புறா;

இந்தப் புறா சொல்வது சரிதான் என்று நினைத்து, நிலத்தில் கிடந்த அரிசிக் குறுணியை தின்பதற்காக மற்ற புறாக்கள் ஆகாயத்திலிருந்து கீழே இறங்கின; இறங்கிய புறாக்கள் எல்லாம் வேடன் விரிந்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன; மாட்டிக் கொண்ட புறாக்கள் எல்லாம், தங்களுக்குப் புத்தி சொன்ன அந்தப் புறாவைத் திட்டித் தீர்த்தன;

திட்டு வாங்குவது உலகப் பழக்கம்தானே! ஒரு கூட்டத்தில் ஒரு விஷயத்தை முன்னெடுத்து சென்றவன் வெற்றி பெற்றால், அந்த வெற்றி அந்த கூட்டத்துக்கே உரியது என்று எல்லோரும் நினைத்துக் கொள்வர்; அதே தோல்வியில் முடிந்தால், வழி நடத்தியவன் தவறு என்று அவனையே நிந்திப்பர், -- இதுதானே உலக வழக்கு;

இதைக் கண்ட புறாக்களின் அரசனான சித்திரக்கிரீவன், "வலையில் சிக்கியது அந்த புறாவின் புத்திமதியால்தான் என்று யாரும் எண்ண வேண்டாம்; பசுவின் கன்றை, அந்த பசுவின் காலிலேயே கட்டி விடுவர்; அதனால் கன்றைக் கட்டியதற்கு அந்த தாய்ப்பசுவின் காலும் ஒரு காரணம் என்று குறை சொல்லுவது போல இருக்கிறது உங்கள் அனைவரின் குற்றச் சாட்டும்; ஆபத்து வந்த வேளையில் அதை நீக்கிக் காப்பவனே சுற்றத்தான் ஆவான்; ஆபத்து நீங்கி, காக்க வேண்டிய வேளையிலே தாமதிப்பவன் அறிவாளி அல்லன்; தைரியம் கொண்டு ஆபத்தை நீங்கும் வழியைத் தேடுவோம்மனம் தளராமல் நாம் அனைவரும் செயலில் இறங்க வேண்டும்; ஆபத்து காலத்தில், "தைரியம், செல்வம், முதலிய பேறுகள், பொறுமை, சபையிலே வாக்கு வல்லமை, போரில் வீரம், புகழில் பிரியம், கல்வியில் பிரியம் என்னும் இவை இயல்பிலேயே பெரியோர்களிடம் அமைந்திருக்கிறது; உயர்வடைய விரும்புபவர்கள், நித்திரை, முயற்சியின்மை, அச்சம், கோபம், தாமதம் என்னும் ஆறு குற்றங்களையும் அகற்றல் வேண்டும்; ஆதலால், தாமதமின்றி நாமெல்லாம் ஒரு மனதோடு வேடன் விரித்த வலையை அப்படியே தூக்கிக் கொண்டு மேலே நாம் கூட்டாகப் பறந்து விட வேண்டும்; சிறியனவாயினும் பல பொருள்கள் ஒருங்கே சேர்ந்தால் அவை பெரிய காரியங்களையும் முடிக்க வல்லது; சிறிய புல்லுகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிக் கட்டிய கயிற்றினால்தான், பெரிய மதயானைகளும் கட்டப்படுகின்றன" என்பது எல்லோரும் அறிந்ததுதானே!

