Friday, October 23, 2015

திருவிளையாடல்-11

திருவிளையாடல்-11
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(சோமசுந்தர பாண்டியனுக்கும் அவர் மனைவி ராணி தடாதகைப் பிராட்டிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிற கதை)
முன்கதை;
குலசேகர பாண்டிய மன்னர் மணவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறார். அவர் ஊரில் உள்ள ஒரு வணிகன், "காட்டில் நடுஇரவில் சிவன் ஒரு விமானத்தில் வந்து இறங்கியதாகவும், தேவர்களும் அங்கு இருந்தார்கள் என்றும், அவர்கள் சிவனை இரவெல்லாம் வழிப்பட்டார்கள்" என்று பாண்டிய அரசனைச் சந்தித்து கூறுகிறான். அன்று பாண்டிய மன்னன் கனவிலும் சிவன் வந்து, தான் இரவு அங்கு வந்த இடமான கடம்பவனக் காட்டில் ஒரு பெரிய கோயிலைக் கட்டும்படியும், மன்னனுக்கு பெரிய அரண்மனையை கட்டிக் கொள்ளும்படியும், அதைச் சுற்றி மக்கள் வசிக்க வீடுகளைக் கட்டும்படியும், கனவில் உத்தரவு இடுகிறார். அப்படியே குலசேகர பாண்டியன் கட்டி முடித்தார். அதுவே "மதுரை நகரம்" ஆகும்.
பின்னர் குலசேகர பாண்டிய மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; அவன் பெயர் மலயத்துவச பாண்டியன். அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். அந்த பெண்ணின் பெயர் காஞ்சனமாலை; இவர்களுக்கு வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லை; எனவே ஒரு பெரிய யாகம் செய்கின்றனர்; அந்த யாகத்தில், சிவனின் மனைவி உமாதேவியே ஒரு மூன்று வயது பெண்ணாக உருமாறி யாகத்திலிருந்து எழுந்து வருகிறாள்; அவளையே மகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; அந்தச் சிறுமியின் பெயர் தடாதகைப்பிராட்டி. அவளுக்கு சிறு வயதில் மூன்று முலைகள் உருவாகிவிட்டதைக் கண்டு பயந்தனர்; பின்னர், அவள் பெரியவளாகி தன் கணவனைச் சந்திக்கும்போது, மூன்றில் ஒன்று மறைந்துவிடும் என ஆறுதல் சொன்னார்கள்; அவள் பெரிய வீராங்கனை. சிறுவயதிலிலேயே அவளின் தகப்பனார், மலையத்துவச பாண்டியன் இவளுக்கு முடிசூட்டி ராணி ஆக்கி விட்டார்; பின்னர், தகப்பனார் இறந்து விட்டார்; தடாதகைப்பிராட்டியே பாண்டிய நாட்டை ஆட்சி செய்கிறார்; பல போர்களுக்கு ஏற்பாடு செய்து திக்விஜயம் மேற்கொள்கிறார்; எல்லா மன்னர்களையும் வெற்றிகொண்டு, வடக்கே போகும்போது, அங்கு சிவபெருமானை சந்திக்கிறார்; இருவரும் நேருக்குநேர் சந்திக்கும்போது, இவள் நாணுகிறாள்; அப்போது இவளின், ஒரு மார்பகம் மறைந்துவிடுகிறது; எனவே இவர்தான் என் கணவர் என்ற முடிவுக்கு வருகிறார்; சிவனும், அதை ஒப்புக்கொண்டு, மதுரைக்கு வந்து உன்னை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறார்;
