Saturday, July 23, 2016

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

அபிராமி அந்தாதி 3-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பாவம் போக்க)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

தெளிவுரை
திருமகளாய் விளங்கும் அபிராமியே, வேறு எவரும் படித்துப் பொருள் தெரிந்து கொள்ள முடியாத வேதத்தின் உட்பொருளை, அதன் சாரத்தை நான் அறிந்து கொண்டேன்; அவ்வாறு அறிந்தமையால் உனது திருவடியில் இரண்டறக் கலந்து விட்டேன்; உனது பெருமையை உணர்ந்தும் அடியவர்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை; மனதாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் மனிதரையே நாடிக் கொண்டிருந்தது; இப்போது அதை நான் தெரிந்து கொண்டு விட்டேன்; அதனால் தீயவழியில் செல்லும் மனிதரை விட்டுப் பிரிந்து விட்டேன்; இனி தாயே நீயே எனக்குத் துணை.
(மறை=வேதம்).

(நன்றி: திரு வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரைஎன்ற நூலிலிருந்து).


அத்தி தல முருகன் பிள்ளைத்தமிழ்-3

அத்தி தல முருகன் பிள்ளைத்தமிழ்-3

(முருகன் திரு அவதாரம்)

ஆர்த்தெழும் அச் சூர் முதலால் அலக்கண் உற்ற தேவர் எலாம்
அகமகிழச் சிவன் விழியால் ஆறுசுடர் அருள
அனலனொடு மருத்தினனும் அவை தாங்கி ஆற்றாதே
அருங் கங்கையிடம் சேர்க்க அன்னாளும் மாழ்கித்
தீர்த்தி கையாம் சரவணத்தில் செல உய்க்க அவைகளெலாம்
திரண்டு ஒன்றாய்ச் செழுமலரில் சிறு குழவியாகித்
திரளமுது கார்த்திகையாரிடம் உண்டு விளையாடித்
திரிகின்ற காலத்தே நம் மகனை இன்றே
பார்த்தருள வேண்டும் எனப் பரமனுடன் வந்தவளே
பால் சுரக்க அனைத்தவனைச் சிரமோந்த தாயே
பரல்கள் உறு நலவீரர் தோன்றுதற்குத் துணையாகிப்
பல் உயிரும் கரு உயிர்த்த பைங்கொடியே காக்க
சீர்த்தி மிகு பெருமக்கள் வளர்கைதை நகரத்தில்
திகழ்கின்ற் அத்தி தலத் திருக் கோயில் ஏற்றுச்
செழுஞ்சுடரோன் உதயகிரி வரும்பரிசாய் மயிலின்மேல்
இவர்ந்து வரும் ஆறுமுக இளையோனை அம்மா!.

சூர் முதல்  = சூரபத்மன் முதல்;
அலக்கண் = துன்பம்;
அனலன் == அக்கினிதேவன்;
மருத்தினன் = வாயு பகவான்;
மாழ்கி = மயங்கி;
சிரிமோந்த = உச்சி மோந்த;
பரல்கள் = சிலம்பின் உள்ளே உள்ள கற்கள்;
இவர்ந்து = ஏறி நடத்தி;



