பிரம்மா:
இந்த உலகில் உள்ள
உயிர்கள் தோன்றுவதற்கு காரணமானவர் இந்த பிரம்மா; சிவன்
கடவுளாகவும், பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவராகவும்
சொல்கிறார்கள். இந்த உலகம் தோன்றி மறையக்கூடியது. நிலை இல்லாதது. எனவே ஒவ்வொரு
உலகம் தோன்றும் போதும் ஒவ்வொரு பிரம்மா தோன்றுவார் என்கிறார்கள். இந்தப்
பிரபஞ்சமானது தோன்றி, இருந்து, பின்னர்
சிவனில் ஒடுங்கி மறையும் தன்மை கொண்டதாம். பின்னர், அந்தச்
சிவனிலிருந்து புதிய பிரபஞ்சம் தோன்றுமாம்.
ஒவ்வொரு
பிரபஞ்சத்திலும் உயிர்களைத் தோற்றுவிப்பது அந்தந்த பிரபஞ்சத்தில் உள்ள
பிரம்மாக்கள். இவரைப் பொதுவாக பிரம்மா என்று கூறுகிறார்கள். இந்த பிரம்மாவின்
துனைவிதான் சரஸ்வதி.
இந்த பிரம்மா
படைப்பைப்பற்றி ஒரு வேடிக்கை கதை மூலம் அந்த விஞ்ஞானத்தை விளக்குகிறார்கள்.
தான்தான் இந்த
பிரபஞ்சத்தையே படைக்கு பிரம்மா, என்று அந்த பிரம்மா,
பிரமிப்பாக நினைத்து கர்வம் கொண்டாராம். இது சிவனுக்கு கோபத்தை
உண்டாக்கி விட்டதாம். அவரின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வைரவக் கடவுள்
தோன்றினாராம். அந்த வைரவக்கடவுள் நேராக பிரம்மாவிடம் சென்று, அவரின் ஒரு தலையை வெட்டி விடுகிறார். பிரம்மாவுக்கு ஏற்கனவே ஐந்து தலைகள்
இருந்ததாம். ஒரு தலை, வெட்டப்பட்டபின்னர், இப்போது பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டுமே இருக்கிறது. அதனால்தான்
பிரம்மாவை "நான்முகன்" (நான்கு முகங்கள் கொண்டவன்) என்று
சொல்கிறார்களாம். இவரை சதுர்முகன் (நான்கு முகம்) என்றும் சொல்வார்களாம்.
இந்த பிரம்மா சில
சமயங்களில், அவரின் படைப்புத் தொழிலை
மறந்தும் விடுவாராம். அப்படி மறந்த நேரத்தில் ஒரு முறை, சிவனை
வழிபட்டு, அவரே தமக்கு மகனாப் பிறந்து, மற்ற உயிர்களின் சிருஷ்டி என்னும் பிறப்பை தொடர்ந்தார் என்றும் சில
புராணங்கள் கூறுகின்றன.
சிவனின் புத்திரர்
சுப்பிரமணியக் கடவுள் ஒரு முறை இந்த பிரம்மா சிருஷ்டி மந்திரத்தை சொல்ல
மறந்துவிட்டார் என்ற காரணத்தை வைத்து, பிரம்மாவை சிறையில்
அடைத்து வைத்துவிட்டாராம். சுப்பிரமணியக் கடவுளே, பிரபஞ்சத்தின்
உயிர்களை உருவாக்கும் சிருஷ்டி வேலையைச் செய்தார் என்கிறது கந்தபுராணம்.
ஒவ்வொரு பிரம்மாவும், இந்த பிரபஞ்சம் அழியும் காலமான மகாபிரளயம் வரும்போது
இந்த பிரபஞ்சம் முழுவதும் அழிந்து விடுமாம். பிரம்மாவும் அழிந்து விடுவாராம்.
அதாவது இந்த பிரபஞ்சம் சிவனில் (black hole) பிரபஞ்சத்தின்
மையப்பகுதியில் ஒடுங்கிவிடுமாம், அதாவது இந்தப் பிரமாண்ட பிரபஞ்சம்
ஒரு புள்ளியில் ஒடுங்கி அடங்கிவிடுமாம். அது மறுபடியும் அங்கிருந்தே புதிதாகத்
தோன்றி, இந்த பிரபஞ்ச அளவுக்கு விரிந்தும் விடுமாம். அப்போது
இந்த உயிர்களைப் படைப்பதற்காக புதிய பிரம்மாவும் பிறப்பாராம்.
இதை இப்படி
வேடிக்கையாக சொல்கிறார்கள் புராணங்களில்:-
ஒவ்வொரு பிரம்மாவின்
முடிவிலும் அவரின் தலையைக் கொய்து, அந்த பிரம்மாவின் மண்டை
ஓட்டை எடுத்து, சிவன் ஒரு கயிறில் கோர்த்து தன் கழுத்தில்
அணிந்து கொள்வாராம். ஒவ்வொரு பிரபஞ்ச முடிவிலும் இது நடப்பதால், சிவனின் கழுத்தில் பல மண்டை ஒடுகள் உள்ளன. அதைக் கொண்டே இதுவரை எத்தனை
பிரபஞ்சங்கள் அழிந்தன என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இதை எதற்காகச்
சொல்கிறார்கள் என்றால் -- இந்த பிரபஞ்சம் நிரந்தரமானது அல்ல; இது தோன்றி மறையும் இயல்புடையது; ஆனால் நிரந்தரமானவன் சிவன்; அவனே நிலையானவன்;
எப்போதும் அழியாது எஞ்சி நிற்பவன் சிவன் என்னும் கடவுள் ஒருவனே என்ற
விஞ்ஞான உண்மையை உணர்த்தவே இவ்வளவு புராண கதைகளும்.
**
No comments:
Post a Comment