Thursday, December 31, 2015

என்னைச் சரணடை

ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், "என்னைச் சரணடை; நான் உன்னைக் காக்கிறேன்."
கர்த்தர் சொல்கிறார், "நீ முழுதாக என்னைச் சேர்; நான் உன்னை கைவிட மாட்டேன்."
அல்லா சொல்கிறார், "நானே எல்லாம் வல்லவன் என உன்னை என்னிடம் ஒப்படை; உனக்குத் துணை நிற்பேன்."
இறைநிலை என்ற எல்லாக் கடவுளுமே ஒன்றையே சொல்கின்றன, "அவனை/அந்த சக்தியை நம்ப வேண்டும் என்று."
மனிதனிடம் ஒன்றுமில்லையா? அப்படியென்றால் மனிதனிடமுள்ள அந்தத் தன்னம்பிக்கை எது? தன்னம்பிக்கையும் அந்த சரணடைதலுக்குள் அடங்கி விட்டதா?
ஏன், அவனை (இறைநிலையை) நம்பாதவனுக்கு இறைவன் உதவ மாட்டானா?  நம்பாத மிகப் பலருக்கு அதிகமாகவே உதவி இருக்கிறானே?
அவன் உதவுவது, உதவாமல் போவது, இதில் எதிலேயும் இறைவன் இல்லை! அவனை நம்பவேண்டும் என்று சொல்வது, உண்மையில் உன்னையே நீ நம்ப வேண்டும் என்று சொல்ல வருகிறானா? அதற்குப் பதிலாக, "உன்னையே நீ நம்பிக்கொள்" என்று ஒருவரியில் சொல்லிவிட்டுப் போகலாமே!
எல்லா மனிதப் பிறவிகளும் ஏதோ ஒரு வாழ்க்கையை அவரவர் வழிப்படி (விதிப்படி) வாழ்ந்து முடிக்கிறார்கள். இதில் இறைவனின் வேலை எங்கிருக்கிறது? அவன்தான் எல்லா மனிதனின்  எல்லாஅசைவுகளுக்கும் (எல்லா வாழ்க்கை முறைக்கும்) காரணம் என்றால், தானே வாழ்ந்ததாகவும், வாழ்வை அனுபவித்ததாகவும் (நல்லதும் கெட்டதும்) மனிதன் நினைக்கிறானே அது தவறா?
ஸ்ரீகிருஷ்ணன், "பிரபஞ்சமே நான்தான். உன்னைப் படைத்தவன் நான், காப்பவன் நான், அழிப்பவன் நான். உன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் நான் இட்ட கட்டளையே; நீ செய்யும் எல்லாச் செயல்களும் எனக்காகச் செய்வதே தவிர, உனக்காக அல்ல என்று கூறுகிறார்;
பிறகெற்கு மனிதன் சுயஅறிவுடனும், சுய புத்தியுடனும் இருக்க வேண்டும்?

Tuesday, December 29, 2015

ப்ருஹத் ஸாம ராகம்

ப்ருஹத் ஸாம ராகம்
ஸ்ரீ கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் சொல்கிறார்;
"நான்  ராகங்களில் ப்ருஹத் ஸாமம்;  
கவிதைகளில் காயத்திரி;  
மாதங்களில் மார்கழி;  
பருவங்களில் வசந்தம்."
எல்லா உயர்வான விஷயங்களிலும் நான் உயர்ந்தவன் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் இப்படிக் கூறுகிறார்:
"ராகங்களில் இந்த ப்ருஹத் ஸாமம்" 
ஒரு இனிமையான ராகம்; இந்த ராகத்தை இரவில்தான் பாடுவார்கள்; கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்குமாம்; இது சாமவேதத்தில் உள்ளது; இதை இறைவனுக்காக தேவர்கள் இசைப்பார்களாம்;
"மந்திரங்களில் நான் காயத்திரி" 
மந்திரங்களிலேயே இது முக்கியமானது; இந்த மந்திரத்தின் ஆசிரியர் பிரம்மா; இந்த மந்திரத்தை ஜபிப்பதால் ஒருவன் சித்தி அடைந்து, இறை நிலையில் நுழைய முடியுமாம்.
"மாதங்களில் நான் மார்கழி"
12 மாதங்களிலும், ஏன் இந்த மார்கழியை மட்டும் ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்திருக்கிறார்? இந்தியாவில் மார்கழி மாதத்தில் பயிர்களெல்லாம் விளைந்து அறுவடை செய்யப்படுமாம். இந்த மாதமே வெப்பமும் இல்லாமல், கடுங்குளிரும் இல்லாமல் மித குளிர் உள்ள காலம்; நாம் காஷ்மீர், ஊட்டி போவது இந்த குளிரை அனுபவிக்கத்தான். அது நமக்கு வருடத்தில் ஒருமாதமான மார்கழியில் வருகிறது. உண்மையில் அந்த மாதத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே போய், வெட்டவெளியில் ஒருமுறையேனும் அந்த மார்கழிக் குளிரை அனுபவிக்க வேண்டும்.
"பருவங்களில் நான் வசந்தம்"
இந்த மார்கழி போலவே, வசந்தமும் பருவகாலத்தில் சிறப்புப் பெற்றது. வசந்தகாலத்தில் தாவரங்கள் எல்லாம் பூக்கள் பூத்து குலுங்கும்; எல்லா தாவரங்களும் சந்தோஷமாக இருக்கும் காலமே இந்த வசந்தகாலம்; ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள் இந்த வசந்தகாலத்தில்தான் நடந்தனவாம்; மகாகவி காளிதாஸ் இந்த வசந்தகாலத்தை தன் ருதுவம்சம் என்று நூலில் வெகு விமரிசையாகப் பாடியுள்ளார். வாய்ப்பு கிடைப்பவர்கள் படிக்கலாம்.
அந்த பகவத்கீதையின் பாடல்:
"ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸானாம் மர்கசீர் ஷோ  (அ)ஹம்ருதூனாம் குஸூமாகர:"
ப்ருஹத்ஸாம = ப்ருஹத்ஸாமம் என்ற சாமவேதப் பாட்டு;
ததா = அதனுடன்;
ஸாம்நாம் = சாம வேதப்பாட்டு;
காயத்ரீ = காயத்ரி மந்திரம்;
சந்தஸாம் = கவிதை;
அஹம் = நான்;
மாஸானாம் = மாதங்களில்;
மார்கசீர்ஷோ அஹம் = நான் மார்கழி;
ருதூணாம் = பருவ காலங்களில்;
குஸூமாகர = வசந்த காலம்;
.

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை
கிருத்திகையானது மூன்றாம் நட்சத்திரம்; இது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்;
ஒரு சமயம், அக்கினி தேவன் சப்த ரிஷிகளின் மனைவிகளைப் பார்த்து மோகித்தான்; இதைக் கண்ட அவன் மனைவி பாரி சுவாகாதேவி தனது கணவன் அந்த ரிஷிகளின் மனைவிகளால் சபிக்கப்படுவான் என்று அஞ்சி, அருந்ததி தவிர்த்தி மற்ற ஆறு மனைவிகளின் உருவம் தாங்கி, ஆறு மனைவிகளாகி அவளின் கணவனைக் கூடினாள்;  அந்த ஆறுபேருமே கிருத்திகை ஆகினர்; இவர்களால் வளர்க்கப்பட்டதால், குமாரக் கடவுள் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றார்;
அயன சயனத்தால், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு காலத்தில் முதலாவதாக வரும்;
திருஞானசம்மந்தர் காலத்தில், இந்த கிருத்திகை நட்சத்திரம் தான் முதலாவது நட்சத்திரமாக கணக்கிடப்பட்டது;

Monday, December 28, 2015

ஆஞ்சநேய


ஆஞ்சநேய மித பாடலா நநம்காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம்!பாரிஜாத தருமுல லாஸினம்பாவாயாமி பவமாந நந்தநம்!யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம்தத்ர தத்ர க்ருத மஸ்த காஞ்ஜலிம்!பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம்மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம்! 