சந்தானமணி

சந்தானமணி

மலர் தலை உலகினில் மக்கள் அனைவர்
ஐம்புலம் ஒடுங்கும் உணராப் போது அதீதமாய்
பல தலை மாயா பாசமேய்ப் புணரி
நீர் அலை என மொத்துண்டு அவலம் எய்தி
நில விடு சுக சைதன்னியம் குன்றி
மலம் அகல் அறிவென்னும் மாணொளி மங்கிப்
பல கலை அறிவுரை பச சர உரை என
அலகிலாத் துன்பத்து ஆசை என்றோரர்
சில பகல் ஈங்கு சீவிப்பது உணார
முலை மட மாதர் தம் மொய்ம்புகண்டு இடையில்
பல முது மறை மொழிப் பஞ்சாங்கம் பாராது
உலகில் விதிவிலக்கு ஒன்றையும் உணரா
சிலை மதன் ஆகமம் திழைத்தே உழைத்த
பாலகர்கள் பிணியாய்ப் பஞ்சமாய் நெஞ்சிற்
சீலம் அதின்றிச் சிறவாது கால
காலமாம் மரபில் கடு நஞ்சிட்டும்
வால் மங்கையர் வற்றாப் பிணியால்
சால வாடிச் சடுதி மரணமாய்
மாலை வார் குழலி மடந்தை அருகில்
சாலவும் வறிதாய்த் தரணிவாய்ப் பிணியாய்
நிலவுவது என்னோ நேமி புடைசூழ்
உலகினில் ஊழோ ஊழ் உதற்கு உயிரோ
சலமெனச் சடமாம் தாழ்வினில் பாயும்
பல தொழில் பண்பின் பலிப்பே வினைப்பயன்
ஆக செய்தக்க வல்ல செயக் கெடும்
ஆக செய்தக்க செய்யாமை செய்யும் கெடும்.
ஆவது அழிதலான் கால தத்துவன்
கால சுபா சுபம் கரைவரல் பதி அருள்
என்பது உறுத்த இது நூல் யாவர்க்கும்
பொன் பொருளாகப் போற்றுதல் கடனே!

(சந்தானமணி நூலைப் பற்றி அதன் ஆசிரியர் அச்சுவேலி சபாபதி சோதிடர் எழுதிய நூலின் அகவற்பா)

*** ****
பாடல்

"மலர்தலை யுலகினில் மக்க ளனைவரைம்
புலனொடுங் குணராப் போதம தீதமாய்
பலதலை மாயா பாசமேய்ப் புணரிநீ
ரலையென மொத்துண் டவல மெய்தி
நிலவிடு சுகசை தன்னியங் குன்றி
மலமக லறிவெனு மாணொளி மங்கிப்
பலகலை யறிவுரை பசாச வுரையெனா
அலகிலாத் துன்பவித் தரசையென் றோரர்
சிலபக லீங்கு சீவிப்ப துணரா
 முலைமட மாதர்தம் மொய்ம்புகண்டுடைஇ
பலமுது மறைமொழிப் பஞ்சாங்கம் பாரா
துலகதில் விதிவிலக் கொன்றையு முணரா
சிலைமத னாகமந் திழைந்தே யுழைத்த
பாலர்கள் பிணியாய்ப் பஞ்சமாய் நெஞ்சிற்
சீலம தின்றிச் சிறவாது கால
காலமாம் மரபிற் கடுநஞ் சிட்டும்
வாலை மங்கையர் வற்றாப் பிணியால்
சால வாடிச் சடுதி மரணமாய்
மாலைவார் குழலி மடந்தைய ருலகிற்
சாலவும் வறிதாய்த் தரணிவாய் பிணியாய்
நிலவுவ தென்னோ நேமி புடைசூ
ழுலகினி லூழோ வூழதற் குயிரோ
சலமெனச் சடமாந் தாழ்வினிற் பாயும்
பலதொழிற் பண்பின் பலிப்பே வினைப்பயன்
ஆகசெய் தக்க வல்ல செயக்கெடும்
ஆக செய்தக்க செய்யாமை யுங்கெடும்
ஆவ தழித லான்கால தத்துவன்
கால சுபாசுபங் கரைவரல் பதியருள்
என்ப துறத்த விதுநூ லியாவர்க்கும்
பொன்பொரு ளாகப் போற்றுதல் கடனே!"
**


அபிராமி அந்தாதி பாடல்-2

அபிராமி அந்தாதி 2-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(தெய்வத் துணை கிடைக்க)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் பாசங்குசமும் கையில்
அணையுந் திரிபுரசுந்தரி யாவது அறிந்தனமே.

தெளிவுரை
எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும், விளங்குகின்ற அபிராமி அன்னையை, நான்துணைஎன்று அறிந்து கொண்டேன்; வேதங்களில் தொழிலாகவும் அவற்றின் கிளைகளாகவும், வேராகவும், வேதங்களில் சாகை, உபநிஷதம், பிரணவம் ஆகிய எல்லா நிலைகளிலும் நிலைபெற்று அபிராமி இருக்கிறாள்; அவளது நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகள் ஐந்தும், கரும்புவில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கைகளில் கொண்டு விளங்குகின்ற அந்தத் திரிபுரசுந்தரியாகிய அபிராமவல்லியே எனக்கு என்றும் துணையாவாள்.

