Tuesday, October 18, 2016

திருவிளையாடல்-22

திருவிளையாடல்-22

அபிஷேக பாண்டிய மன்னர் இறந்து விட்டார்; அவரின் மகன் விக்கிரம பாண்டியன்  முடிசூடி மதுரையை ஆண்டு வருகிறார்; அந்தக் காலக் கட்டத்தில்,  சோழமன்னர் சமண சமயத்தில் மாறி அந்த மதத்தை பின்பற்றி வருகிறார்; அவருக்கு பாண்டிய மன்னர் மீது வெறுப்பு;

எனவே, எட்டு மலைகளான, அஞ்சனம், கிரவுஞ்சம், கோவர்த்தனம், திரிகூடம், காஞ்சி, அத்திகிரி, எமகூடம், விந்தம் என்று எட்டு மலைகளில் வாழும் சமண முனிவர்களை வரவழைக்கிறார் சோழ மன்னர்;

அந்த எட்டு மலைகளில் வசித்து வந்த எண்ணாயிரம் சமண முனிவர்கள் வந்துவிட்டார்கள்; அவர்களைக் கொண்டு ஒரு பெரிய யாகம் நடத்துகிறார்  சோழமன்னர்; அந்த யாகத்தில் ஒரு பெரிய யானையை வரவழைக்கின்றனர்; இது மிகப் பெரிய பலம் பொருந்தியதாக இருக்கிறது; அந்த யானையை யாராலும் வெல்ல முடியாது;

அந்த யானை எவி விடுகிறார் சோழ மன்னர்; “நீ போய், பாண்டிய மன்னரைக் கொல்ல வேண்டும்” என்று ஆணையிடுகிறார்; அந்த யானை யாகத்தில் உருவான யானை;

இதை, பாண்டிய மன்னர் அறிந்து கொள்கிறார்; அந்த யானை வந்தால் தன்னைக் கொன்றுவிடும் என்று தெரியும்; உடனே, சிவனான சோமசுந்தர பாண்டியனை வேண்டுகிறான் பாண்டிய மன்னர்:

சிவன், ஒரு வேடுவன் வடிவம் எடுத்து அங்கு வருகிறார்; அந்த யானையை நேரில் சந்திக்கிறார்; அதைத் தன் கையாலேயே கொன்று விடுகிறார்; அதனால் பாண்டிய மன்னர் காப்பாற்றப் படுகிறார்;
இப்படியாக, சிவன் நடத்திய விளையாடல் 22-ம் திருவிளையாடல்.


திருவிளையாடல்-21

திருவிளையாடல்-21

சிவன், சித்தராக வேடமிட்டு மதுரை வீதிகளில் திரிகிறார்; பாண்டிய மன்னனின் அமைச்சர் அழைத்தும் வர மறுக்கிறார்;

இப்படிப்பட்ட சித்தர் யாராக இருக்கும் என வியந்து பாண்டிய மன்னனே நேரில் சென்று பார்த்தவர விரும்புகிறார்; தெருவில் திரியும் சித்தரை நேரில் சந்திக்கிறார் பாண்டிய மன்னர்;

மன்னருக்கு ஒரு சந்தேகம்; இந்த சித்தர் உண்மையில் சித்தர்தானா? என்று சோதிக்க நினைத்து, அவ்வழியே சென்ற உழவர் கையில் இருந்து கரும்பு ஒன்றை வாங்கி, “நீர் எல்லாம் வல்ல சித்தராக இருந்தீர் என்றால், இந்த கரும்பை, உன் எதிரில் இருக்கும் கல்லால் ஆன இந்த யானையிடம் கொடுத்து அதை தின்னச் செய்யுங்கள் பார்க்கலாம்?” என்று கேட்கிறார்;

இதை அறிந்த சித்தர், அந்த கல் யானையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுகிறார்; அந்த கல் யானை உயிர் பெற்று எழுந்து வந்து, மன்னர் கையில் வைத்திருக்கும் கரும்பை பிடித்து இழுத்து தன் வாயில் வைத்த கடித்து தின்றது;

இவர் உண்மையில் சித்தர் தான் என்று மன்னர்  வியக்கிறார்;
இவ்வாறு, சிவன் செய்த விளையாடலே 21-ம் திருவிளையாடல்.