Thursday, December 24, 2015

குற்றமனைத்தும் குணமனைத்தும்...

விதானமாலை-5

குற்றமனைத்தும் குணமனைத்தும் கோளினன்மை தின்மை
அற்ற நிலையு முதய ஆருடக் கவிப்பு முச்சச்
சுற்ற முதலைந்தும் வர்க்கங்கள் ஆறும் தொன்மா தெசையும்
பற்றிய தற்கால சக்கரத் தாண்டும் பகர்குவனே.

குற்றங்களையும் குணங்களையும் ஒருங்கே காட்டுகிற மரபியல் படலம், பஞ்சாங்க படலம், குணா குணப் படலம், என்பனவற்றையும், கிரகங்களின் நன்மை தீமைகளைத் தெரிவிக்கின்ற சந்திர கெதிப் படலத்தையும், கோசரப் படலத்தையும், உதயம் ஆருடம் கவிப்பு என்னும் மூன்றனையும் உணர்த்துகின்ற உதய ஆருடக் கவிப் படலத்தையும், உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் என்பனவற்றையும் உணர்த்துகின்ற நட்பு ஆட்சி உச்ச பகை நீசப் படலத்தையும், அறுவகை வர்க்கங்களை உணர்த்துகின்ற சட்டுவர்க்கப் படலத்தையும் மகர் தெசைப் படலத்தையும், கால சக்கர படலத்தையும் கூறுவேன்.

கைந்நீத்து நீத்துவ...

விதானமாலை-4

முந்நீர் கடல்களனைத்தினையும் ஒரு மூர்த்தத்தினிற்
கைந்நீத்து நீத்துவ னென்பவன் போலக் கலை வடசொற்
தொன்னூற் பல விதச் சோதிட முற்று என் புன் சொற்களால்
நன்னூலெனச் சொல்லி வந்து நின்றேன் நகை செய்குவரே!

ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூன்று வகை நீர் அமைந்த சமுத்திரங்கள் எல்லாவற்றையும் ஒரு முகூர்த்த காலத்துக்குள் கை நீச்சலாக நீந்திக் கடப்பவன் போல, கலைகளையுடைய வடமொழி நூல் பலவற்றினும் உள்ள சோதிடம் முழுவதையும் எனது பயன்றற சொற்களினால் தமிழ் மொழியில் பாடி அதனை நன்லூல் என்று சொல்லி இங்கு வந்து நின்றேன்; அறிஞர்கள் இதனைக் கண்டு சிரிப்பார்கள்;


பார்க்கவனை நாரதனை...

விதானமாலை-3

பார்க்கவனை நாரதனைக் குருவைப் பராசரனைக்
கார்க்கியன் பாரத்துவாசன் வசிட்டனைக் கைகுவித்துத்
தீர்க்க வணக்கஞ்செய்து ஆங்கு அவர் ஆரியச் செம்பனுவல்
ஏற்க மனங்கோண்டு இறைஞ்சி என் ஆர்வத் திருத்துவனே.

சுக்கிரன், நாரதன், குரு என்னும் வியாழன், பராசரன், கார்க்கியன், பாரத்துவாசன், வசிட்டன் என்னும் ஆசிரியர்களைக் கைகுவித்து நிறைய வணக்கம் செய்து அவர்கள் கூறிய வடமொழி  நூல்களை இயையும்படி சிந்தித்து வணங்கி எனது விருப்பத்தில் அமைப்பேன்.

ஒன்றாய் பலவாய்

விதானமாலை-2

ஒன்றாய் பலவாய் சுடர் இரண்டாய்  ஒளிர் மூன்று உருவாய்
என்று அவை யீற்றில் ஆருயுராய் அனாதியாயும் உம்பர்
சென்றா சொழித்திட சங்காழி ஏந்தி திருவினோடுங்
குன்றாது நின்ற குணன் சரணாம்புயங் கூறுவனே.

ஏகமாயும், அனேகமாயும், சூரிய சந்திரராகிய இரு சுடர்களாகியும், விளங்குகிற சங்கருடணன், பிரத்தியுமினன்,அநிருத்தன் என்னும் திரி மூர்த்திகளாயும், அவர்களல்லாத சீவசகங்களாயும், அவற்றிற்கு உள்ளுயிராயும், பிரமா முதலிய தேவர்கள் குறையிரந்து சென்று வணங்கி தங்குற்றத்தை தீர்க்கப்பொருட்டு சங்கு சக்கரந் தரித்து இலக்குமியுடன் குறைவின்றி நிலைபெற்றவருமான நாராயண மூர்த்தியுனுடைய பாத தாமரைகளைப் புகழ்ந்து கூறுவனே.

பூமகள் கேள்வன்

விதானமாலை
பூமகள் கேள்வன் பொன்னாடையன் புட்கொடியோன் புனித
நாமகள் கோனைத் தன் நாபியில் தந்தவன் மறையின்
பாமயன் அச்சுதன் பங்கயம் கண்ணன் பஞ்சாயுதன் தாள்
சேமம் என்று எண்ணி என் சிந்தையில் சென்னியில் சேர்த்துவனே.

இலக்குமியின் நாயகன், பீதாம்பரத்தை உடையவன், கருட கொடியை உடையவன், களங்கமற்றவன்,  சரஸ்வதியின் நாயகனான பிரம்மாவை தமது உந்திக் கமலத்திலிருந்து தோற்றுவித்தவன், நான்கு வேதங்களின் வடிவானவன், அழிவில்லாதவன், செந்தாமரை மலர்போன்ற கண்களை உடையவன், சங்கு சக்கரம் தண்டு வில் வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் உடையவனாகிய நாராயண மூர்த்தியுடைய திருவடிகளை நான் தரிசித்து நூலுக்கு காவல் நினைத்து மனதிலும் சிரசிலும் இருத்திக் கொள்வேன்.

அண்டம் சுருங்கில்


அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.
             (திருமந்திரம்)

ஊர்மிளை

ஊர்மிளை
ஜனக மன்னனின் வளர்ப்பு மகள் இந்த ஊர்மிளை;

இலட்சுமனனின் மனைவியானாள்; 

இலட்சுமனன், தன் சகோதரன் ஸ்ரீராமனுடன் காட்டுக்குச் சென்றபோது, லட்சுமனின் மனைவி அவருடன் செல்லாமல் அரண்மனையிலேயே தங்கிவிட்டாள்; ஆனால், லட்சுமனன் 14 வருடங்கள் காட்டில் திரிந்து திரும்பி வரும் வரை, அவர் மனைவி ஊர்மிளை நித்திரையிலிருந்து விழிக்காமல் (இரவும் பகலும் தூங்கிக் கொண்டே) இருந்தாளாம்; 

அதேபோல, காட்டில் இருந்த லட்சுமனனும் 14 வருடங்களாக தூங்காமலேயே இருந்தாராம்; 

Sunday, December 20, 2015

கந்தரனுபூதி

கந்தரனுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதிராய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

