Sunday, January 24, 2016

இன்று தைப்பூசம்

இன்று தைப்பூசம்

தைமாதத்தின் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு தைப்பூச விழா நடக்கும்; இத்துடன் இன்று பௌர்மணியும் சேர்ந்துள்ளது;

முருகனின் அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் ஆலயங்கள் அனைத்திலும் தைப்பூச விழா நடக்கிறது:

சென்னை நகரில், வடபழனி முருகன், கந்தகோட்ட முருகன், குன்றத்தூர் முருகன், குரோம்பேட்டை முருகன், சைதாப்பேட்டை முருகன் மற்றும் வல்லக்கோட்டை முருகன், சிறுவாபுரி முருகன், திருப்போரூர் முருகன், குமரகோட்ட முருகன் கண்டிகை முருகன், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முருகன் அறுபடை முருகன் கோயில்கள் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் தைபூச விழா நடக்கிறது:

Saturday, January 23, 2016

ஆதிசேஷன்

ஆதிசேஷன்
கசியப பிரசாபதிக்கும் கந்துருவைக்கும் பிறந்தவர்களில் மூத்தவன்; இவனின் தாய் கந்துருவை, தன் சக்களத்திக்கு செய்த கொடுமைகளைக் காணச் சகிக்காமல், திவ்விய தேசங்களான திருக்கோகர்ணம், கந்தமாதனம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு கடும் தவம் புரிகிறான்: அதைக் கண்ட பிரம்மா, இவனுக்கு, இந்த பூமியின் பாரத்தை தாங்கும் பலத்தை அவனுக்கு வழங்கினார்:

பின்னர், அவனின் கடும் தவத்தால், விஷ்ணுவுக்கு ஆயிரம் தலை உடைய சர்ப்ப சயனமாகவும், எல்லா சர்பங்களுக்கும் ராஜாவாவும் இருக்கும்படி அருளினார்;

இந்த ஆதிசேஷனை ஒருமுறை பிருகு முனிவர் சபித்து விட்டார்: அதனால், ஆதிசேஷன், பலராமனாக அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம்;

அகத்தியரும் வாதாபியும்

அகத்தியரும் வாதாபியும்
யாருக்குமே வழிவிடாத விந்திய மலையை தன் காலால் அழுத்தி  அதை கடந்து வந்தவர் அகத்தியர்; அதை கடந்துவிட்டதும், அதை தெரிந்த "இல்வலன்" மற்றும் "வாதாபி" என்ற இரு அசுரர்கள் சகோதரர்கள், திட்டமிட்டு அகத்தியரை கொன்று விட நினைக்கின்றனர்;

அதில், இல்வலன்  பிராமணனாகவும், வாதாபி ஒரு ஆடாகவும் மாறுவேடத்தில் அகத்தியரை சந்தித்து, விருந்துக்கு அழைத்தனர்;

ஆடாக இருக்கும் வாதாபியை, பிராமணனாக இருக்கும் இல்வலன், ஆட்டை வெட்டி கறி சமைத்து அகத்தியருக்கு கொடுக்கிறான்; அவர் சாப்பிட்டவுடன் " வெளியே வா வாதாபியே" என்று சொன்னவுடன் அகத்தியரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவதாக ஏற்பாடு:

ஆனால், அகத்தியர் இதை முன்னரே தெரிந்துகொண்டு, ஆட்டை சாப்பிட்டவுடன், "ஜீரணம் ஆகுக" என்று மந்திரம் சொல்லி, வயிற்றுக்குள் போன ஆட்டுக் கறியை ஜீரணிக்கிறார்; அத்துடன் முடிகிறது வாதாபி கதை; இல்வலனையும் தன் மந்திரத்தால் சாம்பலாக்கி விட்டார்; 

Sunday, January 17, 2016

தேகியின் லட்சணம்

வஞ்சிர காயம்
அண்ணா! தேகம் நிலையானதல்ல என்றால், சில யோகிகள், தபசிகள், தங்கள் காயத்தை (உடலை) வச்சிர காயமாக்குவதின் பிரயோசனம் யாது? நிலையில்லாத தேகத்தை எவ்விதம் வச்சிர காயமாக்கலாம்?

