Tuesday, February 16, 2016

திருஞானசம்பந்தர் தேவாரம்


திருஞானசம்பந்தர் தேவாரம்

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நாக்
கைமல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

கையது வீழினுங் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை யுருவழிய
அப்படி யழலெழ விழித்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல்அலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ண்ணுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.
**



திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்

திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்!

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்!

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல் ஆனேறு ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்!

நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்!

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
**


Monday, February 15, 2016

லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம்

ப்ரஹ்ம முராரி ஸூரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துஃக்க வினாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப வினாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

ஸர்வ ஸூகந்தி ஸூலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸூராஸூர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸூயஜ்ஞ வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸூஸோபித லிங்கம்
ஸஞ்சித பாபவினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

அஷ்டதளோ பரிவேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்டதரித்ர வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

ஸூரகுரு ஸூரவர பூஜித லிங்கம்
ஸூரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்.

**

Saturday, February 13, 2016

இதோபதேசம்-3

இதோபதேசம்-3


கூட்டத்தில் இருந்த ஒரு புறா கேள்வி கேட்கிறது;
"ஒவ்வொரு செயலுக்கும் அதன் பாதகங்களை ஆராய்ந்து வாழ முடியுமா? ஆபத்து காலத்தில் வேண்டுமானல் மூத்தவர் வார்த்தையைக் கேட்டுக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு விஷயத்துக்கும் முன் எச்சரிக்கை ஏற்படுத்த நினைத்தால், நாம் நினைக்கும் காரியங்கள் எதையும் முயற்சி செய்யவே முடியாதே? நமக்கு, அன்னமும் தண்ணீரும் தீங்கில்லாமல் எங்கு கிடைக்கும்? முன் எச்சரிக்கை என்று நினைத்தால், எப்படி நாம் உயிர் வாழ முடியும்?

உலகில், பொறாமை உள்ளவன், உலோபம் உள்ளவன், மனம் திருந்தாதவன், கோபம் உள்ளவன், நித்திய சந்தேகி, பிறர் பொருள்களில் ஜீவன் செய்பவன் என்னும் இந்த ஆறுபேரும் துன்பத்தில்தான் வாழ்வார்கள்" என்றது அந்தப் புறா;

இந்தப் புறா சொல்வது சரிதான் என்று நினைத்து, நிலத்தில் கிடந்த அரிசிக் குறுணியை தின்பதற்காக மற்ற புறாக்கள் ஆகாயத்திலிருந்து கீழே இறங்கின; இறங்கிய புறாக்கள் எல்லாம் வேடன் விரிந்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன; மாட்டிக் கொண்ட புறாக்கள் எல்லாம், தங்களுக்குப் புத்தி சொன்ன அந்தப் புறாவைத் திட்டித் தீர்த்தன;

திட்டு வாங்குவது உலகப் பழக்கம்தானே! ஒரு கூட்டத்தில் ஒரு விஷயத்தை முன்னெடுத்து சென்றவன் வெற்றி பெற்றால், அந்த வெற்றி அந்த கூட்டத்துக்கே உரியது என்று எல்லோரும் நினைத்துக் கொள்வர்; அதே தோல்வியில் முடிந்தால், வழி நடத்தியவன் தவறு என்று அவனையே நிந்திப்பர், -- இதுதானே உலக வழக்கு;

