திருவிளையாடல்--12
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாட்டுக்களே
திருவிளையாடல்கள் எனப்படும்.
(சோமசுந்தர பாண்டியன், தன் மகன் உக்கிரவர்மனுக்கு,
அவன் சிறுவனாக இருக்கும்போதே, மூன்று
ஆயுதங்களை கொடுத்து ஆசீர்வதிக்கும் செயல்)
சோமசுந்தர பாண்டியனுக்கும் அவர் மனைவி ராணி
தடாதகைப்பிராட்டிக்கும் பிறந்த மகன்தான் இந்த உக்கிரவர்ம பாண்டியன்; சிறு வயதில் எல்லாக்
கலைகளையும் கற்றுக் கொள்கிறான். மன்னன் ஆவதற்குறிய தகுதிகள் ஏற்படுகிறது. அவனின் பெற்றோர், இளம்
வயதிலேயே அவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அந்த பெண்ணின் பெயர் "காந்திமதி". (அதாவது சிவபெருமானின்
மருமகளின் பெயர் காந்திமதி).
மகனுக்கு எல்லாத் தகுதியும் வந்துவிட்டதாக அவனின்
தகப்பனாரான சோமசுந்தரபாண்டியன் என்கிற சிவபெருமான் நினைத்துக் கொள்கிறார்; ஆனாலும், தந்தை என்ற முறையில் சில இரகசியங்களை அவனுக்குச் சொல்ல வேண்டும் என்று
நினைக்கிறார்.
ஒருநாள் மகனை அழைக்கிறார்; அவனிடம் கூறுகிறார்;
"மகனே கேள்! இந்திரன் உனக்கு பெரிய எதிரி; கடலும் உனக்கு எதிரி;
மேரு மலை உன்னைப் பார்த்து தருக்கு கொண்டு ஆணவத்துடன் நிமிர்ந்து
நிற்கும்; எனவே இந்த எதிரிகளை அடக்கி ஆள உனக்கு நான் மூன்று
ஆயுதங்களை கொடுக்கிறேன்; இந்திரனின் முடியை பிடிக்க இந்த
வளையை வைத்துக் கொள், இந்திரனின் முடியையே சிதைத்து விடலாம்;
இந்த வேல் படையை வைத்து கடலுக்கு அனுப்பு அது பயந்துவிடும்; இந்த செண்டை வைத்து அந்த மேரு மலையை அடித்தாய் என்றால் அது
அடங்கி ஒடுங்கிவிடும்; இந்த மூன்று ஆயுதங்களுமே உனக்கு
தேவைப்படுபவைகள்தான்; இதை உனக்கு நான் அளித்து உன்னை ஆசீர்வதிக்கிறேன்"
என்று மகனுக்கு அந்த ஆயுதங்களை கொடுக்கிறார்;
இவ்வாறு மகனுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஆசி அளிக்கும் நிகழ்வே இந்தப் பன்னிரண்டாம் திருவிளையாடல் ஆகும்.
**
No comments:
Post a Comment