Friday, October 23, 2015

திருவிளையாடல்--14

திருவிளையாடல்--14
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாடல்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(உக்கிரவர்ம பாண்டியன், தன் எதிரி இந்திரனின் முடியை (கிரீடத்தை) தகர்த்து தோற்கடித்த கதை)
உக்கிரவர்ம பாண்டியன் மதுரையை ஆண்டு வருகிறான். (இவனே சிவபெருமானின் மகன்). இந்திரன் நமக்கு எதிரி என்று தந்தை சிவபெருமான் ஏற்கனவே மகன் உக்கிரவர்ம பாண்டியனுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அதற்காக மூன்று ஆயுதங்களும் மகனுக்கு கொடுத்திருக்கிறார்.
உக்கிரவர்ம பாண்டியன் அசுவமேத யாகம் செய்ய விடாதபடி, இந்திரன், மழையை ஏவிவிட்டு அதனால் கடல் பெருகி மதுரை அழியும் நிலையில் இருக்கும்போது, சிவன் கொடுத்த வேல் ஆயுதத்தை உக்கிரவர்ம பாண்டியன் எறிந்து அது பெரும் சுவராக மாறி மதுரையைக் காத்தது. அதில் இந்திரன் தோற்றுவிட்டான்.
ஆனால், இந்திரன் வேறு ஒரு வேலையைச் செய்கிறான். மதுரையைச் சுற்றி பாண்டிய நாட்டில் மழை இல்லாமல் செய்கிறான். அதை அடுத்த மற்ற நாடுகளிலும் மழை இல்லாமல் செய்கிறான். பெரும் பஞ்சம் ஏற்படுகிறது.
மற்ற நாட்டில் உள்ள மன்னர்கள் எல்லோரும் இந்திரனை பார்க்க செல்கின்றனர். ஏனென்றால், மழைக்கு கடவுள் இந்திரன்தான். அவனை வணங்கி கேட்டால், மழையைக் கொடுப்பான் என்று மற்ற மன்னர்கள் எல்லோரும் இந்திரனிடம் சென்று வணங்குகின்றனர். அவனோ, பாண்டிய மன்னன் வந்திருக்கிறானா என்று பார்க்கிறான். பாண்டிய மன்னன் அங்கு வரவில்லை. பாண்டிய நாட்டில் பஞ்சம் இருந்தாலும் அவன், தன் எதிரி இந்திரனைப் பார்க்க விருப்பம் இல்லை.
இந்திரன், மற்றவர்கள் நாட்டில் மட்டும் மழை பெய்யும்படி ஆணை இடுகிறான். மற்ற நாடுகளில் மட்டும் மழை பெய்கிறது. பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவே இல்லை;
உக்கிரவர்ம பாண்டியனுக்கு கோபம் உச்சிக்குப் போகிறது. நேராக மேகங்களைப் பிடித்து கட்டி இழுத்து வருகிறான். அவ்வாறு இழுத்துவந்த மேகங்களை சிறையில் வைத்து அடைத்து விட்டான். (மேகங்களை சிறைப்பிடித்தது இராவணன் மகன் மேகநாதன் என்று ஒரு கதை இருக்கிறதே? கொஞ்சம் குழப்பம்தான்!)
மேகத்தை சிறையிட்ட பாண்டிய மன்னன் மீது, இந்திரனுக்கு கோபம். இந்திரன், பெரிய படையுடன், பாண்டிய மன்னனுடன் போருக்கு வருகிறான். சிவபெருமான் ஏற்கனவே அவரின் மகன் உக்கிரவர்ம பாண்டியனுக்கு மூன்று ஆயுதங்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்று இந்திரனின் முடியை (கிரீடத்தை) கீழே சாய்க்கும் வல்லமை உடையது. உக்கிரவர்ம பாண்டியன், தன்னிடம் சிவன் கொடுத்த வளை என்னும் ஆயுதத்தை, இந்திரனின் மீது விட்டு, அவனின் கிரீடத்தையே கீழே தள்ளி நொறுக்கி விட்டான். (இந்திர பதவிக்கு கிரீடம் அதிக முக்கியம் போலும்; அது இல்லாமல் பதவியில் இருக்க முடியாதோ!).
உடனே, இந்திரன் தோற்று, பாண்டியனிடம் சமாதானம் செய்து கொள்ள வருகிறான். ஆனால் பாண்டியனோ, எதிரியுடன் சமாதானமா என்று மறுக்கிறான்.
ஆனால், விவசாயிகள் (அப்போது அவர்களை வேளாளர்கள் என்கின்றனர்) பாண்டிய மன்னரை சந்தித்து, விவசாயம் செய்வதற்கு இந்த மேகங்கள் இருந்தால்தான் மழை பொழியும். பாவம் இந்திரன், பிழைத்துப் போய்விடட்டும்; நீங்கள், இந்த சிறைப்பிடித்த மேகங்களை விடுவித்துவிடுங்கள். இனி உங்களிடம் இந்திரன் எந்த வம்பும் செய்ய மாட்டான்; மேகங்களுக்காக, நாங்கள்  அதற்கு பிணையாக இருக்கிறோம். எனவே மேகங்களை மட்டுமாவது விடுவியுங்கள் என்று கெஞ்சுகின்றனர்.
(எப்பவுமே, நாம் யாருக்காக சண்டை போடுகிறோமோ, அவர்கள் நம் எதிரியைப் பார்த்து இரக்கப்படுவார்கள் போலும்).
இப்படி மேகங்களை சிறைப்பிடித்து இந்திரனுக்கு பாடம் கற்பித்த விளையாடல் பதினான்காந் திருவிளையாடல் எனப்படும்.
**


No comments:

Post a Comment