புறாக்களின் அரசன், தன் இனமான மற்ற புறாக்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறது:
"நான் ஒருநாள் தென் காட்டில் செல்லும் போது, ஒரு கிழப்புலியைக் கண்டேன்;
அந்தப் புலி, நீரிலே முழுகி, கையிலே தர்ப்பையையும் வைத்துக் கொண்டு, ஒரு குளத்தின்
கரையில் நின்று கொண்டிருந்த வழிப்போக்கர்களை நோக்கி, 'என் கையில்
இருக்கும் இந்த பொற்காப்பினை யாருக்காவது கொடுக்க விரும்புகிறேன்; எடுத்துக் கொள்க' என்றது;
புலியின் அருகில்போய் அதனை வாங்குவதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள்; ஆனால் ஒருவன் மட்டும்,
தங்கத்தின் மீது ஆசைப்பட்டு, 'இது நல்ல விதியால்
எனக்குக் கிடைக்கிறது; ஆனாலும் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது; செல்வத்தைத்
தேடும்போது எடுக்கும் முயற்சியில் சிரமம் இருக்கத்தான் செய்யும்; ஆனால் தீங்கு இல்லாமல் செல்வம் கிடைத்தால் நல்லது; அப்படி
கிடைப்பதே அரிதாக இருக்கிறதே! என்று யோசித்தான்;
புலி,
தன் கையைக்காட்டி, இந்தா! வந்து வாங்கிக் கொள் என்று
ஆசை காட்டியது; 'கொலையாளியாகிய உன்னிடத்திலா, இரக்க குணம்? ஆச்சரியமாக இருக்கிறதே!' என்று வியக்கிறான்;
ஆனால் புலி அவனிடம் கூறியது:
" வழிப்போக்கனே! கேள்! நான் என் இளம் பருவத்தில் தீய ஒழுக்கம்
உடையவனாக இருந்தேன்; அப்போது பல மிருகங்களையும் மானிடர்களையும் கொன்று தின்றேன்; அந்தப் பாவத்தால் என் பிள்ளைகளை இழந்தேன்; எனக்கு வாரிசு
இல்லாமல், என் வம்சமே அழிந்து விட்டது; ஒரு தரும சீலரைப் பார்த்தேன்; அவர் என்னிடம்,
"தானம், தருமம், முதலியவைகளைச்
செய் என்று எனக்கு உபதேசித்து விட்டுப் போனார்; அதனால்,
நான் இப்போது தானம் செய்கிறேன்; எனக்கோ வயதாகி
விட்டது; என்னுடைய நகங்களும், பற்களும்
விழுந்து விட்டன; இப்படிப்பட்ட
நிலையில் நான் எப்படி கொலையாளியாக இருக்க முடியும்! என்னை நம்புவதற்கு உனக்கு என்ன
தடை? நான், யாகம், வேதம் ஓதுதல், தானம், தவம்,
சத்தியம், உறுதி, பொறுமை,
உலோபமின்மை என்னும் தருமங்கள் எட்டு வகையையும் அறிந்திருக்கிறேன்;
என்னிடத்தில் உலோபமில்லை; எனவே இந்த பொற்காசுகளை
உன்னிடம் கொடுக்க விரும்புகிறேன்; ஆனால், 'புலி, மனிதனைக் கண்டால் அவனைக் கொன்று புசிக்கும்' என்பது
உலகப் பழக்கம்; அப்படி மனிதர்கள் நினைப்பதை மாற்ற முடியாது;
உலக மக்கள் ஆராய்ந்து நடப்பவர்கள் இல்லை; பழமொழியை
நம்பி மட்டுமே நடப்பவர்கள்; அவர் செம்மறி ஆட்டுக் கூட்டம்;
ஒரு ஆடு போன வழியிலேயே மற்ற ஆடுகளும் போகும் என்பது போல மக்களும் ஒருவர்
சொல்லிச் சென்ற வார்த்தையையே நம்பிக் கொண்டு இருப்பார்கள்;
நானும்
தரும சாஸ்திரம் படித்திருக்கிறேன்; கேள்;
"குந்தி புத்திரா, வறியவர்களைப் பாதுகாத்துக் கொள்; செல்வர்களுக்கு திரவியங்களை கொடுக்காதே; நோயாளனுக்கு
அல்லாமல் நோய் இல்லாதவனுக்கு மருந்து கொடுப்பதால் என்ன பயன்?" என்று பாரதம் சொல்கிறது;"
நீயோ,
வறியவன் போலத் தெரிகிறாய்! இந்த பொற்காசுகள் உனக்குத்தான் தர விரும்புகிறேன்;
இக்குளத்தில் முழுகிவிட்டு வந்து இதனை ஏற்றுக் கொள்" என்று அந்த
புலி அவனிடம் கூறியது;
அவனும் அதை நம்பி,
குளத்தில் மூழ்கினான்; ஆனால் அதிலுள்ள சேற்றில்
சிக்கி விட்டான்; உடனே புலி, அவன் அருகில்
சென்று தூக்கிவிடுகிறேன் என்று கூறி அருகில் சென்றது; அருகில்
சென்ற புலி, அவனைப் பிடித்துக் கொண்டது; அவன், "என் நிலை இப்படி ஆகி விட்டதே!" என்று
கலங்கினான்;
தீயவன்,
தரும சாஸ்திரம் படித்தாலும், நன்னடத்தைக்கு வரமாட்டான்;
எப்போதும் அவனின் இயற்கை குணமே மேலோங்கி இருக்குமாம்;
கொம்புடைய மிருகத்திடமும், நதிகளிடத்திலும், நகமுள்ள
மிருகங்களிடத்திலும், வஞ்சகப் பெண்களிடத்திலும், தகுதியில்லாத அரசர்களிடத்திலும் விசுவாசம் என்னும் நம்பிக்கையை வைக்கக் கூடாது;
விதியின் வலியை விலக்குதல் முடியாது; ஆகாயத்தில் போகும் சந்திரனை
ராகு பிடிக்கவில்லையா? என்று அவனுக்கு அப்போதுதான் புத்தி தெளிகிறது;
அப்போது, அந்த புலி அவனை கொன்று தின்று விட்டது;
நல்லவன்,
கெட்டவன் என்று ஆராயாமல் ஒருவனிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது
என்பதே இதன் நீதி.
(விஷ்ணு சர்மா என்னும் பண்டிதர் சொல்லிய இதோ உபதேசம் என்று
நூலில் ஒரு சிறு நீதிக் கதை இது;
(இதோ உபதேசம் =நன்மைதரும் உபதேசம்)
**
No comments:
Post a Comment