மதுரைக்கு வருகிறார் சிவபெருமான்; ஆனால், மனிதராக மாறி, சோமசுந்தர பாண்டியன் என்ற பெயரில் மதுரைக்கு வருகிறார்; இங்கு மதுரையில் சோமசுந்தர பாண்டியனுக்கும்- ராணி தடாதகைப் பிராட்டிக்கும் திருமணம் நடக்கிறது; மணமகன் சோமசுந்தரபாண்டியன், தன் மனைவியையும், மாமியாரையும் நல்லவிதமாகப் பார்த்துக் கொள்கிறார்; மாமனார் மலயத்துவச பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டார்; இந்த நிலையில், தன் மாமியார் புண்ணிய நீராடுவதற்காக ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்துவிட்டார்; மாமியார் புனிதநீடாடும்போது கணவனின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற நியதிக்காக, நேராக சொர்க்கத்துக்கே சென்று, அங்கிருந்த தன் மாமனார் மலயத்துவச பாண்டியனை கூப்பிட்டுக் கொண்டு மதுரைக்கு வந்து, தன் மாமியாரிடம் ஒப்படைத்து புனித நீடார வைக்கிறார்;
**
இப்படியாக பல வித்தைகளை செய்து காண்பித்துக் கொண்டு, மனைவிக்கும், மாமியாருக்கு ஒரு நல்ல கணவனாகவும், மருமகனாகவும் இருக்கிறார் நம் கதாநாயகன் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான்.
சந்தோஷமான வாழ்க்கை; மனைவிக்குப் பிடித்த கணவன்; இணக்கமான மனைவி; வேறு என்னவேண்டும்? மனைவி கர்பிணியாகிறாள்; பிரசவம் நடக்கிறது; அரண்மனை வைத்தியர்கள் சூழ ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது ராணி தடாதகைப்பிராட்டிக்கு;
அந்த மகனுக்கு பெயர் வைக்கிறார்கள்; அவன் பெயர் உக்கிரவர்ம பாண்டியன்; இது ஒரு திருவிளையாடலாம்!
இதை எப்படி ஒரு திருவிளையாடல் என்று சொல்ல முடியும்? குழந்தை பிறப்பது ஒரு விளையாட்டா? அல்லது திருவிளையாட்டா?
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விளையாட்டுத்தானே! அப்படியானால் இதுவும் ஒரு திருவிளையாட்டே!
**
ஞாபகத்துக்கு;
குலசேகர பாண்டியன் மதுரையை உருவாக்கினார்;
அவர் மகன் மலயத்துவச பாண்டியன் - இவன் மனைவி காஞ்சனமாலை;
இருவருக்கும் குழந்தையாக யாகத்தில் பிறந்தவள் தடாதகைப்பிராட்டி; (இந்த தடாதகைப்பிராட்டியே சிவனின் மனைவி உமாதேவியாம்);
தடாதகைப் பிராட்டி, சோமசுந்தர பாண்டியனை திருமணம் செய்கிறாள்; (இந்த சோமசுந்தர பாண்டியனே சிவபெருமானாம்);
இப்போது, சோமசுந்தர பாண்டியனுக்கும் -தடாதகைப்பிராட்டிக்கும் பிறந்த மகன் பெயர் உக்கிரவர்ம பாண்டியன்;

