Tuesday, January 3, 2017

சுமேரு

சுமேரு
வடக்கில் துருவ நட்சத்திரத்தை நோக்கி நிற்கும் மலையே மேரு; மேரு மலையின் வால்பக்கத்தை குமேரு என்பர்; இந்த வால்பக்கம் தெற்கு நோக்கி இருக்கும்; அதை வடவாமுகம் என்பர்;
மேரு, பூமிக்கு நாராசம் போல (ஒரு இரும்புத் துண்டுபோல), தெற்கில் இருந்து வடக்கே உருவி ஒடி நிற்கும்;
ஆரியர்கள் பூகோளத்தை ஊர்த்துவ கபாலம், அதக்கபாலம் என இரு கூறாக குறிப்பிடுவர்; ஊர்த்துகபாலம் என்பதை நிலம் என்றும், அதகபாலத்தை நீர் என்றும் கூறுவர்;
இந்த மேருவில் தான் எல்லாத் தேவகணங்களும் வசிக்கும் தலமாகக் கூறுவர்;
சுமேரு என்பது இளாவிருது நிலத்துக்கு நடுவில் உள்ளபகுதி; அங்கு மனிதர்கள் செல்லக்கூடாது என்பர்;
**




சுந்தோபசுந்தர்கள்

இரணிய கசிபன் வம்சத்தில் பிறந்தவர்கள் சுந்தோபர், சுந்தர் என இருவர்; இவர்கள் இருவரும் நிசுந்தன் புத்திரர்கள்; இவர்கள் இருவரும் பெரும் தவம் செய்கிறார்கள்; பிரம்மாவை நினைத்து தவம் செய்கிறார்கள்; பிரம்மா இவர்களின் முன்னர் தோன்றுகிறார்; "நாங்கள் இருவரும், நாங்கள் நினைத்த உடலை எடுக்க வேண்டும் என்றும் நினைத்த இடத்துக்கு உடனே போக வேண்டும் என்றும் யாரும் எங்களை கொன்று விடக் கூடாது" எனக் கேட்கிறார்கள்; பிரம்மாவும் அப்படியே கொடுக்கிறார்: அதன்பின்னர் சகோதரர்கள் இருவரும் பல மாயாஜாலங்கள் செய்கிறார்கள்; மக்களை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்;
இவர்கள் இருவரின் கொடுமைகளை ஒடுக்க சிவன் நினைக்கிறார்; விசுவகர்மாவை அழைத்து, ஒரு மிகஅழகான பெண்ணை உருவாக்கச் சொல்கிறார்; அவளை அந்த இருவர்கள் இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்; அவளைப் பார்த்தவுடன், அந்த சகோதரர்கள் இருவரும் ஆசை கொள்கிறார்கள்;
ஆனால், அவளோ, "உங்களில் யார் பெரிய வீரனோ, அவரையே நான் திருமணம் செய்வேன்" என்று கூறி விடுகிறாள்;
அவளை அடைவதில், சகோதரர்கள் இருவருக்கும் போட்டி உண்டாகிறது; இருவரும் மல்யுத்தம் நடத்துகின்றனர்; வேறு ஒருவரால் மட்டுமே இருவரும் இறக்க மாட்டார்கள் என்று வரம் வாங்கி வந்தவர்கள்; ஆனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டி இறக்கிறார்கள்; வரம் பெறும்போது சரியாக கேட்டுக் கொள்ளவில்லை;
**