இதைச் சொல்லி முடித்தவுடன், எல்லாப் புறாக்களும் ஒருசேர, வேடனின் வலையைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன; வேடனும் அவைகளைப் பின்தொடர்ந்து ஓடினான்; புறாக்கள் எங்காவது தரை இறங்கும் இடத்தில் அவைகளைப் பிடித்துவிடலாம் என்று நினைத்திருப்பான்; ஆனால், புறாக்களோ கண்ணுக்கெட்டாத தூரத்துக்கே போய் விட்டன; தோல்வியுடன் வேடன் திரும்பி வந்தான்;

புறாக்களின் தலைவன் சித்திரகிரீவன் இப்போது பேசுகிறது:
"மாதா, பிதா, மித்திரன் (தாய், தந்தை, நண்பன்) இவர்கள் மூவருமே இயல்பிலேயே நமக்கு நன்மை செய்கிறவர்கள்; மற்றவர்கள் அனைவரும், ஏதாவது ஒரு காரணத்துக்காக நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள்; எனக்கு அப்படிப்பட்ட நண்பன் ஒருவன், கண்டகி ஆற்றங்கரையில் சித்திரவனத்தில் இருக்கிறான்; அவன் பெயர் இரணியகன்: எலிகளுக்கு அரசன்; அவனிடம் போனல், அவன் இந்த வேடன் வலையை அறுத்து வெட்டிவிடுவான்" என்று கூறியது; அங்கு புறப்பட்டார்கள்;

இரணியகன் என்னும் எலி அரசன், தனக்கு அபாயம் நேரும் என்று அஞ்சி, நூறு துவாரம் வைத்து தோண்டப்பட்ட புற்றில் இருக்கிறான்; புறாக்கள் சட சட என்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மொத்த கூட்டமும் அந்த எலிப் புற்றுக்கு அருகில் தரை இறங்கின; அந்த சப்தத்தில் பயந்து, எலி அரசன் பதுங்கி மௌனமாக இருக்கிறான்;

புறாக்களின் தலைவனான சித்திரகிரீவன், "எலி நண்பரே! நான் வந்திருக்கிறேன்; நீ பேசாமல் பதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்? என்று கேட்டு அந்த புற்றின் வாசலில் நின்றது;

புறாத்தலைவன் குரல் கேட்டவுடன், நம் நண்பன்தான் வந்திருக்கிறான் என்று கருதி, வெளியே வந்தது எலி அரசன்;
"ஆகா, என் நண்பன் புறாத்தலைவன் வந்திருக்கிறான்; என்ன புண்ணியம் செய்தேன், என் நண்பனைக் காண?" என்று ஆவலுடன் அவனிடம் சென்றது:

ஆம், வெகுநாள் கழித்து வந்த மித்திரனுடன் (நண்பனுடன்) பேசுதலும், மித்திரனுடன் கூடி இருத்தலும், அவனுடன் அளவளாவுதலும் இவற்றைவிட மேலான புண்ணியம் ஏதேனும் உலகில் உண்டா என்ன? இது முற்பிறவியில் நாங்கள் செய்து வைத்த புண்ணியத்தின் பலனே! ஒருவன் செய்த நன்மையும் தீமையும் விதி வசத்தால், அவனை அடைகின்றன; நோய், துயர், இரங்கல், மறியல், என்பவை ஒருவன் செய்த குற்றத்தினாலேதான் அவனை அடைகின்றன";

புறாக்கள் வலையில் மாட்டிக் கொண்ட கொடுமையைச் சொன்னவுடன், எலி உடனே தன் நண்பனிடம் சென்று அவன் மாட்டிக் கொண்ட வலையை வெட்ட எத்தனித்தது; அதைக் கண்ட புறாக்களின் அரசன், "நண்பனே, முதலில் என் கூட்டத்தினரின் வலையை வெட்டிவிடு: பின்னர் என் வலையை வெட்டலாம்" என்றது;

ஆனால், எலித் தலைவன், "நண்பனே! என் பற்கள் பலமிழந்து விட்டன: எனவே முதலில் உன் வலையை வெட்டி விடுகிறேன்; பின்னர் முடிந்தவரை மற்றவர்களின் வலையை வெட்டி விடுகிறேன்" என்றது;

