Saturday, July 23, 2016

அநுமான் சீதையைத் தேடுதல்

கம்பராமாயணம்
(அநுமான் சீதையைக் குறித்து எண்ணுதல்)

"மாடு நின்றவவ் வணிமலர்ச் சோலையை மருவித்
தேடி யிவ்வழி காண்பெனேற் றீருமென் சிறுமை
ஊடு கண்டில னெனிற்பின்ன ருரியதொன் றில்லை
வீடு வேன்மற்றிவ் விலங்கன்மே லிலங்கையை வீட்டி."

"மாடு நின்ற அவ் அணி மலர் சோலையை மருவித்
தேடி இவ்வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை
ஊடு கண்டிலன் எனில் பின்னர் உரியது ஒன்று இல்லை
வீடுவேன் மற்று இவ் இலங்கன் மேல் இலங்கையை வீட்டி."

மாடு நின்ற = அருகில் நின்ற;
அவ் அணிமலர் சோலை  = அந்த அழகிய மலர் நிறைந்த சோலை;
இவ்வழி = இந்த இடத்தில்;
தேடி காண்பெனேல் = தேடி காண்பேன் என்றால்;
என் சிறுமை தீரும் = எனது துன்பம் தீரும்;
ஊடு = (இந்த மலர் சோலையின்) ஊடே;
கண்டிலன்  எனில் = காண முடியாவிட்டால்;
பின்னர் உரியது = பின்னர் செய்தவற்கு உரியது;
ஒன்றில்லை = ஒன்றும் இல்லை;
வீடுவேன் மற்றில் இவ்விலங்கன் மேல் இலங்கை வீட்டி = இந்த இலங்கையை, இந்த திரிகூட மலையின் மீது (விலங்கன் மேல்) மோதி அழித்து விட்டு;
வீடுவேன் = உயிர் விட்டுவிடுவேன்;

பொருள்:
இலங்கை முழுவதும் சீதையைத் தேடிவிட்டேன்; எங்கும் காணமுடியவில்லை; மலர்கள் நிறைந்த இந்த வனத்தில் (அசோக வனம்) சீதையைப் பார்த்து விட்டால், என் கவலைகள் எல்லாம் நீங்கிவிடும்: இங்கும் சீதையைக் காண முடியாவிட்டால், இனி நான் சென்று தேடுவதற்கு வேறு இடம் இங்கு இல்லை; அதனால் எனக்கும் வேலை இல்லை; சீதை கிடைக்காமல் நான் ஏமாற்றத்துடன்  திரும்பிப் போவதற்குப் பதிலாக, இந்த இலங்கை நகரை, இந்த திரிகோண மலையுடன் மோதி அழித்துவிட்டு, நானும் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்;)

இவ் விலங்கன் மேல் இலங்கையை வீட்டி என்று ஆத்திரத்துடன் கூறுகிறார் அநுமன்;
ஒரு வேலையை ஆரம்பித்தால், அதை முடித்துவிட வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை கம்பன் இந்த பாடலில் உணர்த்துகிறார்;


No comments:

Post a Comment