Saturday, October 31, 2015

திருவிளையாடல்--18


பதினெட்டாம் திருவிளையாடல்:
மதுரையில் சிவன் நிகழ்த்திய செயல்களே திருவிளையாடல்கள் எனப்படும்;
(வருணனின் வயிற்றுவலியைப் போக்கி, அவனின் மழையை நிறுத்தி, கடலை வற்றச் செய்து மதுரையைக் காப்பாற்றிய செயலே பதினெட்டாம் திருவிளையாடல் ஆகும்).
முன் நடந்த நிகழ்கள்:- 
கடம்பவனம் மதுரையாகிறது;
மதுரையை குலசேகர பாண்டியன் ஆட்சி செய்கிறான்;
குலசேகர பாண்டியனின் மகன் மலயத்துவச பாண்டியன்;
மலையத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை;
மலையத்துவச பாண்டியன்--காஞ்சனமாலை இவர்களுக்கு வெகுகாலம் குழந்தையில்லாமல் இருந்துவந்து, பின்னர் இவர்களின் யாகத்தில் பிறந்த மகளே "தடாதகைப்பிராட்டி" (இவர் சிவனின் மனைவி உமாதேவியின் அம்சமாக பிறக்கிறாள்);
வடக்கிலிருந்து சிவன், மதுரைக்கு வந்து, தன்னை "சோமசுந்தர பாண்டியன்" என பெயர் மாற்றிக் கொண்டு, மதுரையை ஆளும் ராணியாக இருக்கும் தடாதகைப்பிராட்டியை திருமணம் செய்கிறான்;
சோமசுந்தர பாண்டியனுக்கும்-தடாதகைப் பிராட்டிக்கும் பிறந்த மகனே "உக்கிரவர்ம பாண்டியன்";
உக்கிரவர்ம பாண்டியன், காந்திமதி என்ற பெண்ணை மணக்கிறான்; அவர்களுக்கு "வீரபாண்டியன்" என்னும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அவன் அரசனாகிறான்;
வீரபாண்டியன் வேட்டைக்குப் போகும்போது ஒரு புலி தாக்கி இறக்கிறான்;
வீரபாண்டியனுக்கு ஒரு மகன் இருக்கிறான், அவன் பெயர் அபிஷேக பாண்டியன்; எனவே அபிஷேக பாண்டியனுக்கு முடிசூட்டும் விழா நடக்கிறது;
ஆக, இதுவரை 17 திருவிளையாடல்கள் நடந்து முடிந்து விட்டன;
இனி, 18-வது திருவிளையாடல்;
இந்திரன் சொன்னால் வருணன் மழையைக் கொடுப்பவன்; இந்த வருணனுக்கு தீராத வயிற்றுவலி உண்டாம்; இந்த வயிற்றுவலியை சிவன் ஒருவனால் மட்டுமே தீர்த்து வைக்க முடியுமாம்; இது அந்த வருணனுக்கும் தெரியுமாம்; எப்படி சிவனைப் பார்க்க முடியும் என்று மட்டும் வழி தெரியவில்லை; வருணனின் எஜமானான இந்திரனோ, சிவனின் எதிரி;
எனவே வருணன் ஒரு தந்திரம் செய்கிறான்; தொடர் மழையை பெய்கிறான்; கடல் பொங்கிவிட்டது; மதுரையை வந்து சூழ்ந்துவிட்டது; மக்கள் கதறுகிறார்கள்; அதை மதுரை மன்னன் அபிஷேக பாண்டியன் பார்க்கிறான்; மன்னனுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை; மன்னனுக்கு அழுகையே வந்துவிட்டது; இந்த நிகழ்வுகளை எல்லாம் சிவன் பார்க்கிறார்; வருணனின் வயிற்று வலியை போக்குகிறார்; மழை நின்றுவிட்டது; கடல் வற்றிவிட்டது; மதுரை மக்கள் தப்பித்தார்கள்;
இப்படி கடலை வற்ற வைத்து நிகழ்த்திய விளையாட்டே பதினெட்டாம் திருவிளையாடல்.
**