இதைக் கண்ட புறாக்களின் அரசனான சித்திரக்கிரீவன், "வலையில் சிக்கியது அந்த புறாவின் புத்திமதியால்தான் என்று யாரும் எண்ண வேண்டாம்; பசுவின் கன்றை, அந்த பசுவின் காலிலேயே கட்டி விடுவர்; அதனால் கன்றைக் கட்டியதற்கு அந்த தாய்ப்பசுவின் காலும் ஒரு காரணம் என்று குறை சொல்லுவது போல இருக்கிறது உங்கள் அனைவரின் குற்றச் சாட்டும்; ஆபத்து வந்த வேளையில் அதை நீக்கிக் காப்பவனே சுற்றத்தான் ஆவான்; ஆபத்து நீங்கி, காக்க வேண்டிய வேளையிலே தாமதிப்பவன் அறிவாளி அல்லன்; தைரியம் கொண்டு ஆபத்தை நீங்கும் வழியைத் தேடுவோம்மனம் தளராமல் நாம் அனைவரும் செயலில் இறங்க வேண்டும்; ஆபத்து காலத்தில், "தைரியம், செல்வம், முதலிய பேறுகள், பொறுமை, சபையிலே வாக்கு வல்லமை, போரில் வீரம், புகழில் பிரியம், கல்வியில் பிரியம் என்னும் இவை இயல்பிலேயே பெரியோர்களிடம் அமைந்திருக்கிறது; உயர்வடைய விரும்புபவர்கள், நித்திரை, முயற்சியின்மை, அச்சம், கோபம், தாமதம் என்னும் ஆறு குற்றங்களையும் அகற்றல் வேண்டும்; ஆதலால், தாமதமின்றி நாமெல்லாம் ஒரு மனதோடு வேடன் விரித்த வலையை அப்படியே தூக்கிக் கொண்டு மேலே நாம் கூட்டாகப் பறந்து விட வேண்டும்; சிறியனவாயினும் பல பொருள்கள் ஒருங்கே சேர்ந்தால் அவை பெரிய காரியங்களையும் முடிக்க வல்லது; சிறிய புல்லுகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிக் கட்டிய கயிற்றினால்தான், பெரிய மதயானைகளும் கட்டப்படுகின்றன" என்பது எல்லோரும் அறிந்ததுதானே!

இதைச் சொல்லி முடித்தவுடன், எல்லாப் புறாக்களும் ஒருசேர, வேடனின் வலையைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன; வேடனும் அவைகளைப் பின்தொடர்ந்து ஓடினான்; புறாக்கள் எங்காவது தரை இறங்கும் இடத்தில் அவைகளைப் பிடித்துவிடலாம் என்று நினைத்திருப்பான்; ஆனால், புறாக்களோ கண்ணுக்கெட்டாத தூரத்துக்கே போய் விட்டன; தோல்வியுடன் வேடன் திரும்பி வந்தான்;

புறாக்களின் தலைவன் சித்திரகிரீவன் இப்போது பேசுகிறது:
"மாதா, பிதா, மித்திரன் (தாய், தந்தை, நண்பன்) இவர்கள் மூவருமே இயல்பிலேயே நமக்கு நன்மை செய்கிறவர்கள்; மற்றவர்கள் அனைவரும், ஏதாவது ஒரு காரணத்துக்காக நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள்; எனக்கு அப்படிப்பட்ட நண்பன் ஒருவன், கண்டகி ஆற்றங்கரையில் சித்திரவனத்தில் இருக்கிறான்; அவன் பெயர் இரணியகன்: எலிகளுக்கு அரசன்; அவனிடம் போனல், அவன் இந்த வேடன் வலையை அறுத்து வெட்டிவிடுவான்" என்று கூறியது; அங்கு புறப்பட்டார்கள்;

இரணியகன் என்னும் எலி அரசன், தனக்கு அபாயம் நேரும் என்று அஞ்சி, நூறு துவாரம் வைத்து தோண்டப்பட்ட புற்றில் இருக்கிறான்; புறாக்கள் சட சட என்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மொத்த கூட்டமும் அந்த எலிப் புற்றுக்கு அருகில் தரை இறங்கின; அந்த சப்தத்தில் பயந்து, எலி அரசன் பதுங்கி மௌனமாக இருக்கிறான்;

புறாக்களின் தலைவனான சித்திரகிரீவன், "எலி நண்பரே! நான் வந்திருக்கிறேன்; நீ பேசாமல் பதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்? என்று கேட்டு அந்த புற்றின் வாசலில் நின்றது;

புறாத்தலைவன் குரல் கேட்டவுடன், நம் நண்பன்தான் வந்திருக்கிறான் என்று கருதி, வெளியே வந்தது எலி அரசன்;
"ஆகா, என் நண்பன் புறாத்தலைவன் வந்திருக்கிறான்; என்ன புண்ணியம் செய்தேன், என் நண்பனைக் காண?" என்று ஆவலுடன் அவனிடம் சென்றது:

ஆம், வெகுநாள் கழித்து வந்த மித்திரனுடன் (நண்பனுடன்) பேசுதலும், மித்திரனுடன் கூடி இருத்தலும், அவனுடன் அளவளாவுதலும் இவற்றைவிட மேலான புண்ணியம் ஏதேனும் உலகில் உண்டா என்ன? இது முற்பிறவியில் நாங்கள் செய்து வைத்த புண்ணியத்தின் பலனே! ஒருவன் செய்த நன்மையும் தீமையும் விதி வசத்தால், அவனை அடைகின்றன; நோய், துயர், இரங்கல், மறியல், என்பவை ஒருவன் செய்த குற்றத்தினாலேதான் அவனை அடைகின்றன";

புறாக்கள் வலையில் மாட்டிக் கொண்ட கொடுமையைச் சொன்னவுடன், எலி உடனே தன் நண்பனிடம் சென்று அவன் மாட்டிக் கொண்ட வலையை வெட்ட எத்தனித்தது; அதைக் கண்ட புறாக்களின் அரசன், "நண்பனே, முதலில் என் கூட்டத்தினரின் வலையை வெட்டிவிடு: பின்னர் என் வலையை வெட்டலாம்" என்றது;

ஆனால், எலித் தலைவன், "நண்பனே! என் பற்கள் பலமிழந்து விட்டன: எனவே முதலில் உன் வலையை வெட்டி விடுகிறேன்; பின்னர் முடிந்தவரை மற்றவர்களின் வலையை வெட்டி விடுகிறேன்" என்றது;

"தன் உயிரைக் கைவிட்டுப் பிறர் உயிரைக் காத்தல் நீதி சாஸ்திர சம்மதமன்று: ஒருவன் ஆபத்தில் உதவும் என்று பொருளைப் பேணல் வேண்டும்; பொருளின் விஷேசமாகத் தன்னைப் பேணல் வேண்டும்; பொருள் முதலியவற்றை தேடுவதற்குக் காரணமான தன் உயிரை அழிப்பவன் எப்பொருளையும் அழித்தவன் ஆவான்; அதனைக் காப்பவன் எல்லாப் பொருளையும் காப்பவன் ஆவான்" என்று எலி அரசன் கூறியது;

இதைக்கேட்ட புறாத் தலைவன் சித்திரக்கிரீவன், "மித்திரா! நீ சொன்னது நீதியே ஆனாலும், என் பரிவாரங்கள் படும் துயரை நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது; இந்த ஆபத்தில் இவர்களை கைவிடுவேன் என்றால், இவைகளுக்கு நான் அரசனாக இருக்கும் முதன்மை எனக்கு எப்படி வரும்? நிலையில்லா என் உடம்பை காப்பாற்றும் பொருட்டு, என்றும் நிலைத்து நிற்கும் என் கீர்த்தியை இழப்பது நன்றன்று" என்றது;

இதைக் கேட்ட எலி அரசன் இரணியகன், "மித்திரா! நன்று நன்று! அடைந்தோரைக் காக்கும் அருளினால் மூவுலகும் நீயே பிரபு ஆகின்றாய்;" என்று புகழ்ந்த அந்த எலி, வலைகளை எல்லாம் வெட்டி விட்டது;

"மித்திரா! வலையில் அகப்பட்டது குற்றமன்று; இது விதிவலியால் நிகழ்ந்தது; விதியின் வலியை ஒருவரும் வெல்லமாட்டார்; சந்திர சூரியர் இராகு கேதுக்களால் பிடிக்கப்படுகின்றனர்; பாம்புகளும் யானைகளும் கட்டப்படுகின்றன; அறிஞரும் வறிஞராய் அலைகின்றனர்; ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும் ஆபத்தைச் சந்திக்கின்றன; ஆழ்ந்த கடலினுள் இருக்கும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன; விதிவலியை வென்றவர் யார்?

நண்பர்கள் நன்றி சொல்லிக் கொண்டனர்; புறாக்கள் சந்தோஷமாகப் பறந்து சென்றனர்;

இதை அங்கிருந்த மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இலகுபதனன் என்னும் அந்தக் காகம், அந்த எலியிடம் சென்று, "பெரும் கீர்த்தி பெற்ற உன்னிடம் நானும் நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று தன் ஆசையை வெளிப்படுத்தியது;
தொடரும்....
(விஷ்ணுசர்மா என்ற பண்டிதரின் இதோபதேசம் என்று நூலில் ஒரு சிறு பகுதி இது)
**

இதோபதேசம்-2

இதோபதேசம்-2

கோதாவரி ஆற்றங்கரையில், பரந்த கிளைகளை உடைய ஒரு இலவமரம் நிற்கின்றது; அம்மரத்திலே பல வகையான பறவைகள் வந்து இரவில் தங்கி, நித்திரை செய்து, விடியற்காலையில் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்று விடும்;

அந்தப் பறவைகளில் ஒரு காகமும் ஒன்று: அதன் பெயர் இலகுபதனன்; ஒருநாள் இரவு, அந்த காகம் அந்த இலவமரத்தில் வந்து நித்திரை செய்து விடியற்காலையில் எழுந்திருக்கிறது; அப்போது அந்த காட்டில் இமயன் போன்று ஒரு வேடன் ஒருவனைப் பார்க்கிறது; "இன்றைக்கு இவன் முகத்தில் விழித்திருக்கிறோம்; என்ன கெடுதல் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே என்று கலங்குகிறது; அந்த கலக்கத்துடனேயே அது பறந்து சென்றது

மூடன்  "கவலைப்படுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்றும்; அஞ்சுவதற்கு நூற்றுக் கணக்கில் நடக்கின்றன" என்றும் புலம்புவானாம்;

வந்த வேடன், தன்னிடம் இருந்த அரிசிக்குறுணியை நிலத்திலே சிதறி விட்டான்; அந்த இடத்தில் ஒரு வலையைப் போட்டு வைத்தான்; மரத்துக்கு மறைவில் நின்று கொண்டான்;

அப்போது ஆகாயத்தில், புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன; அதில் சில புறாக்கள் இந்த அரிசிக்குறுணியை பார்த்து விட்டன; அவற்றை தின்பதற்காக, கீழே இறங்கி வர எத்தனித்தன; இதைக் கண்ட புறாக்களின் அரசன் (அரச புறா) "இங்கு மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அரிசிக்குறுணி எப்படி வரும்? இதில் ஏதோ சூது இருக்கிறது; நாம் யாரும் கீழே இறங்கக் கூடாது;" என்று கட்டளை இட்டது:

அதைத் தொடர்ந்து, அரசு புறா, மற்ற புறாக்களுக்கு, "வழிப்போக்கன் புலியிடம் மாட்டிக் கொண்ட கதையைக்" கூறியது;
அந்த புலிக்கதைதான் இங்கு "இதோபதேசம்-1" என்று கூறப்பட்டுள்ளது;

(விஷ்ணுசர்மா என்னும் பண்டிதரின் இதோபதேசம் என்னும் நீதிக் கதைகளிலிருந்து ஒரு பகுதி).
**



இதோபதேசம்-1

புறாக்களின் அரசன், தன் இனமான மற்ற புறாக்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறது:

"நான் ஒருநாள் தென் காட்டில் செல்லும் போது, ஒரு கிழப்புலியைக் கண்டேன்; அந்தப் புலி, நீரிலே முழுகி, கையிலே தர்ப்பையையும் வைத்துக் கொண்டு, ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டிருந்த வழிப்போக்கர்களை நோக்கி, 'என் கையில் இருக்கும் இந்த பொற்காப்பினை யாருக்காவது கொடுக்க விரும்புகிறேன்; எடுத்துக் கொள்க' என்றது;

புலியின் அருகில்போய் அதனை வாங்குவதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள்; ஆனால் ஒருவன் மட்டும், தங்கத்தின் மீது ஆசைப்பட்டு, 'இது நல்ல விதியால் எனக்குக் கிடைக்கிறது; ஆனாலும் எனக்குச்  சந்தேகமாக இருக்கிறது; செல்வத்தைத் தேடும்போது எடுக்கும் முயற்சியில் சிரமம் இருக்கத்தான் செய்யும்; ஆனால் தீங்கு இல்லாமல் செல்வம் கிடைத்தால் நல்லது; அப்படி கிடைப்பதே அரிதாக இருக்கிறதே! என்று யோசித்தான்;

புலி, தன் கையைக்காட்டி, இந்தா! வந்து வாங்கிக் கொள் என்று ஆசை காட்டியது; 'கொலையாளியாகிய உன்னிடத்திலா, இரக்க குணம்? ஆச்சரியமாக இருக்கிறதே!' என்று வியக்கிறான்;