தம்பீ! இறக்கும் இயல்புள்ள தேவர்களுக்கு அமரர் என்னும் பெயர் உபசாரமாக வழங்கப்படுவது போல, நிலையில்லாத தேகத்துக்கும் சாமானிய மனிதரின் தேகத்தைப் போல இல்லாமல், நோயின்றி கூடிய காலத்துக்கு உயிருடன் இருப்பதால், உபசாரமாக வச்சிரகாயம் என்னும் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது: அதை விட்டு, வச்சிக்காயம் என்றென்றைக்கும இறவாது இருக்குமென்று எண்ணுவது தவறு; இவ்வித விளக்க பேதத்தினால் அனேகர் மோசம் போகின்றனர்.

(அ=இல்லை, இன்மை என்று பொருள்;
மரர் என்றால் மரிப்பவர், இறப்பவர்;
எனவே அமரர் என்பது மரியாதவர், இறவாதவர் எனலாம்)

தேகம் நிலையானதல்ல; ஆனால் தேகி (அந்த தேகத்தில் வசிப்பவன்) என்னென்றைக்கும் நிலையானவன்; அன்றியும் தேகிக்காத் தேகம் உண்டானதே அன்றி, தேகத்துக்காக தேகி உண்டாவில்லை; என்றாலும் தேகத்தைக் கவனியாது விட்டுவிடும்படி சொல்லவில்லை; அதற்குப் போதுமான, ஊண், உடை, நித்திரை முதலியவற்றைக் கொடுப்பதே தவிர, மிதமிஞ்சிக் கொடுப்பது அநாவசியம்; தேகியை விட்டுத் தேகத்தையே பொருளாக மதித்து, அதற்காக இரவும் பகலும் காலத்தைச் செலவிடுவது விவேகிகளின் இலட்சணமல்ல!
________


Saturday, January 16, 2016

El Nino எல்நினோ

Diary 1
El Nino எல்நினோ
வெப்ப பகுதி என்று சொல்லலாம்;
En Nino Southern Oscillation (in short ENSO);

2015 டிசம்பரில் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரத்தில் சென்னையில் கடலூரில் கொட்டித் தீர்த்த மழை; மழை என்று சொல்வது சாதாரணமான வார்த்தையாக தெரிகிறது; கடுமையான வார்த்தை ஏதாவது இருக்கிறதா? வெள்ளக்காடு என்று சொல்லலாம்;

பைபிளில் சொல்லப்பட்டுள்ளது; 
இதே போன்ற ஒரு வெள்ளம் வந்ததாம்; கடவுள் நோவாவிடம் இதை சொல்லி உஷார் படுத்தி இருக்கிறார்: அவரும், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும், ஆடு மாடு பறவை மிருங்களையும் காப்பாற்ற, ஒரு பெரிய கப்பல் செய்து அதில் இவை அனைத்தையும் ஏற்றிக் கொண்டு மிதந்து திரிந்து, வெகுநாள் கழித்து வெள்ளம் கொஞ்சம் குறைந்தவுடன், ஒரு மலையை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறாராம்;

அப்படி ஒரு வெள்ளம் சென்னையில்.... அதை அனுபவித்தவர்கள் சொல்லும்போது, பைபிளின் நோவாவின் வெள்ளப் பெருக்கையே நினைவூட்டுகிறது;

ஏன் இந்த வெள்ளம்? கடலின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கிறதாம்; பசிபிக் கடலில் இது அதிகமாக இருக்கிறதாம்; 1998லிருந்தே இது இருக்கிறதாம்; இதன் பாதிப்பால், கம்போடியா, தென்-இந்தியா, கிழக்கு இந்தனோஷியா, மத்திய பிலிப்பைன்ஸ், தெற்கு பிலிப்பைன்ஸ், வட தாய்லாந்து பகுதிகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்குமாம்; இதனால் கனமழை அதிகமாக இருக்குமாம்;