**

Thursday, October 22, 2015

திருவிளையாடல்--10

 திருவிளையாடல்--10
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாட்டுக்களே திருவிளையாடல் எனப்படும்;
(மாமியாரின் இறந்த கணவனை, சொர்க்கத்திலிருந்து உயிருடன் வரவழைத்து, இருவரையும் கைகோர்த்து புனித நீராட வைத்த கதை)
சிவபெருமான், கைலாசத்திலிருந்து, மதுரைக்கு வந்து, சோமசுந்தர பாண்டியனாக மாறி, மதுரையின் ராணியான தாடகைப்பிராட்டியை திருமணம் செய்து கொண்டு, மாமியார் வீட்டிலிலேயே தங்கியும் விட்டார்;
மாமியார் காஞ்சனமாலை புண்ணிய நீராடுவதற்காக, அவரை எங்கும் அலைய விடாமல், ஏழு கடல்களையும் மதுரைக்கே வரவழைத்து விட்டார். ஏழு கடலும் மதுரையைச் சுற்றி இருக்கிறது. மாமியார் காஞ்சனமாலை புண்ணிய நீராடப் போகவேண்டியதுதான் பாக்கி;
ராணி தாடகைப் பிராட்டி, தன் தாயார் காஞ்சனமாலையைப் பார்த்து, "என் கணவர்தான் ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து விட்டாரே! தாயே, நீங்கள் போய் புண்ணிய நீராடுங்கள்" என்று கூறுகிறார்;
மகள் சொல்வதைக் கேட்ட தாய் அழுகிறாள்; காரணம் தெரியாமல் மகள் விழிக்கிறாள்;
"மகளே! புண்ணிய நீராட, ஏழு கடலும் தயாராக இங்கு வந்துவிட்டது; உன் கணவரால்தான் இது நடந்தது; அதில் எனக்கு மகிழ்ச்சிதான்; ஆனால், எனது இந்த வயதான காலத்தில், புண்ணிய நீராடும்போது, நான் மட்டும் தனியாக நீராட வேண்டும்; என் கணவர் உயிருடன் இருந்திருந்தால், அவர் கையைப் பிடித்துக் கொண்டு கடலில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு; எனக்கோ என் கணவர் இல்லை; இறந்துவிட்டார்; என்னைப் போன்ற விதவைகள் புண்ணிய நீராட வேண்டும் என்றால், கணவர் இல்லாத குறைக்கு, ஒரு பசு கன்றுக் குட்டியின் வாலையாவது பிடித்துக் கொண்டு கடலில் மூழ்கி நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது; இப்போது, நான், ஒரு கன்றின் வாலைப்பிடித்துக் கொண்டு நீராடும்படி ஆகிவிட்டதே என் வாழ்க்கை என்று மிகுந்த வருத்தமாக இருக்கிறது; என் கணவர் இருந்தால் இப்படி, நான், கணவனுக்குப் பதிலாக, ஒரு கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டிய கொடுமை வந்திருக்குமா? இதுவே என்னை மிகுந்த கவலைகுள்ளாக்கி கலங்க வைத்து விட்டது" என்று காஞ்சனமாலை தன் மகளிடம் புலம்புகிறார்;
இதை கேட்ட பின்னர், ராணி, தன் தாயார் கவலைப்படுவதை தன் கணவர் சோமசுந்தர பாண்டியனிடம் வருத்தத்துடனும், உருக்கத்துடனும் கூறுகிறார்;
மாமியார் கவலைப்பட்டால், மதுரை மருமகன் சும்மா இருப்பாரா? காரியத்தில் இறங்கியும் விட்டார்;
"இப்ப என்ன? உன் தந்தை இல்லை என்ற குறைதானே உன் தாயாருக்கு? அவர் இப்போது சொர்க்கத்தில்தான் இருக்கிறார்; நான் போய் அவரை இந்த மதுரைக்கே கூட்டிக் கொண்டு வருகிறேன்; உன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு உன் தாயார் ஏழு கடலிலும் நீராடட்டும்; என்ன சரியா?" என்று ஆசையுடன் சொல்லிவிட்டு, உடனே சொர்க்கத்துக்குப் புறப்பட்டு சென்று அங்கு இருக்கும், மாமனார் மலையத்துவச பாண்டியனை இங்கு அழைத்துக் கொண்டு வருகிறார்; மதுரைக்கு மாமனாரைக் கூட்டிக் கொண்டு வந்து, தன் மாமியாரிடம் விடுகிறார்; கணவனைப் பார்த்த மனைவி காஞ்சனமாலை மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார்; கணவரின் கைகோர்த்து ஏழ கடலிலும் நீராடி தன் பாவங்களை போக்கிக் கொண்டாராம்;
இப்படியாக, சிவபெருமான், தன் மாமியாருக்காக, அவரின் இறந்த கணவரையே சொர்க்கத்திலிருந்து வரவழைத்து, கைகோர்த்து நீராட வைத்த விளையாடல் பத்தாம் திருவிளையாடல்.