சுந்தரமூர்த்திநாயனார்

கைலாசத்தில் சிவபெருமானின் அடியவர்களில் ஒருவர் ஆலாலசுந்தரர்; அங்கு உமாதேவியர்களுக்கு துணையாக சேடிப் பெண்கள் இருந்தார்கள்; அந்தப் பெண்களில் இருவர் மீது, இந்த ஆலாலசுந்தரர் ஆசை கொண்டுள்ளார்; இது தெரிந்த சிவபெருமான், "நீ, பூலோகத்தில் போய் பிறப்பாயாக" என்று கட்டளை இடுகிறார்; இதைக்கேட்ட ஆலாலசசுந்தரர், கைலாசத்தை விட்டு, சிவபெருமானின் அடியை விட்டுப் போகிறோமே என்று அழுகிறார்; இதைக் கண்ட சிவபெருமான், "உன்னை, நான் பூலோகத்தில் வந்து ஆட்கொள்வேன், கவலைப்படாதே" என்று ஆறுதல் சொல்கிறார்;
ஆலாலசுந்தரர், பூலோகத்த்தில், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் பிறக்கிறார்; அங்குள்ள சடையார்-இசைஞானியர் தம்பதியருக்கு மகனாகப் பிறக்கிறார்; அதேபோல, கைலாசத்தில் இபரவர் சந்தித்த சேடிப் பெண்கள் இருவரும், பரவையார், சங்கிலியார் என்ற பெயருடன் பூலோகத்தில் பிறக்கிறார்கள்; பரவையார் திருவாரூரிலும், சங்கிலியார் திருவொற்றியூரிலும் பிறக்கிறார்கள்;
ஆலாலசுந்தரத்துக்கு இந்தப் பூவுகில் சுந்தரமூர்த்தி எனப் பெயர்; வளர்ந்து மணப் பருவம் அடைகிறார்; அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அப்போது அங்கு ஒரு கிழவன் வேடத்தில் சிவபெருமான் அங்கு வருகிறார்; அங்கு வந்து, ஒரு ஓலையைக் கொடுக்கிறார்; இந்த மணமகன் எனது அடிமை; இதோ அடிமைசாசனம் என்று அந்த ஓலையை அங்கு உள்ளவர்களிடம் காண்பிக்கிறார்; என் அடிமை, என்னைக் கேட்காமல் திருமணம் செய்யக் கூடாது என்று தடுக்கிறார்; பின்னர், அவரை தனியே அழைத்து தானே சிவபெருமான் என்று அவருக்கு தன்னைக் காட்டி, அருள் செய்கிறார்; அதுமுதல் சிவனைப் பாடி சிவதலங்களுக்கு சென்று வருகிறார்;
அப்படிப் பாடிக் கொண்டு சிவதலங்களுக்குச் செல்லும்போது, ஒருமுறை திருவாரூர் வருகிறார்; தனக்கு கைலாயத்தில் பெண்கள் மீது ஆசை வந்த செயலை நினைத்து வருந்துகிறார்; ஆனாலும் முன் ஜென்ம வாசனை விடவில்லை; திருவாரூரில் உள்ள பரவையாரைப் பார்க்க நேர்கிறது; அந்த பெண்மீது காதல் கொள்கிறார்; அதற்கு சிவனையே தூது அனுப்புகிறார்; அதில் வெற்றி கொண்டு, பரவையாருடன் சிலகாலம் வாழ்கிறார்;