சென்னையில் 2015 நவம்பர்-டிசம்பரில் இதுவரை இல்லாத மழை அளவு பெய்தது; அதன் அளவு: 21 அங்குலம் என்கிறார்கள்; 12 அங்குலம் என்றால் ஒரு அடி; கிட்டத்தட்ட இரண்டு அடி உயரக் கணக்கில் மழை; இதுவரை இப்படி ஒரு அளவில் பெய்ததில்லை; புண்ணியவான்கள் அதிகமாக இருந்ததால் சென்னை இந்த அளவு பாதிப்புடன் மறுபடியும் உயிர் பெற்றது;

இனி நாம் உஷாராகவே இருக்க வேண்டும்; எல் நினோ வெப்பம் ஏன் கடலில் வருகிறது; அதுவும் தென் இந்தியா பகுதியில் ஏன் அதிகம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்;

அடுத்த எல்-நினோ வெப்ப மண்டலம் எப்படி உருவாகும் என்று தெரியவில்லை; தெரிந்தால், இந்த வெள்ளத்தை எதிர்பார்த்து உஷாராகலாம்;

ஆனால் இப்படியொரு வெள்ளம் வந்தால், இனி சென்னை எப்படி முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பழகிக் கொள்ளவும் வேண்டும்; வீடுகளில் “நோவாவின் படகும்” வைத்துக் கொள்ளவேண்டும்!

இந்த சென்னைப் பெருவெள்ளம் “எல்-நினோவால்” வந்ததே என வானியில் வல்லுனர்கள் கருதுகிறார்கள்; சாதாரண பருவ மழை என்று அசட்டையாக இருக்கக் கூடாது;




Wednesday, January 6, 2016

தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து வரவில்லை!

அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே, தமிழ்மொழி இங்கு வழங்கிவந்த மொழிதான் என்று கூறுகின்றனர்;

தமிழ்மொழிக்கு உரிய எழுத்துக்கள் 'முதல் எழுத்துக்கள்' என்றும், 'சார்பு எழுத்தக்கள்' என்றும் இரண்டு வகைப்படும்; அவற்றுள், உயிர் எழுத்துக்கள் 12; மெய் எழுத்துக்கள் 18;

வடமொழியில், முதல் எழுத்துக்கள் 51; அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 16; 
வடமொழியிலிருந்துதான் தமிழ் வந்தது என்பது உண்மையானால், தமிழிலே உள்ள எழுத்துக்களாலே வடமொழிப் பதங்களை திரிபின்றி அமைத்து கொண்டிருக்கமுடியும்; ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை; 

தெலுங்கு மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள், வடமொழி பதங்களை எடுத்து ஆண்டு கொண்டுள்ளனர்; ஆனால் தமிழுக்கு இலக்கணம் செய்தவர்கள் அவ்வாறு வடமொழியை தமிழில் எடுத்துக் கொள்ளவில்லை; 

தொல்காப்பியத்திலே வடமொழிப் பதம் ஒன்றுகூட வரவில்லை; அவை எல்லாம் செந்தமிழ் சொற்கள்; எனவே வடமொழியிலிருந்து தமிழ் வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனலாம்;

