Friday, October 23, 2015

திருவிளையாடல்-11

திருவிளையாடல்-11
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(சோமசுந்தர பாண்டியனுக்கும் அவர் மனைவி ராணி தடாதகைப் பிராட்டிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிற கதை)
முன்கதை;
குலசேகர பாண்டிய மன்னர் மணவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறார். அவர் ஊரில் உள்ள ஒரு வணிகன், "காட்டில் நடுஇரவில் சிவன் ஒரு விமானத்தில் வந்து இறங்கியதாகவும், தேவர்களும் அங்கு இருந்தார்கள் என்றும், அவர்கள் சிவனை இரவெல்லாம் வழிப்பட்டார்கள்" என்று பாண்டிய அரசனைச் சந்தித்து கூறுகிறான். அன்று பாண்டிய மன்னன் கனவிலும் சிவன் வந்து, தான் இரவு அங்கு வந்த இடமான கடம்பவனக் காட்டில் ஒரு பெரிய கோயிலைக் கட்டும்படியும், மன்னனுக்கு பெரிய அரண்மனையை கட்டிக் கொள்ளும்படியும், அதைச் சுற்றி மக்கள் வசிக்க வீடுகளைக் கட்டும்படியும், கனவில் உத்தரவு இடுகிறார். அப்படியே குலசேகர பாண்டியன் கட்டி முடித்தார். அதுவே "மதுரை நகரம்" ஆகும்.
பின்னர் குலசேகர பாண்டிய மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; அவன் பெயர் மலயத்துவச பாண்டியன். அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். அந்த பெண்ணின் பெயர் காஞ்சனமாலை; இவர்களுக்கு வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லை; எனவே ஒரு பெரிய யாகம் செய்கின்றனர்; அந்த யாகத்தில், சிவனின் மனைவி உமாதேவியே ஒரு மூன்று வயது பெண்ணாக உருமாறி யாகத்திலிருந்து எழுந்து வருகிறாள்; அவளையே மகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; அந்தச் சிறுமியின் பெயர் தடாதகைப்பிராட்டி. அவளுக்கு சிறு வயதில் மூன்று முலைகள் உருவாகிவிட்டதைக் கண்டு பயந்தனர்; பின்னர், அவள் பெரியவளாகி தன் கணவனைச் சந்திக்கும்போது, மூன்றில் ஒன்று மறைந்துவிடும் என ஆறுதல் சொன்னார்கள்; அவள் பெரிய வீராங்கனை. சிறுவயதிலிலேயே அவளின் தகப்பனார், மலையத்துவச பாண்டியன் இவளுக்கு முடிசூட்டி ராணி ஆக்கி விட்டார்; பின்னர், தகப்பனார் இறந்து விட்டார்; தடாதகைப்பிராட்டியே பாண்டிய நாட்டை ஆட்சி செய்கிறார்; பல போர்களுக்கு ஏற்பாடு செய்து திக்விஜயம் மேற்கொள்கிறார்; எல்லா மன்னர்களையும் வெற்றிகொண்டு, வடக்கே போகும்போது, அங்கு சிவபெருமானை சந்திக்கிறார்; இருவரும் நேருக்குநேர் சந்திக்கும்போது, இவள் நாணுகிறாள்; அப்போது இவளின், ஒரு மார்பகம் மறைந்துவிடுகிறது; எனவே இவர்தான் என் கணவர் என்ற முடிவுக்கு வருகிறார்; சிவனும், அதை ஒப்புக்கொண்டு, மதுரைக்கு வந்து உன்னை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறார்;
மதுரைக்கு வருகிறார் சிவபெருமான்; ஆனால், மனிதராக மாறி, சோமசுந்தர பாண்டியன் என்ற பெயரில் மதுரைக்கு வருகிறார்; இங்கு மதுரையில் சோமசுந்தர பாண்டியனுக்கும்- ராணி தடாதகைப் பிராட்டிக்கும் திருமணம் நடக்கிறது; மணமகன் சோமசுந்தரபாண்டியன், தன் மனைவியையும், மாமியாரையும் நல்லவிதமாகப் பார்த்துக் கொள்கிறார்; மாமனார் மலயத்துவச பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டார்; இந்த நிலையில், தன் மாமியார் புண்ணிய நீராடுவதற்காக ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்துவிட்டார்; மாமியார் புனிதநீடாடும்போது கணவனின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற நியதிக்காக, நேராக சொர்க்கத்துக்கே சென்று, அங்கிருந்த தன் மாமனார் மலயத்துவச பாண்டியனை கூப்பிட்டுக் கொண்டு மதுரைக்கு வந்து, தன் மாமியாரிடம் ஒப்படைத்து புனித நீடார வைக்கிறார்;
**
இப்படியாக பல வித்தைகளை செய்து காண்பித்துக் கொண்டு, மனைவிக்கும், மாமியாருக்கு ஒரு நல்ல கணவனாகவும், மருமகனாகவும் இருக்கிறார் நம் கதாநாயகன் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான்.
சந்தோஷமான வாழ்க்கை; மனைவிக்குப் பிடித்த கணவன்; இணக்கமான மனைவி; வேறு என்னவேண்டும்? மனைவி கர்பிணியாகிறாள்; பிரசவம் நடக்கிறது; அரண்மனை வைத்தியர்கள் சூழ ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது ராணி தடாதகைப்பிராட்டிக்கு;
அந்த மகனுக்கு பெயர் வைக்கிறார்கள்; அவன் பெயர் உக்கிரவர்ம பாண்டியன்; இது ஒரு திருவிளையாடலாம்!
இதை எப்படி ஒரு திருவிளையாடல் என்று சொல்ல முடியும்? குழந்தை பிறப்பது ஒரு விளையாட்டா? அல்லது திருவிளையாட்டா?
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விளையாட்டுத்தானே! அப்படியானால் இதுவும் ஒரு திருவிளையாட்டே!
**
ஞாபகத்துக்கு;
குலசேகர பாண்டியன் மதுரையை உருவாக்கினார்;
அவர் மகன் மலயத்துவச பாண்டியன் - இவன் மனைவி காஞ்சனமாலை;
இருவருக்கும் குழந்தையாக யாகத்தில் பிறந்தவள் தடாதகைப்பிராட்டி; (இந்த தடாதகைப்பிராட்டியே சிவனின் மனைவி உமாதேவியாம்);
தடாதகைப் பிராட்டி, சோமசுந்தர பாண்டியனை திருமணம் செய்கிறாள்; (இந்த சோமசுந்தர பாண்டியனே சிவபெருமானாம்);
இப்போது, சோமசுந்தர பாண்டியனுக்கும் -தடாதகைப்பிராட்டிக்கும் பிறந்த மகன் பெயர் உக்கிரவர்ம பாண்டியன்;

**

No comments:

Post a Comment