Friday, October 23, 2015

திருவிளையாடல்--13

திருவிளையாடல்--13
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(எதிரி இந்திரன், வருணனை ஏவிவிட்டு மழைப் பொழிந்து கடல் நீர் மதுரையை மூழ்கடிக்க வருகிறது அதை வேல்கொண்டு சோமசுந்தரபாண்டியன் என்கிற சிவபெருமானின் மகன் உக்கிரவர்மன் தடுக்கும் கதை)
சோமசுந்தரபாண்டியன்--தடாதகைப்பிராட்டி இவர்களின் ஒரே மகன்தான் உக்கிரவர்ம பாண்டியன்; அவனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவன் மனைவி பெயர் காந்திமதி. இவனின் தகப்பனார்தான் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான். இவர் சில ஆயுதங்களை தன் மகனுக்குக் கொடுத்து, ஆபத்துக்கு உதவும் சில அறிவுரைகளையும் சொல்லி உள்ளார். எதிரிகள் யார் யார் என்றும் சொல்லி உள்ளார்;
இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, உக்கிரவர்ம பாண்டியன், மதுரையை ஆண்டுவருகிறான்; அப்போது அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு ஆசை வருகிறது;
அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய யாகம்; அதைச் செய்ய மிகுந்த பொருள் செலவும் ரிஷிகளும் தேவை; ஒரு அசுவமேத யாகம் செய்வது என்பதே ஒரு மன்னரால் முடியாத விஷயம்; அப்படி இருக்கும்போது இவன் மொத்தம் 100 அசுவமேத யாகங்கள் செய்து விடவேண்டும் என்று நினைக்கிறான்; அசுவ என்றால் குதிரை; அதை வைத்து யாகம் செய்து அதன் தலையிலோ, முதுகிலோ ஒரு வெற்றித் துணியை கட்டி நாடுநாடாக ஓடவிடுவது; யாராவது அதை அடங்கிவிட்டால் அந்த மன்னன் மீது படைஎடுத்து அவன் நாட்டையும் அங்குள்ள செல்வங்களையும் பறித்துக் கொள்வது; இப்படி எல்லா நாட்டு மன்னர்களையும் வெற்றி கொண்டாலும், அல்லது யாரும் இவனை எதிர்க்க துணியாவிட்டாலும், இவன் ஜெயித்துவிட்டதாக அறிவித்துக் கொள்வான்; இப்படியாக 100 யாகங்கள் செய்தால் "இந்திர பதவி" இவனுக்கு வந்துவிடும்; ஏற்கனவே அந்த பதவியில் உள்ள இந்திரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவான்; (நம்ம ஊர் மந்திரிசபை மாதிரியே இருக்கிறது?).
இப்படிப்பட்ட அசுவமேத யாகத்தை, இந்த உக்கிரவர்ம பாண்டியன் 96 யாகங்களை செய்து முடித்து விட்டான்; இன்னும் 4 யாகங்கள்தான் பாக்கி உள்ளது; அதையும் வெற்றியுடன் முடித்து விட்டால், இந்திர பதவி இவனுக்கே வந்துவிடும்!
இந்த தகவல், ஒரிஜினல் இந்திரனுக்கு (அப்போது இந்திர பதவியில் இருக்கும் இந்திரனுக்கு) தெரியவருகிறது; நம்மை பதவியிலிருந்து இரக்க பாண்டிய மன்னன் வருகிறானா? விடக்கூடாது; பொறாமை ஏற்படுகிறது;
ஏற்கனவே, பாண்டிய மன்னனின் தகப்பனார் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான் தன் மகனுக்கு இந்த இந்திரன் பொல்லாதவன் என்று சொல்லியுள்ளார். இந்த இந்திரன் நமக்கு பகை என்றும்; அவனையும் மற்ற எதிரிகளையும் ஒடுக்க வேண்டி, மூன்று ஆயுதங்களையும் அவர் கொடுத்திருக்கிறார்.
இப்போது, இந்திரன் கோபம் கொண்டு, வருணனைக் கூப்பிட்டு, மழையைப் பொழிந்து பாண்டிய நாட்டையை கடல் கொள்ளும்படி அழித்துவிடு என்று கட்டளை இடுகிறான்.
மழை! ஒரே ஒரு இரவுதான் மழை! பேய் மழை! கடலே பெருகிவிட்டது! கடல் சினத்துடன் மதுரைநகருக்குள் நுழைகிறது; பாண்டிய மன்னன் உக்கிரவர்மன் தவிக்கிறான்; மக்களைக் காப்பாற்ற முடியாதோ? தன் தந்தை சொல்லிக் கொடுத்தபடி, தன்னிடமுள்ள வேலை எறிகிறான். அது மதுரையைச் சுற்றி பெரிய சுவராக மாறி நிற்கிறது; கடலால் ஒன்றும் செய்ய முடியவில்லை; மதுரை காப்பாற்றப்பட்டு விட்டது. மக்களும் நிம்மதியானார்கள். பாண்டிய மன்னனை வாழ்த்தினார்கள்; இந்திரனின் செயல் எடுபடவில்லை;
இதை சிவபெருமானின் மகனான உக்கிரவர்ம பாண்டியன் நிகழ்த்தினாலும், சிவன் கொடுத்த வேலால் மட்டுமே இதைச் செய்ய முடிந்ததால், இதுவும் சிவபெருமானின் விளையாட்டுடன் சேர்ந்துவிட்டது போலும்.
சிவனின் வேல் கொண்டு கடலைத்தடுத்த இந்தச் செயலே பதிமூன்றாம் திருவிளையாடல்.
**


No comments:

Post a Comment