கிரிதார்ச்சுனீயம்-3
ஒற்றனாகச் சென்று வந்த வேடன், தர்மனிடம் கூறுகிறான்:
"தரும பூபனே! அரவக் கொடியோன் அரசியலை நன்று அறிந்து வந்து கூற, நீங்கள் என்னிடம் கூறினீர்கள்; நானோ காட்டில் திரியும் வேடன்; அவரோ நாடு புரக்கும் அரசு; அடியேனுக்கும் அரசியலுக்கும் நெடுந்தூரம்; இருந்தாலும், உங்கள் அரு நோக்கம் கொண்டே நான் அறிந்து வந்த சிலவற்றை தெரிவிக்கிறேன்; நீவிர் பொறுமையுடன் செவி சாய்த்தருள வேண்டும்;
"உதிட்டிர மன்னவா! துரியோதனன் அஞ்சா நெஞ்சு படைத்து அரியாசனத்து அமர்ந்தான் ஆகையினால் காய் கனிகளையும் கந்த மூலங்களையும் புசித்து வாழும் உம்மைப் போல யாரிடமிருந்து என்றைக்கேனும் அவமானம் வரும் என்ற அச்சம் அவன் நெஞ்சத்தில் குடிகொண்டு கிடக்கின்றது; முன்னர், சூதாட்டத்தால் வென்ற குரு நாட்டை இன்று ஒல்லும் வகை நீதியால் வெல்ல முயன்று வருகின்றான்; புகழை விரும்பி குடிமக்களிடம் இன்முகம் காட்டி இன்சொற்கள் பேசி தானம் வழங்கி தயை காட்டி வருகின்றான்; விடரும் (குற்றவாளிகளும்), தூர்த்தரும் (வஞ்சகரும்), நடரும் (நடித்து பாசாங்கு செய்பவரும்) உள்ளிட்ட சிற்றினக் குழுவை சேராது விலக்கி, நன்நெறி செலுத்தும் பேரறிவுடைய பெரியோரை தனக்கு துணையாக கொண்டு ஒழுகுகிறான்;
மனுதர்ம நீதியில் இறை உணர்வுடன் வையம் காப்பான் துணிந்து காமமாதி உள்ளுரை பகைவர்களை திண்மை என்னும் தோட்டியால் அடக்கி இரவு என்றும் பாராமல் பகல் என்றும் பாராமல் முழுநேரத்தையும் நாட்டு மக்களின் நன்மைக்காக கழித்து வருகிறான்; தன்னை சூழ்ந்துள்ள பரிசனங்களின் மனம் மாறுபடாவண்ணம் அவர்களை உற்ற நண்பர்களாகவும், நண்பர்களை பந்துக்களாகவும், பந்துக்களை அமைச்சர் முதலாம் தலைமை அதிகாரிகளாகப் பாவித்து தமர் என்றும் பிறர் என்றும் வித்தியாசம் பாராது யாவரையும் பாதுகாக்கின்றான்; அறம், பொருள், இன்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்களும் ஒருங்கே ஓரிடத்தில் நிலைகொள்வது அருமை; துரியோதனனிடமோ அவ்வுறுதி பொருள்கள் மூன்றும் விலகாது இருக்கின்றன; பரிசிலரைக் கண்ட பொழுது இனிய முகமும் இனிய சொல்லுமுடையவனாய் அவரவர் விரும்பிய பொருள்களை மனம் உவந்து பாத்திரம் அறிந்து வரையாது வழங்குகிறான்; குற்றம் செய்தோரை எக்காரணத்தை முன்னிட்டும் தண்டனை விதியாது விட்டுவிடுதல் கிடையாது; பகை, நொதுமல் (விருப்பு வெறுப்பு இல்லாமல்), நட்பு என்னும் முத்திறத்தார்களிடமும் அவ்வப்போது நிகழும் நல்லவும் தீயவும் ஆகிய சொற்களையும் செயல்களையும் நாடோறும் ஒற்றன் மூலம் விரைந்து அறிந்து கொள்கிறான்;
No comments:
Post a Comment