Thursday, December 8, 2016

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து...

காமரு பட்டும் காஞ்சியும் அணிந்து
கவினுறு கடிதடம் முத்துத்
தாமமும் சாந்தும் அணிகளும் சுமந்த
தனபரம் தண்விரை நாநத்
தாமதி சுகந்த அளகமென்று இன்ன
ஆகிய தாங்கும் அணி இழையார்
ஏமரு வேனில் தாபம் அது அகற்றி
இளைஞருக்கு இன்பம் ஊட்டுவரால்!
 (இருது சங்கார காவியம்) பாடல்-4

காஞ்சி = மேகலை
கடிதடம் = அரை
தாமம் = மாலை
அணி = ஆபரணம்
விரை = வாசனைப்பொடி
நாநம் = ஸ்நானம், நீராடல்
ஏமரு = கலக்கத்தை ஏற்படுத்துகின்ற
தாபம் = வெப்பம்



விரைதவழ் உற்று விழைதகு மாடத்து...

விரைதவழ் உற்று விழைதகு மாடத்து
உம்பரும் இன்னனார் முகத்து
விரைதரு சுவாசத்து அசைவுறு மதுவும்
மேவும் இவ் வேனிலம் போது
நிரை தரு யாமத்தின் பினை மூட்ட
நேர் வரு வீணை இன்னிசையும்
புரை தவிர் காதல் காளையர்க்கு எல்லாம்
போகமும் நுகர்ச்சியும் தருமால்!
(இருது சங்கார காவியம்) பாடல்-3

விரை = வாசனை
விழைதகு = விரும்பத்தக்க
உம்பர் = மேல் நிலம்
மாடத்து உம்பர் = நிலா முற்றம்
நேர்வரு = ஏற்றதாகிய


மண்டிய நீல படலம் அது அகற்றி...

மண்டிய நீல படலம் அது அகற்றி
மதிதிகழ் நிசிகளும் தாரை
கொண்டியல் நீராவி மண்டப வகையும்
குளிர்மணி விதங்களும் சாந்தின்
அண்டிய தேய்வை செறிபனிக் குழம்பும்
அடுத்த இவ் வேனிலங் காலை
வண்டிவர் கோதாய் மாந்தருக்கு இதமாய்
மனமகிழ் பூப்பவாய்ந்தனவே!
 (இருது சங்கார காவியம்) பாடல்-2

நீலபடலம் = கரிய முகிற் கூட்டம்
நிசி = இரவு
தாரை கொண்டு இயல் = நீர்த்தாரையைச் சொரியும் குளியல் மண்டபம்
தேய்வை = அரைத்த சந்தனம்
வண்டிவர்  கோதாய் = வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணே!



செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்...

செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்
தெண்ணிலா மனமகிழ் விளைப்பப்
பொங்கதி தாபம் போக்கிய பல்காற்
பூம்புனலாடலும் பொலியத்
தங்கு திவாவின் கடை இனிதாகத்
தணிவுறக் காதலின் வேகஞ்
சங்கதிர் முன்கைத் தையனல்லாய் காண்
தழல்முது வேனில் சார்ந்ததுவே.
(இருது சங்கார காவியம்) பாடல்-1

செங்கதிர்ச்செல்வன் = சூரியன்
தெறுகரம்  = சுடுகின்ற கிரணம்
போக்கிய  = போக்கும்படி
தங்கு = நிலைத்த, நீண்ட
திவா = பகல்
கடை = இறுதி
தழல் = சுடுகின்ற
சங்கு அதிர் = சங்கு வளையல் ஒலிக்கின்ற
தையல் நல்லாய் = பெண்ணே


Thursday, November 17, 2016

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(சிவபுராணம்)

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
(உண்மையாகவே உன் பொன்னான திருவடிகளைக் கண்டு இன்று வீடுபேற்றை அடைந்தேன்)

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
(நான் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, என் உள்ளத்தின் உள்ளே ஓம் என்ற ஓங்காரமாய் நின்ற)

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
(மெய் என்னும் உண்மைப் பொருளே! விமலா (மாசற்றவனே); விடை என்னும் எருதின் மீது வந்தவனே! வேதங்களின்)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(வேதங்களின் ஐயா என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று நுண்ணிய பொருளாய் நின்றவனே!)
**



சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(சிவபுராணம்)

சிவன் அவன் என் சிந்தை உள் நின்ற அதனால்
(சிவ மூர்த்தியாகிய அவன் என் சிந்தையின் உள்ளே நின்கிறான்; அதனால்)

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
(அவனின் அருளால், அவனின் திருவடிகளை (பாதங்களை) வணங்கி)

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
(என் உள்ளம் மகிழ, சிவபுராணத்தை)

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(என் முந்தைய வினை முழுவதும் ஓய்ந்து போகும்படி சொல்லுவேன் நான்!)


Tuesday, November 15, 2016

ஈசனடி போற்றி!

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(சிவபுராணம்)

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
(ஈசனான என் தலைவன் அடி போற்றி! எனது தந்தையின் திருவடி போற்றி!)

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
(ஒளியுடைய தேசன் அடி போற்றி! சிவனின் சிவந்த திருவடி போற்றி!)

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
எங்களின் நேசத்துக்கு உரியவனாக நின்ற் மாசற்றவன் திருவடி போற்றி!)

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
(இந்த மாயமான பிறப்புகளை அறுக்கும் எங்கள் மன்னனான உன் திருவடி போற்றி!)

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் வாழும் நம் தேவன் அடி போற்றி!)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(தீராத இன்பம் அருளும் மலை போன்ற எம் இறைவனே உன்னை துதிக்கிறேன்!)
**



பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

வேகம் கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(சிவபுராணம்)

வேகம் கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க!
(என் மனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி (கெடுத்து) என்னை ஆண்டு கொண்ட என் தலைவன் திருவடி வெற்றி பெறுக!)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
(பிறவி என்னும் இந்த உயிர் மறுபடியும் மறுபடியும் பிறந்து பல பிறவிகள் தொடராமல் அறுத்து, மாற்றுகின்ற, என் இறைவனான சிவபெருமானின் (பிஞ்ஞகன்) வீர கண்டை அணிந்த உன் திருவடிகள் வெற்றி பெறுக!)

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
(உன் மீது அன்பில்லாத மற்றவர்களுக்கு எட்டாதவனான (சேயோன்) என் இறைவனான உன் பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக!)

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
(உன்னை கைகூப்பி வணங்குபவர்களுக்கு, அவர்களின் உள்ளத்தே நினைத்து நினைத்து மகிழ்கின்ற என் இறைவனின் திருவடிகள் (கழல்கள்) வெற்றி பெறுக!)

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(தலைமேல் கைகூப்பி வணங்குபவர்களை உயர்த்துகின்ற, சிறப்புடைய (சீரோன்) உன் திருவடி வெற்றி பெறுக!)
**



நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (சிவபுராணம்)

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
(“நமச்சிவாய” என்னும் ஐந்து எழுத்து வாழ்க! நாத தத்துவத்தில் விளங்கும் உன் திருவடி வாழ்க!)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
(கண் இமைக்கும் பொழுதின் அளவு கூட, என் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகி உன் தாள் வாழ்க)

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
(திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை (மாணிக்கவாசகர்) ஆட்கொண்ட நாதனாகிய உன் மாணிக்க மணிகளின் மலர் அடி வாழ்க!)

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஆகமமாகிய ஞான நூலின் பொருளாக இருந்து, என்னை அணுகி (அண்ணிப்பான்) அருள் புரிபவனாகிய உன் திருவடி வாழ்க!)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
(ஏகன்  = நீயே ஒருவனாகவும், நீயே பல உருவங்களாகவும் இருந்து எல்லாப் பொருள்களிலும் தங்கும் இறைவனான உன் திருவடி வாழ்க!)