Saturday, December 19, 2015

சடாயு பார்க்

சடாயு பார்க்
இராமாயணக் கதையில் ஜடாயு என்ற கழுகு பிரபலம்; இந்த கழுகுக்கு கேரளாவில் ஒரு பார்க் உருவாக்குகிறார்கள்; ஜடாயு இயற்கை பூங்கா என்று சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்துகிறார்கள். அதில் 200 அடி உயரத்துக்கு ஜடாயு கழுகின் சிலையை ஏற்படுத்துகிறார்கள்;
இராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்லும்போது, இராவணனைத் தடுத்து நிறுத்தி சண்டையிட்ட சடாயு என்ற கழுகு, கடைசியில் இராவணனால் இறந்து விட்டது; அவ்வாறு அது இறந்த இடம்தான் இப்போது ஏற்படுத்தப் போகும் ஜடாயு பூங்கா;
இது கேரளாவில் சடாயுமங்களம் என்ற கிராமத்தில் 100 அடி உயர மலையில் இருக்கிறதாம்;

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்
சைவ சமய குரவர்கள் நால்வரும் ஒருவர் இந்த சுந்தரமூர்த்தி நாயனார்; கைலாசத்தில் சிவபெருமான் அடியார்களுள் ஒருவராய் "ஆலால சுந்தரர்" என்னும் பெயருடன் இருந்தார்; அங்கு உமாதேவியருக்கு சேடிகள் இருக்கின்றனர்; இந்த சேடிகள் மீது, இந்த ஆலால சுந்தரர் ஆசைப்பட்டிருக்கிறார்; இதைத் தெரிந்த சிவன், இவரை மானிடாரகப் பிறந்து கஷ்டப்ட பூலோகத்துக்கு அனுப்பி விட்டார்; இங்கு திருநாவலூரில் சடையனாருக்கு மகனாகப் பிறக்கிறார்; அந்த  சேடியர்களில் இருவர், இங்கு பரவையார் என்ற பெயரில் திருவாரூரிலும், சங்கிலியார் என்ற சேடி திருவொற்றியூரிலும் பிறக்கிறார்கள்; ஆனால், ஆலாலசுந்தரர், கைலாசத்தை விட்டு பூவுலகுக்கு கிளம்புவதற்கு முன், வருந்தி அழுதிருக்கிறார்; இதைக்கண்ட சிவன், அவருக்கு ஆறுதல்கூறி, "நான் உன்னை பூலோகத்தில் வந்து ஆட்கொள்வேன், கவலைப்படாதே" என்று கூறி உள்ளார்; சுந்தரமூர்த்தியும் பூலோகத்தில் பிறந்து, திருமண வயதை அடைந்துள்ளார்; அப்போது, அவரின் திருமண நாளில் அங்கு வந்த சிவன், ஒரு கிழவன் வேடத்தில் வந்து, "நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது; நீ, என் அடிமை; என் அனுமதியில்லாமல் திருமணம் செய்ய முடியாது" என்று தடுத்திருக்கிறார்; "உங்களை நான் எங்கும் பார்த்ததில்லையே, எப்படி நான் உங்களின் அடிமையாக இருக்க முடியும்" என்று சுந்தரமூர்த்தி கேட்டிருக்கிறார்; அவரை தனியே அழைத்துச் சென்ற சிவன், தான் யார் என்று காண்பித்து, அவரின் பழைய பிறவியை நினைவுபடுத்தி அருள் புரிந்தார்; திருவாரூரில் இருக்கும்போது, அங்குள்ள பரவையாரை பார்த்து அவரிடம் மயங்கி, சிவனை அவருக்கு தூது அனுப்புகிறார்; அவரை திருமணம் செய்து அவருடன் வாழ்கிறார்; பின்னர் திருவொற்றியூருக்கு வருகிறார்; அங்கு சங்கிலியாரையும் சந்தித்து அவருடன் வாழ்கிறார்; சங்கிலியாரிடம் பொய் சொல்லி வாழ்கிறார்; அதனால் இவருக்கு கண்பார்வை போய்விடுகிறது; அதனால் இவர் சிவன் மீது பதிகம்பாடி பார்வை பெறுகிறார்; சிவபெருமானுக்கு நெருங்கிய தோழராக ஆலாலசுந்தரம் என்று கைலாசத்தில் இருந்தபோதும், அங்கு செய்த தவறுக்காக மனித பிறவி எடுத்து, கஷ்டப்பட்டு, பின் கடவுளை அடைகிறார்; 

Tuesday, December 15, 2015

பரண க்ருபாகர ஞானாகர

கந்தரலங்காரம்
மரண பரமாத நமக்கில்லையாமென்றும் வாய்த்ததுணை
கிரணக்கலாபியும் வேலுமுண்டே கிங்கிணிமுகுள
சரண ப்ரதாபச் சிதேவி மங்கல்ய தந்துரக்ஷர
பரண க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே.

கோழிக் கொடியன் அடி பணியாமற்....

கந்தரலங்காரம்

கோழிக் கொடியனடி பணியாமற் குவயலத்தே
வாழக் கருது மதியிலி ஆகளுங்கள் வல்வினை நோ
யூழிற் பெருவலியுண்ண வொட்டா துங்களத்த மெல்லா
மாழப் புதைத்து வைத்தால்  வருமோ நும்மடிப்பிறகே.

நிர்க்குணம்பூண்டு என்னை மறந்திருந்தே...

கந்தரலங்காரம்

சொன்ன கிரௌஞ்சகிரி யூடுருவத்துளைத் தவைவேன்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தையுற்று
நின்னை யுணர்ந் துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந்தே னிறந்தே விட்ட திவ் வுடம்பே.

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி

கந்தரலங்காரம்

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவளவேனும் பகிர் மின் கணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்கவுதவா வுடம்பின் வெறுநிழல் போற்
நையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

Sunday, December 13, 2015

எத்தான் மறவாதே...

பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணைய் நல்லூருடுறையும்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேலென லாமே.
\அருளாளா = அருள் உடையவரே\
\எத்தான் = எந்த வகையிலும்\
\அத்தா = தந்தையே\

சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்துக்கு தான் வருவதாக சிவபெருமான் உறுதி அளித்திருந்தார்; திருவெண்ணைய் நல்லூரில் சுந்தரமூர்த்திக்கு திருமணம் நடக்கிறது; ஆனால் அங்கு வந்த சிவபெருமான் ஒரு வயதான கிழவன் வேடத்தில் வந்திருக்கிறார்; அங்கு "நீ எனக்கு அடிமை; அவ்வாறு ஓலை எழுதிக் கொடுத்திருக்கிறாய்" என்று அவரின் திருமணத்தை தடுத்து அவரை ஆட்கொண்டிருக்கிறார்; 

நீ என் மேல் ஒரு தமிழ் பாடு என்று கேட்டிருக்கிறார்; அதற்கு சுந்தரமூர்த்தி, "வயதான உங்களை எனக்கு யார் என்றே தெரியவில்லையே; நான் எப்படி உங்களைப் பற்றி கவி பாட முடியும்?" என்று சுந்தரமூர்த்தி கேட்கிறார்;

சிவபெருமானாக இருக்கும் அந்த கிழவர், "நீ, என்னை ஒருமுறை, பித்தா என்று கூப்பிட்டிருக்கிறாய்; எனவே பித்தா என்றே ஆரம்பித்து பாடு" என்று சொல்கிறார்;

சுந்தரமூர்த்தியும், இந்தப் பாடலான, "பித்தா பிறைசூடிய பெருமானே.... என்று ஆரம்பிக்கிறார்;


வீழ்க தண்புனல்...


வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் நீங்கவே.

\ஆன் இனம் = பசுக்கூட்டம்\
\புனல் = மழை\
\ஆழ்க = அமிழ்ந்து போக\

திருஞானசம்மந்தர், சமணர்களால் தீர்க்க முடியாத, பாண்டிய மன்னனின் வெப்பு நோயை தீர்க்கிறார்; சமணர்கள் போட்டிக்கு வருகிறார்கள்; அவரவர் சமய நூல்களான ஏடுகளை ஆற்றில் மிதக்க விடுவது என்றும், எந்த ஏடு ஆற்றை எதிர்ந்து நீந்துகிறதோ அதுவே உண்மையான சமயம் என்றும் போட்டி; திருஞானசம்மந்தர் இந்தப் பாடலைத்தான் அவரின் ஏட்டில் எழுதி ஆற்றில் மிதக்க விடுகிறார்; அது ஆற்றின் நீரை எதிர்த்து பயணிக்கிறது; மற்றவர்களின் ஏடுகள் எல்லாம் ஆற்றின் போக்கிலேயே போய் கடலில் சேர்கிறது; 

நாய்க்கு சிறை தண்டனை

நாய்க்கு சிறை தண்டனை
இஸ்ரேல் பிரதமரின் பெயர் பெஞ்சமின் நெட்டயாகு; இவர் ஒரு நாய் வளர்க்கிறார்; அது ஒரு கலப்பின நாய்; அது செல்லநாய் தான்; அதற்கு என்ன கோவமோ தெரியவில்லை, இஸ்ரேலின் துணை வெளிநாட்டு மந்திரி இவரின் வீட்டுக்கு வந்தபோது மந்திரியைக் கடித்துவிட்டது; அதேபோல கூட வந்த ஒரு எம்.பி. ஒருரையையும் கடித்து விட்டதாம்;
இஸ்ரேல் சட்டப்படி, இந்த நாய்க்கு 10 நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு, தற்போது இஸ்ரேல் பிரதமரின் நாய் சிறையில் இருக்கிறது; இந்த நாயை ஆறு மாதத்துக்கு முன்பு தான் வாங்கி வந்து வளர்த்து இருக்கிறார் பிரதமர்;
எதிரியிடமிருந்து நாயை வாங்கி இருப்பாரோ?

ஹேங்ஓவர் கிளினிக்

ஹேங்ஓவர் கிளினிக்
ஆஸ்திரேலியாவில் புதிதாக இப்படியொரு கிளினிக்கை டாக்டர்கள் திறந்திருக்கிறார்கள்; குடிப்பதற்குத்தான் கடை இருக்கிறது; குடித்து விட்டு மயங்கிக் கிடப்பவர்களுக்கும் ஒரு கடை; அதன் பெயர் ஹேங்ஓவர் கிளினிக்; அதிகமாக குடித்துவிட்டு ஹேங்ஓவர் ஆனவர்கள் இங்கு போனால், ஐவி ட்ரிப்ஸ் முதல் விட்டமின் காக்டைல்ஸ் மற்றும் வாந்தி எதிர்ப்பு மருந்துகளும் கொடுக்கிறார்களாம்; ஆனால் தீட்டிவிடுவார்கள் பீல்லை; எவ்வளவாம்? $140.
குடித்த செலவுபோக, இதுவேறு தண்டச் செலவு!!

நாயை அடிப்பானேன்……. ….

நீள் இரவின் நீண்ட நிலா

நீள் இரவின் நீண்ட நிலா (கிறிஸ்மஸ் நாளில்)
38 வருடங்களுக்குப்பின், இப்போதுதான் ஒரு பெரிய முழு நிலவு தெரியப் போகிறதாம்; அதுவும் கிறிஸ்மஸ் இரவில்; இதற்குமுன், 1977ல் இதேபோன்று ஒரு பெரிய நிலவும் நீண்ட இரவும் இருந்ததாம்;
இப்போது 2015 டிசம்பர் 24ன் இரவில் இப்படிப்பட்ட ஒரு நீள் இரவும் பெரிய நிலாவும் இருக்குமாம்;
இனிமேல் அதேபால், 2034ல் வருமாம்; அப்போது இருப்பவர்கள் அதை ரசிக்கட்டும்;
Solstice சால்டெஸ் என்பது வருடத்திற்கு இரண்டு முறை வரும் ஒரு நிகழ்வு; சூரியன் பக்கத்தில் இருக்கும் ஒரு நாளான ஜூன் 22 (இது கோடைகால சால்டெஸ்-இதில் பகல் அதிகம், இரவு குறைவு);
அதேபோல் சூரியன் நமக்கு தூரத்தில் இருக்கும் ஒரு நாளான டிசம்பர் 22 (இது குளிர்கால சால்டெஸ்-இதில் பகல் குறைவு, இரவு அதிகம்);
(sol என்றால் லத்தீன் மொழியில் Sun சூரியன்)


Saturday, December 12, 2015

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-4

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-4

திரு இரும்பூளை:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: காசியாரணியேஸ்வரர்;
அம்மை: ஏலவார்குழலி;

திரு இரும்பை மாகாளம்:
தொண்டை நாட்டில் திரு அரசிலிக்கு தென்கீழ்திசையில் உள்ள சிவஸ்தலம்;
மாகாளர் பூஜித்த தலம்;
சுவாமி: மாகாளேஸ்வரர்;
அம்மை: குயின்மொழி;

திரு இலம்பையங்கோட்டூர்:
காஞ்சீபுரத்துக்கு வட கீழ் திசையில்  உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: சந்திரகேகரேஸ்வரர்;
அம்மை: கோடேந்து முலையம்மை;

திரு ஈய்ங்கோய்மலை:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: மரகதாசலேஸ்வரர்;
அம்மை: மரகதவல்லி;

திரு எருக்கத்தம் புலியூர்:
நடுநாட்டில் மணிமுத்தா நதி தீரத்தில் உள்ள  சிவஸ்தலம்;
இதை நாகேந்திர பட்டிணம் என்பர்;
சுவாமி: நீலகண்டநாயகர்;
அம்மை; நீலமலர்க்கண்ணி;

திரு எறும்பியூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
எறும்பு வணங்கி அருள் பெற்ற தலம்;
சுவாமி: ஏறும்பீசர்;
அம்மை: நறுங்குழல்நாயகி;

திரு ஏகம்பம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: ஏகாம்பரநாதர்;
அம்மை: காமாட்சி;
(சிறப்பு: உமாதேவி இங்கு சிவனை மண்ணினால் உருவாக்கி வணங்கி வரும்போது, அதை சோதிப்பதற்காக, பெருவெள்ளம் வரவழைத்தார்: உமாதேவி, மண்லிங்கத்தை காப்பதற்காக, அதை தன் மார்போடு அணைத்துக் கொள்கிறார்; மார்பின் தழும்பு இந்த லிங்கத்தில் இருக்கிறதாம்; இங்கு ஒரு மாமரம் இருக்கிறதாம்; அது வேதங்களின் வடிவமாம்;)

திரு ஒமாம் புலியூர்:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: துயர்தீர்த்த செல்வர்;
அம்மை: பூங்கொடியம்பிகை;
(சிறப்பு; வேடன் புலிக்கு பயந்து, அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் கிளையிலேயே இருந்து, வில்வ இலைகளை பறித்து போட்டிருக்கிறான்; அது சிவனுக்கு அபிஷேகமாகி, அருள் பெறுகிறான்;)