Tuesday, January 5, 2016

கிரிதார்ச்சுனீயம்-3

கிரிதார்ச்சுனீயம்-3
ஒற்றனாகச் சென்று வந்த வேடன், தர்மனிடம் கூறுகிறான்:
"தரும பூபனே! அரவக் கொடியோன் அரசியலை நன்று அறிந்து வந்து கூற, நீங்கள் என்னிடம் கூறினீர்கள்; நானோ காட்டில் திரியும் வேடன்; அவரோ நாடு புரக்கும் அரசு; அடியேனுக்கும் அரசியலுக்கும் நெடுந்தூரம்;  இருந்தாலும், உங்கள் அரு நோக்கம் கொண்டே நான் அறிந்து வந்த சிலவற்றை தெரிவிக்கிறேன்; நீவிர் பொறுமையுடன் செவி சாய்த்தருள வேண்டும்;
"உதிட்டிர மன்னவா! துரியோதனன் அஞ்சா நெஞ்சு படைத்து அரியாசனத்து அமர்ந்தான் ஆகையினால் காய் கனிகளையும் கந்த மூலங்களையும் புசித்து வாழும் உம்மைப் போல யாரிடமிருந்து என்றைக்கேனும் அவமானம் வரும் என்ற அச்சம் அவன் நெஞ்சத்தில் குடிகொண்டு கிடக்கின்றது; முன்னர், சூதாட்டத்தால் வென்ற குரு நாட்டை இன்று ஒல்லும் வகை நீதியால் வெல்ல முயன்று வருகின்றான்; புகழை விரும்பி குடிமக்களிடம் இன்முகம் காட்டி இன்சொற்கள் பேசி தானம் வழங்கி தயை காட்டி வருகின்றான்; விடரும் (குற்றவாளிகளும்), தூர்த்தரும் (வஞ்சகரும்), நடரும் (நடித்து பாசாங்கு செய்பவரும்) உள்ளிட்ட சிற்றினக் குழுவை சேராது விலக்கி, நன்நெறி செலுத்தும் பேரறிவுடைய பெரியோரை தனக்கு துணையாக கொண்டு ஒழுகுகிறான்;

மனுதர்ம நீதியில் இறை உணர்வுடன் வையம் காப்பான் துணிந்து காமமாதி உள்ளுரை பகைவர்களை திண்மை என்னும் தோட்டியால் அடக்கி இரவு என்றும் பாராமல் பகல் என்றும் பாராமல் முழுநேரத்தையும் நாட்டு மக்களின் நன்மைக்காக கழித்து வருகிறான்; தன்னை சூழ்ந்துள்ள பரிசனங்களின் மனம் மாறுபடாவண்ணம் அவர்களை உற்ற நண்பர்களாகவும், நண்பர்களை பந்துக்களாகவும், பந்துக்களை அமைச்சர் முதலாம் தலைமை அதிகாரிகளாகப் பாவித்து தமர் என்றும்  பிறர் என்றும் வித்தியாசம் பாராது யாவரையும் பாதுகாக்கின்றான்; அறம், பொருள், இன்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்களும் ஒருங்கே ஓரிடத்தில் நிலைகொள்வது அருமை; துரியோதனனிடமோ அவ்வுறுதி பொருள்கள் மூன்றும் விலகாது இருக்கின்றன; பரிசிலரைக் கண்ட பொழுது இனிய முகமும் இனிய சொல்லுமுடையவனாய் அவரவர் விரும்பிய பொருள்களை மனம் உவந்து பாத்திரம் அறிந்து வரையாது வழங்குகிறான்; குற்றம் செய்தோரை எக்காரணத்தை முன்னிட்டும் தண்டனை விதியாது விட்டுவிடுதல் கிடையாது; பகை, நொதுமல் (விருப்பு வெறுப்பு இல்லாமல்), நட்பு என்னும் முத்திறத்தார்களிடமும் அவ்வப்போது நிகழும் நல்லவும் தீயவும் ஆகிய சொற்களையும் செயல்களையும் நாடோறும் ஒற்றன் மூலம் விரைந்து அறிந்து கொள்கிறான்;