**

திருவிளையாடல்--9

 திருவிளையாடல்--9
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாட்டுக்களே திருவிளையாடல் எனப்படும்.
(சிவனின் மாமியார் காஞ்சனமாலை புண்ணிய நீராடுவதற்காக ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்த கதை)
சோமசுந்தர பாண்டியனுக்கும், மதுரை ராணி தாடகைப்பிராட்டிக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது; இந்த மணமகன்தான் சிவபெருமான்; கைலாசத்திலிருந்து, தாடகைப் பிராட்டியை திருமணம் செய்வதற்காகவே மதுரைக்கு வந்து, திருமணமும் செய்து, மாமியார் வீட்டிலேயே மதுரையில் தங்கியும் விட்டார்;
மாமியார் வீட்டில் இருக்கும் மருமகன், ஏதாவது ஒரு வீரச்செயலை அவ்வப்போது செய்து கொண்டிருந்தால்தான் மரியாதை;
இவரின் மாமியார் பெயர் காஞ்சனமாலை; இவரின் கணவர்தான் மலயத்துவச பாண்டியன்; இவர்களுக்குத்தான் வெகுகாலம் குழந்தை இல்லாமல் யாகம் செய்து இந்த தடாதகைப் பிராட்டி பிறந்தாள்; தடாதகைப் பிராட்டி வளர்ந்து வந்தவுடன் அவளுக்கு ராணியாக முடிசூட்டிவிட்டு, மலயத்துவச பாண்டியன் இறந்து விட்டார்; அவரின் மனைவி தான் இந்த காஞ்சனமாலை; விதவை; எனவே அவர் எல்லா கடலுக்கும் சென்று புனித நீடாட வேண்டும் என்பது அப்போதைய வழக்கம்; அவர் புனித நீராட புறப்படுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும்படி, தன் மகளும் ராணியுமான தடாதகைப்பிராட்டிக்கு சொல்லிவிட்டாள்; ஆனால் ராணி, தன் கணவர் சோமசுந்தர பாண்டயனிடம், தன் தாயார் புனித நீராடப் போக இருப்பதாக சொல்கிறார்;
இதை அறிந்த சோமசுந்தர பாண்டியன், மாமியார் மெச்சும்படி ஒரு வேலையை செய்து காண்பிக்க வேண்டும் என நினைத்து, அதற்கு இதுவே தருணம் என்று கருதினார்; தன் மனைவியிடம், "உன் தாயார், எதற்காக ஏழு கடல் இருக்கும் இடத்திற்கு சென்று நீராட வேண்டும்; நானே அந்த ஏழு கடல்களையும் மதுரைக்கே வரவழைக்கிறேன்; அங்கு உன் தாயார் புனித நீடாடிக் கொள்ளட்டுமே?" என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட கணவர் கிடைத்தால் மனைவிக்கு மகிழ்ச்சிதானே! ஒப்புக் கொள்கிறார்;
சிவனாக இருக்கும் சோமசுந்தர பாண்டியன், தம் மாமியாருக்காக, ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து மாமியாரை புனித நீராட வைத்த விளையாட்டே ஒன்பதாம் திருவிளையாடல்.
**


திருவிளையாடல்--8

திருவிளையாடல்--8
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாட்டுக்களே திருவிளையாடல் எனப்படும்;
(குண்டோதரனின் அடங்காப் பசிக்காக அன்னக்குழியை ஏற்படுத்தி, அவன் தாகத்தை தீர்க்க, வைகை ஆற்றை வரவழைத்த திருவிளையாடல்)
மதுரையில், சோமசுந்தரபாண்டியனாக வந்திருக்கும் சிவபெருமானின் திருமணம் நடந்து முடிந்து விட்டது; மணமகள், ராணியான தாடகைப்பிராட்டியே திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்; ஆனால், சிவனின் கணங்களில் ஒருவனான குண்டோதரனே மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் எனக்கு உணவு வேண்டும் என்று அடம்பிடிக்கிறான்;
இந்த திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த மணமகள் தாடகைப்பிராட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; கணவரைப் பார்த்து நாணி நிற்கிறார்;
கணவர், சோமசுந்தர பாண்டியன், உண்மையில் சிவபெருமான் ஆவார்; அவர், அங்கு ஒரு பெரிய அன்னக்குழியை ஏற்படுத்துகிறார்; அதில் முழுக்க முழுக்க சோறு இருக்கிறது; அதிலிருந்து எவ்வளவு சோற்றை எடுத்தாலும் குறையாது; எனவே அதிலிருந்து சோற்றை எடுத்து, குண்டோதரன் பசி தீரும்வரை உணவளிக்கிறார்; அவனுக்கு பசி தீர்கிறது; அவனின் தாகத்துக்கு எவ்வளவு நீர் கொடுத்தாலும் போதாது; எனவே, சிவன், வைகை நதியையே மதுரைக்கு அருகில் வரவழைக்கிறார்; அதிலுள்ள நீரை குண்டோதரன் குடிக்கும்படி செய்து அவனின் தாகம் தீர்க்கிறார்;
இப்படியாக, தன் மனைவியின் சிக்கலைத் தீர்க்கிறார் சோமசுந்தர பாண்டியனாக வந்திருக்கும் சிவபெருமான்.
இவ்வாறு தன் மனைவியின் நெருக்கடியைத் தீர்த்துவைத்த விளையாட்டே எட்டாம் திருவிளையாடல்.
**