Wednesday, October 28, 2015

திருவிளையாடல்--17

திருவிளையாடல்--17
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(அபிஷேக பாண்டியனுக்கு முடிசூட்டும் விழா நடத்த மணி முடி இல்லாமல் தவித்த மந்திரிகளுக்கு, சிவன் வணிகனாக வேடமிட்டு அந்த மணிமுடியை வைத்திருந்த பெண்களிடமிருந்து அதைப் பெற்றுத்தந்த தந்த கதை).
சோமசுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் சிவபெருமான், தடாதகை பிராட்டியை திருமணம் செய்து, அவர் வயிற்றில் உக்கிரவர்மன் என்னும் குமாரனை பெற்றெடுத்தார்.
இந்த உக்கிரவர்ம பாண்டியன், சோமசேகரன் என்பவரின் புதல்வியான காந்திமதியை திருமணம் புரிந்து கொண்டார்.
இந்த உக்கிர வரம் பாண்டியனுக்கும், அவன் மனைவி காந்திமதிக்கும் பிறந்த புதல்வனே "வீரபாண்டியன்."
இந்த வீரபாண்டியன், காட்டிற்கு வேட்டைக்குப் போவது வழக்கம். அப்படி போகும்போது ஒரு முறை, வேங்கை இந்த வீரபாண்டியனை தாக்கியது. அதில் காயம் அடைந்து, வீரபாண்டியன் இறக்கிறான்.
இறந்த வீரபாண்டியனுக்கு, "அபிஷேக பாண்டியன்" என்னும் ஒரு மகன் இருக்கிறான்.
வீரபாண்டியன் இறந்தவுடன், அவனின் மகன் அபிஷேக பாண்டியனுக்கு பாண்டிய நாட்டின் மன்னனாக முடி சூட்ட ஏற்பாடுகள் மதுரையில் நடக்கிறது.
முடி சூட்டும் முகூர்த்த நேரம் வந்துவிட்டது. மந்திரிகள் புடைசூழ, மக்கள் கூடிவிட்டனர். அப்போது மந்திரிகள், அரசனின் முடி-கிரீடத்தை பார்க்கிறார்கள். அது இருந்த இடத்தில் காணவில்லை. திகைத்து விட்டார்கள்.
இறந்த தந்தையான வீரபாண்டியன் "பெண்கள் விஷயத்தில்" கொஞ்சம் ஈடுபாடு கொண்டவர். எப்போதும் காமக்கிழத்திகள் இவருடன் இருந்து கொண்டே இருப்பார்களாம். அவ்வாறு அவர் உயிருடன் இருந்த காலதிதல், காமக்கிழத்திகளுடன் உல்லாசமாக இருந்தபோது, அந்தப் பெண்கள், மன்னரின் கிரீடத்தை "லவட்டிக் கொண்டு" போய்விட்டனர். இப்போது மன்னரின் கிரீடம் என்னும் முடி, அந்த பெண்கள் கையில் உள்ளதாக தெரியவருகிறது. மந்திரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார்கள்.
இப்போது சிவபெருமான் மாறு வேடத்தில் வருகிறார்; ஒரு வணிகனைப் போல வேடம் அணிந்திருக்கிறார்; மிக அதிகமான மாணிக்கங்கள் கொண்ட ஒரு பொட்டலத்துடன் அந்த பெண்கள் வசித்து இடத்திற்குச் சென்று, அவர்கள் வேண்டும் அளவுக்கு மாணிக்கங்களைக் கொடுத்து, அந்த மணிமுடியைப் பெற்றுக் கொண்டார். அதை கொண்டு வந்து மந்திரிகளிடம் ஒப்படைத்து, அபிஷேக பாண்டியனுக்கு முடி சூட்டினார்கள்.
இவ்வாறு, மணிமுடி இல்லாமல், முடிசூட்டும் விழா குழப்பத்தில் இருந்தபோது, அங்கு சிவன் திருவிளையாடல் மூலம் அதை கொண்டுவந்து சேர்த்த விளையாடலே, பதினேழாவது திருவிளையாடல்.