ஆனால் புலி அவனிடம் கூறியது:
" வழிப்போக்கனே! கேள்! நான் என் இளம் பருவத்தில் தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தேன்; அப்போது பல மிருகங்களையும் மானிடர்களையும் கொன்று தின்றேன்; அந்தப் பாவத்தால் என் பிள்ளைகளை இழந்தேன்; எனக்கு வாரிசு இல்லாமல், என் வம்சமே அழிந்து விட்டது; ஒரு தரும சீலரைப் பார்த்தேன்; அவர் என்னிடம், "தானம், தருமம், முதலியவைகளைச் செய் என்று எனக்கு உபதேசித்து விட்டுப் போனார்; அதனால், நான் இப்போது தானம் செய்கிறேன்; எனக்கோ வயதாகி விட்டது; என்னுடைய நகங்களும், பற்களும் விழுந்து விட்டனஇப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி கொலையாளியாக இருக்க முடியும்! என்னை நம்புவதற்கு உனக்கு என்ன தடை? நான், யாகம், வேதம் ஓதுதல், தானம், தவம், சத்தியம், உறுதி, பொறுமை, உலோபமின்மை என்னும் தருமங்கள் எட்டு வகையையும் அறிந்திருக்கிறேன்; என்னிடத்தில் உலோபமில்லை; எனவே இந்த பொற்காசுகளை உன்னிடம் கொடுக்க விரும்புகிறேன்; ஆனால், 'புலி, மனிதனைக் கண்டால் அவனைக் கொன்று புசிக்கும்' என்பது உலகப் பழக்கம்; அப்படி மனிதர்கள் நினைப்பதை மாற்ற முடியாது; உலக மக்கள் ஆராய்ந்து நடப்பவர்கள் இல்லை; பழமொழியை நம்பி மட்டுமே நடப்பவர்கள்; அவர் செம்மறி ஆட்டுக் கூட்டம்; ஒரு ஆடு போன வழியிலேயே மற்ற ஆடுகளும் போகும் என்பது போல மக்களும் ஒருவர் சொல்லிச் சென்ற வார்த்தையையே நம்பிக் கொண்டு இருப்பார்கள்

நானும் தரும சாஸ்திரம் படித்திருக்கிறேன்; கேள்;
"குந்தி புத்திரா, வறியவர்களைப் பாதுகாத்துக் கொள்; செல்வர்களுக்கு திரவியங்களை கொடுக்காதே; நோயாளனுக்கு அல்லாமல் நோய் இல்லாதவனுக்கு மருந்து கொடுப்பதால் என்ன பயன்?" என்று பாரதம் சொல்கிறது;"

நீயோ, வறியவன் போலத் தெரிகிறாய்! இந்த பொற்காசுகள் உனக்குத்தான் தர விரும்புகிறேன்; இக்குளத்தில் முழுகிவிட்டு வந்து இதனை ஏற்றுக் கொள்" என்று அந்த புலி அவனிடம் கூறியது;

அவனும் அதை நம்பி, குளத்தில் மூழ்கினான்; ஆனால் அதிலுள்ள சேற்றில் சிக்கி விட்டான்; உடனே புலி, அவன் அருகில் சென்று தூக்கிவிடுகிறேன் என்று கூறி அருகில் சென்றது; அருகில் சென்ற புலி, அவனைப் பிடித்துக் கொண்டது; அவன், "என் நிலை இப்படி ஆகி விட்டதே!" என்று கலங்கினான்;

தீயவன், தரும சாஸ்திரம் படித்தாலும், நன்னடத்தைக்கு வரமாட்டான்; எப்போதும் அவனின் இயற்கை குணமே மேலோங்கி இருக்குமாம்;
கொம்புடைய மிருகத்திடமும், நதிகளிடத்திலும், நகமுள்ள மிருகங்களிடத்திலும், வஞ்சகப் பெண்களிடத்திலும், தகுதியில்லாத அரசர்களிடத்திலும் விசுவாசம் என்னும் நம்பிக்கையை வைக்கக் கூடாது;

விதியின் வலியை விலக்குதல் முடியாது; ஆகாயத்தில் போகும் சந்திரனை ராகு பிடிக்கவில்லையா? என்று அவனுக்கு அப்போதுதான் புத்தி தெளிகிறது; அப்போது, அந்த புலி அவனை கொன்று தின்று விட்டது;
நல்லவன், கெட்டவன் என்று ஆராயாமல் ஒருவனிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே இதன் நீதி.