திருவிளையாடல்--7

திருவிளையாடல்--7
சிவபெருமான் மதுரையில் செய்த விளையாட்டுக்களே திருவிளையாடல் எனப்படும்.
(திருமணத்துக்கு வந்த குண்டோதரன் அங்கு சமைத்த மொத்த உணவையும் சாப்பிட்டு காலிசெய்ய வைத்த திருவிளையாடல்);
சிவபெருமான் கைலாசத்திலிருந்து மதுரைக்கு ராணி தாடகைப் பிராட்டியை திருமணம் செய்து கொள்ள வருகிறார். இங்கு அவர் பெயர் சோமசுந்தர பாண்டியன். இவர்தான் மணமகன்; மதுரையின் ராணியான தாடகைப் பிராட்டிதான் மணமகள்; மதுரையில் நடக்கும் திருமணத்துக்கு எல்லா நாட்டு மன்னர்களும் வந்திருக்கிறார்கள்; கைலாசத்திலிருக்கும் தேவர்களும் வந்திருக்கிறார்கள்;
பாண்டிய நாட்டின் வழக்கப்படி, மணமகள் வீட்டார்தான், திருமணச் செலவையும், விருந்து செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, ராணி தாடகைப்பிராட்டியே தன் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். பெரிய விருந்துக்கும் ஏற்பாடும் செய்து விட்டார்; இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது; திருமணத்துக்கு வந்த கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது; கணவரிடம், பெருமையுடன் சொல்கிறார், "வந்தவர்கள் எல்லோருக்கும் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்துவிட்டேன்; எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்து உணவு அருந்திவிட்டுப் போக சொல்லுங்கள்" என்று கூறுகிறார்; சிவன் சிரித்துக் கொள்கிறார்;
திருமணத்துக்கு வந்திருந்தவர்களில், சிவகணங்களைச் சேர்ந்த "குண்டோதரனும்" ஒருவன்; அவனுக்கு எவ்வளவு உணவு படைத்தாலும் போதாது. ஒரு நொடியில் மலைபோல உணவுகளை உண்பவன்; சிவன், முதலில் அவனைச் சாப்பிட அனுப்பிவிட்டார்; திருமணத்துக்கு சமைத்திருந்த மொத்த உணவையுமே அவன் ஒருவனே சாப்பிட்டு முடித்து விட்டான்; வேறு யாருக்கும் சாப்பாடு இல்லையாம்; இன்னும் எனக்கு உணவு வேண்டும் என்று சமையல் கட்டில் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறான்; இந்த தகவல் ராணி தாடகைப்பிராட்டிக்கு போகிறது; அவர் வந்து பார்க்கிறார்; உணவு இல்லை; ஆகா, இவ்வளவு சமைத்தும், நம் கணவர் வீட்டு ஆட்களுக்கு திருமண உணவு அளிக்க முடியாமல் போய்விட்டதே என்று ஆச்சரியம் கலந்த கவலை; சிவன் வருகிறார்; சிரிக்கிறார்; எல்லோருக்கும் உணவு இருக்கிறது என்று சொன்னாயே என்று கேட்கிறார்; ராணி, நாணி நிற்கிறார்;
இவ்வாறு வேண்டுமென்றே மணமகளைச் சிக்கலில் மாட்டிவிட்டு நடத்திய திருவிளையாடலே ஏழாம் திருவிளையாடல்;
**