**

Saturday, October 24, 2015

திருவிளையாடல்--16

திருவிளையாடல்--16
மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய விளையாட்டுக்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(சிவபெருமான் ஒரு அந்தணச் சிறுவனாக வேடம் கொண்டு, முனிவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை உணர்த்திய கதை).
சிவபெருமான், மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்தவர்; சோமசுந்தர பாண்டியன் என்ற பெயருடன் மதுரைக்குள் நுழைந்து, அங்கு மதுரை பாண்டிய மன்னன் மலயத்துவச பாண்டியனின் மகளான, (உமாதேவியின் உருவில் இருக்கும்) தடாதகைப்பிராட்டியை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே மாமியார் வீட்டில் தங்கி விடுகிறார்; மாமனார் ஏற்கனவே இறந்து விட்டார்; மாமியாரும், மனைவி தடாதகைப்பிராட்டியும்தான். இவருக்கு ஒரு மகன் பிறக்கிறான்; அவன்தான் உக்கிரவர்ம பாண்டியன்;
அவனுக்கும் திருமணம் நடக்கிறது; உக்கிரவர்ம பாண்டியனின் மனைவி காந்திமதி; இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; அந்த காலக்கட்டத்தில்தான், சிவபெருமான் என்னும் சோமசுந்தரபாண்டியன் வேறு எங்கு சென்று இருக்கிறார் போலும்! ஒருவேளை, தான் வாழ்ந்த இடமான, கைலாசத்துக்கு போய் இருப்பாரோ என்று சந்தேகமாக உள்ளது;
இப்படி இருக்கும்போது, முனிவர்கள் அனைவரும் அவரைப் பார்க்க வருகிறார்கள்; அதில் கண்ணுவ முனிவர் பெரிய முனிவர்; இந்த முனிவர்கள் யாருக்கும் வேதத்தின் உட்பொருள் தெரியவில்லையாம்;
எனவே சிவபெருமான், ஒரு அந்தணச் சிறுவனைப் போல ஆள் மாறி, அங்கு வந்து, முனிவர்களைப் பார்த்து அவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கிச் சொல்கிறார்; அதன்பின்னரே முனிவர்களுக்கு வேதத்தின் பொருளே விளங்குகிறதாம்.
இப்படியாக அந்தணச் சிறுவனாகி, வேதத்தை உபதேசித்த நிகழ்வே பதினாறாம் திருவிளையாடல்.
**


திருவிளையாடல்--15

திருவிளையாடல்--15
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாடல்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(உக்கிரவர்ம பாண்டியன், மேரு மலைக்குச் சென்று அங்கு வேண்டிய அளவுக்கு பொன்னை வாரிக் கொண்டுவந்து பாண்டிய நாட்டு மக்களுக்குக் கொடுத்து மகிழ்ந்த கதை).
சோமசுந்தரபாண்டியன்தான் சிவபெருமான்; இவரின் மகன்தான் உக்கிரவர்ம பாண்டியன்; இவன்தான் பாண்டிய நாட்டை ஆட்சி செய்கிறான்; உக்கிரவர்ம பாண்டியனின் மனைவிதான் காந்திமதி; இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; மன்னருக்கு மகன் பிறந்தபின்னர், பாண்டிய நாட்டில் மழை இல்லை; பஞ்சம் வாட்டுகிறது; இவருக்குத்தான் இந்திரன் எதிரி ஆயிற்றே! பின் எப்படி வருணனை வரவழைத்து பாண்டிய நாட்டில் மழையைப் பொழிய வைப்பார்; உக்கிரவர்ம பாண்டியன் மிகுந்த கவலைக்கு உள்ளானார்;
உக்கிரவர்ம பாண்டியனின் கனவில், சோமசுந்தர பாண்டியன் வருகிறார்; கனவில் வந்து, மகனிடம், "மகனே! நீ மேரு மலையை அடைந்து அங்குள்ள மேரு அரசனை, நான் கொடுத்த மூன்று ஆயுதங்களில் ஒன்றான "செண்டை(?)" ஆயுதத்தால் வெற்றி கொண்டு, அவன் உன்னை வணங்கும்படி செய்து அங்குள்ள பொன் நிரம்பிய அறைகளிலுள்ள பொன்னை வாரிக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு வா; அதை இங்கு பாண்டிய நாட்டு மக்களுக்கு தாராளமாக வழங்கு; அவர்கள் இந்த பஞ்சத்தின் கவலை இல்லாமல் வாழும்படி செய்;" என்று அவனின் கனவில் தோன்றி கூறுகிறார்;
மறுநாள், உக்கிரவர்ம பாண்டியன் தன் படைகளுடன் மேரு மலையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்; மேரு மலை எங்கிருக்கிறது? பாரத வருஷம் தாண்டி, (வருஷம் என்றால் நாடு), கிம்புருஷ வருஷம் தாண்டி, ஹரிவருஷம் தாண்டி,மேரு வருஷம் இருக்கிறது; இந்த மூன்று நாடுகளையும் தாண்டுவதே பெரிய வேலை! அதை அடுத்த இளாவிருத வருஷத்தின் நடுவில் உள்ளது இந்த மேரு வருஷம்; எப்படியோ மேரு நாட்டை அடைகிறான் மன்னன்; அங்குள்ள மேரு அரசன், பாண்டிய மன்னனை வரவேற்க வரவில்லை! உடனே பாண்டிய மன்னன், தன் தகப்பனார் சோமசுந்தர பாண்டியன் இவனுக்குக் கொடுத்த "செண்டை" என்னும் ஆயுதத்தை தூக்கி விட்டான்; உடனே பயந்த மேரு மன்னன், ஓடோடி வந்து பாண்டிய மன்னனின் கால்களில் விழுகிறான்; தன்னை மன்னித்துக் கொள்ளும்படியும், அங்குள்ள மலையில் குவிந்துள்ள பொன்னை எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிச் செல்லும்படி சொல்கிறான்; அவனது வீரர்களே, அவ்வளவு பொன்னையும் பொதிகளாகக் கட்டி பாண்டிய நாட்டு வீரர்களுக்கு கொடுக்கின்றனர்;
அவ்வளவு பொன்னையும் சுமந்து கொண்டு, பாண்டிய நாட்டுக்கு வருகிறான் பாண்டிய மன்னர் உக்கிரவர்ம பாண்டியன்; இங்கு பாண்டிய நாட்டில் மழையே இல்லை; பஞ்சம்; மக்கள் வாடுகிறார்கள்; மன்னர் பொன் கொண்டு வந்துள்ளார் என்று அறிந்தவுடன் மன்னரை வந்து பார்க்கிறார்கள்; பாண்டிய நாட்டின் எல்லா மக்களுக்கும் தான் கொண்டுவந்த பொன்னை வாரி வாரி வழங்கிவிட்டான்; மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள்! கடும்பஞ்சத்திலிருந்து பாண்டிய நாட்டைக் காப்பாற்றி விட்டான்.
இவ்வாறு சோமசுந்தர பாண்டியன் என்னும் சிவபெருமான், தன் மகன் உக்கிரவர்ம பாண்டியன் மூலமாக, மதுரையில் பாண்டிய நாட்டு மக்களுக்கு பொன்னை வழங்கி, அவர்களின் பஞ்சப்பசியை தீர்த்து அருள் வழங்கிய திருவிளையாடலே பதினைந்தாம் திருவிளையாடல்.
**