திருவிளையாடல்-20

திருவிளையாடல்-20

சிவன் ஒரு சித்தராக வேடம் கொண்டு மதுரையை அடைகிறார்; அவரிடம் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது; அதை உடம்பில் தடவி விடுகிறார்; அதைக் கொண்டு, ஆண்களை பெண்களாக மாற்றி விடுகிறார்: அதுபோல பெண்களை ஆண்களாக மாற்றி விடுகிறார்; வயதானவரை இளைஞராக மாற்றி விடுகிறார்; கூன் முதுகு கொண்ட ஒரு வயதான பெண்ணை, ஒரு இளம் மங்கையாக்கி, அவளைக் கருத்தரிக்கும் படி இளமையுடன் மாற்றி விடுகிறார்; மிக தூரத்தில் உள்ள மலைகளை மிக அருகில் கொண்டுவந்து காண்பிக்கிறார்; பக்கத்தில் உள்ள மாட மாளிகைகளை வெகு தூரத்தில் காண்பிக்கிறார்; வறிய ஏழையை செல்வந்தராக்கி விட்டார்; செல்வந்தரை வறியவர் ஆக்கி விட்டார்;

இப்படி அதியசங்களைச் செய்துவிட்டு மதுரை வீதிகளில் சுற்றித் திரிகிறார்; அப்போது மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்கிறான்; இந்த விபரத்தைக் கேள்விப்பட்டு, அந்த சித்தரை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான்; வீரர்கள் சென்று அழைத்தும் வர மறுக்கிறார் அந்த சித்தர்; அமைச்சரே நேரில் வந்து அழைக்கிறார்; சித்தர் வர மறுக்கிறார்;


இப்படி, யார் அழைத்தும் வராமல் இறுமாப்புடன் அந்த சித்தர் மதுரைத் தெருக்களில் சுற்றித் திரிந்த விளையாடலே சிவனின் 20-ம் திருவிளையாடல்.

திருவிளையாடல்-19

திருவிளையாடல்-19

மீண்டும் வருணன் மேகங்களை ஏவி விடுகிறான்; மதுரை நகர் முழ்கிவிடும்படி பெரும் மழை பெய்கிறது; இதுவரை இல்லாத மழை பொழிகிறது; இதைக்கண்ட பாண்டிய மன்னன்  சிவபெருமானை வேண்டிக் கொள்கிறான்; “என்னையும் என் மக்களையும் காத்தருள வேண்டும்” என்று வேண்டுகிறான்;

நான்கு பக்கத்து மேகங்களையும் நான்கு மாடங்களாக நின்று காக்க வேண்டும் என்று வேண்டுகிறான் பாண்டிய மன்னன்;

சிவபெருமான் , அவ்வாறே மாடங்களை காத்தார்; அதனால் மழை நீர் வற்றி விட்டன;

இவ்வாறு சிவன் மதுரையைக் காத்தது சிவனின் 19-வது திருவிளையாடல்;



அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?


வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு;
அம்மியின் மீது வைக்கக் கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்கு;
கவுணியர்க்குப் பால் கொடுத்தாய்;
மதவேளுக்கு மூவர் பயப்படச் செங்கோல் கொடுத்தாய்;
அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?

(திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆண்டவனுக்கு வேல் கொடுத்தாய்;
உன் மணவாளன் அம்மியின் மீது வைப்பதற்காக உன் கால் கொடுத்தாய்;
கவுணியர் என்னும் திருஞானசம்பந்தனுக்கு சிவஞானப்பாலைக் கொடுத்தாய்;
மன்மதனுக்கு கரும்புவில்லைக் கொடுத்தாய்;
தாயே, எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே!)

Saturday, August 13, 2016

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பிறரைத் தன் வசப்படுத்த)
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின்அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே!
தெளிவுரை
செந்நிறத் திருமேனியை உடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் பதிந்திருப்பது உன்னுடைய பொன்னான திருவடியே ஆகும்; என் மனத்திலே எப்பொழுதும் பதிந்திருப்பது உன்னுடைய திருமந்திரமே ஆகும்! உன்னையே தியானிக்கும் உன்னுடைய அடியார்களுடன் கலந்து நான் தினந்தோறும் முறைப்படி பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம நெறியே ஆகும்;
(பன்னியது=திரும்பத் திரும்ப பேசுவது)

(நன்றி: திரு.வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)