"தன் உயிரைக் கைவிட்டுப் பிறர் உயிரைக் காத்தல் நீதி சாஸ்திர சம்மதமன்று: ஒருவன் ஆபத்தில் உதவும் என்று பொருளைப் பேணல் வேண்டும்; பொருளின் விஷேசமாகத் தன்னைப் பேணல் வேண்டும்; பொருள் முதலியவற்றை தேடுவதற்குக் காரணமான தன் உயிரை அழிப்பவன் எப்பொருளையும் அழித்தவன் ஆவான்; அதனைக் காப்பவன் எல்லாப் பொருளையும் காப்பவன் ஆவான்" என்று எலி அரசன் கூறியது;

இதைக்கேட்ட புறாத் தலைவன் சித்திரக்கிரீவன், "மித்திரா! நீ சொன்னது நீதியே ஆனாலும், என் பரிவாரங்கள் படும் துயரை நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது; இந்த ஆபத்தில் இவர்களை கைவிடுவேன் என்றால், இவைகளுக்கு நான் அரசனாக இருக்கும் முதன்மை எனக்கு எப்படி வரும்? நிலையில்லா என் உடம்பை காப்பாற்றும் பொருட்டு, என்றும் நிலைத்து நிற்கும் என் கீர்த்தியை இழப்பது நன்றன்று" என்றது;

இதைக் கேட்ட எலி அரசன் இரணியகன், "மித்திரா! நன்று நன்று! அடைந்தோரைக் காக்கும் அருளினால் மூவுலகும் நீயே பிரபு ஆகின்றாய்;" என்று புகழ்ந்த அந்த எலி, வலைகளை எல்லாம் வெட்டி விட்டது;

"மித்திரா! வலையில் அகப்பட்டது குற்றமன்று; இது விதிவலியால் நிகழ்ந்தது; விதியின் வலியை ஒருவரும் வெல்லமாட்டார்; சந்திர சூரியர் இராகு கேதுக்களால் பிடிக்கப்படுகின்றனர்; பாம்புகளும் யானைகளும் கட்டப்படுகின்றன; அறிஞரும் வறிஞராய் அலைகின்றனர்; ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும் ஆபத்தைச் சந்திக்கின்றன; ஆழ்ந்த கடலினுள் இருக்கும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன; விதிவலியை வென்றவர் யார்?

நண்பர்கள் நன்றி சொல்லிக் கொண்டனர்; புறாக்கள் சந்தோஷமாகப் பறந்து சென்றனர்;

இதை அங்கிருந்த மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இலகுபதனன் என்னும் அந்தக் காகம், அந்த எலியிடம் சென்று, "பெரும் கீர்த்தி பெற்ற உன்னிடம் நானும் நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று தன் ஆசையை வெளிப்படுத்தியது;
தொடரும்....
(விஷ்ணுசர்மா என்ற பண்டிதரின் இதோபதேசம் என்று நூலில் ஒரு சிறு பகுதி இது)
**

இதோபதேசம்-2

இதோபதேசம்-2

கோதாவரி ஆற்றங்கரையில், பரந்த கிளைகளை உடைய ஒரு இலவமரம் நிற்கின்றது; அம்மரத்திலே பல வகையான பறவைகள் வந்து இரவில் தங்கி, நித்திரை செய்து, விடியற்காலையில் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்று விடும்;

அந்தப் பறவைகளில் ஒரு காகமும் ஒன்று: அதன் பெயர் இலகுபதனன்; ஒருநாள் இரவு, அந்த காகம் அந்த இலவமரத்தில் வந்து நித்திரை செய்து விடியற்காலையில் எழுந்திருக்கிறது; அப்போது அந்த காட்டில் இமயன் போன்று ஒரு வேடன் ஒருவனைப் பார்க்கிறது; "இன்றைக்கு இவன் முகத்தில் விழித்திருக்கிறோம்; என்ன கெடுதல் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே என்று கலங்குகிறது; அந்த கலக்கத்துடனேயே அது பறந்து சென்றது

மூடன்  "கவலைப்படுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்றும்; அஞ்சுவதற்கு நூற்றுக் கணக்கில் நடக்கின்றன" என்றும் புலம்புவானாம்;