(விஷ்ணு சர்மா என்னும் பண்டிதர் சொல்லிய இதோ உபதேசம் என்று நூலில் ஒரு சிறு நீதிக் கதை இது; (இதோ உபதேசம் =நன்மைதரும் உபதேசம்)
**



Tuesday, February 9, 2016

குமார கோட்டக் கீரை

காளமேகப்புலவரின் கவி-3

கவி காளமேகம், ஏகாம்பரநாதரை தரிசிக்கச் செல்கிறார்; அங்குள்ள சிவப் பிராமணர்கள், இவரை அலட்சியமாக எண்ணி, இவரின் கவிபாடும் திறமையை சோதிக்க நினைத்து, இந்த தலத்தில் ஆறு அற்புதங்கள் இருக்கின்றன; அவை எவை எவை என்று கேட்கிறார்கள்;
இவரோ, அவை, குமரகோட்டக்கீரை, செவிலிமேட்டுப் பாகற்காய், பருத்திக்குளநீர், செப்பு வாசற் காற்று, கம்பதடியில் தவம், கருமாறிப் பாய்ச்சல் என்று கவியில் கூறுகிறார்;

"அப்பா குமார கோட்டக் கீரை செவிலிமேட் 
டுப்பாகற் காய் பருத்திக் குளநீர் -- செப்புவா 
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங்கருமா 
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது."
**

காளமேகப் புலவரின் கவி-2

 காளமேகப் புலவரின் கவி-2
காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாள் தரிசனம் தருகிறார்; வைகாசி மாதத்தில், வரதராஜப் பெருமாளுக்கு கருட உற்வசம் நடக்கும்; தங்கத்தில் உள்ள கருடன் வாகனத்தில், அழகிய பெருமாள் அமர்ந்து திவ்விய மங்கள விக்கிர லட்சணங்களுடன் பவனி வருவார்; இந்த வைபவத்தை வியந்து, கவி காளமேகம் இந்த வெண்பாவைப் பாடுகிறார்;

"பெருமாளு நல்ல பெருமாள் 
அவர்தம்திருநாளு நல்ல திருநாள் -- பெருமாள் 
இருந்திடத்திற் சும்மா விராமனையினாலையோ 
பருந்தெடுத்துப் போகிறதே பார்."

எப்போதும், பெருமாள் குதிரையின் மீது அமர்ந்து பரிவேட்டைக்கு போகும் உற்சவம் இருக்கும்; இப்படி போகும்போது, பரமாத்மா, ஜீவாத்மா இவருக்கும் உள்ள சம்மந்தத்தை உலகுக்கு உரைப்பார்; அப்படிப்பட்ட பெருமாளை, ஒரு பருந்து தூக்கிச் செல்கிறதே என்று வேடிக்கையாகப் பாடுகிறார்;

**

காலனையும் காமனையும்...

காளமேகப்புலவரின் கவி:

திருச்செங்காட்டில், உத்தராபதீஸ்வரரைத் தரிசனம் செய்யச் செல்கிறார் காளமேகப் புலவர்; அங்கு, ஈஸ்வரன் வந்து அந்த காட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும், ஏன் இவ்வாறு நாட்டைவிட்டு, காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற கேள்வி கேட்கும் தொனியில் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்:

"காலனையும் காமனையும் காட்டுச் சிறு தொண்டர்தரும் 
பாலனையும் கொன்ற பழி போமோ -- சீலமுடன் 
நாட்டில் வாழ்திருக்கு நாதரே நீர் திருச்சங் 
காட்டிலே வந்திருந்தக்கால்."

ஈஸ்வரனே, நீ இதற்குமுன், காலன் என்னும் யமனையும், காமன் என்னும் மன்மதனையும், சிறுத் தொண்டரின் பிள்ளையும் கொன்றாய்; நீ, நாட்டில் மக்கள் இருக்கும் இடத்தில் இல்லாமல், யாருக்கும் தெரியாமல், இங்கு செங்காட்டில் வந்து ஒளிந்து கொண்டு வாழ்ந்தால், உன் மீது சுமத்தப்பட்ட இந்த கொலைப்பழிகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நினைக்கிறாயா? என்று கேள்வி கேட்டு இந்த வெண்பாவைப் பாடி இருக்கிறார் காளமேகப்புலவர்;
**


Tuesday, February 2, 2016

சேவடி நீட்டும் பெருமாண் மருகன்...