கிராதார்ச்சுனீயம்-2

கிராதார்ச்சுனீயம்-2
தர்மன், துரியோதனன் நாட்டை  வேவு பார்க்க அனுப்பிய வேடுவன் திரும்பி வந்துவிட்டான்; அவன் தர்மனை தனியே அழைத்து கூறுகிறான்;
"ஐயா, துரியோதனன் தனிண் செங்கோலோச்சும் முறைமையால் குடிகளது மனத்தைக் கொள்ளை கொண்டனன்" எனக் கூறத் தொடங்கியவன், பின்னர் ஐயுற்று, வேந்தனிடம், "வேற்று அரசரைப் புகழ்ந்து கூறுதல் நியாயமல்லவே! அப்படி கூறினால், நம் அரசனுக்கு வெறுப்பு வேரூன்றி விடும்; நான் கொண்ட கோலத்தின் இயல்போ உள்ளதை உள்ளவாறு உரைப்பதால் பொய் உரை வழங்குதல் பாதகமாகிவிடும். இருபக்கமும் எரியும் கொள்ளி குசச்சியில் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் எறும்பைப் போல தடுமாறினான்; (இருபாடெரி கொள்ளியினுள் எறும்பு போலாயினேனே!); எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ஒற்றன் என்று சொல்லிக் கொள்ளும் இலக்கணம் பொய்யாகும்;
இப்படி தவித்ததவன், துணிந்து உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறான்;
"தரும வேந்தே! இவ்வுலகில் மன்னனுக்கு ஒற்றும், உரைசான்ற நூலும் இரு கண்கள் என கூறுவர்; அதன்வழி வாழ்பவர் உண்மையை சிறிதும் மறைக்காமல் கூற வேண்டும்; ஆகவே நான் சொல்லும் செய்திகள் உங்கள் செவிக்கு இனிய வேனும் இன்னாத வேனும் நீங்கள் பொறுமையுடன் கேட்டு அருள வேண்டும்; மன்னவன் முன்னிலையில், ஒருவன், அவன் மனம் வெறுக்கும் எந்த உரைகளை கூறுதல் முற்றிலும் தகாத செயல் என்றாலும், அதை ஒற்றன் உரைத்தே தீரவேண்டும்; மன்னனுக்கு தன்னிடம் வெறுப்பு மிகும் என நினைத்துக் கொண்டு உண்மையை மறைப்பான் என்றால் அந்த ஒற்றன் தன் கடமையில் இருந்து பிறழ்ந்து இரௌரவம் (ஏழு பாதாள உலகங்களில் ஒன்று) போவான்; உற்ற நண்பனுக்கு உரிய காலத்தில் உறுதி பயக்கும் உண்மைப் பொருளை அவனுக்கு உரைத்தலே உலக முறைமை; அப்படி இல்லையென்றால், அவனும் இழிவுக்கு ஆளாகிறான்; அதுபோல அரசன் கேட்க வேண்டும்; இல்லையென்றால், அரசனுக்கும் பிரபுத் தன்மை இல்லாமல் போய்விடும்; அரசு ஓங்க வேண்டும் என்றால், அமைச்சும் ஒருமனப்பட வேண்டும்; இல்லையேல் இலக்குமி அந்த நாட்டைவிட்டு அகன்று அயல்நாட்டில் புகுவாள்; இத்தகைய காரணங்களால் அடியேனாகிய நான் ஒன்றைக் கூறுவதும், பெருமை தங்கிய நீங்கள் அதை கேட்பதும் இருவருக்கும் உள்ள கடமை ஆகும்;

