Monday, November 14, 2016

தாலிகள் பலவகை

கோபிலஸ்மிருதியில்—
“ஹரித்ராகுங்குமஞ்சைவ தாம்பூலம்கஜ்ஜனம்ததா
கார்ப்பாஸதந்துமாத்ரேண மங்கள்யாபரணம்ததா
தேஜஸம்ஸ்காரகபரீ  சுரகர்ணாதீபூஷணம்
பார்த்துராயுஷ்மிச்சந்தி தூஷயேந்ந பதிவ்ரதா:”
பொருள்:
ஓர் கற்புடைக்கு பெண்ணானவள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, கண்ணுக்கு எழுதும் மை, பருத்தியினாலே உண்டாக்கப் பெற்ற நூலில் கோத்த திருமாங்கல்யம், தலைவாரிக் கட்டி முடித்தல், கைகள், காதுகள் முதலான அங்கங்களில் அணியும் ஆபரணங்கள் முதலியவற்றைப் பத்தாவின் ஆயுளைக் கொரும் அப்பதி விரதையானவள் என்றும் நீக்காதிருக்க்கடவள்” என்பது இதன் பொருள்.

திருமாங்கலியமானது பிரணவமென்னும் ஓங்காரமாய் அவ்வோங்காரத்து மூல எழுத்துக்களாகிய அகார உகார மகாரங்கள் அடங்குமிடத்து அகாரம் சக்கரவடிவாய்த் தலையாகவும், உகாரம் சதுரவடிவாய் மார்பாகவும், மகாரம் முக்கோண வடிவாய் காலோடு சேர்ந்த மர்த்தனமாகவும் கொண்ட விநாயக வடிவை மத்தியாக வைத்து இருமருங்கும் நாயகனது பாதச்சின்னம் பொறித்து அப்பாதங்களில் திருவீற்றிருப்பதாகிய கமலம், சங்குசக்கரம், சந்திரசூரியர், அம்சங்களையும் அமைத்து, நடுவே ஓர் துவாரம் செய்து பருத்தி நூலால் கோக்கக் கூடியதாக முடிப்பதே அந்த மாங்கல்ய முத்திரையாகும்;

மங்கலியம்:
மங்கல + இயம் = மங்கலியம்; அதாவது மனை வாழ்க்கைக்கு அணியை, அழகை, இன்பத்தைக் கொடுக்கும்படியாக, குரவனால் இயற்றப்பட்ட ஆபரணம் என்னும் பொருள் கொண்டது; மங்கலம் = இன்பம்; இயம் = இயற்றப் பெற்ற ஆபரணம்;

இவ்வாறு ஆசார சுத்தியுடன் மனத்தூய்மையுடன், மிகு பக்தி சிரத்தையுடன், மந்திர பூர்வமாகச் சிருட்டிக்கப் பெற்ற தாலியை ஆசாரியரானவர் அகம் கனிந்த ஆசியுடன் வாழ்த்திக் காதலனது கையில் கொடுக்க அவன் வேதவாக்காகிய மந்திரமான –
“மாங்கல்யம் தந்துனானே ம்மஜவனஹேதுனா
கண்டே பத்னாமி சுபஹே த்வம் ஜவசரதாம்சதம்”
என்ற சுலோகத்தைச் சொல்லி, அதாவது “ஒ கன்னிகையே! நீ எனது நல்வாழ்க்கையின் பொருட்டு சுபத்தைக் கொடுப்பதான இந்த மாங்கல்ய முத்திரை கோக்கப் பெற்ற நாணினை உனது கழுத்தில் பூட்டுகின்றேன்! அதனால் எப்பொழுதும் சுபசீவியாக என்னுடன் கூடி இல்லறம் நடாத்திப் பூரண ஆயுளுடன் வாழ்வாயாக!” என்று சொல்லி, தலைவி கழுத்தில் தரிக்கச் செய்வர்;

விஸ்வகைக்கியர்:
அந்த மங்கல நாணைச் செய்யும் பொற்கொல்ல ஆசாரியரை “விஸ்வைக்கியர், விஸ்வெக்ஞர், பத்தர், எக்ஞசாலையல், அக்கசாலையர், என்று அழைப்பர்;
விஸ்வ + ஐக்கியர் = விஸ்வைக்கியர்; விஸ்வ + எக்ஞர் = விஸ்வெக்ஞர்; இதன் பொருள்: உலக மக்களை ஒன்று கூட்டி ஐக்கியம் செய்வோர்; உலகினை உறவு கூட்டுவோர்; மிக மேலான, மகத்தான, உயர்ந்த யாகம் செய்வோர் என்று பொருள்;