கந்தரலங்காரம்

தாவடியோட்டு மயிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்ட தன்றோ படி மாவலி பான்
மூவடி கேட்ட அன்று மூதண் கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமாண் மருகன் தன் சிற்றடியே--(15)


சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைச் சண்முகனே

கந்தரலங்காரம்

குப்பாச வாழ்க்கையும் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த
விப்பாச யெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பு
அப்பாதியாய் விழுமேரு குலுங்க விண்ணாரும் உய்யச்

சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைச் சண்முகனே--14)

திருவரைக் கிங்கிணி ஓசை படத் திடுகிட்ட அரக்கர்...

கந்தரலங்காரம்

ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிங்கிணி ஓசை படத் திடுகிட்ட அரக்கர்
வெருவரத்திக்குச் செவிடு பட்டு எட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே--(13)


தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து...

கந்தரலங்காரம்

படைபட்ட வேலவன் பால் வந் வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
உடை பட்ட தண்ட தாடாகமும் உதிர்ந்ததுடு படல
இடைபட்ட குன்றமுமா மேரு வெற்பும் இடிபட்டவே.--(12)


வாகனப் பீலியின் கொத் தசை படு கால் பட்டு அசைந்தது மேரு...

கந்தரலங்காரம்

குசை நெகிழா வெற்றி வேலோன் உணர் குடர் குளம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத்
தசை படு கால் பட்டு அசைந்தது மேரு அடி இட எண்

திசைவரை தூள் பட்ட அத் தூளின் வாரி இடர்ப்பட்டதே--(11)

எல்லையுள் செல்ல எனை விட்டவா...

கந்தரலங்காரம்

சொல்லுக்கில்லை என்று எல்லா இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா விகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரை கொவ்வைச் செவ்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே--(10)


வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

கந்தரலங்காரம்

தேனென்று பாகென்று வழிக் கொணா மொழித் தெய்வ வள்ளி
கோனன்று எனக்கு உபதேசித்த ஒன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

தானன்று நானன்ற சரீரியன்று சரீரியன்றே--(9) 

அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை...

கந்தரலங்காரம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியன் மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அனாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத்

தெளிய விளம்பியவா முகம் ஆறுடைத் தேசிகனே--(8)

குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து...

கந்தரலங்காரம்

சளத்திற் பிணிபட்ட சட்டுகரியைக் குட்டவிக்கு மென்ற
உளத்தற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய உணருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்

களத்திற் செருக்கிக் கழுதாட வேறொட்ட காவலனே-(7)

Monday, February 1, 2016

செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே

கந்தரலங்காரம்

பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பினான் மெல்ல மெல்ல உள்ள
வரும் புந்தனிப் பரமானந்தம் தித்தித் தறிந்தவன் றே

கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே.--(6)

குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே

கந்தரலங்காரம்

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமலைப்பா
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழ குன்று அழ சூரர் அழ விம்மி அழும்

குருத்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே.--(5)

இமைப் பொழுதினிற் கொன்றவனே

கந்தரலங்காரம்

ஒர ஒட்டா ஒன்றை உன்ன ஒட்டா மலரிட்டு உன தாள்
சேர ஒட்டா ஐவர் செய்வதென் யான் சென்று தேவருய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரி கக்க

கூர கட்டாரி இட்டோர் இமைப் பொழுதினிற் கொன்றவனே.--(4)

தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே

கந்தரலங்காரம்

தேரணி இட்டுப் புரமெரித்தான்  மகன் செங்கையில் வேல்
கூரணி இட்ட அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்தாக்கர்
நேரணி இட்ட வளைந்த கடக நெளிந்தது சூர்ப்

பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.--(3)

வெங்கூற்றன் விடுங்கயிற்றால்...

கந்தரலங்காரம்

அழித்துப் பிறிக்க ஒட்டா அயில் வேலன் கவியை என்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றீல் எரி மூண்ட தென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றால்

கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கு மன்றோ கலி கற்கின்றதே.--(2)

இதழியைத் தும்பையை

கந்தரலங்காரம்

பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப் பஞ்ச மென்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ் சடாடவிமே
லாற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. --(1)

கண்டு கொண்டேன்

கந்தரலங்காரம்

அடவருணைத் திருக் கோபுரத்தே யந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
றடபட என படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்

கட தட கும்பக் களிற்று இளைய களிற்றினையே.