பின்னர், திருவொற்றியூருக்கு வருகிறார்; அங்கு வசிக்கும் சங்கிலியார் என்ற பெண்ணையும் பார்க்கிறார்; அவருடன் வசிக்க ஆரம்பிக்கிறார்; அவரிடம், "நான் வேறு பெண்களைப் பார்க்க மாட்டேன்" என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்; ஆனாலும் அவர் அதில் நிலைத்து நிற்கவில்லை; பொய் சத்தியத்தின் பலனாக இவருக்கு கண்பார்வை போய்விடுகிறது; அப்போது சிவபெருமானை நினைத்து பதிகம் பாடி, மீண்டும் பார்வையைப் பெறுகிறார்;  அப்போது, "உன் வினையை நீ அனுபவித்தே தீர்க்க வேண்டும்" என்று சிவன் அவரிடம் கூறுகிறார்; சிவனிடம் நட்புடன் இருந்தும், தவறுக்கு தண்டனை கொடுக்கத் தவறவில்லை சிவன்;
இப்படி இருக்கும்போது, சுந்தரமூர்த்தியின் பெருமைகளைத் தெரிந்த சேர மன்னர் சேரமான் பெருமான் நாயனார் என்பவர் அவரை அழைத்து தன் அரண்மனையில் வைத்து விருந்து அளித்து அவருடன் நட்பாய் இருந்தார்;
சுந்தரமூர்த்திக்கு அப்போது 18 வயதுதான் ஆகிறது; அப்போது திருவஞ்சைக்களத்தில் சிவனை வணங்குவதற்காக கோபுர வாசலை அடைகிறார்; அப்போது கைலாசத்திலிருந்து சிவகணங்களுடன் ஒரு வெள்ளை யானையானது அவர் முன்னே வந்து நிற்கிறது; அது கைலாசத்தில் இருந்துதான் வந்துள்ளது என்பதை அறிந்த சுந்தரமூர்த்தி, அந்த யானைமீது ஏறி அமர்ந்து கொள்கிறார்; அது அவரை ஏற்றிக் கொண்டு விண்ணில் பறக்கிறது;
இதைப் பார்த்த சேரமான் பெருமானும் தன் குதிரையை வரவழைத்து அதன் காதில் ஸ்ரீபஞ்சாச்சரத்தை ஓதுகிறார்; அந்தக் குதிரையும் இவரைச் சுமந்து கொண்டு விண்ணில் பறக்கிறது; குதிரை, சுந்தரமூர்த்தி செல்லும் யானையைக் கடந்து வந்து, அதைச் சுற்றி வந்து முன்னே சென்றது; இப்படியாக இருவரும் கைலாசம் சென்று சிவபதம் அடைகிறார்கள்;
சுந்தரமூர்த்தியின் பெருமைகள் பல;
ஒரு முதலை, ஒரு சிறுவனை விழுங்கி விட்டது; அதை அழைத்த சுந்தரமூர்த்தி, முதலையிடம், அந்தச் சிறுவனை வெளியே உமிழச் செய்து மீட்கிறார்:
தலைக்கு வைத்துப் படுத்திருந்த செங்கற்கள் விடியற்காலையில் பொன்னாக மாறிவிட்டது; அதை மணிமுத்தா நதியில் விடுகிறார்; பின்னர் அதை திருவாரூர் கமலாலயக் குளத்தில் தேடி எடுக்கிறார்: அப்போது திருவாரூரில் பரவையருடன் இருக்கிறார்; அவர், இவரின் செயலை கேலி செய்கிறார்; "ஆற்றில் விட்ட பொன்னை, இங்கு குளத்தில் வந்து தேடுகிறீர்களே" என்று கேலி செய்கிறார்;
**


