Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-35

(சக்கரப் பேறு)

தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர் பால்
தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசிமுடி மேல் விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே!

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பாற்
றக்கன்றன் வேள்வியிற் றாமோதரன் றானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கியு மிழ்ந்தது வாயுக் கரத்திலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-35)


அகத்திய மூலம் திருமந்திரம்-34

(சக்கரப் பேறு)

கூறு அதுவாகக் குறித்து நற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே!

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-34)

அகத்திய மூலம் திருமந்திரம்-33

(சக்கரப் பேறு)

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே!

சக்கரம் பெற்றுநற் றாமேதரன் றானுஞ்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் றன்னை விருப்புட னர்ச்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே..

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-33)

அகத்திய மூலம் திருமந்திரம்-32

(சக்கரப் பேறு)

மால் போதகன் எனும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போது அங்கையினோடு அந்தரச் சக்கர
மேல் போக வெள்ளி மலை அமராபதிப்
பார் போக மேழும் படைத்துடையானே!

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலையம ராபதிப்
பார்போக மேழும் படைத்துடை யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-32)


அகத்திய மூலம் திருமந்திரம்-31

(பிரளயம்)
பண் பழி சேய் வழி பாடு சென்று அப்புறம்
கண் பழியாக மலத்திருக்கின்ற
நண் பழியாளனை நாடிச் சென்ற அச்சிரம்
விண் பழியாது இருத்திக் கொண்டானே!

பண்பழி சேய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாகம லத்திருத் கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாதுவி ருத்திக்கொண் டானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-31)


அகத்திய மூலம் திருமந்திரம்-30

(பிரளயம்)
சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே
திகைத்த தெண்ணீரில் கடலொலி ஓசை
மிகைக் கொள வங்கி மிகாமை வைத்தானே!

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
யமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள வங்கிமி காமைவைத் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-30)


Tuesday, March 29, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-29

(பிரளயம்)
தண் கடல் விட்ட தமர் அருந் தேவரும்
எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேலெழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்தறிவாரே!

தண்கடல் விட்ட தமரருந் தேவரு
மெண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-29)


அகத்திய மூலம் திருமந்திரம்-28

(பிரளயம்)
அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேற்கொண்டு
அலகால் அழற்கண்டு உள் வீழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே!

அலைகட லூடறுத் தண்டத்து வானோர்
தலைவ னெனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகா ரழற்கண் டுள்வீழா தோடி
யலைவாயில் வீழாம லஞ்சலென் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-28)


அகத்திய மூலம் திருமந்திரம்-27

(பிரளயம்)
கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ வென்று இகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கி ஒளியாகி
அருவரையாய்  நின்று அருள் புரிந்தானே!

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல விறைவ
னொருவனு நீருற வோங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-27)

அகத்திய மூலம் திருமந்திரம்-26

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளிந்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அத் தக்கன் அவ் வேள்வியை வீயச்
சுளிந்து ஆங்கு அருள் செய்த தூய் மொழியானே!

தெளிந்தார் கலங்கினு நீகலங் காதே
யளிந்தாங் கடைவதெம் மாதிப் பிரானை
விளிந்தா னத்தக்கனவ வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-26)

அத்வைதம்

அத்வைதம்:
அ+துவைதம் = இரண்டற்ற நிலை; இறைவன் பரமாத்மா; ஜீவன்கள் (உயிர்கள்) ஜீவாத்மா; 3 அல்லது 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் இந்த தத்துவத்தை வெளிப்படுத்தினார்;

மற்ற தத்துவங்கள்:
அத்வைதம் தவிர மற்ற தத்துவங்கள்: மகாவீரின் சமணம், புத்தரின் பௌத்தம், மத்வரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், முதலியன;

