சாலிவாகனன்:
சுலோசனன் என்பவருக்கு சுமித்திரை என்னும் ஒரு
பெண் பிறந்தாள்; அவள்
மணப்பருவ வயதை அடைந்த போது, ஒருவனை காதல் செய்தாள்; அதில் அவள் கர்ப்பமடைந்தாள்; தான் கர்ப்பம் அடைந்து
விட்டோம் என்று தெரியவந்தபோது, அவள் மிகுந்த வேதனை அடைந்தாள்;
ஆகா, நம் ஒழுக்கத்துக்கு இழுக்கு வந்துவிட்டதே
என்று வருந்தினாளாம்; அவள் காதலனை அழைத்து, நீ செய்த இந்த செயலால் என் குலத்துக்கே இழுக்கைத் தேடிவிட்டேன் என்று
கதறுகிறாள்; ஆனால், அவனோ இவளின்
வருதத்தத்தை போக்க நினைத்தான்;
"நீ நினைப்பதுபோல நான் மனிதப்பிறவி இல்லை; நானே ஆதிசேஷன்; உன் கர்ப்பத்தில் இருப்பது எனது மகனே! அவன் பிறந்து ஒரு மகா புகழ்பெற்ற
ஒரு அரசனாக வருவான்; அவனால் உன் குலம் புகழ்பெறும்; எனவே நீ, கலங்காமல், அவனைப்
பெற்று வளர்த்து பாதுகாத்து வரவேண்டியது உனது கடமை" என்று கூறி அந்த ஆதிசேஷன்
தனது உண்மையான உருவத்தையும் அவளுக்கு காண்பித்துவிட்டு மறைந்து விட்டது;
அவள், கர்ப்பம் வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது; தன் தந்தையிடம், நடந்ததைக் கூறுகிறாள்; அவரும் சமாதானம் ஆகிவிட்டார்; ஆனால் ஊரில் உள்ளவர்கள்,
இவள் கர்ப்பிழந்தவள் என்று தூற்றுகிறது; இந்த
செய்தி அரசனுக்கும் போய்ச் சேர்கிறது; அவர், இந்தப் பெண்ணை இந்த நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறார்;
வேறு வழியின்றி, அவளை நாட்டிற்கு வெளியே உள்ள
ஒரு வேற்றுநாட்டுச் சேரியில் விட்டுவிடுகிறார்கள்; அங்கு
அவளுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது; அவனுக்கு
"சாலிவாகனன்" என்று பெயர் சூட்டுகிறாள்; அவனும்
வளர்ந்து வருகிறான்;
அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவன் அந்த ஊர்
சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்; அவன் ஒரு
அரசனைப் போலவும், மற்ற சிறுவர்களை மந்திரிகள், படைத்தளபதி, வீரர்கள், வேலையாட்கள்,
போலவும் விளையாட்டுக்கு அமைத்துக் கொண்டு தெருவில் விளையாடிக்
கொண்டிருக்கிறான்;
இந்தச் சிறுவனோ, இதுவரை அரசனை கண்டதில்லை,
மந்திரிகள் எப்படி இருப்பார்கள் என்றுகூடத் தெரியாது, படைத்தளபதி எப்படி நடப்பார் என்று கூடத் தெரியாதே, அப்படி
இருக்கையில், எப்படி இந்த ஐந்து வயது சிறுவன் இவ்வாறு
அரசனாகவும், மற்றவர்களின் செயல்களையும் மிகச் சரியாக
செய்கிறானே என்று அங்கிருப்பவர்கள் வியந்திருக்கிறார்கள்;
அந்தச் சிறுவனோ, தினமும் அந்த விளையாட்டைத்தான்
விளையாடி இருக்கிறான்; தினமும் இராஜபரிபாலனம் செய்வதைப்
பற்றியே விளையாட்டு இருந்திருக்கிறது;
ஒருநாள், அந்த தெரு வழியாக ஒரு பிராமணன் வந்திருக்கிறார்;
அவர் இந்தச் சிறுவனின் விளையாட்டைப் பார்த்து பிரமித்து
போயிருக்கிறார்; அவரும் விளையாட்டாக இந்த சிறுவனிடம் சென்று,
விளையாட்டாக நடித்திருக்கிறார்;
"மன்னரே! நான் பஞ்சாங்கம் பார்க்கும்
பஞ்சாங்ககாரன்; உங்களுக்கு
வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறேன்" என்று மிகப் பவ்வியமாக ஒரு உண்மையான
அரசனிடம் சொல்வது போலவே சொல்லி இருக்கிறார்;
இதைக் கேட்ட அந்தச் சிறுவன், தன் பக்கத்தில் இருந்த
மந்திரியை (மந்திரியாக நடிக்கும் சிறுவனை) அழைத்து, அந்த
பஞ்சாங்கம் சொன்ன பெரியவருக்கு சன்மானமாக ஒரு குடம் கொடு" என்று மந்திரியிடம்
மன்னனான சிறுவன் கட்டளை இடுகிறான்; அது உண்மையில் மன்னன்
இட்ட கட்டளை போலவே இருக்கிறது; மந்திரி சிறுவனும் ஒரு
குடத்தை தூக்கி எடுத்து இந்த பஞ்சாங்க பெரியவருக்கு கொடுக்கிறான்; அவரும் அதை பெற்றுக் கொண்டு அவரின் வீட்டுக்குப் போய் அதை அவரே வைத்துக்
கொண்டார்;
மறுநாள் காலையில், அந்தக் குடத்தில் என்னதான்
இருக்கிறது என்று பார்ப்போம் என்று அந்த குடத்தை திறந்து பார்க்கிறார்; அந்தக் குடம் முழுக்க பொற்காசுகள் இருக்கின்றன; பெரியவருக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை; சிறுவர்கள் விளையாடிய
விளையாட்டுத்தானே! எப்படி உண்மையான மன்னனைப் போலவே போற்காசுகளை பரிசாகக்
கொடுத்திருக்கிறான்; இவன் யார்?