சுக்ரீவன்

விஷ்ணு, இராவண சங்காரத்தின் பொருட்டு, விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு இராமனாகப் பிறக்கப் புறப்படுகிறார்; அப்போது, அவர் இங்கு வருவதற்கு முன் ஏற்பாடாக, சில தேவர்களை இந்த மண்ணுலகில் முன்பே பிறப்பதற்கு அனுப்பி வைக்கிறார்; அப்போது ஒரு தேவர், சூரியனின் அம்சமாகப் பிறக்கிறார்; அவரே சுக்ரீவன் என்பவர்;
சுக்ரீவன் பம்பைக் கரையில் உள்ள இடத்தில் பிறக்கிறார்; இந்த சுக்ரீவனை துணையாக வைத்துக் கொள்ளும்படி, இராமனுக்கு சொல்கிறான் கவந்தன் என்பவன்; சுக்ரீவனைச் சந்திக்கிறார் இராமன்; இராமனின் வில் வித்தையைச் சோதிக்க நினைக்கிறார் சுக்ரீவன்; அப்போது, ஏழு மாமரங்கள் வேறு வேறு இடத்தில் இருப்பதை, தனது ஒரே அம்பால் துளைத்து விடுகிறார்; சுக்ரீவன், இராமனின் வில்லாண்மையை நம்புகிறார்;
இருக்ஷவிரஜன் என்ற மன்னருக்கு இரண்டு புத்திரர்கள்; ஒருவர் வாலி; மற்றவர் சுக்ரீவன்; இந்த சுக்ரீவனின் அண்ணனே வாலி; சுக்ரீவனின் மனைவி பெயர் உருமை; சுக்ரீவனின் நாட்டையும், அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்ட வாலி, தம்பி சுக்ரீவனை விரட்டி விடுகிறான்; அப்போதுதான், சுக்ரீவன் பம்பை நதிக்கரையில் வசிக்கிறார்;
இராமன் மீது நம்பிக்கை வந்தவுடன், சுக்ரீவன், தன் கஷ்டங்களை கூறுகிறார்; இராமர், வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்று, அவன் அபகரித்த நாட்டை, சுக்ரீவனுக்குக் கொடுக்கிறார்;
மன்னர் பதவி திரும்பக் கிடைத்தவுடன், தன் நாட்டிலேயே சுகபோகமாக வாழ ஆரம்பிக்கிறார்; இராமனைக் கண்டுகொள்ளவில்லை; நன்றி மறக்கிறார்; இராமர், தன் தூதுவனை அனுப்பி, அவர் நாட்டின் மீது படையெடுக்கப் போவதாக அறிவிக்கிறார்; அதனால் பயந்து கொண்டு, தானும் தன் படைகளும் சேர்ந்து வந்து இராமனைச் சரண் அடைகிறார் சுக்ரீவன்; இராமருக்கு உதவுவதாக வாக்கு அளிக்கிறார்;
சுக்ரீவனின் படை இலங்காபுரிக்குச் செல்கிறது; அங்கு, ஒரு பெரிய மலையை பெயர்த்து எடுத்துவந்த சுக்ரீவன், அந்த மலையை இராவணனின் மார்பின் மீது மோதுகிறார்; இராவணனோ, கோபம் கொண்டு, தன் வேலை எடுத்து சுக்ரீவன் மீது எறிகிறார்; அந்த வேலை, அனுமன் பிடித்து, தன் முழங்காலில் வைத்து ஒடித்து வீசுகிறார்; இராவணனும் ஒரு மலையைப் பெயர்த்து, சுக்ரீவன் மீது மோத, சுக்ரீவன் விழுந்து மூர்ச்சை ஆகிறார்; அப்போது இராவணன், சுக்ரீவனை தன் கையில் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு போக, மயக்கம் தெளிந்த சுக்ரீவன், இராவணனின் இடுப்பை தன் நகங்களால் கிழித்து, பற்களால் கடித்து குதறிவிடுகிறார்; அப்போது கிடைத்த இடைவெளியில் சுக்ரீவன், இராவணனின் பிடியில் இருந்து தப்பிக்கிறார்;
**



சுக்கிரன்

சுக்கிரன்:
சுக்கிரனின் தாய் தேவலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது, விஷ்ணுவால் கொல்லப்பட்டாள்;
இந்த சுக்கிரன், மகாபலி சக்கரவர்த்தியிடம் மந்திரியாக இருந்தார்; அப்போது, விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து வந்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி அளவு நிலம் வேண்டும் என்று கேட்கிறார்; அப்போது, அங்கு மந்திரியாக இருந்த சுக்கிரன், "இந்த வேடத்தில் வந்திருப்பது விஷ்ணுவாகத்தான் இருக்கும்; எனவே இந்த வாமனனை நம்பாதே மன்னா" என்று மகாபலியிடம் தடுக்கிறார்; அதனால் கோபம் கொண்ட விஷ்ணு, சுக்கிரனின் ஒரு கண்ணைக் கெடுத்து விடுகிறார்;
சுக்கிரன், இறந்தபோன உயிரையே உயிர் கொடுத்து எழுப்பும் வல்லமை கொண்டவர்; இவர் அசுரர்களுக்கு குருவாக இருக்கிறார்; இந்த சுக்கிரன், பிரமமானச புத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவரின் பேரன்;
**