அபிராமி அந்தாதி 5-ம் பாடல்

அபிராமி அந்தாதி 5-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(மனக் கவலை தீர)
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே!
தெளிவுரை
அம்மா அபிராமியே, உயிர்களிடத்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே! செப்பை உவமையாகக் கொண்ட தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியே! நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமான் அருந்திய விஷத்தை அமுதம் ஆக்கிய அம்பிகையே! தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் அழகியே! அனைத்து இடங்களிலும் நிறைந்து இருப்பவளே! தாமரை மலர் போன்ற உன்னுடைய மென்மையான திருவடிகளை என் தலை மீது வைத்துக் கொண்டுள்ளேன்;
(அம்புயம்=தாமரை; அந்தரி=அந்தரத்தில் இருப்பவள்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(உயர்ந்த நிலையை அடைய)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
தெளிவுரை
மனிதர்களும், தேவர்களும், மரணமில்லாத முனிவர்களும், வந்து தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களை உடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றை மலரையும், குளிர்ச்சியைத் தருகின்ற இளம்பிறைச் சந்திரனையும், பாம்பினையும், கங்கையையும் அணிந்து விளங்குகின்ற புனிதராகிய சிவபெருமானும் நீயும் என் மனத்தில் எப்பொழுதும் தங்கி அருள்புரிந்து ஆட்சியருள வேண்டும்;
(மாய=மரணமில்லாத; புந்தி=மனம்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை என்ற நூலிலிருந்து)

Saturday, July 23, 2016

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பாவம் போக்க)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

தெளிவுரை
திருமகளாய் விளங்கும் அபிராமியே, வேறு எவரும் படித்துப் பொருள் தெரிந்து கொள்ள முடியாத வேதத்தின் உட்பொருளை, அதன் சாரத்தை நான் அறிந்து கொண்டேன்; அவ்வாறு அறிந்தமையால் உனது திருவடியில் இரண்டறக் கலந்து விட்டேன்; உனது பெருமையை உணர்ந்தும் அடியவர்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை; மனதாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் மனிதரையே நாடிக் கொண்டிருந்தது; இப்போது அதை நான் தெரிந்து கொண்டு விட்டேன்; அதனால் தீயவழியில் செல்லும் மனிதரை விட்டுப் பிரிந்து விட்டேன்; இனி தாயே நீயே எனக்குத் துணை.
(மறை=வேதம்).

(நன்றி: திரு வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரைஎன்ற நூலிலிருந்து).


அத்தி தல முருகன் பிள்ளைத்தமிழ்-3

அத்தி தல முருகன் பிள்ளைத்தமிழ்-3

(முருகன் திரு அவதாரம்)

ஆர்த்தெழும் அச் சூர் முதலால் அலக்கண் உற்ற தேவர் எலாம்
அகமகிழச் சிவன் விழியால் ஆறுசுடர் அருள
அனலனொடு மருத்தினனும் அவை தாங்கி ஆற்றாதே
அருங் கங்கையிடம் சேர்க்க அன்னாளும் மாழ்கித்
தீர்த்தி கையாம் சரவணத்தில் செல உய்க்க அவைகளெலாம்
திரண்டு ஒன்றாய்ச் செழுமலரில் சிறு குழவியாகித்
திரளமுது கார்த்திகையாரிடம் உண்டு விளையாடித்
திரிகின்ற காலத்தே நம் மகனை இன்றே
பார்த்தருள வேண்டும் எனப் பரமனுடன் வந்தவளே
பால் சுரக்க அனைத்தவனைச் சிரமோந்த தாயே
பரல்கள் உறு நலவீரர் தோன்றுதற்குத் துணையாகிப்
பல் உயிரும் கரு உயிர்த்த பைங்கொடியே காக்க
சீர்த்தி மிகு பெருமக்கள் வளர்கைதை நகரத்தில்
திகழ்கின்ற் அத்தி தலத் திருக் கோயில் ஏற்றுச்
செழுஞ்சுடரோன் உதயகிரி வரும்பரிசாய் மயிலின்மேல்
இவர்ந்து வரும் ஆறுமுக இளையோனை அம்மா!.