 **

Monday, November 14, 2016

தாலிகள் பலவகை

கோபிலஸ்மிருதியில்—
“ஹரித்ராகுங்குமஞ்சைவ தாம்பூலம்கஜ்ஜனம்ததா
கார்ப்பாஸதந்துமாத்ரேண மங்கள்யாபரணம்ததா
தேஜஸம்ஸ்காரகபரீ  சுரகர்ணாதீபூஷணம்
பார்த்துராயுஷ்மிச்சந்தி தூஷயேந்ந பதிவ்ரதா:”
பொருள்:
ஓர் கற்புடைக்கு பெண்ணானவள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, கண்ணுக்கு எழுதும் மை, பருத்தியினாலே உண்டாக்கப் பெற்ற நூலில் கோத்த திருமாங்கல்யம், தலைவாரிக் கட்டி முடித்தல், கைகள், காதுகள் முதலான அங்கங்களில் அணியும் ஆபரணங்கள் முதலியவற்றைப் பத்தாவின் ஆயுளைக் கொரும் அப்பதி விரதையானவள் என்றும் நீக்காதிருக்க்கடவள்” என்பது இதன் பொருள்.

திருமாங்கலியமானது பிரணவமென்னும் ஓங்காரமாய் அவ்வோங்காரத்து மூல எழுத்துக்களாகிய அகார உகார மகாரங்கள் அடங்குமிடத்து அகாரம் சக்கரவடிவாய்த் தலையாகவும், உகாரம் சதுரவடிவாய் மார்பாகவும், மகாரம் முக்கோண வடிவாய் காலோடு சேர்ந்த மர்த்தனமாகவும் கொண்ட விநாயக வடிவை மத்தியாக வைத்து இருமருங்கும் நாயகனது பாதச்சின்னம் பொறித்து அப்பாதங்களில் திருவீற்றிருப்பதாகிய கமலம், சங்குசக்கரம், சந்திரசூரியர், அம்சங்களையும் அமைத்து, நடுவே ஓர் துவாரம் செய்து பருத்தி நூலால் கோக்கக் கூடியதாக முடிப்பதே அந்த மாங்கல்ய முத்திரையாகும்;

மங்கலியம்:
மங்கல + இயம் = மங்கலியம்; அதாவது மனை வாழ்க்கைக்கு அணியை, அழகை, இன்பத்தைக் கொடுக்கும்படியாக, குரவனால் இயற்றப்பட்ட ஆபரணம் என்னும் பொருள் கொண்டது; மங்கலம் = இன்பம்; இயம் = இயற்றப் பெற்ற ஆபரணம்;

இவ்வாறு ஆசார சுத்தியுடன் மனத்தூய்மையுடன், மிகு பக்தி சிரத்தையுடன், மந்திர பூர்வமாகச் சிருட்டிக்கப் பெற்ற தாலியை ஆசாரியரானவர் அகம் கனிந்த ஆசியுடன் வாழ்த்திக் காதலனது கையில் கொடுக்க அவன் வேதவாக்காகிய மந்திரமான –
“மாங்கல்யம் தந்துனானே ம்மஜவனஹேதுனா
கண்டே பத்னாமி சுபஹே த்வம் ஜவசரதாம்சதம்”
என்ற சுலோகத்தைச் சொல்லி, அதாவது “ஒ கன்னிகையே! நீ எனது நல்வாழ்க்கையின் பொருட்டு சுபத்தைக் கொடுப்பதான இந்த மாங்கல்ய முத்திரை கோக்கப் பெற்ற நாணினை உனது கழுத்தில் பூட்டுகின்றேன்! அதனால் எப்பொழுதும் சுபசீவியாக என்னுடன் கூடி இல்லறம் நடாத்திப் பூரண ஆயுளுடன் வாழ்வாயாக!” என்று சொல்லி, தலைவி கழுத்தில் தரிக்கச் செய்வர்;

விஸ்வகைக்கியர்:
அந்த மங்கல நாணைச் செய்யும் பொற்கொல்ல ஆசாரியரை “விஸ்வைக்கியர், விஸ்வெக்ஞர், பத்தர், எக்ஞசாலையல், அக்கசாலையர், என்று அழைப்பர்;
விஸ்வ + ஐக்கியர் = விஸ்வைக்கியர்; விஸ்வ + எக்ஞர் = விஸ்வெக்ஞர்; இதன் பொருள்: உலக மக்களை ஒன்று கூட்டி ஐக்கியம் செய்வோர்; உலகினை உறவு கூட்டுவோர்; மிக மேலான, மகத்தான, உயர்ந்த யாகம் செய்வோர் என்று பொருள்;

