திருவிளையாடல்--15
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாடல்களே
திருவிளையாடல்கள் எனப்படும்.
(உக்கிரவர்ம பாண்டியன், மேரு மலைக்குச் சென்று
அங்கு வேண்டிய அளவுக்கு பொன்னை வாரிக் கொண்டுவந்து பாண்டிய நாட்டு மக்களுக்குக்
கொடுத்து மகிழ்ந்த கதை).
சோமசுந்தரபாண்டியன்தான் சிவபெருமான்; இவரின் மகன்தான்
உக்கிரவர்ம பாண்டியன்; இவன்தான் பாண்டிய நாட்டை ஆட்சி
செய்கிறான்; உக்கிரவர்ம பாண்டியனின் மனைவிதான் காந்திமதி;
இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; மன்னருக்கு
மகன் பிறந்தபின்னர், பாண்டிய நாட்டில் மழை இல்லை; பஞ்சம் வாட்டுகிறது; இவருக்குத்தான் இந்திரன் எதிரி
ஆயிற்றே! பின் எப்படி வருணனை வரவழைத்து பாண்டிய நாட்டில் மழையைப் பொழிய வைப்பார்;
உக்கிரவர்ம பாண்டியன் மிகுந்த கவலைக்கு உள்ளானார்;
உக்கிரவர்ம பாண்டியனின் கனவில், சோமசுந்தர பாண்டியன்
வருகிறார்; கனவில் வந்து, மகனிடம்,
"மகனே! நீ மேரு மலையை அடைந்து அங்குள்ள மேரு அரசனை, நான் கொடுத்த மூன்று ஆயுதங்களில் ஒன்றான "செண்டை(?)" ஆயுதத்தால் வெற்றி கொண்டு, அவன் உன்னை வணங்கும்படி
செய்து அங்குள்ள பொன் நிரம்பிய அறைகளிலுள்ள பொன்னை வாரிக் கொண்டு பாண்டிய
நாட்டுக்கு வா; அதை இங்கு பாண்டிய நாட்டு மக்களுக்கு
தாராளமாக வழங்கு; அவர்கள் இந்த பஞ்சத்தின் கவலை இல்லாமல்
வாழும்படி செய்;" என்று அவனின் கனவில் தோன்றி
கூறுகிறார்;
மறுநாள், உக்கிரவர்ம பாண்டியன் தன் படைகளுடன் மேரு மலையை
நோக்கிப் புறப்பட்டு விட்டான்; மேரு மலை எங்கிருக்கிறது?
பாரத வருஷம் தாண்டி, (வருஷம் என்றால் நாடு),
கிம்புருஷ வருஷம் தாண்டி, ஹரிவருஷம் தாண்டி,மேரு வருஷம் இருக்கிறது; இந்த மூன்று நாடுகளையும்
தாண்டுவதே பெரிய வேலை! அதை அடுத்த இளாவிருத வருஷத்தின் நடுவில் உள்ளது இந்த மேரு
வருஷம்; எப்படியோ மேரு நாட்டை அடைகிறான் மன்னன்; அங்குள்ள மேரு அரசன், பாண்டிய மன்னனை வரவேற்க
வரவில்லை! உடனே பாண்டிய மன்னன், தன் தகப்பனார் சோமசுந்தர
பாண்டியன் இவனுக்குக் கொடுத்த "செண்டை" என்னும் ஆயுதத்தை தூக்கி
விட்டான்; உடனே பயந்த மேரு மன்னன், ஓடோடி
வந்து பாண்டிய மன்னனின் கால்களில் விழுகிறான்; தன்னை
மன்னித்துக் கொள்ளும்படியும், அங்குள்ள மலையில் குவிந்துள்ள
பொன்னை எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிச் செல்லும்படி சொல்கிறான்; அவனது வீரர்களே, அவ்வளவு பொன்னையும் பொதிகளாகக்
கட்டி பாண்டிய நாட்டு வீரர்களுக்கு கொடுக்கின்றனர்;
அவ்வளவு பொன்னையும் சுமந்து கொண்டு, பாண்டிய நாட்டுக்கு
வருகிறான் பாண்டிய மன்னர் உக்கிரவர்ம பாண்டியன்; இங்கு
பாண்டிய நாட்டில் மழையே இல்லை; பஞ்சம்; மக்கள் வாடுகிறார்கள்; மன்னர் பொன் கொண்டு
வந்துள்ளார் என்று அறிந்தவுடன் மன்னரை வந்து பார்க்கிறார்கள்; பாண்டிய நாட்டின் எல்லா மக்களுக்கும் தான் கொண்டுவந்த பொன்னை வாரி வாரி
வழங்கிவிட்டான்; மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
திளைக்கிறார்கள்! கடும்பஞ்சத்திலிருந்து பாண்டிய நாட்டைக் காப்பாற்றி விட்டான்.
இவ்வாறு சோமசுந்தர பாண்டியன் என்னும் சிவபெருமான், தன் மகன் உக்கிரவர்ம
பாண்டியன் மூலமாக, மதுரையில் பாண்டிய நாட்டு மக்களுக்கு
பொன்னை வழங்கி, அவர்களின் பஞ்சப்பசியை தீர்த்து அருள்
வழங்கிய திருவிளையாடலே பதினைந்தாம் திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment