Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-28

கந்தரலங்காரம்-28

வேலே விளங்கும் கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பதல்லான் மனவாக்குச் செய
லாலே அடைதற் கரியதாய அரு வுருவாகி யொன்று
போலே யிருக்கும் பொருளை யெவ்வாறு புகல்வதுவே.

(வேலாகவே விளங்கும் கையை உடையவன் செய்ய தாளினில் (காலடியில்) விழுந்து வணங்கி அவன் அன்பைப் பெறுவதே இங்கு காண்பதற்குறிய வழியாகும்; அல்லாமல், மனம், வாக்கு, செயல், இவைகளால் அடைவதற்கு அரியதாகிய, அருவமும், உருவமும் ஒன்று போலவே இருக்கும் பொருளை (பரமத்தை) வேறு எவ்வாறு புகல்வது!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 28

வேலேவிளங்குகை யான்செய்ய தாளினில்வீழ்ந் திறைஞ்சி
மாலேகொள விங்ஙன்காண்பதல்லான் மனவாக்குச் செய
லாலேயடைதற் கரியதாயரு வுருவாகியொன்று
போலேயிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே.
கந்தரலங்காரம்-28


கந்தரலங்காரம்-27

கந்தரலங்காரம்-27


ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவும் கையிற் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.

(எமனின் ஓலையையும், தூதரையும் கண்டு திண்டாடும் எனது திண்டாட்டம் ஒழிந்தது; காலையிலும் மாலையிலும் என் கண் முன் நிற்கும் கந்தவேள், இடுப்பில் சேலையும், அதில் கட்டிய சீரா என்னும் கூரிய வாளும், கையில் சிவந்த செச்சை என்னும் வெட்சிப்பூமாலை, சேவல் கொடி, தோகை என்னும் மயில்வாகனம், வாகை என்னும் வெற்றிமாலைகள், இவைகளுடன் எனக்கு முருகன் காட்சி தருகிறான்;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 27.

ஓலையுந்தூதருங் கண்டு திண்டாட லொழித்தெனக்குக்
காலையுமாலையு முன்னிற்குமே கந்தவேண்மருங்கிற்
சேலையுங் கட்டியசீராவுங்கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ்சே வற்பதாகையுந் தோகையும்வாகையுமே.

(கந்தரலங்காரம்-27)

கந்தரலங்காரம்-26

கந்தரலங்காரம்-26

நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே.

(நீலநிறச் சிகண்டியில் (மயிலில்) ஏறும் பிரானே! எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் (அழகிய குறத்தியான வள்ளியுடன்) வருவான் குருநாதன்; அவன் சொன்ன சீலத்தை (மெஞ்ஞானத்தை) மெல்ல அறிந்து தெளிந்து, அறியக்கூடியவர்கள் சிவயோகிகளே! காலத்தை வென்று (காலம் கடந்தும்) இருப்பார்கள், ஆனால் வெறும் கர்மிகள் காலத்திலேயே இறந்து போவார்கள்;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 26.

நீலச்சிகண்டியிலேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக்குறத்தியுடன் வருவான் குருநாதன்சொன்ன
சீலத்தைமெள்ளத் தெளிந்தறிவார் சிவயோகிகளே
காலத்தைவென் றிப்பார்மரிப் பார்வெறுங்கர்மிகளே.

(கந்தரலங்காரம்-26)

கந்தரலங்காரம்-25

கந்தரலங்காரம்-25

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழ விடுவேன் செந்தில்வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்று என் கைக்கு எட்டவே.

(உன் தண்டாயுதமும், திரிசூலமும் கீழே விழ உன்னைத் தாக்கி, திண்டாட, உன்னை வெட்டி விழவிடுவேன் நான்; என் செந்தில்வேலனுக்குத் தொண்டாகிய (அடிமையாகிய) எனது ஞானச் சுடர் வாள் ஆயுதத்தால்; பார்க்கலாமாடா அந்தகா! (எமனே!) வந்து பாரடா!! சற்று, என் கைக்கு அருகில்!!!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 25.

தண்டாயுதமுந்திரி சூலமும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாடவெட்டி விழவிடுவேன் செந்தில்வேலனுக்குத்
தொண்டாகிய வென்னவிரோதஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடாவந் தகாவந்துபார்சற் றென்கைக்கெட்டவே.
(கந்தரலங்காரம்-25)


கந்தரலங்காரம்-24

கந்தரலங்காரம்-24

கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச்  சொன்ன
குன்னங்குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே.

(கின்னம் என்னும் துன்பத்தைப் பற்றி அடியேனுக்கு காதில், நீ, அன்று கேட்கச் சொன்ன குன்னம் குறிச்சி (இரகசியம்) என்னை தெளிவாக்கி விட்டது; கோடு, குழல் போன்ற சின்னங்கள் ஒலிக்க, குறிஞ்சி நில கிழவரின் சிறுமியை (வள்ளியை) குறிச்சி என்ற இடத்தில் கல்யாணம் செய்ய முயன்றவனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 24.

கின்னங்குறித் தடியேன்செவி நீயன்றுகேட்கச் சொன்ன
குன்னங்குறிச்சி வெளியாக்கிவிட்டது கோடுகுழல்
சின்னங்குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங்குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே.
(கந்தரலங்காரம்-24)


கந்தரலங்காரம்-23

கந்தரலங்காரம்-23

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கிடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

(தெய்வீகமான திருமலை செங்கோட்டில் (திருசெங்கோட்டில்) வாழும் செழுமையான சுடரே! கூர்மை வைத்த வேற்படை கொண்ட வானவனே! மறக்க மாட்டேன் உன்னை நான்; ஐந்து புலன்கள் இருப்பதற்காக, இரண்டு கால்கள் உண்டாக்கி, அதில் இரண்டு கைகள் வைத்து, கட்டிய வீடு என்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே வந்து காத்தருள்வாய்!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-23.

தெய்வத்திருமலைச் செங்கோட்டில்வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்தவேற் படைவானவனே மறவேனுனைநா
னைவர்க்கிடம்பெறக் காலிரண்டோட்டிய திலிரண்டு
கைவைத்தவீடு குலையுமுன்னேவந்து காத்தருளே.

(கந்தரலங்காரம்-23)

கந்தரலங்காரம்-22

கந்தரலங்காரம்-22

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

(மொய்க்கும் மாலை சூடிய குழல் என்னும் கூந்தலை உடைய வள்ளியை மணந்தவன், முத்தமிழால், தன்னைத் திட்டியவரையும் அங்கு வாழவைப்பவன், வெய்ய வாரணன் என்னும் யானையைப் போன்ற இருபது கைகளும், பத்து தலைகளையும் உடையவனை (இராவணனை) வெட்டி வீழ்த்தியவனின் (திருமாலின் அவதாரமான இராமனின்) மருமகனான, உமையாள் பெற்ற இலஞ்சியமே! (இலட்சணமே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-22.

மொய்தா ரணிகுழல் வள்ளியைவேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதானிருபது டையான் றலைபத்துங் கத்தரிக்க
வெய்தான்மருக னுமையாள் பயந்தவிலஞ்சியமே.

 (கந்தரலங்காரம்-22).

கந்தரலங்காரம்-21


கந்தரலங்காரம்-21

மரண ப்ரமாத நமக்கில்லையாம் என்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலும் உண்டே கிங்கிணி முகுள
சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரண க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே.

(மரணம் என்னும் அபாயம் நமக்கில்லையாம்; என்றும் (எப்போதும்) வாய்த்த துணையாக கிரண ஒளியை உடைய கலாபி என்னும் மயிலும் வேலும் இருக்கின்றன; கிங்கிணி சலங்கை ஒலிக்கின்ற சரண பிரதாபனே, சசிதேவியின் (இந்திரன் மனைவியின்) மாங்கல்யத்தை தந்து (காப்பாற்றி) ரட்சித்தவனே! பரண கிருபை என்னும் கருணைக்கு உரியவனே, ஞானம் என்னும் அறிவு கரங்கள் கொண்ட வடிவானவனே, சூரியனைப் போன்ற பாஸ்கரனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-21

மரணப்ரமாத நமக்கில்லையாமென் றும்வாய்த்்ததுணை
கிரணக்கலாபியும் வேலுமுண்டே கிங்கிணிமுகுள
சரணப்ரதாப சசிதேவிமங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ருபாகர ஞானாகரசுரபாஸ்கரனே.
(கந்தரலங்காரம்-21)


Saturday, February 27, 2016

கந்தரலங்காரம்-20

கந்தரலங்காரம்-20

கோழிக் கொடியன் அடி பணியாமற் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே.

(கோழியை (சேவலை) கொடியாகக் கொண்டவனை அடிபணியாமல், இந்தக் குவலயத்தில் (உலகில்) வாழக் கருதும் மதி இல்லாதவரே, கேளுங்கள், வல்வினை என்னும் நோயால், ஊழ் வலியால் கிடைத்த உங்களின் பெரும் செல்வத்தை உண்ணவிடாது; உங்களின் செல்வத்தை ஆழமாகப் புதைத்து வைத்தாலும், அது உங்களின் காலடி போனபின் (உயிர்போனபின்) உங்களுக்கு வருமோ!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-20

கோழிக்கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருது மதியிலிகாளுங் கள்வல்வினைநோ
யூழிற்பெருவலியுண்ண வொட்டாதுங்களத் தமெல்லா
மாழப்புதைத்து வைத்தால்வருமோ நும்மடிப்பிறகே.
(கந்தரலங்காரம்-20)


கந்தரலங்காரம்-19

கந்தரலங்காரம்-19

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்ட
என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே.

(தங்கம் என்னும் சொர்ண கிரௌஞ்ச மலையையே ஊடுருவித் துளைத்த வைரவேல் கொண்ட மன்னனே! கடம்ப மரத்தின் மலர்மலையை அணிந்த மார்பை உடையவனே! மௌனத்தை உற்றுநோக்கி, உன்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கி (ஒடுங்கி) நிர்க்குணம் கொண்டேன்; என்னையே மறந்து இருந்தேன்; இந்த என் உடம்பு இறந்தே விட்டதே;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-19.

சொன்ன கிரௌஞ்ச கிரியூடுருவத் துளைத்தவைவேல்
மன்னகடம்பின் மலர்மாலைமார்ப மௌனத்தையுற்று
நின்னையுணர்ந் துணர்ந்தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னைமறந் திருந்தேனிறந்தேவிட்ட திவ்வுடம்பே.
கந்தரலங்காரம்-19


கந்தரலங்காரம்-18

கந்தரலங்காரம்-18

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்கென்று
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் உங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவாத உடம்பின் வெறுநிழல் போல்
கையிற் பொருளும் உதவாது காண் உன் கடைவழிக்கே.

(வைரக் கதிர் வீசும் வடிவேலோனை வாழ்த்தி, வறியவர்களான ஏழைகளுக்கு, ஒரு நொய் அரிசியில் ஒரு சிறு பிளவு அரிசியையாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு, இங்கு, வெய்யிலில் ஒதுங்க உங்களின் உடம்பின் நிழல் உதவாது; அதுபோல, உங்கள் கையில் பொருள் இருந்தாலும், அது கடைசி காலத்துக்கு உங்களுக்கு உதவாது போய்விடும், காண்பீராக!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-18

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்கென்று
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கணுங் கட்கிங்ஙன்
வெய்யிற்கொதுங்க வுதவாவுடம்பின் வெறுநிழல்போற்
கையிற்பொருளு முதவாதுகாணுங் கடைவழிக்கே.
கந்தரலங்காரம்-18


கந்தரலங்காரம்-17

கந்தரலங்காரம்-17

வேதஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்த அரணாக அல்லும் பகலும் இல்லாச்
சூதான தற்ற வெளிக்கே ஒழித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாதொரு பூதர்க்குமே.

(வேதமும், ஆகமமும், புகழ்கின்ற அழகிய (சித்ர) வேலாயுதன், வெட்சி மலர் பூத்த தண்டை என்னும் கால் அணிகலனை அணிந்த, அடி முடி தெரியாத அரணாகக் கொண்டு, அல்லும் பகலும் இல்லாத, சூது அற்ற பிரபஞ்ச வெளியில், எல்லாம் ஒழித்து சும்மா இருக்கும் நிலையில் இருப்பாய் இனி மனமே; இது ஒரு பூதருக்கும் தெரியாது;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-17

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதாரவிந்த மரணாகவல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொழித்துச் சும்மாவிருக்கப்
போதாயினி மனமேதெரியாதொரு பூதர்க்குமே.
(கந்தரலங்காரம்-17)



கந்தரலங்காரம்-16

கந்தரலங்காரம்-16

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்தபடி இருக்கோள் எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க வைவேல்
விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

(மனதைத் தடுங்கள்; கோபம் என்னும் வெகுளியை விடுங்கள்; தானம் என்றும் இடுங்கள்; இருந்தபடியே இருங்கள்; எழுபாரும் உய்வதற்காக கொடும் கோபச் சூருடன் குன்றத்தை துளைத்த வைரவேலை விட்ட கோனின் அருளானது நமக்கு தானாகவே வெளிப்படுமே;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-16;

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்று
மிடுங்கோளிருந்தபடி யிருக்கோ ளெழுபாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந்திறக்கத் துளைக்கவைவேல்
விடுங்கோ னருள்வந்து தானேயுமக்கு வெளிப்படுமே.
கந்தரலங்காரம்-16