திருவிளையாடல்--6

திருவிளையாடல்--6
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாட்டுக்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(சிவபெருமான், தன் திருமணத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு வந்தவர்களுக்காக, மதுரையில் அவர் திருநடனம் ஆடிக்காட்டியதே ஆறாம் திருவிளையாடல்)
சிவபெருமான் கைலாசத்திலிருந்து மதுரைக்கு வந்துஅங்கு சோமசுந்தர பாண்டியனார் என்ற பெயருடன், மதுரை ராணியான தடாதகைப் பிராட்டியைத் திருமணம் செய்து கொள்கிறார். மதுரையில் இவர்களின் திருமணம் நடக்கிறது. மணமகன்: சோமசுந்தர பாண்டியன்; மணமகள்: ராணி தாடகைப்பிராட்டி. ஆனால் இவர்கள் இருவரும் உண்மையில் சிவபெருமான்-உமாதேவி ஆவார்கள்.
இந்தத் திருமணத்துக்கு பலர் வந்திருந்தனர். இதில் முக்கியமானவர்கள் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர்கள் முதலியோர். இந்த பாண்டிய நாட்டிலும், மற்ற எட்டுத் திக்குகளிலிலும் இருந்தும் மன்னர்கள் வந்திருக்கிறார்கள். கைலாயத்திலிருந்து தேவர்கள் வந்திருக்கிறார்கள்.
இதில் பதஞ்சலி முனிவர் முதலியோருக்கு, மணமகன் சிவபெருமான் என்று தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, சிவன், திருநடனம் ஆடிக்காட்டினால்தான், நாங்கள் திருமண விருந்து உணவை உண்போம். இல்லையென்றால் உண்ணமாட்டோம் என்று சிவனிடம் கூறிவிட்டனர். வேறு வழியின்றி, சிவனும் இதற்கு ஒப்புக் கொண்டார். மதுரைக்குப் பக்கத்தில் ஒரு இடத்தில், வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். அதில் மாணிக்க பீடிகையை (மேடையை) அமைக்கிறார். அங்கு சிவபெருமான் வந்து, திருநடனம் ஆடிக் காட்டுகிறார். விருந்தினர்கள் சிவனின் நடனத்தை நேரில், அதுவும் மதுரையில் கண்டு களிக்கிறார்கள்.
இதுவே சிவபெருமான் திருநடனம் காட்டிய ஆறாவது திருவிளையாடல்.

**

திருவிளையாடல்-5

திருவிளையாடல்-5
மதுரை நகரில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(தாடகைப்பிராட்டியைத் திருமணம் செய்தது ஐந்தாம் திருவிளையாடல்)
குலசேகர பாண்டிய மன்னனின் மகன் மலயத்துவச பாண்டியன். மலையத்துவச பாண்டியனின் மனைவி பெயர் காஞ்சனமாலை; இவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருந்து, பின்னர், அதற்காக யாகம் செய்தபோது, அதில், உமாதேவியே, "தாடகைப்பிராட்டியாக" மூன்று வயது குழந்தையாக எழுந்தருளினாராம். இது நான்காவது திருவிளையாடல்.
இனி ஐந்தாவது திருவிளையாடல்:
மலையத்துவச பாண்டியன், தன் மகள் தாடகைபிராட்டிக்கு ராணியாக முடிசூட்டுகிறார். பின்னர் சில காலம் கழித்து, மலையத்துவச பாண்டியன் சிவபதவியை அடைகிறார். பின்னர், தாடகைப் பிராட்டி, பாண்டிய நாட்டின் ராணியாக இருக்கும்போது, திக்விஜயம் மேற்கொள்கிறார். எல்லாத் திசைகளிலும் சென்று அங்குள்ள அரசர்களை வென்று வெற்றி வாகை சூடுகிறார். பின்னர், வடக்குத் திசைக்கு போருக்கு போகும்போது, அங்குள்ள அரசர்களையெல்லாம் வென்று, கடைசியாக கைலாசத்துக்கு போகிறார். அங்கு போர் செய்கிறார். அங்கு கைலாசத்தில் சிவபெருமான் இருக்கிறார். இந்த ராணியான தாடகைப்பிராட்டி என்பவர் உண்மையில் சிவனின் மனைவியான உமாதேவியின் பிறப்பே!
இந்த தாடகைப்பிராட்டி சிறுவயதில் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து, பருவவயதை அடையும் காலத்தில், அவருக்கு மூன்று முலைகள் உருவாகியதாம். எதற்காக அப்படி ஏற்பட்டது என வினவியபோது, இந்தப் பெண், எப்போது தன் கணவனை முதன்முதலில் பார்க்கிறாரோ அப்போது இதில் ஒன்று மறைந்துவிடும். அப்படி இவளைப் பார்ப்பவரே இவளின் கணவர் என்று அடையாளம் கண்டுகொள்க என்று தெரியவந்ததாம்.
இங்கு, கைலாசத்தில், தாடகைப்பிராட்டி என்னும் ராணி, சிவபெருமானைத் தரிசிக்கிறார். அப்போது அவளின் மும்முலைகளில் ஒன்று மறைந்துவிடுகிறது. இயல்பான் பெண்களுக்குறிய இரண்டு மட்டும் இருக்கிறதாம். உடனே, இந்தச் சிவபெருமான்தான் என் கணவர் என்று கண்டுகொண்டவுடன், நாணிவிட்டாராம். துணிச்சலான ராணி, தன் கணவரைக் கண்டு கொண்டவுடன் நாணிவிட்டாராம். சிவனுக்கும் இவள்தான் தன் மனைவி என்று கண்டுகொண்டாராம்.
உடனே சிவன், "தாடகைப்பிராட்டியே! உன்னை நான் மதுரையில் வந்து திருமணம் செய்து கொள்வேன்; சந்தோஷமாக செல்க!" என்று கூறி வழியனுப்பி வைத்திருக்கிறார்.
கைலாசத்திலிருந்து மதுரைக்கு வருகிறார் தாடகைப்பிராட்டி. அங்கு வந்த சிவன், "சோமசுந்தர பாண்டியனார்" என்ற பெயருடன் சென்று தாடகைப்பிராட்டியை உலகறிய திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் மதுரையை மனைவியின் பொருட்டு ஆட்சி செய்கிறார்.
தாடகைப்பிராட்டி மதுரையின் ராணி; அவரின் கணவர் சோமசுந்தர பாண்டியனும் மனைவிக்காக ஆட்சி செய்கிறார்போலும்!
இவர்கள் இருவரும் உண்மையில் உமாதேவியும், சிவபெருமானும் என்கிறது திருவிளையாடல்.