திருமாங்கல்யம்:
எக்ஞம் புரியும் அன்பின், பக்திப் பெருக்கால், திருமாங்கல்ய முத்திரையை ஆக்குவதற்கு, மந்திரபூர்வமாக தமது யாக குண்டத்தில் அக்கினியை வளர்த்து, அதிலே பொன்னினை உருக்கித் திருத்தாலி செய்வதால் அப்பெயரையும், அக்கசாலையர் என்பது அக்கம் = பொன் ஆய், பொற்பணிகள் பல புரியும் சாலையாளர் எனவும் பெயர்; பொன்னின் பொடித்துகள்களை பற்ற வைப்பதால் பற்றர் அல்லது பத்தர் எனவும் பெயர் பெறுவர்;

பழங்காலத் தாலி:
தாலம் என்று பனைக்குப் பெயர்; எனவே தாலத்து இலையில் (பனை ஓலையில்) ஓங்கார யந்திரத்தைப் பொறித்து, அணியப் பெற்றதால் “தாலி” எனப் பெயர் பெற்றது; அதில் காதலனின் பாதச் சின்னத்தை வரைவதால், தாள் + ஈ = தாளி என்றும் பெயர் பெற்றதாகச் சொல்வர்; காதில் பனை ஓலைச் சுருளை அணிவதால் அதற்கு “காதோலை” என்று பெயர் வந்தது;

தாலிகளில் பலவகைகள்:
தாலிகளில் பலவகைகள் உண்டு; அது அவரவர் குல முறைக்கு ஏற்ப பலதரப்பட்டது;
பிள்ளையார் தாலி,
கொம்புத்தாலி,
குண்டுத்தாலி,
முறிச்சுக்குத்துத் தாலி,
சிறுதாலி,
பார்ப்பனத்தாலி,
உட்கழுத்துத்தாலி,
பொட்டுத்தாலி,
இரட்டைத்தாலி,
தொங்குதாலி,
தொடர்தாலி,
புறாத்தாலி,
குருசுத்தாலி,
ஐம்படைத்தாலி, என்று பல வகைகள்;

தாலி செய்யும் முறை:
உலோக காலம் ஏற்படுவதற்கு முன்னர், அக்காலத்தின் வழக்கப்படி, பனை ஓலையில் தமது எழுத்தாணி கொண்டு, காதலர் இருவரையும் வரைந்து, அல்லது இருவர் பெயரையும் வரைந்து, அதைச் சுற்றி ஓங்கார யந்திரத்தைப் பொறித்து, அதன் நடுவே எழுத்தாணிக் குறி அமைத்து, அதன் இருமருங்கிலும் காதலனது பாதச் சின்னத்தை எழுதி, மந்திர பூர்வமாகத் தியானித்து, “புதுத் தம்பதிகளாகிய நீவீர் இருவரும் இன்றுமுதல் எக்காரணம் கொண்டும், ஒருவரை ஒருவர் பிரிய மாட்டோம்” என்ற ஆணை பெற்று அந்த இயந்திர ஓலையாகிய தாலியே உலகறியும் அத்தாட்சிச் சின்னமாகக் கொண்டு மஞ்சள் காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, பக்தியோடு, புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓலையை சுருள் செய்து பருத்தி நூலில் மாட்டிக் காதலன் கையில் கொடுத்து, காதலியின் நெஞ்சிலே அந்த தாலியாகிய முத்திரை ஓலை அவள் மார்பில் படியும் வண்ணம் கழுத்திலே மாட்டி, தொங்கச் செய்யும் வழகத்தைக் கொண்டிருந்தனர்;
**
“தாயொடு அறுசுவைபோம்; தந்தையோடு கல்விபோம்;
சேயோடு தான் பெற்ற செல்வம்போம்; ஆயவாழ்வு
உற்றாருடன் போம்; உடன்பிறப்பால் தோள் வலிபோம்;
பொன்தாலியோடு எவையும்போம்;” --- ஔவையார்


**

ஏரெழுபது – சோழராஜன் சிறப்பு

ஏரெழுபது – சோழராஜன் சிறப்பு

முடி உடைய மன்னவரின் மூவுலகும் படைத்து உடைய
கொடி உடைய மன்னவரில் குலவு முதல் பெயருடையான்
இடி உடைய ஒலி  கெழு நீர் எழுபத்தொன்பது நாட்டுக்
குடியுடையான் சென்னி பிறர் என்னுடையார் கூறீரே!

(ஏரெழுபது – சோழராஜன் சிறப்பு)

**

ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு

ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு

ஈழமண்டல முதலென உலகத்து எண்ணு மண்டலத் தெறி
படைவேந்தர், தாழு மண்டலம் செம்பியன் மரபினோர் தாமெலாம்
பிறந்து இனிய பல் வளத்தின், வாழு மண்டலம் கனகமும்
மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினில் கொழிக்கும், சோழ
மண்டல இதற்கு இணையாம் எனச் சொல்லும் மண்டலம் சொல்வதற்கில்லையே!

(ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு)

**

ஏரெழுபது – நாமகள் துதி

ஏரெழுபது – நாமகள் துதி

திங்களின் மும்மாரி பெயச் செகத்தில் உயிர் செழித்து ஓங்கக்
கங்கை குலா அதிபர் வயலில் கருவீறத் தொழு குலத்தார்
துங்கமக மனுநீதி துலங்கிட வையம் படைத்த
பங்கயன் தன் நாவில் உறை பாமடந்தை பதம் தொழுவாம்!

(ஏரெழுபதின் நாமகள் துதி)

**

திரிமூர்த்திகள் துதி

திரிமூர்த்திகள் துதி

நிறைக்கு உரிய வந்தணர்கள் நெறி பரவ மனு விளங்கத்
தறைக்கு உரிய காராளர் தமது வரம் பினிது ஓங்க
மறைக்கு உரிய பூமனையும் வண்டு உள பத்தாமனையும்
பிறைக்கு உரிய நெடும் சடிலப் பெம்மானையும் பணிவாம்!

(ஏரெழுபது பாடலின் திரிமூர்த்திகள் துதி)

**

ஏரெழுபது –கணபதி துதி

ஏரெழுபது –கணபதி துதி

கங்கை பெறும் காராளர் கருவி எழுபதும் உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பும் அணிய மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்து உறைந்தார்தமை வலம் செய்
கங்கை பெறும் தட விகட களிற்றானைக் கழல் பணிவாம்!

(ஏரெழுபதின் கணபதி துதி பாடல்)


Tuesday, October 18, 2016

திருவிளையாடல்-22

திருவிளையாடல்-22

அபிஷேக பாண்டிய மன்னர் இறந்து விட்டார்; அவரின் மகன் விக்கிரம பாண்டியன்  முடிசூடி மதுரையை ஆண்டு வருகிறார்; அந்தக் காலக் கட்டத்தில்,  சோழமன்னர் சமண சமயத்தில் மாறி அந்த மதத்தை பின்பற்றி வருகிறார்; அவருக்கு பாண்டிய மன்னர் மீது வெறுப்பு;

எனவே, எட்டு மலைகளான, அஞ்சனம், கிரவுஞ்சம், கோவர்த்தனம், திரிகூடம், காஞ்சி, அத்திகிரி, எமகூடம், விந்தம் என்று எட்டு மலைகளில் வாழும் சமண முனிவர்களை வரவழைக்கிறார் சோழ மன்னர்;

அந்த எட்டு மலைகளில் வசித்து வந்த எண்ணாயிரம் சமண முனிவர்கள் வந்துவிட்டார்கள்; அவர்களைக் கொண்டு ஒரு பெரிய யாகம் நடத்துகிறார்  சோழமன்னர்; அந்த யாகத்தில் ஒரு பெரிய யானையை வரவழைக்கின்றனர்; இது மிகப் பெரிய பலம் பொருந்தியதாக இருக்கிறது; அந்த யானையை யாராலும் வெல்ல முடியாது;

அந்த யானை எவி விடுகிறார் சோழ மன்னர்; “நீ போய், பாண்டிய மன்னரைக் கொல்ல வேண்டும்” என்று ஆணையிடுகிறார்; அந்த யானை யாகத்தில் உருவான யானை;

இதை, பாண்டிய மன்னர் அறிந்து கொள்கிறார்; அந்த யானை வந்தால் தன்னைக் கொன்றுவிடும் என்று தெரியும்; உடனே, சிவனான சோமசுந்தர பாண்டியனை வேண்டுகிறான் பாண்டிய மன்னர்:

சிவன், ஒரு வேடுவன் வடிவம் எடுத்து அங்கு வருகிறார்; அந்த யானையை நேரில் சந்திக்கிறார்; அதைத் தன் கையாலேயே கொன்று விடுகிறார்; அதனால் பாண்டிய மன்னர் காப்பாற்றப் படுகிறார்;
இப்படியாக, சிவன் நடத்திய விளையாடல் 22-ம் திருவிளையாடல்.


திருவிளையாடல்-21

திருவிளையாடல்-21

சிவன், சித்தராக வேடமிட்டு மதுரை வீதிகளில் திரிகிறார்; பாண்டிய மன்னனின் அமைச்சர் அழைத்தும் வர மறுக்கிறார்;

இப்படிப்பட்ட சித்தர் யாராக இருக்கும் என வியந்து பாண்டிய மன்னனே நேரில் சென்று பார்த்தவர விரும்புகிறார்; தெருவில் திரியும் சித்தரை நேரில் சந்திக்கிறார் பாண்டிய மன்னர்;

மன்னருக்கு ஒரு சந்தேகம்; இந்த சித்தர் உண்மையில் சித்தர்தானா? என்று சோதிக்க நினைத்து, அவ்வழியே சென்ற உழவர் கையில் இருந்து கரும்பு ஒன்றை வாங்கி, “நீர் எல்லாம் வல்ல சித்தராக இருந்தீர் என்றால், இந்த கரும்பை, உன் எதிரில் இருக்கும் கல்லால் ஆன இந்த யானையிடம் கொடுத்து அதை தின்னச் செய்யுங்கள் பார்க்கலாம்?” என்று கேட்கிறார்;

இதை அறிந்த சித்தர், அந்த கல் யானையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுகிறார்; அந்த கல் யானை உயிர் பெற்று எழுந்து வந்து, மன்னர் கையில் வைத்திருக்கும் கரும்பை பிடித்து இழுத்து தன் வாயில் வைத்த கடித்து தின்றது;

இவர் உண்மையில் சித்தர் தான் என்று மன்னர்  வியக்கிறார்;
இவ்வாறு, சிவன் செய்த விளையாடலே 21-ம் திருவிளையாடல்.


திருவிளையாடல்-20

திருவிளையாடல்-20

சிவன் ஒரு சித்தராக வேடம் கொண்டு மதுரையை அடைகிறார்; அவரிடம் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது; அதை உடம்பில் தடவி விடுகிறார்; அதைக் கொண்டு, ஆண்களை பெண்களாக மாற்றி விடுகிறார்: அதுபோல பெண்களை ஆண்களாக மாற்றி விடுகிறார்; வயதானவரை இளைஞராக மாற்றி விடுகிறார்; கூன் முதுகு கொண்ட ஒரு வயதான பெண்ணை, ஒரு இளம் மங்கையாக்கி, அவளைக் கருத்தரிக்கும் படி இளமையுடன் மாற்றி விடுகிறார்; மிக தூரத்தில் உள்ள மலைகளை மிக அருகில் கொண்டுவந்து காண்பிக்கிறார்; பக்கத்தில் உள்ள மாட மாளிகைகளை வெகு தூரத்தில் காண்பிக்கிறார்; வறிய ஏழையை செல்வந்தராக்கி விட்டார்; செல்வந்தரை வறியவர் ஆக்கி விட்டார்;

இப்படி அதியசங்களைச் செய்துவிட்டு மதுரை வீதிகளில் சுற்றித் திரிகிறார்; அப்போது மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்கிறான்; இந்த விபரத்தைக் கேள்விப்பட்டு, அந்த சித்தரை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான்; வீரர்கள் சென்று அழைத்தும் வர மறுக்கிறார் அந்த சித்தர்; அமைச்சரே நேரில் வந்து அழைக்கிறார்; சித்தர் வர மறுக்கிறார்;


இப்படி, யார் அழைத்தும் வராமல் இறுமாப்புடன் அந்த சித்தர் மதுரைத் தெருக்களில் சுற்றித் திரிந்த விளையாடலே சிவனின் 20-ம் திருவிளையாடல்.

