திருமந்திரம் - திருமூலர்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றவன் மூன்றனுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந்து எட்டே.
பாற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்றுமைத் தானையான் கூறுகின்றேன்.
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறியாத பரமனைப்
புக்கநின்று உன்னியான் போற்றி செய்வேனே.
அகலிடத்தார் மெய்யை அண்டத்தின் வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீக்கிநின் றேனே.
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லத் தலைமகன்
தன்னை அப்பாயெனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பாகின்ற போதகத் தானே.
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல்அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடையோனே.
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படுவார் இல்லைதானே.
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சூடுஅங்கி ஞாயிறும் திங்களும்
தானே மறைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடலாமே.
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்றாங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.
**
No comments:
Post a Comment