திருக்கஞ்சனூர்;
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: அக்கினீஸ்வரர்;
அம்மை: கற்பநாயகி;
(சிறப்பு: மணக்கோலத்தில் இருந்த கன்னியிடம், சிவன் மாறுவேடத்தில் வந்து, அவளின் கூந்தலைக் கேட்க, அவளின் தகப்பன் மறுக்காமல் அதை அறுத்துக் கொடுக்கிறான்; இங்குதான், பழுக்க காய்ச்சிய இரும்புப் படிக்கட்டில் ஏறி சென்று, ஹரதத்தாசாரி சிவபரம் சென்றாராம்;)

திருக்கடம்பந்துறை:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: கடம்பவனநாதர்;
அம்மை: முற்றிலா முலையம்மை;

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-3

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-3

திருஅம்பிலாந்துறை:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: சத்தியவாகேஸ்வரர்;
அம்மை; சௌந்தரநாயகி;

திருஅரசிலி:
அச்சிறுபாக்கத்திற்கு தெற்கே உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: அரசிலிநாதர்;
அம்மை: பெரியநாயகி;

திருஅரதைப் பெரும்பாழில்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: பாதாளேஸ்வரர்;
அம்மை: அலங்காரநாயகி;

திருஅவணிவணல்லூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: காட்சிநாயகேஸ்வரர்;
அம்மை; சவுந்தரநாயகி;

திருஅழுந்தூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: வேதபுரேஸ்சுரர்;
அம்மை: சௌந்தராம்பிகை;

திருஅன்னியூர்:
சோழநாட்டில் காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: ஆபத்சகாயேஸ்வரர்;
அம்மை: பெரியநாயகி;

திருஆய்ப்பாடி:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: பாலுகந்தார்;
அம்மை: பெரியநாயகி;

திருஆலம்பொழில்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: ஆத்மநாதேஸ்வரர்;
அம்மை: ஞானாம்பிகை;

திருஆவூர்ப்பசுபதீச்சுரம்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: பசுபதீஸ்வரர்;
அம்மை: மங்களநாயகி;

திருஇடும்பாவனம்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: சற்குண நாதேஸ்வரர்;
அம்மை: மங்களநாயகி;

திருஇடைச்சுரம்;
திருக்கச்சூராலக் கோயிலுக்கு தெற்கே உள்ள  சிவஸ்தலம்;
சுவாமி: இடைச்சுரநாதர்;
அம்மை: இமயமடக்கொடி;

திருஇராமனதீச்சரம்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: இராமநாதேஸ்வரர்;
அம்மை: கருவார்குழலி;

திரு இராமேஸ்வரம்:
பாண்டி நாட்டில் சேதுக்கரைக்கு அடுத்து உள்ள சிவஸ்தலம்;
இராமர் பூஜித்த ஈஸ்வரன் என்பதால் இராமேஸ்வரம் என்றானது;
சுவாமி: இராமநாதர்;
அம்மை: பர்வதவர்த்தினி;

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-2

2-அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்

திருத்துருவாச நல்லூர்:
பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்: காளத்தீஸ்வரர்;
அம்மையின் பெயர்; பூங்கோதை;

திருத்தூங்கானை மாடம்;
கெடில நதிக் கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமியின் பெயர்; சுடர்க்கொழுந்தீஸ்வரர்;
அம்மையின் பெயர்; மடந்தை நாயகி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தெங்கூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்; வெள்ளிமலை நாதேஸ்வரர்;
அம்மையின் பெயர்; பெரியநாயகி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தெளிசேரி:
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்; பாதளேஸ்வரர்;
அம்மையின் பெயர்: சத்தியம்பாள்;
சம்மந்தர் இங்குதான் புத்த சமயத்தினருடன் வாதம் செய்து வென்று, அவர்களையும் திருநீறு அணிவிக்க வைத்த ஸ்தலம்;

திருத்தென்குடித்திட்டை:
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்: பசுபதிஸ்வரர்;
அம்மையின் பெயர்; உலகநாயகி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தென்முல்லைவாயில்:
சேர நாட்டில் உள்ள  ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்; முல்லைவன நாதேஸ்வரர்;
அம்மையின் பெயர்: அணிகொண்டகோதை;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தேவூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இங்குள்ள சுவாமியின் பெயர்: தேவகுருநாதேஸ்வரர்;
அம்மையின் பெயர்; மதுரபாஷிணி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;


அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-1

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்
திருத்தரும புரம்
காவிரியின் தென் கரையில் உள்ள ஒரு சிவ ஸ்தலம்;
இங்குள்ள சுவாமி பெயர்: யாழ்முரி நாதேஸ்வரர்;
அம்மை பெயர்: சதா மதுராம்பிகை;
சம்மந்தரால் பாடப்பட்ட தலம்.

திருத்தலைச்சங்காடு;
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
சுவாமி பெயர்; சங்க நாயகேஸ்வரர்;
அம்மை பெயர்; சௌந்தரி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தலையாலங்காடு;
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
சுவாமி பெயர்: ஆடவல்லவீஸ்வரர்;
அம்மை பெயர்; திருமடந்தை;
நாவுக்கரசரால் பாடப் பெற்ற தலம்;

திருத்தலதைப்பதி;
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
சுவாமி பெயர்; மதிமுத்தநாதேஸ்வரர்;
அம்மை பெயர்; பொற்கொடி;
சுந்தரரால் பாடப்பெற்ற தலம்;

திருத்தினைநகர்
கெடில நதி கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
சுவாமி பெயர்; திரு நந்தீஸ்வரர்;
அம்மை பெயர்; ஒப்பிலாநாயகி;
சுந்தரரால் பாடப் பெற்ற தலம்;

திருத்துருத்தி
காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்;
இதை குற்றாலம் என்றும் சொல்வர்;
சுவாமி பெயர்; வேதேஸ்வரர்;
அம்மையின் பெயர்: அமிர்த முகிளாம்பிகை;
மூவராலும் பாடப் பெற்ற தலம்;


ரோஷக்கார திருநீலகண்டர்

திருநீலகண்ட நாயனார்;

இவர் சிவபக்தர்; இவருக்கு திருமணம் ஆகிவிட்டது; ஆனாலும், மற்ற பெண்களைக் கண்டால், அவர்கள் பின்னால் திரிவாராம்; இந்தமாதிரி புத்தியுடைய கணவனுக்கு பாடம் புகட்ட நினைத்த மனைவி, ஒருநாள் கடும் கோபத்தில், "திருநீலகண்டம் அறிய இனி என்னை தீண்டாதீர் (தொடாதீர்)" என்று ஆணையிட்டு விட்டார்; 

இதுமுதல், மனைவி உட்பட எந்தப் பெண்ணையும் ஏரெடுத்தும் பார்க்காமல், சிவனின் சேவையிலேயே இருந்து விட்டார்; இவருக்கு வயதாகி விட்டது; மூப்பு நிலையில், சிவன் இவரிடம் வந்து ஒரு மண் ஓட்டைக் கொடுத்துவிட்டு, "உன் மனைவியின் கரங்களைப் பற்றிக் கொண்டு இந்த ஓட்டுடன் இந்த குளத்தில் நீராடினால், நீங்கள் இருவரும் மறுபடியும் இளமை வந்து, நீங்கள் தொலைத்த இளமை வாழ்வை மீண்டும் வாழ்வீர்கள்" என்று சொல்லி இருக்கிறார்:

அப்போதும், தன் மனைவி சொன்ன ஆணையை மீற முடியவில்லை; அவளின் கையைப் பிடிக்க முடியாமல், ஒரு குச்சியை நீட்டி அதை தன் மனைவியைப் பிடிக்கச் சொல்லி, அதன் மறுபக்கத்தை இவர் பிடித்துக் கொண்டு, அந்த குளத்தில் இருவரும் மூழ்கி இளமையை பெற்று, மறுபடியும் யோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள்:
"ரோஷக்கார கணவன் போல!"

திருநீல நக்க நாயனார்

திருநீல நக்க நாயனார்

இந்த நாயனார் ஒரு சிவ பக்தர்; இந்த சிவபக்தர்கள் எல்லாம் சிவனைத்தவிர வேறு ஒன்றையும் தேட மாட்டார்கள்;

ஓருநாள், சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, சிவனின் மீது ஒரு சிலந்திப் பூச்சி சிவனின் உடலில் உட்கார்ந்து விட்டது; இதைப்பார்த்த அந்த நாயனாரின் மனைவி அந்த பூச்சியை வாயால் ஊதி விட்டார்; சிவன் மீது அதிகப் பிரசங்கித் தனமாக வாயில் மனைவி ஊதிவிட்டார் என்று மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார்; மனைவியும் கோபித்துக் கொண்டு தாய் வீடு போய்விட்டார்;

இந்த நாயனார் தனியாக படுத்துக் கொண்டிருக்கும்போது, சிவன் நேரில் வந்து, அட பக்தி பண்டாரமே! என்னைப் பார்; என் உடலைப் பார்; உன் மனைவி ஊதி விட்ட இடம் மட்டும்தான், என் உடலில் நன்றாக இருக்கிறது; மற்ற இடங்களில் எல்லாம் அந்த சிலந்தி பூச்சி கடியால் கொப்புளம் வந்து வீங்கி விட்டது பார்! என்று சொல்லி இருக்கிறார்: இதற்குப்போய் உன் மனைவியை கோபித்து விரட்டி விட்டிருக்கிறாயே என்று சிவன் கோபித்துக் கொள்கிறார்; உடனே இந்த நாயனார் மனைவியை திரும்ப அழைத்து வந்திருக்கிறார்; கடைசிவரை மனைவியுடன் வாழ்ந்து சிவனுக்கு திருத்தொண்டும் செய்திருக்கிறார்;

இப்போதும் இவ்வாறு சிவன் வந்து கணவர்களுக்கு புத்திமதியும் சொல்லலாம்!

மதம் மாறிய திருநாவுக்கரசர்

மதம் மாறிய திருநாவுக்கரசர்

இவர் குழந்தைப் பருவத்தில் இவரின் பெயர் மருணீக்கியார்; இவர் கல்வியில் சிறந்த விளங்கினார்; இந்த பிரபஞ்சத்தில் வாழ்வு நிரந்தரம் இல்லை என்று கூறும் கொள்கையுடைய சமண சமயத்தில் போய் சேர்ந்து துறவறம் மேற்கொண்டார்;

ஆனால் இவருக்கு தீராத வயிற்றுவலி வந்துகொண்டே இருந்தது; சமண சமய ஆசாரியார்கள் எவ்வளவோ மந்திர தந்திரங்களை செய்தபோதும், இவரின் வயிற்றுவலியைக் குணப்படுத்தவே முடியவில்லை;

இவரின் மூத்த சகோதரி திலகவதியார்; இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்; இவர் ஒருநாள் தன் தம்பியைச் சந்தித்து, அவருக்கு சைவ சமயத்தில் உள்ள "பஞ்சாச்சர உபதேசத்தை" சொல்லிக் கொடுத்துள்ளார்; இதைக் கேட்டவுடன் இவருக்கு இருந்த வயிற்றுவலி விலகி விட்டது; உடனே இவர் சைவ சமயத்தில் மாறி சிவபக்தியில் இறங்கி விட்டார்; நேராக, வீரட்டானேஸ்வர் கோயில் சென்று அங்கு விழுந்து வணங்கி எழும்போது, இவருக்கு தமிழ்ச் செய்யுள் பாடும் அற்புத சக்தி கிடைத்ததாம்; அதனால், அற்புதமான தேவாரப் பாடல்களை பாடியுள்ளார்; அதுமுதல் இவருக்கு திருநாவுக்கரசர் என்று பெயர் வந்ததாம்; 

இவர் மதம் மாறி விட்டார் என்று தெரிந்த சமணர்கள், அந்த நாட்டு அரசனிடம் கோள் சொல்லி, இவரை கல்லைக்கட்டி கடலில் போட்டுவிட்டார்கள்: அந்தக் கல்லையே தெப்பமாக மாற்றி மிதந்து வந்துவிட்டார்: 

"கல்லினோடெனைப்பூட்டி அமண்கையர், 
ஒல்லைநீர்புக நூக்கவென்வாக்கினால், 
நெல்லுநீள் வயல் நீலக்குடியரன், 
நல்லநாம நவிற்றி யுய்ந்தேனன்றே".

திரியம்பகம் (ராமர் முறித்த வில்)

ராமர் முறித்த வில் தான் "திரியம்பகம்"

தக்கன் யாகத்தை அழிப்பதற்காக, வீரபத்திரர் எடுத்த வில்தான் திரியம்பகம்; அந்த வில்தான், சீதையோடு நிலத்தில் புதைந்து கிடந்தது; ஜனக மன்னருக்கு குழந்தையில்லாமல் யாகம் செய்யும்போது சீதை மண்ணிலிருந்து வெளிப்பட்ட போது, இந்த திரியம்பகமும் வெளி வந்தது;

இந்த வில்லைத்தான், இராமர் முறித்து, சீதையை திருமணம் செய்து கொண்டார்; 

திரிபுராசுரர்

திரிபுராசுரர்

தாரகாசுரனுக்கு மூன்று மகன்கள்; அவர்கள், கமலாக்ஷன், வித்தியுன்மாலி, தாராகாக்ஷன். 

இவர்கள் மூவரும் சிவபெருமனை நினைத்து பெரிய தவத்தில் இருந்து வரம் பெற்றுவிட்டனர்; மூவருக்கும் மூன்று கோட்டைகள் கிடைக்கின்றன; ஒன்று, இரும்பு கோட்டை, மற்றொன்று வெள்ளி கோட்டை, மூன்றாவது தங்க கோட்டை; இதில் இந்த மூவரும் ஆட்சி செய்கின்றனர்: இந்த கோட்டைகள் பறக்கும் தன்மை கொண்டது; எனவே எப்போதும் இதில் இவர்கள் மூவரும் பறந்து கொண்டே இருப்பார்கள்: 

கடவுளிடம் வரம் வாங்கினால், ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பு வரும்போலும்! பறந்துகொண்டே மற்ற நாடுகளின் மேல் பறந்து அங்கு உட்கார்ந்து அந்த நகரையே அழுத்தி விடுவார்கள்; அதனால் அந்த நகரம் அழிந்துவிடுமாம்; இப்படி பல நகர்களை அழித்து விட்டார்கள்; சிவனிடம் வரம் பெற்றவர்கள் என்பதால் இவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை;

இந்த கொடுமை, விஷ்ணுவின் காதுகளுக்குப் போகிறது; அவர், நாரதரை அழைத்து யோசனை சொல்கிறார்: நாரதர் இந்த மூவரையும் பார்த்து, பாஷண்ட மதத்தை உபதேசிக்கிறார்; அதை கேட்டபின்னர் இந்த மூவரும் சிவனுக்கு எதிராக ஆகி விட்டார்கள்; 