திருவிளையாடல்-19

திருவிளையாடல்-19

மீண்டும் வருணன் மேகங்களை ஏவி விடுகிறான்; மதுரை நகர் முழ்கிவிடும்படி பெரும் மழை பெய்கிறது; இதுவரை இல்லாத மழை பொழிகிறது; இதைக்கண்ட பாண்டிய மன்னன்  சிவபெருமானை வேண்டிக் கொள்கிறான்; “என்னையும் என் மக்களையும் காத்தருள வேண்டும்” என்று வேண்டுகிறான்;

நான்கு பக்கத்து மேகங்களையும் நான்கு மாடங்களாக நின்று காக்க வேண்டும் என்று வேண்டுகிறான் பாண்டிய மன்னன்;

சிவபெருமான் , அவ்வாறே மாடங்களை காத்தார்; அதனால் மழை நீர் வற்றி விட்டன;

இவ்வாறு சிவன் மதுரையைக் காத்தது சிவனின் 19-வது திருவிளையாடல்;



அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?


வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு;
அம்மியின் மீது வைக்கக் கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்கு;
கவுணியர்க்குப் பால் கொடுத்தாய்;
மதவேளுக்கு மூவர் பயப்படச் செங்கோல் கொடுத்தாய்;
அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?

(திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆண்டவனுக்கு வேல் கொடுத்தாய்;
உன் மணவாளன் அம்மியின் மீது வைப்பதற்காக உன் கால் கொடுத்தாய்;
கவுணியர் என்னும் திருஞானசம்பந்தனுக்கு சிவஞானப்பாலைக் கொடுத்தாய்;
மன்மதனுக்கு கரும்புவில்லைக் கொடுத்தாய்;
தாயே, எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே!)

Saturday, August 13, 2016

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்

அபிராமி அந்தாதி 6-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(பிறரைத் தன் வசப்படுத்த)
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின்அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே!
தெளிவுரை
செந்நிறத் திருமேனியை உடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் பதிந்திருப்பது உன்னுடைய பொன்னான திருவடியே ஆகும்; என் மனத்திலே எப்பொழுதும் பதிந்திருப்பது உன்னுடைய திருமந்திரமே ஆகும்! உன்னையே தியானிக்கும் உன்னுடைய அடியார்களுடன் கலந்து நான் தினந்தோறும் முறைப்படி பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம நெறியே ஆகும்;
(பன்னியது=திரும்பத் திரும்ப பேசுவது)

(நன்றி: திரு.வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)


அபிராமி அந்தாதி 5-ம் பாடல்

அபிராமி அந்தாதி 5-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(மனக் கவலை தீர)
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே!
தெளிவுரை
அம்மா அபிராமியே, உயிர்களிடத்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே! செப்பை உவமையாகக் கொண்ட தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியே! நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமான் அருந்திய விஷத்தை அமுதம் ஆக்கிய அம்பிகையே! தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் அழகியே! அனைத்து இடங்களிலும் நிறைந்து இருப்பவளே! தாமரை மலர் போன்ற உன்னுடைய மென்மையான திருவடிகளை என் தலை மீது வைத்துக் கொண்டுள்ளேன்;
(அம்புயம்=தாமரை; அந்தரி=அந்தரத்தில் இருப்பவள்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்

அபிராமி அந்தாதி 4-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(உயர்ந்த நிலையை அடைய)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
தெளிவுரை
மனிதர்களும், தேவர்களும், மரணமில்லாத முனிவர்களும், வந்து தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களை உடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றை மலரையும், குளிர்ச்சியைத் தருகின்ற இளம்பிறைச் சந்திரனையும், பாம்பினையும், கங்கையையும் அணிந்து விளங்குகின்ற புனிதராகிய சிவபெருமானும் நீயும் என் மனத்தில் எப்பொழுதும் தங்கி அருள்புரிந்து ஆட்சியருள வேண்டும்;
(மாய=மரணமில்லாத; புந்தி=மனம்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை என்ற நூலிலிருந்து)