சூர் முதல்  = சூரபத்மன் முதல்;
அலக்கண் = துன்பம்;
அனலன் == அக்கினிதேவன்;
மருத்தினன் = வாயு பகவான்;
மாழ்கி = மயங்கி;
சிரிமோந்த = உச்சி மோந்த;
பரல்கள் = சிலம்பின் உள்ளே உள்ள கற்கள்;
இவர்ந்து = ஏறி நடத்தி;



சந்தானமணி

சந்தானமணி

மலர் தலை உலகினில் மக்கள் அனைவர்
ஐம்புலம் ஒடுங்கும் உணராப் போது அதீதமாய்
பல தலை மாயா பாசமேய்ப் புணரி
நீர் அலை என மொத்துண்டு அவலம் எய்தி
நில விடு சுக சைதன்னியம் குன்றி
மலம் அகல் அறிவென்னும் மாணொளி மங்கிப்
பல கலை அறிவுரை பச சர உரை என
அலகிலாத் துன்பத்து ஆசை என்றோரர்
சில பகல் ஈங்கு சீவிப்பது உணார
முலை மட மாதர் தம் மொய்ம்புகண்டு இடையில்
பல முது மறை மொழிப் பஞ்சாங்கம் பாராது
உலகில் விதிவிலக்கு ஒன்றையும் உணரா
சிலை மதன் ஆகமம் திழைத்தே உழைத்த
பாலகர்கள் பிணியாய்ப் பஞ்சமாய் நெஞ்சிற்
சீலம் அதின்றிச் சிறவாது கால
காலமாம் மரபில் கடு நஞ்சிட்டும்
வால் மங்கையர் வற்றாப் பிணியால்
சால வாடிச் சடுதி மரணமாய்
மாலை வார் குழலி மடந்தை அருகில்
சாலவும் வறிதாய்த் தரணிவாய்ப் பிணியாய்
நிலவுவது என்னோ நேமி புடைசூழ்
உலகினில் ஊழோ ஊழ் உதற்கு உயிரோ
சலமெனச் சடமாம் தாழ்வினில் பாயும்
பல தொழில் பண்பின் பலிப்பே வினைப்பயன்
ஆக செய்தக்க வல்ல செயக் கெடும்
ஆக செய்தக்க செய்யாமை செய்யும் கெடும்.
ஆவது அழிதலான் கால தத்துவன்
கால சுபா சுபம் கரைவரல் பதி அருள்
என்பது உறுத்த இது நூல் யாவர்க்கும்
பொன் பொருளாகப் போற்றுதல் கடனே!

(சந்தானமணி நூலைப் பற்றி அதன் ஆசிரியர் அச்சுவேலி சபாபதி சோதிடர் எழுதிய நூலின் அகவற்பா)

*** ****
பாடல்

"மலர்தலை யுலகினில் மக்க ளனைவரைம்
புலனொடுங் குணராப் போதம தீதமாய்
பலதலை மாயா பாசமேய்ப் புணரிநீ
ரலையென மொத்துண் டவல மெய்தி
நிலவிடு சுகசை தன்னியங் குன்றி
மலமக லறிவெனு மாணொளி மங்கிப்
பலகலை யறிவுரை பசாச வுரையெனா
அலகிலாத் துன்பவித் தரசையென் றோரர்
சிலபக லீங்கு சீவிப்ப துணரா
 முலைமட மாதர்தம் மொய்ம்புகண்டுடைஇ
பலமுது மறைமொழிப் பஞ்சாங்கம் பாரா
துலகதில் விதிவிலக் கொன்றையு முணரா
சிலைமத னாகமந் திழைந்தே யுழைத்த
பாலர்கள் பிணியாய்ப் பஞ்சமாய் நெஞ்சிற்
சீலம தின்றிச் சிறவாது கால
காலமாம் மரபிற் கடுநஞ் சிட்டும்
வாலை மங்கையர் வற்றாப் பிணியால்
சால வாடிச் சடுதி மரணமாய்
மாலைவார் குழலி மடந்தைய ருலகிற்
சாலவும் வறிதாய்த் தரணிவாய் பிணியாய்
நிலவுவ தென்னோ நேமி புடைசூ
ழுலகினி லூழோ வூழதற் குயிரோ
சலமெனச் சடமாந் தாழ்வினிற் பாயும்
பலதொழிற் பண்பின் பலிப்பே வினைப்பயன்
ஆகசெய் தக்க வல்ல செயக்கெடும்
ஆக செய்தக்க செய்யாமை யுங்கெடும்
ஆவ தழித லான்கால தத்துவன்
கால சுபாசுபங் கரைவரல் பதியருள்
என்ப துறத்த விதுநூ லியாவர்க்கும்
பொன்பொரு ளாகப் போற்றுதல் கடனே!"
**