வந்த வேடன், தன்னிடம் இருந்த அரிசிக்குறுணியை நிலத்திலே சிதறி விட்டான்; அந்த இடத்தில் ஒரு வலையைப் போட்டு வைத்தான்; மரத்துக்கு மறைவில் நின்று கொண்டான்;

அப்போது ஆகாயத்தில், புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன; அதில் சில புறாக்கள் இந்த அரிசிக்குறுணியை பார்த்து விட்டன; அவற்றை தின்பதற்காக, கீழே இறங்கி வர எத்தனித்தன; இதைக் கண்ட புறாக்களின் அரசன் (அரச புறா) "இங்கு மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அரிசிக்குறுணி எப்படி வரும்? இதில் ஏதோ சூது இருக்கிறது; நாம் யாரும் கீழே இறங்கக் கூடாது;" என்று கட்டளை இட்டது:

அதைத் தொடர்ந்து, அரசு புறா, மற்ற புறாக்களுக்கு, "வழிப்போக்கன் புலியிடம் மாட்டிக் கொண்ட கதையைக்" கூறியது;
அந்த புலிக்கதைதான் இங்கு "இதோபதேசம்-1" என்று கூறப்பட்டுள்ளது;

(விஷ்ணுசர்மா என்னும் பண்டிதரின் இதோபதேசம் என்னும் நீதிக் கதைகளிலிருந்து ஒரு பகுதி).
**



இதோபதேசம்-1

புறாக்களின் அரசன், தன் இனமான மற்ற புறாக்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறது:

"நான் ஒருநாள் தென் காட்டில் செல்லும் போது, ஒரு கிழப்புலியைக் கண்டேன்; அந்தப் புலி, நீரிலே முழுகி, கையிலே தர்ப்பையையும் வைத்துக் கொண்டு, ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டிருந்த வழிப்போக்கர்களை நோக்கி, 'என் கையில் இருக்கும் இந்த பொற்காப்பினை யாருக்காவது கொடுக்க விரும்புகிறேன்; எடுத்துக் கொள்க' என்றது;

புலியின் அருகில்போய் அதனை வாங்குவதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள்; ஆனால் ஒருவன் மட்டும், தங்கத்தின் மீது ஆசைப்பட்டு, 'இது நல்ல விதியால் எனக்குக் கிடைக்கிறது; ஆனாலும் எனக்குச்  சந்தேகமாக இருக்கிறது; செல்வத்தைத் தேடும்போது எடுக்கும் முயற்சியில் சிரமம் இருக்கத்தான் செய்யும்; ஆனால் தீங்கு இல்லாமல் செல்வம் கிடைத்தால் நல்லது; அப்படி கிடைப்பதே அரிதாக இருக்கிறதே! என்று யோசித்தான்;

புலி, தன் கையைக்காட்டி, இந்தா! வந்து வாங்கிக் கொள் என்று ஆசை காட்டியது; 'கொலையாளியாகிய உன்னிடத்திலா, இரக்க குணம்? ஆச்சரியமாக இருக்கிறதே!' என்று வியக்கிறான்;

