Saturday, October 10, 2015

வேதவியாசர்


பராசர முனிவரின் புதல்வர் வேத வியாசர், அந்தக் காட்டில் பாண்டவர்கள் முன் வருகிறார். பாண்டவர்கள் பதறி வரவேற்று அமர வைக்கின்றனர்.
இந்த மண்ணுலகு உய்ய, நான்கு வேதங்களையும், 18 புராணங்களையும், வகுத்துத் தந்த வேத வியாசரே! நீங்கள் எங்களிடம் வந்து அருளினமைக்கு நன்றி. உங்கள் தரிசனம் என்பது வானத்தில் முகிலின்றி மழை தோன்றியதற்கு ஒப்பாகும்.அப்படிப்பட்ட மழையை இந்த மண்ணில் இருப்பவர்கள் நல்ல நிகழ்வாக கொண்டு மகிழ்வார்கள். எங்களின் நன்மைக்கருதி நீங்கள் வந்திருப்பதும் இதைப் போன்றதே! 
நாங்கள் பலகாலம் செய்து வந்த வேள்விகள் இன்றுதான் கைகூடியது. இந்த மண்ணுலகிலும், விண்ணிலும், நாகலோகத்திலும் என்போன்ற பாக்கியவான் இனி வேறு யார் இருக்க முடியும். உம்மைக் கண்டது, தீபத்தைக் கண்ட இருளைப் போலவும், பகலவனைக் கண்ட பனியே போலவும் எங்களுக்கு உள்ளது. நாங்கள் இருவகைப் பற்றுக்களைத் துறந்து நாடு விட்டு காடு புகுந்து கடும் தவம் புரிந்து இருக்கும்போது, பேரின்பப் பெருவெள்ளத்தில் திளைக்கும் உம்மைப் போன்ற ரிஷிகள் இங்கு எழுந்தருளி இருப்பதன் காரணத்தை சொன்னால் நல்லது. -- தருமன் பணிந்து வணங்குகிறான். 
'தருமனே! இம்மையிலும் மறுமையிலும் ஒத்த வாழ்வை விழைந்து நிற்கும் எம்மைப் போன்ற தபோதனர், இவர் என்னைச் சேர்ந்தவர், அவர் பிறரைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்ப்பதில்லை. எல்லா உயிர்களையும் ஒரே அன்னையின் மக்களாகப் பாவித்தல் எமது கடன். இருந்தாலும், குணத்தில் குன்றாகிய உன்னை கண்டதும் என் மனம் சமநிலை தவறி உன் குணங்களுகுக அடிமைப்பட்டு விட்டது. மனம் குணத்திற்கு அடிமைப்பட்டதுதானே! வீட்டுலகு எய்தி நின்றவரும் உன் போன்ற குணசாலிகளை நேசிப்பர்." 
"சம புத்தி படைத்த தருமனே! ஆடியான்னுக்கு (கண்ணாடி அணிந்தவனான திருதராஷ்டிரனுக்கு) அவனின் புதல்வர்களான 100 பேருக்கு ஒப்ப, நீங்கள் ஐவரும் அன்பிற்குறிய அருந்தவப் புதல்வர்கள்தானே? அடக்கம், பொறை, கொடை, தயை முதலிய நல்ல குணங்களில் அவர்களிலும் நீங்கள் மேம்பட்டவர்கள்தானே? அங்ஙனம் இருந்தும் தன் வஞ்சகப் புதல்வன் கொண்ட அரச மோகம் காரணமாக அப்பாவியான உங்களை காட்டிற்கு துரத்திவிட்டான். என்னே அவன் பேதமை! கொடிய அரவக் கொடியோன், கெடு மதி படைத்த கர்ணன், சகுனி முதலியவர்கள் அடிக்கடி சந்தித்து சதி ஆலோசனை செய்து வருகின்றனர். திரு (செல்வம்) அவனை விரைவில் விட்டு அகலும். அன்று வேத்தவையில் அறநெறி பயின்று அறியாத துச்சாதனன், பாஞ்சாலியின் துகில் உரிந்த கொடும் பாதகச் செயலை கண்டும், இறையும் பொறுமையை இழக்காதிருந்தீர். தான் கொண்ட மனையாளை மாற்றான் மானபங்கஞ் செய்யக் கண்டு யார் மனம் பொறுத்திருப்பார்என்னே நும் அறிவுடமை! இஃதொன்றே அவன் பேதமையையும், உன் அறிவுடமையையும் கையுறு (கையில் உள்ள) நெல்லிக்கனி எனக் காட்டும். வஞ்சகச் சூழ்ச்சியால் உமக்கு எண்ணிலடங்காத தீங்கிழைத்த துரியோதனன் உண்மையில் உங்கள் பெருமையை உலகறியச் செய்து விட்டான். "நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைக்குமன்றோ?" அவனது வஞ்சகச் சூழ்ச்சியின்றேல் பாண்டவர் தம் தொல்புகல் அமுதினை இவ்வுலகம் பருகுவது எங்ஙனம்?" 
"தருமே வேந்தே! அரசு வன்மையாற்றான் (வண்மையால் தான்) பெற முடியும். அரவக் கொடியோன் மறம் மிகுந்த கடுங்கண் மறவர் படை திரட்டிப் போருக்கு ஆயத்தமாயிருக்கிறான். படைவலி மிகுந்த இடத்தில், வெற்றிக் கொற்றவை (வீரலட்சுமி)குடிகொள்வது வழக்கம். ஆதலால், நீங்களும் அத்துறையில் ஒல்லும் வகை உஞற்றுதல் நன்று. மூவேழு தலை முறையாகத் கொடுங்கோன் மன்னவர் குலத்தைக் கருவறுத்தவனும், கார்த்தவீரியன் ஓராயிரந்தோள் துணித்தவனும், யமதங்கி முனிவரின் அருந்தவப் புதல்வனுமாகிய பரசுராமனை, அம்பாலியர் சுயம்வரத்தில் வென்று துரத்திய வீடுமன், துரியோதனன் தானைத் தலைவனாக அமர்ந்துள்ளான். கூற்றுவனுக்கே ஓர் கூற்றுவனாம் அன்னவன் தனுவின் நாணொலியை (நாண் ஒலியை) கேட்ட அளவில் விற்படை கொண்டவர் கைகளிலிலிருந்து வில்லும், வாளியும் (அம்பும்) தாமே நழுவி விழுமன்றோ? அந்ம வீடுமனை எதிர்த்து விற்போர் புரிய உங்களில் யார் உள்ளனர்? முகில்விடு தாரையென்னச் சமர பூமியிற் கணை பெய்யும், வில் விஞ்சையில் வல்ல துரோணனும் ஆண்டு உளன். போர் முனையில் ஊழித்தீபோல உருத்தெழும் அவனை எதிர்த்து அடக்கும் வீரர் ஈண்டு யார் உளர்? மழுவுடையானிடம் தனுர் வித்தை பயின்ற அடலாண்மையுடைய அங்கர் காமானும் ஆங்கு உளன். மறலியும் அவனை மறம் கண்டு மனமஞ்சி மறுகுவன்.  அமர்களத்தில் அவனது வெஞ்சிலைகண்ட தெவ்வர் ஆவி அகத்ததோ, புறத்ததோ என அஞ்சி நடுங்குவர். அவனை எதிர்த்து போராற்றுவது எங்ஙனம்இத் தானைத் தலைவர்களை நீவிர் வென்று வாகை சூடுவதற்கான உபாயங்களை நுமக்கு எடுத்துரைக்கவே யாம் இவண் போந்த்தாகும் (வந்ததாகும்.)




No comments:

Post a Comment