Tuesday, February 23, 2016

முதுமையின் வலி

“அந்தக் காலத்துல, பொறந்திருக்கிறது ஆணா பொண்ணான்னு மட்டும்தான் பார்த்தாக; தேதியை எங்க குறிச்சு வைச்சாக; பொறந்ததுலே இருந்து மண்ணுக்குள்ள போறவரைக்கும், உழைச்சுதான் கஞ்சி குடிக்கணும்னு இருக்கிற நிலையிலே தேதியைக் குறிச்சு வைக்க என்ன தேவை இருந்துச்சு; எனக்கு அந்த தேதி எல்லாம் தெரியாதுப்பா;
அவருக்கு நூறு வயதைக் கடந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன; கூன் விழுந்த தன் ஆறடி உடம்பை சின்ன மூங்கில் கம்பின் துணையால் தாங்கிக் கொண்டு, இன்றும் தனக்காகவும், தன் மனைவிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்;
இவ்வளவு வயதுவரை வாழ்வது வரமா, சாபமா?
“இப்படி திடீர்னு கேட்டா என்னத்தைச் சொல்வது? இப்ப பார்த்தீங்கன்னா, காலையிலே ஒரு சோலியா வெளியே போனவன், உச்சிப் பொழுதாகப் போகுது; இன்னும் கஞ்சி குடிக்கலை; கிழவி (மனைவி) என்னத்த தாராளோ, அதைக் குடிச்சிட்டு, அடுத்த சோலிக்கு போனாத்தான், ராத்திரிக்கு சோறு; இதான்யா என் வாழ்க்கை; இதுல வரம், சாபம் பத்தியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியலே! வாழ்க்கை போற போக்குல நானும் போயிட்டே இருக்கேன்”.
சிறு வயதிலேயே காலாரா நோய்க்கு பெற்றோரைப் பறிகொடுத்தவர்; கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தன்னையும், உடன் பிறந்தவர்களையும், காப்பாற்றி, சுயம்புவாக வளர்ந்து, ஊரில் வேரூன்றி இருக்கிறார்; இன்றும் சொந்தங்கள் சுற்றி இருந்தாலும், இவரும் இவர் மனைவியும் தனியாகத்தான் வாழ்கின்றனர்;
அவுகவுக வாழ்க்கையைப் பாத்துக்கவே அவுகளுக்கு சிரமமா இருக்கு! இதுல நாம வேற சுமையா எதுக்கு இருக்கணும்? யார்மீதும் குற்றம் சுமத்த மறுக்கிறது அவரின் மனம்;
உறவுக்காரங்க இல்லாம வாழ்ந்துட முடியுமா?
ஆத்தாடி! அதெப்படி முடியும்? ஒரு நல்லது கெட்டது நடக்கும்போது, நமக்கு கண்டிப்பா ஊருக்காரங்க தயவு வேணும்; அதுக்காக, அவுகளே எல்லாத்தையும் நின்னு பார்த்துகிட முடியுமா? அந்த நல்லது கெட்டதை நின்னு நடத்துறதுக்கு, நாலு உறவுக்காரவுக ஒத்தாசையும் தேவையா இருக்குதானே! ரத்த ஓட்டம் நல்லா இருக்கிற வரைக்கும் உறவுக்காரங்களே வேண்டாம்ன்னு தான் தோணும்; ரத்தம் சுண்டி, வயசாகி, வதங்கி நிற்கறப்போதான் நிஜம் புரியும். அந்தநேரத்துல, அவுக தானே வந்து பார்த்தாகணும்;
உழைச்சிட்டு ஒருத்தரிடம் கூலி வாங்கிறது தப்பில்லை; ஆனா, கூலியை முதலில் வாங்கிவிட்டு, அப்பறம் வேலை செய்யக்கூடாது; அது நம்மளை அடிமையாக்கிடும்; ஒருவகையில் கடன்வாங்குறதும் அதுபோலத்தான் என்பதாலேயே, நான் அப்படிச் செய்வதில்லை;
உறவுக்காரர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்து வந்தாலும், தன் உறவுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை இவர் செய்து வருகிறார்; 111 வயதான தன் தங்கையையும் இப்படியே பார்த்துக் கொள்கிறார்;
இவரை அடிக்கடி பாதிக்கும் விஷயம் ஒன்றுதான்: அது, ராத்திரி வரையில் நல்லா பேசிக்கிட்டு இருந்த இவரின் மகன் காலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தவன் எழுந்திருக்கவே இல்லையாம்; உயிர் பிரிந்து விட்டது; அவர் பார்த்து வளர்த்த பிள்ளை அவரின் கண் முன்னே போனது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தூங்க விடுவதில்லையாம்; “எனக்கு அவன் செய்ய வேண்டிய கட்டுகளை எல்லாம், நான் அவனுக்குச் செஞ்சிட்டு இருக்கேன்” என்று ஆதங்கப்படுகிறார்; இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமை என்று தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்;
“விழுதே இல்லாத மரமா ஆயிடுவேனா!” என்று நெஞ்சு கலங்குகிறதாம்; முதுமையின் வலி;
(நன்றி: தினமலர் நாளிதழின் "இப்படியும் சில மனிதர்கள்")



No comments:

Post a Comment