இதோபதேசம்-3
கூட்டத்தில் இருந்த ஒரு புறா கேள்வி கேட்கிறது;
"ஒவ்வொரு செயலுக்கும் அதன் பாதகங்களை ஆராய்ந்து வாழ முடியுமா? ஆபத்து காலத்தில் வேண்டுமானல்
மூத்தவர் வார்த்தையைக் கேட்டுக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு விஷயத்துக்கும் முன் எச்சரிக்கை ஏற்படுத்த நினைத்தால், நாம் நினைக்கும் காரியங்கள் எதையும் முயற்சி செய்யவே முடியாதே? நமக்கு, அன்னமும் தண்ணீரும் தீங்கில்லாமல் எங்கு கிடைக்கும்? முன் எச்சரிக்கை என்று நினைத்தால், எப்படி நாம் உயிர்
வாழ முடியும்?
உலகில்,
பொறாமை உள்ளவன், உலோபம் உள்ளவன், மனம் திருந்தாதவன், கோபம் உள்ளவன், நித்திய சந்தேகி, பிறர் பொருள்களில் ஜீவன் செய்பவன் என்னும்
இந்த ஆறுபேரும் துன்பத்தில்தான் வாழ்வார்கள்" என்றது அந்தப்
புறா;
இந்தப் புறா சொல்வது சரிதான் என்று நினைத்து, நிலத்தில் கிடந்த அரிசிக்
குறுணியை தின்பதற்காக மற்ற புறாக்கள் ஆகாயத்திலிருந்து கீழே இறங்கின; இறங்கிய புறாக்கள் எல்லாம் வேடன் விரிந்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன;
மாட்டிக் கொண்ட புறாக்கள் எல்லாம், தங்களுக்குப்
புத்தி சொன்ன அந்தப் புறாவைத் திட்டித் தீர்த்தன;
திட்டு வாங்குவது உலகப் பழக்கம்தானே! ஒரு கூட்டத்தில் ஒரு விஷயத்தை
முன்னெடுத்து சென்றவன் வெற்றி பெற்றால்,
அந்த வெற்றி அந்த கூட்டத்துக்கே உரியது என்று எல்லோரும் நினைத்துக் கொள்வர்;
அதே தோல்வியில் முடிந்தால், வழி நடத்தியவன் தவறு
என்று அவனையே நிந்திப்பர், -- இதுதானே உலக வழக்கு;
இதைக் கண்ட புறாக்களின் அரசனான சித்திரக்கிரீவன், "வலையில் சிக்கியது
அந்த புறாவின் புத்திமதியால்தான் என்று யாரும் எண்ண வேண்டாம்; பசுவின் கன்றை, அந்த பசுவின் காலிலேயே கட்டி விடுவர்;
அதனால் கன்றைக் கட்டியதற்கு அந்த தாய்ப்பசுவின் காலும் ஒரு காரணம் என்று
குறை சொல்லுவது போல இருக்கிறது உங்கள் அனைவரின் குற்றச் சாட்டும்; ஆபத்து வந்த வேளையில் அதை நீக்கிக் காப்பவனே சுற்றத்தான் ஆவான்; ஆபத்து நீங்கி, காக்க வேண்டிய வேளையிலே தாமதிப்பவன் அறிவாளி
அல்லன்; தைரியம் கொண்டு ஆபத்தை நீங்கும் வழியைத் தேடுவோம்; மனம் தளராமல் நாம் அனைவரும் செயலில்
இறங்க வேண்டும்; ஆபத்து காலத்தில், "தைரியம், செல்வம், முதலிய பேறுகள்,
பொறுமை, சபையிலே வாக்கு வல்லமை, போரில் வீரம், புகழில் பிரியம், கல்வியில் பிரியம் என்னும் இவை இயல்பிலேயே பெரியோர்களிடம் அமைந்திருக்கிறது;
உயர்வடைய விரும்புபவர்கள், நித்திரை, முயற்சியின்மை, அச்சம், கோபம்,
தாமதம் என்னும் ஆறு குற்றங்களையும் அகற்றல் வேண்டும்; ஆதலால், தாமதமின்றி நாமெல்லாம் ஒரு மனதோடு வேடன் விரித்த
வலையை அப்படியே தூக்கிக் கொண்டு மேலே நாம் கூட்டாகப் பறந்து விட வேண்டும்; சிறியனவாயினும் பல பொருள்கள் ஒருங்கே சேர்ந்தால் அவை பெரிய காரியங்களையும்
முடிக்க வல்லது; சிறிய புல்லுகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிக்
கட்டிய கயிற்றினால்தான், பெரிய மதயானைகளும் கட்டப்படுகின்றன" என்பது எல்லோரும் அறிந்ததுதானே!