இந்த செய்தியானது அந்த நாடே பரவி விட்டது;
எப்போதும்போலவே, அந்தச் சிறுவன் தினமும், தெருவில், மன்னனின் சிங்காசனம் அமைத்து அமர்ந்து
கொள்வான்; மற்ற மந்திரிகளுக்கும் ஆசனம் அமைத்துக் கொடுத்தான்;
விளையாட்டுத் தொடர்கிறது; இதை எல்லோரும்
வேடிக்கையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்; உண்மையான
மன்னனின் இராஜ சபை போலவே தினமும் நடக்கிறதாம்;
இந்தச் செய்திகள் எல்லாம், பக்கத்து நாடான, தன் தாய் பிறந்த நாட்டுக்கும் சென்று சேர்ந்ததாம்; அங்கு
மன்னனாக இருக்கும் "விக்கிரமார்க்கன்" இதை தெரிந்து அவனும் இந்தச்
சிறுவனைப் பார்க்க தயாராகி இங்கு வந்துவிட்டார்;
இவ்வாறு இருக்கையில், அந்த ஊரில் இருக்கும் ஒரு
வியாபாரி, தன் நான்கு மகன்களுக்கும் நான்கு விதமான
சொத்துக்களை உயில் மூலம் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார்; அந்த
மகன்களுக்குள் அந்த சொத்தை, தகப்பன் சொன்னதுபோலவே பிரித்துக்
கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது; பல பெரியவர்கள்
பஞ்சாயத்து செய்து பார்த்து விட்டார்கள், ஒன்றும்
நடக்கவில்லை; அவர்களின் தகப்பனார் எப்படி சொத்துக்களை
பிரித்து கொடுத்தார் என்பது விளங்கவில்லையாம்; அந்த நாட்டு
மன்னரும் முயன்று பார்த்துவிட்டார் முடியவில்லையாம்;
பிரச்சனை இதுதான்;- அவர்களின் தந்தை இறப்பதற்குமுன்,
நான்கு பைகளை நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு இறந்திருக்கிறார்;
ஒரு பையில் மண்ணும், ஒரு பையில் உமியும்,
ஒரு பையில் பொன்னும், ஒரு பையில் சாணமும்
இருக்கிறது; இதை எப்படி புரிந்துகொண்டு சொத்துக்களை அடைவது
என்று தெரியவில்லையாம்;
இப்போது, பிரச்சனை இந்த மன்னனாக விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவனிடம் வருகிறது; அவனும் இதற்கு தீர்ப்பை சொல்லி
எல்லோரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி விட்டானாம்;
தீர்ப்பு;-
மண் பையை வைத்திருப்பவன் உன் தகப்பனின் நிலங்களை
ஏடுத்துக் கொள்;
உமியை வைத்திருப்பவன் உன் தந்தையின் மொத்த
தானியங்களையும் எடுத்துக் கொள்;
பொன் பையை வைத்திருப்பவன் உன் தந்தையின் பொன்
ஆபரணங்களை எடுத்துக் கொள்;
சாணம் இருக்கும் பையை வைத்திருப்பவன் உன் தந்தையின் ஆடு மாடு செல்வங்களை அனைத்தையும்
எடுத்துக் கொள்;
இதுதான் தீர்ப்பு என்று ஒரு மன்னன் சொல்வதைப்
போன்றே அந்தசிறுவன் தீர்ப்பை சொன்னானாம்;
இப்போது அந்த நான்கு மகன்களும் ஒப்புக்
கொண்டனராம்;
இதை பக்கத்து நாட்டிலிருந்து வந்த மன்னன்
விக்கிரமார்க்கனும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஆச்சரியம், பொறாமை;
சாலிவாகனன் என்னும் சிறுவன் புகழ் பரவி, நம் புகழ் மங்கிவிடும்போல
இருக்கிறதே என்று பொறாமையாம்; இரகசியமாக இந்த சிறுவனை
கொன்றுவிடும்படி உத்தரவு போடுகிறார்;
இதை தெரிந்துகொண்ட சாலிவாகனன் என்னும் இந்தச்
சிறுவன், தனக்கென்று ஒரு சிறு படையை
ஏற்படுத்தி, அந்த மன்னனிடம் போர் செய்கிறான்; இதில் வெற்றியும் பெறுகிறான்; அந்த மன்னனின் நாடான
நர்மதை ஆற்றுக்கரை பகுதி தேசத்தை கைப்பற்றி அதை ஆட்சி செய்கிறான் சாலிவாகனன்
என்னும் சிறுவன்;
இவன் ஆண்ட வருடத்திலிருந்துதான் காலம்
கணக்கிடப்படுகிறது. காலண்டரில் சாலிவாகன வருடம் என்பது இந்த மன்னனின் ஆண்ட
காலத்திலிருந்துதான் கணக்கிடப்படுகிறதாம்;
இவன் மிகப் பெரிய அறிவாளி மன்னன்; இவன்தான், வைத்திய சாஸ்திரம், அசுவசாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் முதலிய நூல்களை இயற்றியவன்;
**