(சுருதி=வேதம்; பணை=பொருள்).

(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரைஎன்ற நூலிலிருந்து)


அபிராமி அந்தாதி பாடல்-1

அபிராமி அந்தாதி 1-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(ஞானமும் வித்தையும் பெற)

உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்! மாதுளம் போது! மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி! அபிராமி என்தன் விழுத்துணையே.

தெளிவுரை
அதிகாலையில் தோன்றுகின்ற சிவந்த கதிர்களை உடைய உதயசூரியன், பெண்கள் தங்களுடைய நெற்றியின் உச்சியில் அணியும் செந்தூர குங்குமத் திலகம், ஞானியர்கள் மதிக்கக் கூடிய மாணிக்கம், மாதுளம் மலர், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வழிபடுகின்ற மின்னற் கொடி, மென்மையான மணம் கமழ்கின்ற குங்குமக் குழம்பு போன்ற சிறந்த திருமேனியை உடைய அபிராமித் தாயார் எனக்கு என்றும் சிறந்த துணையாக இருந்திடுவாள்!

(உணர்வுடையோர்=ஞானியர்; மென்கடி=மென்மையான நறுமணம்)


(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து) 

அநுமான் சீதையைத் தேடுதல்

கம்பராமாயணம்
(அநுமான் சீதையைக் குறித்து எண்ணுதல்)

"மாடு நின்றவவ் வணிமலர்ச் சோலையை மருவித்
தேடி யிவ்வழி காண்பெனேற் றீருமென் சிறுமை
ஊடு கண்டில னெனிற்பின்ன ருரியதொன் றில்லை
வீடு வேன்மற்றிவ் விலங்கன்மே லிலங்கையை வீட்டி."

"மாடு நின்ற அவ் அணி மலர் சோலையை மருவித்
தேடி இவ்வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை
ஊடு கண்டிலன் எனில் பின்னர் உரியது ஒன்று இல்லை
வீடுவேன் மற்று இவ் இலங்கன் மேல் இலங்கையை வீட்டி."

மாடு நின்ற = அருகில் நின்ற;
அவ் அணிமலர் சோலை  = அந்த அழகிய மலர் நிறைந்த சோலை;
இவ்வழி = இந்த இடத்தில்;
தேடி காண்பெனேல் = தேடி காண்பேன் என்றால்;
என் சிறுமை தீரும் = எனது துன்பம் தீரும்;
ஊடு = (இந்த மலர் சோலையின்) ஊடே;
கண்டிலன்  எனில் = காண முடியாவிட்டால்;
பின்னர் உரியது = பின்னர் செய்தவற்கு உரியது;
ஒன்றில்லை = ஒன்றும் இல்லை;
வீடுவேன் மற்றில் இவ்விலங்கன் மேல் இலங்கை வீட்டி = இந்த இலங்கையை, இந்த திரிகூட மலையின் மீது (விலங்கன் மேல்) மோதி அழித்து விட்டு;
வீடுவேன் = உயிர் விட்டுவிடுவேன்;

பொருள்:
இலங்கை முழுவதும் சீதையைத் தேடிவிட்டேன்; எங்கும் காணமுடியவில்லை; மலர்கள் நிறைந்த இந்த வனத்தில் (அசோக வனம்) சீதையைப் பார்த்து விட்டால், என் கவலைகள் எல்லாம் நீங்கிவிடும்: இங்கும் சீதையைக் காண முடியாவிட்டால், இனி நான் சென்று தேடுவதற்கு வேறு இடம் இங்கு இல்லை; அதனால் எனக்கும் வேலை இல்லை; சீதை கிடைக்காமல் நான் ஏமாற்றத்துடன்  திரும்பிப் போவதற்குப் பதிலாக, இந்த இலங்கை நகரை, இந்த திரிகோண மலையுடன் மோதி அழித்துவிட்டு, நானும் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்;)

இவ் விலங்கன் மேல் இலங்கையை வீட்டி என்று ஆத்திரத்துடன் கூறுகிறார் அநுமன்;
ஒரு வேலையை ஆரம்பித்தால், அதை முடித்துவிட வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை கம்பன் இந்த பாடலில் உணர்த்துகிறார்;