இதை கேள்விப்பட்ட சிவன், அந்த மூவர் மீதும் கோபம் கொண்டு, அவர்களை அழித்துவிடுகிறார்; அவ்வாறு அழிந்தபின்னர் அவர்களை தன் கணங்களோடு சேர்த்துக் கொள்கிறார்;

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்குவின் அந்தர சொர்க்கம்

திரிசங்கு என்பவர் பொய்யே சொல்லாத அரிச்சந்திரனின் தந்தை; இந்த திரிசங்கு ஒரு பெரிய அரசர்; இவருக்கு சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்று ஆசையாம்; இறந்தபின்னர் போகவதற்க்குப் பதிலாக, தான் உயிருடன் இருக்கும்போது, சொர்க்கத்துக்குப் போய், அது எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையாம்;

தன் ராஜகுருவான வசிஷ்டரிடம், சொர்க்க ஆசையை வெளிப்படுத்துகிறார்; ஆனால், வசிஷ்டர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை; அவரின் மகனிடம் சென்று சொர்க்கம் போய் வர ஏற்பாடு செய்யச் சொல்கிறார்; அவரும் மறுத்து விடுகிறார்; குரு சொல்வதைக் கேட்க வேண்டும்; ஆனால் இந்த திரிசங்கு கேட்பதாக இல்லை;

உடனே, விசுவாமித்திரிடம் போய் கேட்கிறார்; அவர் இதற்கு ஒப்புக் கொள்கிறார்: தன் தவ வலிமையால், உண்மையான சொர்க்கத்துக்கும், இந்த பூமிக்கும் நடுவில் ஒரு சொர்க்கம் போன்ற ஒரு பகுதியை ஏற்படுத்தி, இதுதான் சொர்க்கம் என்று திரசங்குவை அங்கு கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார்; அங்கு திரிசங்கு தங்கி இருக்கிறார்; அந்த அந்தர சொர்க்கம்தான், திரிசங்கு சொர்க்கம்; அது உண்மையான சொர்க்கம் இல்லை; 

அப்பைய தீட்சிதரின் கர்மவினை

அப்பைய தீட்சிதரும், தாதாசாரியாரும்;

இரண்டு பேருக்குமே தொழில்போட்டி; இருவரும் வாதம் செய்வதில் நிபுணர்கள் (வக்கீல்கள் மாதிரிபோல); எப்போது தொழிலில் போட்டிவரும் என்றால், ஒரு நல்லவரும் ஒரு கெட்டவரும் இருக்கும்போது கண்டிப்பாக போட்டி வந்துவிடும்; இரண்டு நல்லவர்கள் மத்தியில் போட்டிவராது;

அப்பைய தீட்சிதர் நல்லவர்; இவருக்கு ஒரு குறை உண்டு; ஒவ்வொரு நாளும் மத்தியான வேளையில் தீராத வயிற்றுவலி வந்துவிடும்; ஒரு வேலையும் செய்யமுடியாது; 

இந்த விபரம், அந்த தாதாசாரியாருக்கும் தெரியும்; எனவே ஒருநாள் வாதம் செய்ய மத்தியான வேளையை தேர்ந்தெடுக்கிறார் தாதாசாரியார்; 

வேறு வழியில்லாமல் அப்பைய தீட்சிதரும் ஒப்புக்கொள்கிறார்; போட்டி நடக்கிறது; மத்தியான வேளை வந்துவிட்டது; அப்பைய தீட்சிதருக்கு வயிற்றுவலி ஆரம்பித்துவிட்டது; தாங்கிக் கொள்ள முடியவில்லை; உடனே, அப்பைய தீட்சிதர், தன் கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து சுருட்டி தன் முன்னே வைத்துவிட்டார்: அவரின் வயிற்றுவலியை அந்த துண்டில் இறக்கிவிட்டார்; துண்டில் இறங்கிய வயிற்றுவலி, எப்படி குடலை முறுக்குமோ, அதுபோலவே அந்த துண்டின் துணியை முறுக்குகிறது; இப்போது அப்பைய தீட்சிதருக்கு வயிற்றுவலி இல்லை; எனவே வாதத்தில் கலந்து கொண்டு, தன் எதிரி தாதாசாரியாரை வெற்றி கொள்கிறார்:

போட்டி முடிகிறது; எல்லோருக்கும் ஆச்சரியம்; எப்படி, தன் வயிற்றுவலியை, ஒரு துண்டில் இறக்கி விட முடியும்; அப்படியென்றால் உண்மையில் அப்பைய தீட்சிதர் ஒரு பெரிய ஞானிதான் என்று புகழ்ந்தனர்; கூடவே அவரிடம் ஒரு சந்தேகத்தையும் கேட்டனர்; உங்கள் உடம்பில் உள்ள வயிற்றுவலியை ஒரு துணியில் இறக்கிவிடும் அளவுக்கு உங்களுக்கு சக்தி இருக்கும்போது, ஏன் அதை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அதையும் அவ்வாறே வெளியேற்றி விட்டு, நீங்கள் நலமாக வாழலாமே; ஏன் தினம் தினம் இந்த வயிற்றுவலியுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர்;

அவர் சொல்கிறார், 
"இந்த வயிற்றுவலி என்பது எனது முன் ஜென்ப கர்மா; இதை இந்த ஜென்மத்தில் நான் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்; இதை போக்கிக் கொள்ளும் திறமை இப்போது என்னிடம் இருந்தாலும், அப்படியே நான் இந்த பிறவியில் இதை போக்கிக் கொண்டாலும், இனி வரும் அடுத்த பிறவிகளில் இந்த கர்மா என்னைத் தொடர்ந்தே வரும்; எனவே நான் இந்த கர்மாவை இந்தப் பிறவியிலேயே அனுபவித்து முடித்துவிடவே விரும்புகிறேன்."

ஒஹோ! கர்மா என்பது விலக்கிக் கொள்ள முடியாத ஒன்றா? அதை அனுபவித்துத்தான் ஆகவேண்டுமா?


தாடகையின் ஆயிரம் யானை பலம்

தாடகை
தாடகை முன் ஜென்மத்தில் இயல்பான பெண்ணாகவே இருந்திருக்கிறாள்; பின்னர் ஒரு சாபத்தால்தான் ராட்சசி ஆகிவிட்டாள்;

இவள் இயல்பில், சுகேதன் என்னும் ஒரு யக்ஷனின் மகள்; இவளுக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாம்; 

ஒருநாள், காட்டில் தவத்தில் இருந்த அகஸ்தியரை அவரின் ஆசிரமத்துக்குள் நுழைந்து பயப்படுத்தி இருக்கிறாள்; அகஸ்தியருக்கு கோபம் உண்டாகி, நீயும் உன் மகன்களும் ராட்சசிளாக ஆகக் கடவது என்று சாபமிட்டாராம்; 
அதுமுதல் இவள் ராட்ச்சியாக இருந்திருக்கிறாள்;

இவளின் மகன்தான் மாரீசன்;

இந்த ராட்சசிதான், விசுவாமித்திரரின் யாகத்தை கெடுப்பதற்காக வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள்;

அதற்காகவே விசுவாமித்திரர், இராமனை அழைத்துக் கொண்டு வந்து, தன் யாகத்துக்கு காவல் வைத்தார்; ராமர் இந்த ராட்சசியை கொன்றார்;

பிரதிவிந்தியன்

பிரதிவிந்தியன்
இவனே தர்மராஜன் என்கிற யுதிஷ்டிரனின் மகன்;
தர்மராஜன் என்கிற யுதிஷ்டிரன்:
இவரே பஞ்சபாண்டவர்களில் மூத்தவர்;
பாண்டு மன்னரின் மூத்த மகன்;
யமன் அநுகிரகத்தால், குந்தியின் வயிற்றில் பிறந்தவர்;
இவரின் இயல்பான பெயர் யுதிஷ்டிரன்;
ஆனால் தமிழில் இவரை தர்மன் என்றே சொல்கிறார்கள்;

இவருக்கும், திரோபதிக்கும் பிறந்த புதல்வனின் பெயர் பிரதிவிந்தியன்.