இதைச் சொல்லி முடித்தவுடன், எல்லாப் புறாக்களும் ஒருசேர, வேடனின் வலையைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன; வேடனும்
அவைகளைப் பின்தொடர்ந்து ஓடினான்; புறாக்கள் எங்காவது தரை இறங்கும்
இடத்தில் அவைகளைப் பிடித்துவிடலாம் என்று நினைத்திருப்பான்; ஆனால்,
புறாக்களோ கண்ணுக்கெட்டாத தூரத்துக்கே போய் விட்டன; தோல்வியுடன் வேடன் திரும்பி வந்தான்;
புறாக்களின் தலைவன் சித்திரகிரீவன் இப்போது பேசுகிறது:
"மாதா,
பிதா, மித்திரன் (தாய், தந்தை,
நண்பன்) இவர்கள் மூவருமே இயல்பிலேயே நமக்கு நன்மை செய்கிறவர்கள்;
மற்றவர்கள் அனைவரும், ஏதாவது ஒரு காரணத்துக்காக
நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள்; எனக்கு அப்படிப்பட்ட நண்பன்
ஒருவன், கண்டகி ஆற்றங்கரையில் சித்திரவனத்தில் இருக்கிறான்;
அவன் பெயர் இரணியகன்: எலிகளுக்கு அரசன்; அவனிடம்
போனல், அவன் இந்த வேடன் வலையை அறுத்து வெட்டிவிடுவான்" என்று
கூறியது; அங்கு புறப்பட்டார்கள்;
இரணியகன் என்னும் எலி அரசன், தனக்கு அபாயம் நேரும் என்று அஞ்சி,
நூறு துவாரம் வைத்து தோண்டப்பட்ட புற்றில் இருக்கிறான்; புறாக்கள் சட சட என்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மொத்த கூட்டமும் அந்த எலிப்
புற்றுக்கு அருகில் தரை இறங்கின; அந்த சப்தத்தில் பயந்து,
எலி அரசன் பதுங்கி மௌனமாக இருக்கிறான்;
புறாக்களின் தலைவனான சித்திரகிரீவன், "எலி நண்பரே! நான்
வந்திருக்கிறேன்; நீ பேசாமல் பதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?