Friday, October 23, 2015

திருவிளையாடல்--14

திருவிளையாடல்--14
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாடல்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(உக்கிரவர்ம பாண்டியன், தன் எதிரி இந்திரனின் முடியை (கிரீடத்தை) தகர்த்து தோற்கடித்த கதை)
உக்கிரவர்ம பாண்டியன் மதுரையை ஆண்டு வருகிறான். (இவனே சிவபெருமானின் மகன்). இந்திரன் நமக்கு எதிரி என்று தந்தை சிவபெருமான் ஏற்கனவே மகன் உக்கிரவர்ம பாண்டியனுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அதற்காக மூன்று ஆயுதங்களும் மகனுக்கு கொடுத்திருக்கிறார்.
உக்கிரவர்ம பாண்டியன் அசுவமேத யாகம் செய்ய விடாதபடி, இந்திரன், மழையை ஏவிவிட்டு அதனால் கடல் பெருகி மதுரை அழியும் நிலையில் இருக்கும்போது, சிவன் கொடுத்த வேல் ஆயுதத்தை உக்கிரவர்ம பாண்டியன் எறிந்து அது பெரும் சுவராக மாறி மதுரையைக் காத்தது. அதில் இந்திரன் தோற்றுவிட்டான்.
ஆனால், இந்திரன் வேறு ஒரு வேலையைச் செய்கிறான். மதுரையைச் சுற்றி பாண்டிய நாட்டில் மழை இல்லாமல் செய்கிறான். அதை அடுத்த மற்ற நாடுகளிலும் மழை இல்லாமல் செய்கிறான். பெரும் பஞ்சம் ஏற்படுகிறது.
மற்ற நாட்டில் உள்ள மன்னர்கள் எல்லோரும் இந்திரனை பார்க்க செல்கின்றனர். ஏனென்றால், மழைக்கு கடவுள் இந்திரன்தான். அவனை வணங்கி கேட்டால், மழையைக் கொடுப்பான் என்று மற்ற மன்னர்கள் எல்லோரும் இந்திரனிடம் சென்று வணங்குகின்றனர். அவனோ, பாண்டிய மன்னன் வந்திருக்கிறானா என்று பார்க்கிறான். பாண்டிய மன்னன் அங்கு வரவில்லை. பாண்டிய நாட்டில் பஞ்சம் இருந்தாலும் அவன், தன் எதிரி இந்திரனைப் பார்க்க விருப்பம் இல்லை.
இந்திரன், மற்றவர்கள் நாட்டில் மட்டும் மழை பெய்யும்படி ஆணை இடுகிறான். மற்ற நாடுகளில் மட்டும் மழை பெய்கிறது. பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவே இல்லை;
உக்கிரவர்ம பாண்டியனுக்கு கோபம் உச்சிக்குப் போகிறது. நேராக மேகங்களைப் பிடித்து கட்டி இழுத்து வருகிறான். அவ்வாறு இழுத்துவந்த மேகங்களை சிறையில் வைத்து அடைத்து விட்டான். (மேகங்களை சிறைப்பிடித்தது இராவணன் மகன் மேகநாதன் என்று ஒரு கதை இருக்கிறதே? கொஞ்சம் குழப்பம்தான்!)
மேகத்தை சிறையிட்ட பாண்டிய மன்னன் மீது, இந்திரனுக்கு கோபம். இந்திரன், பெரிய படையுடன், பாண்டிய மன்னனுடன் போருக்கு வருகிறான். சிவபெருமான் ஏற்கனவே அவரின் மகன் உக்கிரவர்ம பாண்டியனுக்கு மூன்று ஆயுதங்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்று இந்திரனின் முடியை (கிரீடத்தை) கீழே சாய்க்கும் வல்லமை உடையது. உக்கிரவர்ம பாண்டியன், தன்னிடம் சிவன் கொடுத்த வளை என்னும் ஆயுதத்தை, இந்திரனின் மீது விட்டு, அவனின் கிரீடத்தையே கீழே தள்ளி நொறுக்கி விட்டான். (இந்திர பதவிக்கு கிரீடம் அதிக முக்கியம் போலும்; அது இல்லாமல் பதவியில் இருக்க முடியாதோ!).
உடனே, இந்திரன் தோற்று, பாண்டியனிடம் சமாதானம் செய்து கொள்ள வருகிறான். ஆனால் பாண்டியனோ, எதிரியுடன் சமாதானமா என்று மறுக்கிறான்.
ஆனால், விவசாயிகள் (அப்போது அவர்களை வேளாளர்கள் என்கின்றனர்) பாண்டிய மன்னரை சந்தித்து, விவசாயம் செய்வதற்கு இந்த மேகங்கள் இருந்தால்தான் மழை பொழியும். பாவம் இந்திரன், பிழைத்துப் போய்விடட்டும்; நீங்கள், இந்த சிறைப்பிடித்த மேகங்களை விடுவித்துவிடுங்கள். இனி உங்களிடம் இந்திரன் எந்த வம்பும் செய்ய மாட்டான்; மேகங்களுக்காக, நாங்கள்  அதற்கு பிணையாக இருக்கிறோம். எனவே மேகங்களை மட்டுமாவது விடுவியுங்கள் என்று கெஞ்சுகின்றனர்.
(எப்பவுமே, நாம் யாருக்காக சண்டை போடுகிறோமோ, அவர்கள் நம் எதிரியைப் பார்த்து இரக்கப்படுவார்கள் போலும்).
இப்படி மேகங்களை சிறைப்பிடித்து இந்திரனுக்கு பாடம் கற்பித்த விளையாடல் பதினான்காந் திருவிளையாடல் எனப்படும்.
**


