திரௌபதியின் கண்ணீர்
திரௌபதியின்
இரு கண்களிலும் கண்ணீர் அரும்பியது. விஜயன் (அர்ச்சுனன்) தவத்திற்குப் புறப்படும்
இந்த நேரத்தில் கண்ணீர் உகுத்தல் அமங்கலம் எனக் கருதி கண் இமைக்காமல் நின்று, சில வார்த்தைகளைக் கூறத் தொடங்கினாள்;
"ஐயனே!
கொடிய துரியோதனன் இழைத்த வஞ்சனைச் சேற்றில் அழுந்தி அல்லலுழக்கும் எங்களைக்
கைதூக்கிக் கரையேற்றுதல் நுமது கடன். தவம் சித்தி பெறும்வரை என் பிரிவாலாகிய
வருத்தம் நும் மனதைச் சிறிதும் அலைக்க வேண்டாம். வீங்கு (மிகுந்து) புகழையும், விசேட சுகத்தையும் விழைந்து, மெய்
வருத்தம் பாராது, மேன்மேன் உஞற்றுபவரை இலக்குமி தானே
விரும்பிச் சென்று அடைகிறாள். நான்முகக் கடவுளால் உலகப் பாதுகாப்பின் பொருட்டே
சத்திரியசாதி படைக்கப்பட்டது.
சத்திரியன் ஒருவன் தன் கடமையிற் பிறழ்ந்து
மானமிழந்து வாழ்தலின் வாழாமை மிக இனிது. நூற்றுவர் எமக்கிழைத்த பொல்லாத் தீங்குகளை
நினைக்கவே நெஞ்சம் வேகின்றது. துர்மதி படைத்த துச்சாதனன் மன்னவையில் என்
கற்றைக்குழல் பிடித்து இழுக்கும் பொழுது ஐவர் எனக்கு உயிர்த்துணைவராயிருந்தும்
(கணவராய் இருந்தும்) நான் ஓர் அநாதை எனக் கண்ணனையன்றோ சரண் புகுந்து மானத்தைக்
காக்க வேண்டி இருந்தது.
சத்திரியன் என்ற சொல்லானது, சாதுக்களைத்
துக்கத்திலிருந்து விடுவிப்பனுக்கே பொருந்தும். காரணக் குறிகொண்ட அச் சொல்
நும்மிடம் இடுகுறியாகி விட்டது. அப்பழி நும் அசாக்கிரதையால் நும்மைச் சார்ந்ததன்றி,
நும் ஆண்மை குன்றியதால் அல்ல. எமக்கு அவன் இழைத்த பரிபவத்தை
மனத்திற் கொண்டு, எத்துணை இடையூறு வரினும் பொருட்படுத்தாது,
தவத்தை இனிது முடித்து எங்களையும் இவ் ஆபத்தினின்று
காத்தருள்க" என்று மனம் நைந்து கேட்டுக் கொண்டாள்.
No comments:
Post a Comment