Thursday, October 22, 2015

திருவிளையாடல்--10

 திருவிளையாடல்--10
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாட்டுக்களே திருவிளையாடல் எனப்படும்;
(மாமியாரின் இறந்த கணவனை, சொர்க்கத்திலிருந்து உயிருடன் வரவழைத்து, இருவரையும் கைகோர்த்து புனித நீராட வைத்த கதை)
சிவபெருமான், கைலாசத்திலிருந்து, மதுரைக்கு வந்து, சோமசுந்தர பாண்டியனாக மாறி, மதுரையின் ராணியான தாடகைப்பிராட்டியை திருமணம் செய்து கொண்டு, மாமியார் வீட்டிலிலேயே தங்கியும் விட்டார்;
மாமியார் காஞ்சனமாலை புண்ணிய நீராடுவதற்காக, அவரை எங்கும் அலைய விடாமல், ஏழு கடல்களையும் மதுரைக்கே வரவழைத்து விட்டார். ஏழு கடலும் மதுரையைச் சுற்றி இருக்கிறது. மாமியார் காஞ்சனமாலை புண்ணிய நீராடப் போகவேண்டியதுதான் பாக்கி;
ராணி தாடகைப் பிராட்டி, தன் தாயார் காஞ்சனமாலையைப் பார்த்து, "என் கணவர்தான் ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து விட்டாரே! தாயே, நீங்கள் போய் புண்ணிய நீராடுங்கள்" என்று கூறுகிறார்;
மகள் சொல்வதைக் கேட்ட தாய் அழுகிறாள்; காரணம் தெரியாமல் மகள் விழிக்கிறாள்;
"மகளே! புண்ணிய நீராட, ஏழு கடலும் தயாராக இங்கு வந்துவிட்டது; உன் கணவரால்தான் இது நடந்தது; அதில் எனக்கு மகிழ்ச்சிதான்; ஆனால், எனது இந்த வயதான காலத்தில், புண்ணிய நீராடும்போது, நான் மட்டும் தனியாக நீராட வேண்டும்; என் கணவர் உயிருடன் இருந்திருந்தால், அவர் கையைப் பிடித்துக் கொண்டு கடலில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு; எனக்கோ என் கணவர் இல்லை; இறந்துவிட்டார்; என்னைப் போன்ற விதவைகள் புண்ணிய நீராட வேண்டும் என்றால், கணவர் இல்லாத குறைக்கு, ஒரு பசு கன்றுக் குட்டியின் வாலையாவது பிடித்துக் கொண்டு கடலில் மூழ்கி நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது; இப்போது, நான், ஒரு கன்றின் வாலைப்பிடித்துக் கொண்டு நீராடும்படி ஆகிவிட்டதே என் வாழ்க்கை என்று மிகுந்த வருத்தமாக இருக்கிறது; என் கணவர் இருந்தால் இப்படி, நான், கணவனுக்குப் பதிலாக, ஒரு கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டிய கொடுமை வந்திருக்குமா? இதுவே என்னை மிகுந்த கவலைகுள்ளாக்கி கலங்க வைத்து விட்டது" என்று காஞ்சனமாலை தன் மகளிடம் புலம்புகிறார்;
இதை கேட்ட பின்னர், ராணி, தன் தாயார் கவலைப்படுவதை தன் கணவர் சோமசுந்தர பாண்டியனிடம் வருத்தத்துடனும், உருக்கத்துடனும் கூறுகிறார்;
மாமியார் கவலைப்பட்டால், மதுரை மருமகன் சும்மா இருப்பாரா? காரியத்தில் இறங்கியும் விட்டார்;
"இப்ப என்ன? உன் தந்தை இல்லை என்ற குறைதானே உன் தாயாருக்கு? அவர் இப்போது சொர்க்கத்தில்தான் இருக்கிறார்; நான் போய் அவரை இந்த மதுரைக்கே கூட்டிக் கொண்டு வருகிறேன்; உன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு உன் தாயார் ஏழு கடலிலும் நீராடட்டும்; என்ன சரியா?" என்று ஆசையுடன் சொல்லிவிட்டு, உடனே சொர்க்கத்துக்குப் புறப்பட்டு சென்று அங்கு இருக்கும், மாமனார் மலையத்துவச பாண்டியனை இங்கு அழைத்துக் கொண்டு வருகிறார்; மதுரைக்கு மாமனாரைக் கூட்டிக் கொண்டு வந்து, தன் மாமியாரிடம் விடுகிறார்; கணவனைப் பார்த்த மனைவி காஞ்சனமாலை மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார்; கணவரின் கைகோர்த்து ஏழ கடலிலும் நீராடி தன் பாவங்களை போக்கிக் கொண்டாராம்;
இப்படியாக, சிவபெருமான், தன் மாமியாருக்காக, அவரின் இறந்த கணவரையே சொர்க்கத்திலிருந்து வரவழைத்து, கைகோர்த்து நீராட வைத்த விளையாடல் பத்தாம் திருவிளையாடல்.

**

No comments:

Post a Comment