திருவிளையாடல்--13

திருவிளையாடல்--13
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(எதிரி இந்திரன், வருணனை ஏவிவிட்டு மழைப் பொழிந்து கடல் நீர் மதுரையை மூழ்கடிக்க வருகிறது அதை வேல்கொண்டு சோமசுந்தரபாண்டியன் என்கிற சிவபெருமானின் மகன் உக்கிரவர்மன் தடுக்கும் கதை)
சோமசுந்தரபாண்டியன்--தடாதகைப்பிராட்டி இவர்களின் ஒரே மகன்தான் உக்கிரவர்ம பாண்டியன்; அவனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவன் மனைவி பெயர் காந்திமதி. இவனின் தகப்பனார்தான் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான். இவர் சில ஆயுதங்களை தன் மகனுக்குக் கொடுத்து, ஆபத்துக்கு உதவும் சில அறிவுரைகளையும் சொல்லி உள்ளார். எதிரிகள் யார் யார் என்றும் சொல்லி உள்ளார்;
இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, உக்கிரவர்ம பாண்டியன், மதுரையை ஆண்டுவருகிறான்; அப்போது அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு ஆசை வருகிறது;
அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய யாகம்; அதைச் செய்ய மிகுந்த பொருள் செலவும் ரிஷிகளும் தேவை; ஒரு அசுவமேத யாகம் செய்வது என்பதே ஒரு மன்னரால் முடியாத விஷயம்; அப்படி இருக்கும்போது இவன் மொத்தம் 100 அசுவமேத யாகங்கள் செய்து விடவேண்டும் என்று நினைக்கிறான்; அசுவ என்றால் குதிரை; அதை வைத்து யாகம் செய்து அதன் தலையிலோ, முதுகிலோ ஒரு வெற்றித் துணியை கட்டி நாடுநாடாக ஓடவிடுவது; யாராவது அதை அடங்கிவிட்டால் அந்த மன்னன் மீது படைஎடுத்து அவன் நாட்டையும் அங்குள்ள செல்வங்களையும் பறித்துக் கொள்வது; இப்படி எல்லா நாட்டு மன்னர்களையும் வெற்றி கொண்டாலும், அல்லது யாரும் இவனை எதிர்க்க துணியாவிட்டாலும், இவன் ஜெயித்துவிட்டதாக அறிவித்துக் கொள்வான்; இப்படியாக 100 யாகங்கள் செய்தால் "இந்திர பதவி" இவனுக்கு வந்துவிடும்; ஏற்கனவே அந்த பதவியில் உள்ள இந்திரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவான்; (நம்ம ஊர் மந்திரிசபை மாதிரியே இருக்கிறது?).
இப்படிப்பட்ட அசுவமேத யாகத்தை, இந்த உக்கிரவர்ம பாண்டியன் 96 யாகங்களை செய்து முடித்து விட்டான்; இன்னும் 4 யாகங்கள்தான் பாக்கி உள்ளது; அதையும் வெற்றியுடன் முடித்து விட்டால், இந்திர பதவி இவனுக்கே வந்துவிடும்!
இந்த தகவல், ஒரிஜினல் இந்திரனுக்கு (அப்போது இந்திர பதவியில் இருக்கும் இந்திரனுக்கு) தெரியவருகிறது; நம்மை பதவியிலிருந்து இரக்க பாண்டிய மன்னன் வருகிறானா? விடக்கூடாது; பொறாமை ஏற்படுகிறது;
ஏற்கனவே, பாண்டிய மன்னனின் தகப்பனார் சோமசுந்தர பாண்டியன் என்கிற சிவபெருமான் தன் மகனுக்கு இந்த இந்திரன் பொல்லாதவன் என்று சொல்லியுள்ளார். இந்த இந்திரன் நமக்கு பகை என்றும்; அவனையும் மற்ற எதிரிகளையும் ஒடுக்க வேண்டி, மூன்று ஆயுதங்களையும் அவர் கொடுத்திருக்கிறார்.
இப்போது, இந்திரன் கோபம் கொண்டு, வருணனைக் கூப்பிட்டு, மழையைப் பொழிந்து பாண்டிய நாட்டையை கடல் கொள்ளும்படி அழித்துவிடு என்று கட்டளை இடுகிறான்.
மழை! ஒரே ஒரு இரவுதான் மழை! பேய் மழை! கடலே பெருகிவிட்டது! கடல் சினத்துடன் மதுரைநகருக்குள் நுழைகிறது; பாண்டிய மன்னன் உக்கிரவர்மன் தவிக்கிறான்; மக்களைக் காப்பாற்ற முடியாதோ? தன் தந்தை சொல்லிக் கொடுத்தபடி, தன்னிடமுள்ள வேலை எறிகிறான். அது மதுரையைச் சுற்றி பெரிய சுவராக மாறி நிற்கிறது; கடலால் ஒன்றும் செய்ய முடியவில்லை; மதுரை காப்பாற்றப்பட்டு விட்டது. மக்களும் நிம்மதியானார்கள். பாண்டிய மன்னனை வாழ்த்தினார்கள்; இந்திரனின் செயல் எடுபடவில்லை;
இதை சிவபெருமானின் மகனான உக்கிரவர்ம பாண்டியன் நிகழ்த்தினாலும், சிவன் கொடுத்த வேலால் மட்டுமே இதைச் செய்ய முடிந்ததால், இதுவும் சிவபெருமானின் விளையாட்டுடன் சேர்ந்துவிட்டது போலும்.
சிவனின் வேல் கொண்டு கடலைத்தடுத்த இந்தச் செயலே பதிமூன்றாம் திருவிளையாடல்.
**