திருமாங்கல்யம்:
எக்ஞம் புரியும் அன்பின், பக்திப் பெருக்கால், திருமாங்கல்ய முத்திரையை ஆக்குவதற்கு, மந்திரபூர்வமாக தமது யாக குண்டத்தில் அக்கினியை வளர்த்து, அதிலே பொன்னினை உருக்கித் திருத்தாலி செய்வதால் அப்பெயரையும், அக்கசாலையர் என்பது அக்கம் = பொன் ஆய், பொற்பணிகள் பல புரியும் சாலையாளர் எனவும் பெயர்; பொன்னின் பொடித்துகள்களை பற்ற வைப்பதால் பற்றர் அல்லது பத்தர் எனவும் பெயர் பெறுவர்;

பழங்காலத் தாலி:
தாலம் என்று பனைக்குப் பெயர்; எனவே தாலத்து இலையில் (பனை ஓலையில்) ஓங்கார யந்திரத்தைப் பொறித்து, அணியப் பெற்றதால் “தாலி” எனப் பெயர் பெற்றது; அதில் காதலனின் பாதச் சின்னத்தை வரைவதால், தாள் + ஈ = தாளி என்றும் பெயர் பெற்றதாகச் சொல்வர்; காதில் பனை ஓலைச் சுருளை அணிவதால் அதற்கு “காதோலை” என்று பெயர் வந்தது;

தாலிகளில் பலவகைகள்:
தாலிகளில் பலவகைகள் உண்டு; அது அவரவர் குல முறைக்கு ஏற்ப பலதரப்பட்டது;
பிள்ளையார் தாலி,
கொம்புத்தாலி,
குண்டுத்தாலி,
முறிச்சுக்குத்துத் தாலி,
சிறுதாலி,
பார்ப்பனத்தாலி,
உட்கழுத்துத்தாலி,
பொட்டுத்தாலி,
இரட்டைத்தாலி,
தொங்குதாலி,
தொடர்தாலி,
புறாத்தாலி,
குருசுத்தாலி,
ஐம்படைத்தாலி, என்று பல வகைகள்;

தாலி செய்யும் முறை:
உலோக காலம் ஏற்படுவதற்கு முன்னர், அக்காலத்தின் வழக்கப்படி, பனை ஓலையில் தமது எழுத்தாணி கொண்டு, காதலர் இருவரையும் வரைந்து, அல்லது இருவர் பெயரையும் வரைந்து, அதைச் சுற்றி ஓங்கார யந்திரத்தைப் பொறித்து, அதன் நடுவே எழுத்தாணிக் குறி அமைத்து, அதன் இருமருங்கிலும் காதலனது பாதச் சின்னத்தை எழுதி, மந்திர பூர்வமாகத் தியானித்து, “புதுத் தம்பதிகளாகிய நீவீர் இருவரும் இன்றுமுதல் எக்காரணம் கொண்டும், ஒருவரை ஒருவர் பிரிய மாட்டோம்” என்ற ஆணை பெற்று அந்த இயந்திர ஓலையாகிய தாலியே உலகறியும் அத்தாட்சிச் சின்னமாகக் கொண்டு மஞ்சள் காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, பக்தியோடு, புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓலையை சுருள் செய்து பருத்தி நூலில் மாட்டிக் காதலன் கையில் கொடுத்து, காதலியின் நெஞ்சிலே அந்த தாலியாகிய முத்திரை ஓலை அவள் மார்பில் படியும் வண்ணம் கழுத்திலே மாட்டி, தொங்கச் செய்யும் வழகத்தைக் கொண்டிருந்தனர்;
**
“தாயொடு அறுசுவைபோம்; தந்தையோடு கல்விபோம்;
சேயோடு தான் பெற்ற செல்வம்போம்; ஆயவாழ்வு
உற்றாருடன் போம்; உடன்பிறப்பால் தோள் வலிபோம்;
பொன்தாலியோடு எவையும்போம்;” --- ஔவையார்


**

No comments:

Post a Comment