Saturday, February 20, 2016

பணக்கார எலியும் ஏழை சந்நியாசியும்

எலியின் இதோபதேசம்
எலி சொல்கிறது:
சம்பகாவதி என்னும் நகரில் சந்நியாசிகள் வசிக்கும் இடம் ஒன்று உண்டு; அங்கு சூடாகருணன் என்னும் பெயருடைய ஒரு சந்நியாசி இருந்தார்; அவர் எப்போதும் தன் பிச்சைப் பாத்திரத்தில் உள்ள உணவை சாப்பிட்டுவிட்டு, மீதியை அந்தப் பிச்சைப் பாத்திரத்திலேயே வைத்து, அதை, சுவற்றின் இருக்கும் ஒரு நாகதந்தத்தில் தூக்கிக் கட்டிவிட்டு தூங்கச் செல்வார்; அதை நான் (எலி) தினந்தோறும் அதை எடுத்துச் சாப்பிட்டு வந்தேன்; இது அந்த சந்நியாசிக்குத் தெரியாது என்று நினைத்தேன்;
ஒருநாள், சூடாகர்ணன் என்ற இந்த சந்நியாசியைத் தேடி, அவருடைய நண்பர் வீணாகர்ணன் வந்தார்; வந்த நண்பரோ, முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்; அந்த நேரத்தில் நான் (எலி) அங்கு வருவதைப் பார்த்துவிட்ட சந்நியாசி, தன்னிடமிருந்த ஒரு உடைந்த மூங்கில் குச்சியை தரையில் தட்டி என்னை மிரட்டுவதுபோல எச்சரித்தார்;
இதை அங்கு வந்த நண்பர் வீணாகர்ணன் பார்த்தார்: தன் பேச்சைக் கேட்காமல், ஏதோ குச்சியை வைத்து தட்டுகிறாரே என்று கோபம் வந்தது
"நண்பரே! நான் சொல்லும் விஷயத்தில் கவனம் இல்லாமல், நீர் குச்சியுடன் விளையாடிக் கொண்டு என்னை அலட்சியப் படுத்துகிறீர்" என்று கோபித்துக் கொண்டார்
"நமது நண்பர் ஒருவர் ஆர்வமாகப் பேசும்போது, முகம் மலர்ந்திருக்க வேண்டும், கண் விழித்திருக்க வேண்டும், விரைந்து பார்த்திருக்க வேண்டும், இன்சொற்கள் கூறல் வேண்டும்" என்பதே இலக்கணம்" என்று சற்று கோபமாகவே கூறினார்;
உடனே அவர், "நண்பரே! நான் உங்களை அவமானப் படுத்தவில்லை; இந்த எலி, நான் பிச்சைப் பாத்திரத்தில் வைத்திருக்கும் அன்னத்தை வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கிறது" அதனால் அதை மிரட்டுவதற்காகவே மூங்கில் குச்சியால் தரையைத் தட்டினேன்" என்று கூறினார்.
"எப்படி, இவ்வளவு உயரத்தில் உள்ள நாகதந்தத்தை இந்த எலி தாவிப் போய் சாப்பிடுகிறது, ஆச்சரியமாக இருக்கிறதே" என்று கேட்டார்:
அவரே சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, இப்படிக் கூறுகிறார்:
"ஒரு சிறு எலிக்கு எங்கிருந்து இவ்வளவு பலம் வந்திருக்க முடியும்? செல்வம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்! செல்வம் (திரவியம்) அதிகமாக வைத்திருப்பவன் பலம் பொருந்தியவன்; செல்வம் வைத்திருப்பவன், எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பலம் பொருந்தியவன்; செல்வமே ஒருவனை பிரபுவாக வைத்திருக்கும், அரசனிடம் சென்று பேசும் தைரியத்தையும் கொடுக்கும்" என்று கூறினார்.
எனவே இந்த எலியும் திரவியங்களை வைத்திருப்பதால்தான்இவ்வளவு துணிச்சலுடன் இயங்குகிறது என்று நினைக்கிறேன், என்று சொல்லிவிட்டு, ஒரு கடப்பாரையை எடுத்து என் எலிப் பொந்தை தோண்டி அது சேர்த்து வைத்திருக்கும் எல்லாத் திரவியங்களையும் எடுத்துக் கொண்டார்;
அதுமுதல், நான் (எலி), என்னுடைய தைரியம் குறைந்து, பலம் குறைந்து, முயற்சியும் குறைந்து, ஆகாரமும் குறைந்து, அச்சத்தோடு மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே திரிந்தேன்; முன்னைப் போல, தாவிக் குதிக்க முடியவில்லை;
இப்படி பலம் குன்றித் திரியும் என்னைப் (எலியை) பார்த்து, ஒருநாள்  சூடாகருணன் என்னும் அந்த சந்நியாசி சொல்கிறார்:
"எலியே! உன் திரவியம் குறைந்ததால், நீ உன் சாதிக்கு சமமாகி வந்து விட்டாய்; ஒருவன் செல்வத்தில் பலவான் ஆகிறான்; செல்வத்தினால் பண்டிதனும் ஆகிறான்; திரவியம் உடையவன் மனிதன்; திரவியம் உடையவனுக்கே சிநேகிதரும் உண்டு; சுற்றமுண்டு; திரவியத்தை இழந்த மனிதன் அப்பொழுதே வேறு ஒருவனாக தோன்றுகிறான்; திரவியம் இல்லாதவனின் செயல்கள் எல்லாம், கோடைகாலச் சிற்றாறு போல சிறிது காலத்தில் அழிகின்றன; திரவியம் இல்லாமையால், வரும் துயரமோ, மரணத்தின் துயரத்தைவிடப் பெரியது; திரவியம் இல்லாத வீடு முழுவதும் சூனியம்" என்று என்னிடம் (எலியிடம்) அந்த சந்நியாசி கூறுகிறார்;
இந்த வார்த்தையெல்லாம் நான் (எலி) கேட்டு, "இங்கே இருத்தலும், திரவியம் இழந்த செய்தியைப் பிறர்க்கு சொல்லுதலும் நல்லதல்ல" என்று யோசிக்கிறேன்; என் சுற்றத்தாருக்கு இது தெரியக் கூடாது; திரவிய நஷ்டம், மனத்துயர், வீட்டில் கலகம், அவமானம், வஞ்சிக்கப்பட்டமை, தவம், தானம், வயசு முதலியவைகளை பிறர்க்குச் சொல்லக் கூடாது" என்று நினைத்துக் கொண்டேன்.
திரவியம் செலவாவதற்க்கு மூன்று வழிகள்தான் உண்டு:

பிறருக்குக் கொடுத்தல், தான் அனுபவித்தல், அழித்தல் என்ற இந்த மூன்று வழிகளில்தான் செலவாகும்; பிறருக்கு கொடுக்காமலும், தானும் அனுபவிக்காமலும் இருக்கும் திரவியமானது, திருடரையாவது, அரசரையாவது, தீயையாவது போய்ச் சேரும்; கொடுக்காமல் வைத்திருக்கும் செல்வந்தரை யாரும் செல்வர் என்று சொல்லமாட்டார்; எனவே பிறருக்கு கொடுத்து தானும் அனுபவிக்கும் செல்வந்தரே செல்வர்

No comments:

Post a Comment