ஆனால் புலி அவனிடம் கூறியது:
" வழிப்போக்கனே! கேள்! நான் என் இளம் பருவத்தில் தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தேன்; அப்போது பல மிருகங்களையும் மானிடர்களையும் கொன்று தின்றேன்; அந்தப் பாவத்தால் என் பிள்ளைகளை இழந்தேன்; எனக்கு வாரிசு இல்லாமல், என் வம்சமே அழிந்து விட்டது; ஒரு தரும சீலரைப் பார்த்தேன்; அவர் என்னிடம், "தானம், தருமம், முதலியவைகளைச் செய் என்று எனக்கு உபதேசித்து விட்டுப் போனார்; அதனால், நான் இப்போது தானம் செய்கிறேன்; எனக்கோ வயதாகி விட்டது; என்னுடைய நகங்களும், பற்களும் விழுந்து விட்டனஇப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி கொலையாளியாக இருக்க முடியும்! என்னை நம்புவதற்கு உனக்கு என்ன தடை? நான், யாகம், வேதம் ஓதுதல், தானம், தவம், சத்தியம், உறுதி, பொறுமை, உலோபமின்மை என்னும் தருமங்கள் எட்டு வகையையும் அறிந்திருக்கிறேன்; என்னிடத்தில் உலோபமில்லை; எனவே இந்த பொற்காசுகளை உன்னிடம் கொடுக்க விரும்புகிறேன்; ஆனால், 'புலி, மனிதனைக் கண்டால் அவனைக் கொன்று புசிக்கும்' என்பது உலகப் பழக்கம்; அப்படி மனிதர்கள் நினைப்பதை மாற்ற முடியாது; உலக மக்கள் ஆராய்ந்து நடப்பவர்கள் இல்லை; பழமொழியை நம்பி மட்டுமே நடப்பவர்கள்; அவர் செம்மறி ஆட்டுக் கூட்டம்; ஒரு ஆடு போன வழியிலேயே மற்ற ஆடுகளும் போகும் என்பது போல மக்களும் ஒருவர் சொல்லிச் சென்ற வார்த்தையையே நம்பிக் கொண்டு இருப்பார்கள்

நானும் தரும சாஸ்திரம் படித்திருக்கிறேன்; கேள்;
"குந்தி புத்திரா, வறியவர்களைப் பாதுகாத்துக் கொள்; செல்வர்களுக்கு திரவியங்களை கொடுக்காதே; நோயாளனுக்கு அல்லாமல் நோய் இல்லாதவனுக்கு மருந்து கொடுப்பதால் என்ன பயன்?" என்று பாரதம் சொல்கிறது;"

நீயோ, வறியவன் போலத் தெரிகிறாய்! இந்த பொற்காசுகள் உனக்குத்தான் தர விரும்புகிறேன்; இக்குளத்தில் முழுகிவிட்டு வந்து இதனை ஏற்றுக் கொள்" என்று அந்த புலி அவனிடம் கூறியது;

அவனும் அதை நம்பி, குளத்தில் மூழ்கினான்; ஆனால் அதிலுள்ள சேற்றில் சிக்கி விட்டான்; உடனே புலி, அவன் அருகில் சென்று தூக்கிவிடுகிறேன் என்று கூறி அருகில் சென்றது; அருகில் சென்ற புலி, அவனைப் பிடித்துக் கொண்டது; அவன், "என் நிலை இப்படி ஆகி விட்டதே!" என்று கலங்கினான்;

தீயவன், தரும சாஸ்திரம் படித்தாலும், நன்னடத்தைக்கு வரமாட்டான்; எப்போதும் அவனின் இயற்கை குணமே மேலோங்கி இருக்குமாம்;
கொம்புடைய மிருகத்திடமும், நதிகளிடத்திலும், நகமுள்ள மிருகங்களிடத்திலும், வஞ்சகப் பெண்களிடத்திலும், தகுதியில்லாத அரசர்களிடத்திலும் விசுவாசம் என்னும் நம்பிக்கையை வைக்கக் கூடாது;

விதியின் வலியை விலக்குதல் முடியாது; ஆகாயத்தில் போகும் சந்திரனை ராகு பிடிக்கவில்லையா? என்று அவனுக்கு அப்போதுதான் புத்தி தெளிகிறது; அப்போது, அந்த புலி அவனை கொன்று தின்று விட்டது;
நல்லவன், கெட்டவன் என்று ஆராயாமல் ஒருவனிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே இதன் நீதி.

(விஷ்ணு சர்மா என்னும் பண்டிதர் சொல்லிய இதோ உபதேசம் என்று நூலில் ஒரு சிறு நீதிக் கதை இது; (இதோ உபதேசம் =நன்மைதரும் உபதேசம்)
**