ஆத்மா:
ஆத்மான் என்றால் மூச்சு என்று பொருளாம்; நான் என்ற கேள்விக்குப் பதிலாக இது இருக்கிறது; இது உடல் அல்ல, மனது அல்ல, புத்தி அல்ல, உயிரோடு கலந்து இருக்கும் உயிர்த்தத்துவம்தான் இந்த ஆன்மா; நான் என்ற அகந்தை ஒழிந்தபின் , எது நம்மில் மிஞ்சி நிற்கிறதோ அதுவே ஆன்மா; "தத் த்வம் அஸி" நான் அதாகவே இருக்கிறேன் என்பது பொருளாம்; நான் ஆன்மாவை அறிந்து கொண்டேன் என்று சொல்லக் கூடாதாம்; சொல்ல முடியாதாம்; அதையே அதற்கு அறிமுகப்படுத்த முடியாதாம்; மிஞ்சி இருப்பதே ஒரு பொருள்தானாம்; இருபொருள் கிடையாதாம்; எனவே ஆன்மாவை நமக்கே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது; அதனால்தான் தத் துவம் அஸி என்னும் அது நீயாக இருக்கிறாய் என்று கூறுகின்றனர் தத்துவஞானிகள்;

பிரம்மம்:
பிரம்மம் என்றால் உண்மையான என்று பொருளாம்; பிரம்மமே உண்மை; மற்றதெல்லாம் அவற்றின் நிழல்கள்; பிரம்மம் என்ற சொல்லை வடமொழியில் "ப்ரஹ்மம்" என்று உச்சரிக்கின்றனர்; இதையேதான் சத் (ஸத்=உண்மை) என்றும், பரபிரம்மம் என்றும் சொல்கின்றனர்;

ஆதிசங்கரிரின் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும்:
ஆன்மா என்னும் உணர்வு எல்லா உயிர்களிலிலும் உள்ளது; பரபிரம்மம் என்னும் எங்கும் நிறைந்த இறைநிலையும் ஒன்றே தான் என்று ஆதிசங்கரர் கூறுகிறார்; இதுவே அத்வைத வேதாந்தம்; குடத்துக்குள் இருக்கும் வெட்ட வெளிக்கும், குடமே இல்லாத வெட்ட வெளிக்கும் வித்தியாசம் இல்லை; அதுபோலவே ஜீவ ஆத்மாவும், பரம ஆத்மாவும் என்கிறார்; ஆனால் ஜீவ ஆத்மாவும், பரம ஆத்மாவும் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டும் குணத்தில் வேறுபாடு கொண்டது;இது இராமானுஜரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம்;

உபநிடதங்கள் (உபநிஷத்):
இதை தத்துவ இலக்கியம் என்பர்; வேதங்கள் முதலில் தோன்றின; அதற்கு விளக்கமாக உபநிடதங்கள் வந்ததால், அதாவது வேதத்துக்கு அந்தமாக, முடிவாக, கடையாக வந்ததால், வேதாந்தம் என்றும் சொல்வர்; உதாரணமாக, கைவல்ய உபநிடதம் என்பது ஒரு உபநிடதம்; இராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாக கூறும் உபநிஷத் ஆகும்; இப்படி 108 உபநிஷத்துக்கள் உள்ளன;

அஹம் பிரம்மாஸ்மி:


அஹம் பிரம்மாஸ்மி என்ற சமஸ்கிருத வாக்கியத்துக்கு "நான் பரம்பொருளாக இருக்கிறேன்" என்று பொருளாம்
**

பிரஜாபதி

பிரஜாபதி என்பவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்; பிரம்மாவின் படைப்புத் தொழிலைச் செய்வதற்காக இவர்கள் படைக்கப்பட்டார்களாம்; மொத்தம் 10 பிரஜாபதிகள் உள்ளனர்; மரீசி, அத்திர, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர், தக்கன், பிருகு, நாரதர் ஆகியோர்; (மகாபாரதக் கதைப்படி மேலும் சிலரும் பிரஜாபதிகளே! அவர்கள், நாரதர், காசிபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் ஆகியோர்);

பிரம்மா:
மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்; படைக்கும் தொழிலைச் செய்பவர்; (மும்மூர்த்திகளில் மற்ற இருவர், திருமால், சிவன்); பிரம்மாவின் மனைவி சரஸ்வதி; சரஸ்வதியை கலைமகள் என்பர்; பிரம்மாவும், சரஸ்வதியும் சத்ய லோகத்தில் வசிக்கின்றனர்; பிரம்மாவுக்கு நான்கு தலைகள், நான்கு கைகள்; இவர் அன்னப்பறவையில் அமர்ந்திருப்பார்; இவருக்கு நான்கு முகங்கள் இருப்பதால் "நான்முகன்" என்று கூறுகின்றனர்;

பிரம்மா, நான்கு யுகங்களான கிரேத யுகம், திரேதயுகம், துவாபர யுகம், கலியுகம் என மொத்தம் 43, 20,000 ஆண்டுகள் கொண்ட இரண்டாயிரம் நான்கு யுகங்கள் என்னும் சதுர்யுகங்கள் முடிந்தால், பிரம்மனின் ஆயுளும் முடியும்; திருப்பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றிய சரஸ்வதியை மணந்து கொண்டார்; பிரம்மா, தன் மனோசக்தியால், பிரஜாபதிகளை படைத்துக் கொண்டார்; அவர்கள் மூலமே படைத்துத் தொழிலை தொடங்கினார்;

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம்; அதனால் சிவனிடம் சென்று கேட்டுள்ளனர்; அவர் தன் முடியை பிரம்மாவைப் பார்த்து வர அனுப்பினார்; பிரம்மா தன் வாகனமான அன்னப் பறவையில் சிவனின் முடி தேடிச் சென்றார்; விஷ்ணுவை, சிவனின் பாதத்தைப் பார்த்து வர அனுப்பினார்; அவர் வராக அவதாரம் எடுத்து., பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்; இவரும் தோல்வி கண்டனர்இருந்தாலும், சிவனின் முடியைப் பார்த்து அவர் தலையில் இருந்த தாழம்பூவை எடுத்த வந்ததாகப் பொய் சொன்னார்; எனவே பிரம்மனுக்கு வழிபாட்டுக் கோயில் இல்லை என்று சாபமிட்டார் சிவன்; அந்த தாழம்பூவும் பொய் சொன்னதால், அதையும் சிவன் தன் பூஜைக்கு ஏற்றுக் கொள்வதில்லையாம்; மற்றொரு கதையும் உண்டு, சிவன் கோபப்பட்டு, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து எடுத்துவிட்டார் என்றும், அதனால்தான், பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டும் உள்ளதாகச் சொல்வர்; சிவன் அவ்வாறு ஒரு தலையை வெட்டியதால், கொலை பாவமான, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம்;

தட்சன்:
பிரம்மாவின் 10 புத்திரர்களில் தட்சனும் ஒருவர்; தட்சனின் மனைவி பெயர் பிரசுதி; இவர்களுக்கு பல மகள்கள் உள்ளனராம்; அவர்கள்: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரேவதி, ரதி, மற்றும் கார்த்திகை உட்பட 27 நட்சத்திரங்கள்; ஆக மொத்தம் தட்சனுக்கு 60 பெண்கள் (புத்திரிகள்);

தாட்சாயிணி:
இதில் தட்சனின் ஒரு மகள் பெயர் தாட்சாயிணி; இவள் தானே முடிவெடுத்து, சிவனை மணந்து கொள்கிறாள்;

தட்சனின் பெண்களில் 10 பேரை எமனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 13 மகள்களை காசியப முனிவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 27 பெண்களை சோமன் என்று சொல்லும் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; ரதி என்ற பெண்ணை மன்மதன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; மற்ற பெண்களை முனிவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்;

தட்சன் மகள் அதிதியின் வாரிசுகள் ஆதித்தியர்கள்;
தட்சன் மகள் திதியின் வாரிசுகள் - தைத்தியர்கள்;
தட்சன் மகள் தனுவின் வாரிசுகள் - தானவர்கள்;
தட்சன் மகள் அரிஷ்டாவின் வாரிசுகள் - கந்தர்வர்கள்;
தட்சன் மகன் காசாவின் வாரிசுகள் - யட்சர்கள்;
தட்சன் மகள் சுரபியின் வாரிசுகள் - பசுக்கள், எருமைகள்;
தட்சன் மகள் வினிதாவின் வாரிசுகள் - கருடன்கள்;
தட்சினின் மகள்கத்ருவின் வாரிசுகள் - பாம்புகள்;
தட்சனின் மகள் முனியின் வாரிசுகள் - அரம்பையர்கள்;

தாட்சாயிணி:
பிரம்மாவின் மகனான தட்சனின் மகள்கள் 60 பேரில் இந்த தாட்சாயிணியும் ஒருவர்; தன் தந்தை பேச்சைக் கேட்காமல், இவர், சிவனை திருமணம் செய்து கொண்டார்; தட்சனுக்கு சிவனின் மீது கோபம்; எனவே அவரை அடக்க நினைத்து, யாகம் ஒன்றை தட்சன் நடத்துகிறார்; மருமகனுக்கு அழைப்பு அனுப்பவில்லை; நியாயம் கேட்கச் சென்ற மகள் தாட்சாயிணி அந்த யாக நெருப்பில் விழுந்து இறக்கிறார்; சிவன், இறந்த தாட்சாயிணி உடலை தூக்கிக் கொண்டு அலைவதைப் பார்த்த திருமால், அந்த உடலை தன் சக்கராயுதத்தால் தகர்த்து பல பகுதிகளாக சிதைக்கிறார்; அது பிரிந்து இந்த பூமியில் பல இடங்களில் சிதறி விழுகிறது; அந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக இருக்கின்றதாம்;

பார்வதி:
மலை அரசன் இமவான் என்பவரின் மகள் இந்த பார்வதி; பிள்ளையார், முருகனின் தாய் இவர்தான்; திருமாலின் தங்கை என்றும் கூறப்படுகிறார்; மூன்று தேவியர்களான திருமகள் என்னும் லக்ஷ்மி, கலைமகள் என்னும் சரஸ்வதி இவர்களுடன் சிவனின் மனைவியான பார்வதி மலைமகள் என்று அழைக்கப் படுகிறார்; இவரே சிவனுடன் இணைந்து சிவசக்தியாக விளங்குவதாக இந்து மதம் கூறுகிறது; மலை என்றால் பர்வதம் என்று பெயர்; மலை மகள் என்பதால் பார்வதி என்று பெயர்;

சிவன்:
சிவன் என்றால் சிவந்தவன் என்று பொருளாம்; சேயோன் என்றும் பெயர்; சிவன் அகங்காரத்தை அழிப்பவன் என்ற முறையில் "அழிக்கும் கடவுளாக" கருதப்படுகிறாராம்


சிவன் அழிவில்லாதவன்; ஆதியில் அவன் மட்டுமே இருந்தான் என்றும், அவன் தன் இடப்பாகத்தை சக்தி உருவாக்கி பிரித்தான் என்றும், இருவரும் ஆனந்த தாண்டவம் ஆடி, அண்ட சராசரங்களை உருவாக்கினர் என்றும் நம்பப் படுகிறது; முடிவு நாளில் ஊழித்தாண்டவம் ஆடி எல்லோரையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறார் என்றும் நம்பப்படுகிறது;
**

அகத்திய மூலம் திருமந்திரம்-25

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்க என
வில்லால் வரையை விளங்கொளி கொற்றவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே!

நல்லார் நவகுண்ட் மொன்பது மின்புறப்
 பல்லா ரமரர் பரிந்தருள் செய்கென
வில்லால் வரையை விளங்கொளி கொற்றவன்
பொல்லா வசுரர்கள் பொன்றும் படிக்கே.

(அகத்திய மூலம் திருமந்திரம்  பாடல்-25)