கிராதார்ச்சுனீயம்-1

கிராதார்ச்சுனீயம்-1
12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அக்ஞாத வாசமும் செய்வதற்காக நாட்டைவிட்டு காடு புகுந்த பாண்டவர்கள் ஐவரும் கானகத்தில் அலைந்து திரிகையில், துவைத வனம் என்ற நன்மணம் கமழும் தண்பொழில்கள் சூழ்ந்த ஓர் ரம்மியமான வனத்தில் சிலநாட்கள் வசித்தனர்;
தருமநெறி தவறாத தர்மர், ஓர்நாள் இவ்வாறு யோசனை செய்கிறார்;
"என்னே! எம் வனவாசத்தின் பெரும் பகுதியும் இறைவன் திருவருளால் இடர் இன்றி கழிந்தது; இன்னும் சில தினங்களே உள்ளன; நாடு நீங்கி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன; நாடு என்னுடையது என்று தருக்கி கோலோச்சுகிறான் சுயோதன்; மக்களுக்கு, மன்னனிடம் எவ்வளவு அன்பு உருவாகி இருக்கிறதோ தெரியவில்லையே; அந்த அன்பில், மக்கள் ஒருவேளை என்னை மறந்திருக்கலாம்; யாருக்குத் தெரியும்; எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே; இனி என்ன செய்வது?" என நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்;
இதை தெளிவாகத் தெரிந்துகொள்ள ஓர் ஒற்றனை சுயோதனன் நாட்டிற்கு அனுப்புவதே நல்லது என துணிந்தான்; தன்னுடன் காட்டிலேயே வசித்து வருபவனான தனது நண்பனுமான வேடுவன் ஒருவனை அழைத்து தன் உள்ளத்தில் எழுந்ததை அவனுக்கு கூறினான்; அவனும் அதற்கு சம்மதித்தான்;
அவனைப் பார்த்து தர்மன் சொல்கிறான்-
"நண்ப! நீ இந்த வேடத்தோடு போகக்கூடாது; அவ்வாறு சென்றால், பலரும் உன்னைப் பார்த்து ஏளனம் செய்வார்கள்; நீ, எங்கும் புக முடியாத இடத்திலெல்லாம் புகுந்து போக வேண்டும்; அங்கு நடக்கும் பல அறிய விஷயங்களை எல்லாம் அறிய வேண்டும்; அவற்றை எனக்கு கூற வேண்டி உள்ளது;  நான்கு நிலைகள் உள்ளன; அதில் பிரமசாரிய நிலை வேடமே சிறந்தது" என்று கூறினான்.

அதைக் கேட்ட வேடுவன், 
"முறுக்கிய சடை முடியனும், நீறு பூத்த நெற்றியனும், அண்ணலாரக்கமாலை (ருத்ராட்ச கொட்டை) சூடிய கண்டனும், தண்டந் தாங்கிய கையனுமான துரியோதனன் நாட்டை அடைந்து, அங்கு சில பகல் இரவுகள் தங்கி, அவனது அரசியலை செவ்வனம் அறிந்து மீண்டும் துவைத வனம் வந்துவிடுவேன்" என்று சொல்லிச் சென்றான்.
)( 

18 மகா புராணங்கள்

வடமொழியில் மொத்தம் 18 மகா புராணங்களும், 18 உப புராணங்களும் உள்ளன;
18 மகா புராணங்கள்;
பிரஹ்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
வாயு புராணம்
பாகவத புராணம்
நாரதீய புராணம்
மார்க்கண்டேய புராணம்
அக்கினி புராணம்
பவிஷ்ய புராணம்
பிரஹ்மவைவர்த்த புராணம்
வாரஹ புராணம்
லிங்க புராணம்
ஸ்கந்த புராணம்
வாமன புராணம்
கூர்ம புராணம்
மத்ஸ்ய புராணம்
கௌட புராணம்
பிரம்மாண்ட புராணம்
என மொத்தம் 18 மகா புராணங்கள்.

காணபத்யம்

காணபத்யம் என்பது கணபதியை முழுமுதல் கடவுளாக்க் கொண்டு வழிபடும் முறை:

அதுபோலவே முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், சக்தி, சூரியன் ஆகிய கடவுள்களையும் முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடும் முறைகள் உள்ளன; அவை;

முருகப்பெருமான் - கௌமாரம்
சிவபெருமான் - சைவம்
திருமால் - வைஷ்ணவம்
சக்தி - சாக்தம்
சூரியன் - சௌரம்