ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், "என்னைச் சரணடை; நான் உன்னைக் காக்கிறேன்."
கர்த்தர் சொல்கிறார், "நீ முழுதாக என்னைச் சேர்; நான் உன்னை கைவிட மாட்டேன்."
அல்லா சொல்கிறார், "நானே எல்லாம் வல்லவன் என உன்னை என்னிடம் ஒப்படை; உனக்குத் துணை நிற்பேன்."
இறைநிலை என்ற எல்லாக் கடவுளுமே ஒன்றையே சொல்கின்றன, "அவனை/அந்த சக்தியை நம்ப வேண்டும் என்று."
மனிதனிடம் ஒன்றுமில்லையா? அப்படியென்றால் மனிதனிடமுள்ள அந்தத் தன்னம்பிக்கை எது? தன்னம்பிக்கையும் அந்த சரணடைதலுக்குள் அடங்கி விட்டதா?
ஏன், அவனை (இறைநிலையை) நம்பாதவனுக்கு இறைவன் உதவ மாட்டானா? நம்பாத மிகப் பலருக்கு அதிகமாகவே உதவி இருக்கிறானே?
அவன் உதவுவது, உதவாமல் போவது, இதில் எதிலேயும் இறைவன் இல்லை! அவனை நம்பவேண்டும் என்று சொல்வது, உண்மையில் உன்னையே நீ நம்ப வேண்டும் என்று சொல்ல வருகிறானா? அதற்குப் பதிலாக, "உன்னையே நீ நம்பிக்கொள்" என்று ஒருவரியில் சொல்லிவிட்டுப் போகலாமே!
எல்லா மனிதப் பிறவிகளும் ஏதோ ஒரு வாழ்க்கையை அவரவர் வழிப்படி (விதிப்படி) வாழ்ந்து முடிக்கிறார்கள். இதில் இறைவனின் வேலை எங்கிருக்கிறது? அவன்தான் எல்லா மனிதனின் எல்லாஅசைவுகளுக்கும் (எல்லா வாழ்க்கை முறைக்கும்) காரணம் என்றால், தானே வாழ்ந்ததாகவும், வாழ்வை அனுபவித்ததாகவும் (நல்லதும் கெட்டதும்) மனிதன் நினைக்கிறானே அது தவறா?
ஸ்ரீகிருஷ்ணன், "பிரபஞ்சமே நான்தான். உன்னைப் படைத்தவன் நான், காப்பவன் நான், அழிப்பவன் நான். உன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் நான் இட்ட கட்டளையே; நீ செய்யும் எல்லாச் செயல்களும் எனக்காகச் செய்வதே தவிர, உனக்காக அல்ல என்று கூறுகிறார்;
பிறகெற்கு மனிதன் சுயஅறிவுடனும், சுய புத்தியுடனும் இருக்க வேண்டும்?