திருவிளையாடல்--12

திருவிளையாடல்--12
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாட்டுக்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(சோமசுந்தர பாண்டியன், தன் மகன் உக்கிரவர்மனுக்கு, அவன் சிறுவனாக இருக்கும்போதே, மூன்று ஆயுதங்களை கொடுத்து ஆசீர்வதிக்கும் செயல்)
சோமசுந்தர பாண்டியனுக்கும் அவர் மனைவி ராணி தடாதகைப்பிராட்டிக்கும் பிறந்த மகன்தான் இந்த உக்கிரவர்ம பாண்டியன்; சிறு வயதில் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான். மன்னன் ஆவதற்குறிய தகுதிகள் ஏற்படுகிறது. அவனின் பெற்றோர், இளம் வயதிலேயே அவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அந்த பெண்ணின் பெயர் "காந்திமதி". (அதாவது சிவபெருமானின் மருமகளின் பெயர் காந்திமதி).
மகனுக்கு எல்லாத் தகுதியும் வந்துவிட்டதாக அவனின் தகப்பனாரான சோமசுந்தரபாண்டியன் என்கிற சிவபெருமான் நினைத்துக் கொள்கிறார்; ஆனாலும், தந்தை என்ற முறையில் சில இரகசியங்களை அவனுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.
ஒருநாள் மகனை அழைக்கிறார்; அவனிடம் கூறுகிறார்;
"மகனே கேள்! இந்திரன் உனக்கு பெரிய எதிரி; கடலும் உனக்கு எதிரி; மேரு மலை உன்னைப் பார்த்து தருக்கு கொண்டு ஆணவத்துடன் நிமிர்ந்து நிற்கும்; எனவே இந்த எதிரிகளை அடக்கி ஆள உனக்கு நான் மூன்று ஆயுதங்களை கொடுக்கிறேன்; இந்திரனின் முடியை பிடிக்க இந்த வளையை வைத்துக் கொள், இந்திரனின் முடியையே சிதைத்து விடலாம்; இந்த வேல் படையை வைத்து கடலுக்கு அனுப்பு அது பயந்துவிடும்; இந்த செண்டை வைத்து அந்த மேரு மலையை அடித்தாய் என்றால் அது அடங்கி ஒடுங்கிவிடும்; இந்த மூன்று ஆயுதங்களுமே உனக்கு தேவைப்படுபவைகள்தான்; இதை உனக்கு நான் அளித்து உன்னை ஆசீர்வதிக்கிறேன்" என்று மகனுக்கு அந்த ஆயுதங்களை கொடுக்கிறார்;
இவ்வாறு மகனுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஆசி அளிக்கும் நிகழ்வே இந்தப் பன்னிரண்டாம் திருவிளையாடல் ஆகும்.
**