என்று கேட்டு அந்த புற்றின் வாசலில் நின்றது;
புறாத்தலைவன் குரல் கேட்டவுடன், நம் நண்பன்தான் வந்திருக்கிறான்
என்று கருதி, வெளியே வந்தது எலி அரசன்;
"ஆகா,
என் நண்பன் புறாத்தலைவன் வந்திருக்கிறான்; என்ன
புண்ணியம் செய்தேன், என் நண்பனைக் காண?" என்று ஆவலுடன் அவனிடம் சென்றது:
ஆம்,
வெகுநாள் கழித்து வந்த மித்திரனுடன் (நண்பனுடன்) பேசுதலும், மித்திரனுடன் கூடி இருத்தலும், அவனுடன் அளவளாவுதலும்
இவற்றைவிட மேலான புண்ணியம் ஏதேனும் உலகில் உண்டா என்ன? இது முற்பிறவியில்
நாங்கள் செய்து வைத்த புண்ணியத்தின் பலனே! ஒருவன் செய்த நன்மையும் தீமையும் விதி வசத்தால்,
அவனை அடைகின்றன; நோய், துயர்,
இரங்கல், மறியல், என்பவை
ஒருவன் செய்த குற்றத்தினாலேதான் அவனை அடைகின்றன";
புறாக்கள் வலையில் மாட்டிக் கொண்ட கொடுமையைச் சொன்னவுடன், எலி உடனே தன் நண்பனிடம்
சென்று அவன் மாட்டிக் கொண்ட வலையை வெட்ட எத்தனித்தது; அதைக் கண்ட
புறாக்களின் அரசன், "நண்பனே, முதலில்
என் கூட்டத்தினரின் வலையை வெட்டிவிடு: பின்னர் என் வலையை வெட்டலாம்" என்றது;
ஆனால்,
எலித் தலைவன், "நண்பனே! என் பற்கள் பலமிழந்து
விட்டன: எனவே முதலில் உன் வலையை வெட்டி விடுகிறேன்; பின்னர் முடிந்தவரை
மற்றவர்களின் வலையை வெட்டி விடுகிறேன்" என்றது;
"தன் உயிரைக் கைவிட்டுப் பிறர் உயிரைக் காத்தல் நீதி சாஸ்திர
சம்மதமன்று: ஒருவன் ஆபத்தில் உதவும் என்று பொருளைப் பேணல் வேண்டும்; பொருளின் விஷேசமாகத் தன்னைப்
பேணல் வேண்டும்; பொருள் முதலியவற்றை தேடுவதற்குக் காரணமான தன்
உயிரை அழிப்பவன் எப்பொருளையும் அழித்தவன் ஆவான்; அதனைக் காப்பவன்
எல்லாப் பொருளையும் காப்பவன் ஆவான்" என்று எலி அரசன் கூறியது;
இதைக்கேட்ட புறாத் தலைவன் சித்திரக்கிரீவன், "மித்திரா! நீ சொன்னது
நீதியே ஆனாலும், என் பரிவாரங்கள் படும் துயரை நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது;
இந்த ஆபத்தில் இவர்களை கைவிடுவேன் என்றால், இவைகளுக்கு
நான் அரசனாக இருக்கும் முதன்மை எனக்கு எப்படி வரும்? நிலையில்லா
என் உடம்பை காப்பாற்றும் பொருட்டு, என்றும் நிலைத்து நிற்கும்
என் கீர்த்தியை இழப்பது நன்றன்று" என்றது;
இதைக் கேட்ட எலி அரசன் இரணியகன், "மித்திரா! நன்று
நன்று! அடைந்தோரைக் காக்கும் அருளினால் மூவுலகும் நீயே பிரபு ஆகின்றாய்;"
என்று புகழ்ந்த அந்த எலி, வலைகளை எல்லாம் வெட்டி
விட்டது;
"மித்திரா! வலையில் அகப்பட்டது குற்றமன்று; இது விதிவலியால் நிகழ்ந்தது;
விதியின் வலியை ஒருவரும் வெல்லமாட்டார்; சந்திர
சூரியர் இராகு கேதுக்களால் பிடிக்கப்படுகின்றனர்; பாம்புகளும்
யானைகளும் கட்டப்படுகின்றன; அறிஞரும் வறிஞராய் அலைகின்றனர்;
ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும் ஆபத்தைச் சந்திக்கின்றன; ஆழ்ந்த கடலினுள் இருக்கும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன; விதிவலியை வென்றவர் யார்?
நண்பர்கள் நன்றி சொல்லிக் கொண்டனர்; புறாக்கள் சந்தோஷமாகப்
பறந்து சென்றனர்;
இதை அங்கிருந்த மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இலகுபதனன்
என்னும் அந்தக் காகம், அந்த எலியிடம் சென்று, "பெரும் கீர்த்தி பெற்ற உன்னிடம்
நானும் நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று தன் ஆசையை வெளிப்படுத்தியது;
தொடரும்....
(விஷ்ணுசர்மா என்ற பண்டிதரின் இதோபதேசம் என்று நூலில் ஒரு சிறு
பகுதி இது)
**
No comments:
Post a Comment