Tuesday, January 5, 2016

கிராதார்ச்சுனீயம்-2

கிராதார்ச்சுனீயம்-2
தர்மன், துரியோதனன் நாட்டை  வேவு பார்க்க அனுப்பிய வேடுவன் திரும்பி வந்துவிட்டான்; அவன் தர்மனை தனியே அழைத்து கூறுகிறான்;
"ஐயா, துரியோதனன் தனிண் செங்கோலோச்சும் முறைமையால் குடிகளது மனத்தைக் கொள்ளை கொண்டனன்" எனக் கூறத் தொடங்கியவன், பின்னர் ஐயுற்று, வேந்தனிடம், "வேற்று அரசரைப் புகழ்ந்து கூறுதல் நியாயமல்லவே! அப்படி கூறினால், நம் அரசனுக்கு வெறுப்பு வேரூன்றி விடும்; நான் கொண்ட கோலத்தின் இயல்போ உள்ளதை உள்ளவாறு உரைப்பதால் பொய் உரை வழங்குதல் பாதகமாகிவிடும். இருபக்கமும் எரியும் கொள்ளி குசச்சியில் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் எறும்பைப் போல தடுமாறினான்; (இருபாடெரி கொள்ளியினுள் எறும்பு போலாயினேனே!); எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ஒற்றன் என்று சொல்லிக் கொள்ளும் இலக்கணம் பொய்யாகும்;
இப்படி தவித்ததவன், துணிந்து உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறான்;
"தரும வேந்தே! இவ்வுலகில் மன்னனுக்கு ஒற்றும், உரைசான்ற நூலும் இரு கண்கள் என கூறுவர்; அதன்வழி வாழ்பவர் உண்மையை சிறிதும் மறைக்காமல் கூற வேண்டும்; ஆகவே நான் சொல்லும் செய்திகள் உங்கள் செவிக்கு இனிய வேனும் இன்னாத வேனும் நீங்கள் பொறுமையுடன் கேட்டு அருள வேண்டும்; மன்னவன் முன்னிலையில், ஒருவன், அவன் மனம் வெறுக்கும் எந்த உரைகளை கூறுதல் முற்றிலும் தகாத செயல் என்றாலும், அதை ஒற்றன் உரைத்தே தீரவேண்டும்; மன்னனுக்கு தன்னிடம் வெறுப்பு மிகும் என நினைத்துக் கொண்டு உண்மையை மறைப்பான் என்றால் அந்த ஒற்றன் தன் கடமையில் இருந்து பிறழ்ந்து இரௌரவம் (ஏழு பாதாள உலகங்களில் ஒன்று) போவான்; உற்ற நண்பனுக்கு உரிய காலத்தில் உறுதி பயக்கும் உண்மைப் பொருளை அவனுக்கு உரைத்தலே உலக முறைமை; அப்படி இல்லையென்றால், அவனும் இழிவுக்கு ஆளாகிறான்; அதுபோல அரசன் கேட்க வேண்டும்; இல்லையென்றால், அரசனுக்கும் பிரபுத் தன்மை இல்லாமல் போய்விடும்; அரசு ஓங்க வேண்டும் என்றால், அமைச்சும் ஒருமனப்பட வேண்டும்; இல்லையேல் இலக்குமி அந்த நாட்டைவிட்டு அகன்று அயல்நாட்டில் புகுவாள்; இத்தகைய காரணங்களால் அடியேனாகிய நான் ஒன்றைக் கூறுவதும், பெருமை தங்கிய நீங்கள் அதை கேட்பதும் இருவருக்கும் உள்ள கடமை ஆகும்;

No comments:

Post a Comment