**

Saturday, October 17, 2015

திருவிளையாடல்-4

திருவிளையாடல்-4
மதுரை நகரில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல்.
(உமாதேவியை மகளாகப் பெற்ற கதை)
குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்ட காலம். அந்த மன்னனுக்கு ஒரு மகன். அவன் பெயர் மலயத்துவச பாண்டியன். அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, அவன் மனைவி பெயர் காஞ்சனமாலை. அவளைத் திருமணம் செய்து வருடங்கள் ஆனபோதிலும் புத்திரர் ஏதும் பிறக்கவில்லையாம். எனவே குழந்தை வேண்டி, ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவ்வாறு பெரிய யாகம் செய்கிறார்கள். அந்த யாகத்திலிருந்து ஒரு மூன்று வயது சிறுமி தோன்றி வருகிறாள். அவள்தான் உமாதேவி. இவளுக்கு "தடாதகைப்பிராட்டி" என்று பெயர் சூட்டுகிறார்கள்.
உமாதேவியையே மகளாகப் பெற்றவர் பாண்டிய மன்னன்.
இதற்குமுன் உள்ள பிறவியில், காஞ்சனமாலை, தன் தவ வலிமையால் உமா தேவியை மகளாக அடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் இந்தப் பிறவியில், காஞ்சனமாலைக்கு மகளாக உமாதேவியாரே பிறந்திருக்கிறாராம். இந்த காஞ்சனமாலை என்னும் பெண் முற்பிறப்பில் விச்சாவதி என்ற பெயர் கொண்ட கந்தருவப் பெண்ணாம்.

**

ஹேதி

இந்தப் பிரபஞ்சம் உருவான போது, பிரம்மா எல்லோரையும் படைக்கிறார். அப்போது ராட்சச மக்களையும் படைக்க வேண்டி உள்ளது. 

எனவே ஹேதி என்ற ராட்சசனை படைக்கிறார். அவனின் மனைவியாக காலாக்கினி என்னும் பயை என்பவளைப் படைக்கிறார். 

இவர்கள்தான் பின்னர் வந்த ராட்சச மக்களுக்கு மூதாதையர்கள்.

குபேரனின் தம்பியா இராவணன்?

புலஸ்தியனுக்கு இரண்டு மகன்கள்; அவர்கள 1) அகஸ்தியன்; 2) விச்சிரவாவு;
விச்சிரவாவுக்கு நான்கு மனைவிகள்; அவர்கள் --
1) இளாவிளை
2) கைகசி
3) புஷ்போற்கடை
4) ராகை
(1) இளாவிளைக்குப் பிறந்தவர் குபேரன்;
(2) கைகசிக்குப் பிறந்தவர்கள் மூவர், இராவணன், கும்பகர்ணன், விபீஷன்;
(3) புஷ்போற்கடைக்கு பிறந்தவர்கள் இருவர், மகோதரன் மற்றும் மகாபார்சுவன்.
(4) ராகைக்குப் பிறந்த பிள்ளைகள் மூவர், கரன், தூஷணன், மற்றும் திரிசிரன்.
இதன்படி, விச்சிரவாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த இராவணன், குபேரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் முறையே!