சிருஷ்டி கால ஆதிபத்தியர்கள்

சிருஷ்டி காலத்தின் ஆதிபத்தியர்கள்:
பூமிக்கு - பிருது சக்கரவத்தியும்,
ஓஷதிகள், யாகம், விரதம், நட்சத்திரங்களுக்கு - சந்திரனும்,
ஜலத்துக்கு - வருணனும்,
தனத்துக்கும், யக்ஷர்களுக்கும் - குபேரனும்,
துவாதசாதித்தியர்களுக்கு - விஷ்ணுவும்,
வசுக்களுக்கு - அக்கினியும்,
பிரஜாபதிகளுக்கு - தக்ஷனும்,
தேவர்களுக்கு - இந்திரனும்,
தைத்தியர், தானவர்களுக்கு - பிரஹலாதனும்,
பிதிர்களுக்கு - யமனும்,
பசு பூதாதிகளுக்கு - சிவனும்,
மலைகளுக்கு - இமயமும்,
நதிகளுக்கு - சமுத்திரமும்,
கந்தருவ வித்தியாதர கிந்நர கிம்புருஷர்களுக்கு - சித்தர ரதனும்,
சர்ப்பங்களுக்கு - வாசுகியும்,
திக்கஜங்களுக்கு - ஐராவதமும்,
பக்ஷிகளுக்கு - கருடனும்,
குதிரைகளுக்கு - உச்சைச்சிரவமும்,
மிருகங்களுக்கு - சிங்கமும்,
சிருஷ்டிகாலத்தில் ஆதிபத்தியம் பெற்றவர்கள்;
 **

Thursday, December 8, 2016

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து...

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து
கவினுறு கடிதடம் முத்துத்
தாமமும் சாந்தும் அணிகளும் சுமந்த
தனபரம் தண்விரை நாநத்
தாமதி சுகந்த அளகமென்று இன்ன
ஆகிய தாங்கும் அணி இழையார்
ஏமரு வேனில் தாபம் அது அகற்றி
இளைஞருக்கு இன்பம் ஊட்டுவரால்!
 (இருது சங்கார காவியம்) பாடல்-4

காஞ்சி = மேகலை
கடிதடம் = அரை
தாமம் = மாலை
அணி = ஆபரணம்
விரை = வாசனைப்பொடி
நாநம் = ஸ்நானம், நீராடல்
ஏமரு = கலக்கத்தை ஏற்படுத்துகின்ற
தாபம் = வெப்பம்



விரைதவழ் உற்று விழைதகு மாடத்து...

விரைதவழ் உற்று விழைதகு மாடத்து
உம்பரும் இன்னனார் முகத்து
விரைதரு சுவாசத்து அசைவுறு மதுவும்
மேவும் இவ் வேனிலம் போது
நிரை தரு யாமத்தின் பினை மூட்ட
நேர் வரு வீணை இன்னிசையும்
புரை தவிர் காதல் காளையர்க்கு எல்லாம்
போகமும் நுகர்ச்சியும் தருமால்!
(இருது சங்கார காவியம்) பாடல்-3

விரை = வாசனை
விழைதகு = விரும்பத்தக்க
உம்பர் = மேல் நிலம்
மாடத்து உம்பர் = நிலா முற்றம்
நேர்வரு = ஏற்றதாகிய


மண்டிய நீல படலம் அது அகற்றி...

மண்டிய நீல படலம் அது அகற்றி
மதிதிகழ் நிசிகளும் தாரை
கொண்டியல் நீராவி மண்டப வகையும்
குளிர்மணி விதங்களும் சாந்தின்
அண்டிய தேய்வை செறிபனிக் குழம்பும்
அடுத்த இவ் வேனிலங் காலை
வண்டிவர் கோதாய் மாந்தருக்கு இதமாய்
மனமகிழ் பூப்பவாய்ந்தனவே!
 (இருது சங்கார காவியம்) பாடல்-2

நீலபடலம் = கரிய முகிற் கூட்டம்
நிசி = இரவு
தாரை கொண்டு இயல் = நீர்த்தாரையைச் சொரியும் குளியல் மண்டபம்
தேய்வை = அரைத்த சந்தனம்
வண்டிவர்  கோதாய் = வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணே!



செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்...

செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்
தெண்ணிலா மனமகிழ் விளைப்பப்
பொங்கதி தாபம் போக்கிய பல்காற்
பூம்புனலாடலும் பொலியத்
தங்கு திவாவின் கடை இனிதாகத்
தணிவுறக் காதலின் வேகஞ்
சங்கதிர் முன்கைத் தையனல்லாய் காண்
தழல்முது வேனில் சார்ந்ததுவே.
(இருது சங்கார காவியம்) பாடல்-1

செங்கதிர்ச்செல்வன் = சூரியன்
தெறுகரம்  = சுடுகின்ற கிரணம்
போக்கிய  = போக்கும்படி
தங்கு = நிலைத்த, நீண்ட
திவா = பகல்
கடை = இறுதி
தழல் = சுடுகின்ற
சங்கு அதிர் = சங்கு வளையல் ஒலிக்கின்ற
தையல் நல்லாய் = பெண்ணே


Thursday, November 17, 2016

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(சிவபுராணம்)

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
(உண்மையாகவே உன் பொன்னான திருவடிகளைக் கண்டு இன்று வீடுபேற்றை அடைந்தேன்)

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
(நான் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, என் உள்ளத்தின் உள்ளே ஓம் என்ற ஓங்காரமாய் நின்ற)

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
(மெய் என்னும் உண்மைப் பொருளே! விமலா (மாசற்றவனே); விடை என்னும் எருதின் மீது வந்தவனே! வேதங்களின்)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(வேதங்களின் ஐயா என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று நுண்ணிய பொருளாய் நின்றவனே!)
**



சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(சிவபுராணம்)

சிவன் அவன் என் சிந்தை உள் நின்ற அதனால்
(சிவ மூர்த்தியாகிய அவன் என் சிந்தையின் உள்ளே நின்கிறான்; அதனால்)

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
(அவனின் அருளால், அவனின் திருவடிகளை (பாதங்களை) வணங்கி)

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
(என் உள்ளம் மகிழ, சிவபுராணத்தை)

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(என் முந்தைய வினை முழுவதும் ஓய்ந்து போகும்படி சொல்லுவேன் நான்!)


Tuesday, November 15, 2016

ஈசனடி போற்றி!

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(சிவபுராணம்)

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
(ஈசனான என் தலைவன் அடி போற்றி! எனது தந்தையின் திருவடி போற்றி!)

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
(ஒளியுடைய தேசன் அடி போற்றி! சிவனின் சிவந்த திருவடி போற்றி!)

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
எங்களின் நேசத்துக்கு உரியவனாக நின்ற் மாசற்றவன் திருவடி போற்றி!)

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
(இந்த மாயமான பிறப்புகளை அறுக்கும் எங்கள் மன்னனான உன் திருவடி போற்றி!)

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் வாழும் நம் தேவன் அடி போற்றி!)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(தீராத இன்பம் அருளும் மலை போன்ற எம் இறைவனே உன்னை துதிக்கிறேன்!)
**



பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

வேகம் கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(சிவபுராணம்)

வேகம் கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க!
(என் மனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி (கெடுத்து) என்னை ஆண்டு கொண்ட என் தலைவன் திருவடி வெற்றி பெறுக!)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
(பிறவி என்னும் இந்த உயிர் மறுபடியும் மறுபடியும் பிறந்து பல பிறவிகள் தொடராமல் அறுத்து, மாற்றுகின்ற, என் இறைவனான சிவபெருமானின் (பிஞ்ஞகன்) வீர கண்டை அணிந்த உன் திருவடிகள் வெற்றி பெறுக!)

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
(உன் மீது அன்பில்லாத மற்றவர்களுக்கு எட்டாதவனான (சேயோன்) என் இறைவனான உன் பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக!)

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
(உன்னை கைகூப்பி வணங்குபவர்களுக்கு, அவர்களின் உள்ளத்தே நினைத்து நினைத்து மகிழ்கின்ற என் இறைவனின் திருவடிகள் (கழல்கள்) வெற்றி பெறுக!)

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(தலைமேல் கைகூப்பி வணங்குபவர்களை உயர்த்துகின்ற, சிறப்புடைய (சீரோன்) உன் திருவடி வெற்றி பெறுக!)
**