தர்ம பறவைகள்

தர்ம பறவைகள் (தர்ம பக்ஷிகள்)

விபுலன் என்று ஒரு முனிவர்; இவருக்கு இரண்டு மகன்கள், சுகுருசன், தும்புரன் என்று பெயர்கள்; 

ஒருநாள், இந்திரன் கழுகுப் பறவை உருவமாக மாறி, இந்த முனிவரின் மூத்த மகனாக குகுருசன் என்றவனிடம் வந்து, தனக்கு மனித மாமிசம் வேண்டும் என்று கேட்கிறான்; சுகுருசனுக்கு நான்கு மகன்கள் இருக்கிறார்கள்; அந்த நான்கு மகன்களைப் பார்த்து, உங்கள் நால்வரில் யார் இந்த கழுகுக்கு இரையாகப் போகிறீர்கள் என்று கேட்கிறார்; நால்வரும் இதற்கு உடன்படவில்லை; 

எனவே தந்தையின் வாக்கை காப்பாற்றாத பிள்ளைகள் என்று கோபம் கொண்டு, அந்த நான்கு மகன்களையும் பறவைகள் ஆகும்படி சபிக்கிறார்; அந்த நான்கு பறவைகளின் பெயர்கள், பிங்காட்சன், விபோதன், சுபுத்திரன், சுமுகி ஆகியோர்;

இந்த நான்கு பறவைகளும்தான், ஜைமினி முனிவரின் சந்தேகத்தை போக்கி, சாப நிவர்த்தி பெற்று மனிதர்கள் ஆனவர்கள் என்று மார்க்கடேய புராணம் சொல்கிறது;

Wednesday, December 9, 2015

சாகா வரம் பெற்ற கம்சனும் டிசிகனும்


கம்சனும் டிசிகனும் நண்பர்கள்; இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள்; இவர்கள் இவருமே சிவனிடம் சாக வரம் பெற்றவர்களாம்; எந்த ஆயுதத்தாலும் சாகாத வரத்தை பெற்றிருந்தனர் இருவரும்; அந்த மிதப்பில்தான், கம்சன், எல்லா நாட்டு மன்னர்களையும் துன்புறுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்தான்; தங்கையை சிறையில் அடைத்தான்; 

இவனை எப்படியாகவது ஒழித்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்த கிருஷ்ணன், கம்சனிடம் சென்று, "உன் உயிர் நண்பன் டிசிகன் இறந்து விட்டான்" என்று சொல்லி விட்டார்; அதேபோல், டிசிகனிடம் சென்று, "உன் உயிர் நண்பன் கம்சன் இறந்து விட்டான்" என்று சொல்லி இருக்கிறார்:

இதை கேள்விப் பட்ட இருவருமே, நட்பின் உச்சியில் இருந்தவர்கள் என்பதால், உடனேயே இருவரும் மரணமடைந்தனர்:

சாகா வரம் பெற்றவர்களை ஒழித்தார் கிருஷ்ணர்;

கழுதைக் கல்யாணம்


ஜியேஸ்டாதேவி

இவள் வருணபகவானின் மனைவி; இவள் தாதுரு, விதாதா, என்பவர்களுடன் பிறந்தவள்; பிரம்மானசர் என்பவரின் புத்திரி; இவள் சமுத்திரத்தில் பிறந்தவளாம்; 

இவளுடைய வாகனம்தான் கழுதை; இவள் வருணபகவானைத் திருமணம் செய்து கொண்டாள்;

அதனால்தான் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை நின்று விடுகிறதா!!!


ஜனகன்

ஜனகன்
இவர் மிதிலாபுரிக்கு அரசன்; ஹரஸ்ர ரோமன் மகன்; இந்த ஜனக மன்னரின் புத்திரிதான் சீதாதேவி; (பின்னர் ஸ்ரீராமனுக்கு மனைவியானவர்); 

இந்த ஜனகன் ஒரு மகாஞானியாம்; 

ஒருநாள், இவரது அரண்மனை தீப்பிடித்து எரிகிறது; எல்லோரும் பதறி அரண்மனையைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்; இந்த ஜனக மன்னரிடம் ஒரு ரிஷி நட்புடன் தங்கி இருக்கிறார்: இந்த முனிவர் பெயர் சுக முனிவர்; இந்த முனிவர், அரண்மனை தீப்பிடித்துக் கொண்டது என்று கேள்விப் பட்டவுடன், தான் பூஜைக்காக காயப் போட்டிருந்த மாட்டுச்சாண வரட்டி எரிந்துவிடுமே என்று ஓடோடிப் போய் அதை பத்திரப்படுத்தினாராம்;

இதைப் பார்த்த ஜனக மன்னர், அவரைப் பார்த்து ஏளனமாக, அரண்மனையே எரிகிறது; உமக்கு வரட்டு முக்கியமாய் போய்விட்டது; இதுதான் உன் ஞானமா? என்று கேட்டு அவருக்கு உலக இயல்பை உணர்த்தி திருத்தினாராம்;


ஜடபரதர்

ஜடபரதர்
ஒரு மான் காட்டில் தண்ணீர் தாகத்துடன் சுற்றித் திரிகிறது; கங்கை ஆற்றில் நீர் அருந்த வருகிறது; அங்கு சென்று ஆற்றுக்குள் இறங்கி நீர் அருந்துகிறது; அது ஒரு நிறைமாத கர்ப்பிணி மான்; அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற நினைக்கிறது; அப்போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்கிறது; மானுக்கு குலை நடுங்கி விட்டது; கர்ப்பம் கலங்கி, பிரசவம் ஆகிவிடுகிறது; 

அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து கங்கையிலேயே மிதந்து போகிறது; தன் கண்ணெதிரே மானின் கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் நைந்து உருகி வருந்துகிறது; அந்த கன்றை ஒருவர் எடுத்து ஆசையுடன் வளர்க்கிறார்; அவர் இறக்கும் நிலையில், இந்த கன்றின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்; அதன் நினைவாகவே இறக்கிறார்; 

கடைசி நினைவு மான் கன்றின் மீது இருந்ததால், மறு பிறவியில் மானாகப் பிறந்து அந்த மான் கன்றை வளர்க்கிறார்: அந்த மான் பிறவி முடிந்தவுடன், ஒரு மானிடராகப் பிறந்து, எல்லா கல்வியும் கற்று ஞானம் பெற்ற போதிலும், ஒன்றுமே தெரியாதவர்போல நடித்துக் கொண்டிருக்கிறார்: எனவே இவரை ஜடன்= மூடன் என்று சொல்கிறார்கள்; எனவே இந்தப் பிறவியிலும் அந்த மான் கன்றின் நினைவாகவே இருந்ததால், காட்டுக்குச் சென்று தவம் செய்கிறார்: 

ஒருநாள், இவரை இழுத்துக் கொண்டுபோய், காளிக்கு பலி கொடுக்க முயல்கிறார்கள்: ஆனால், காளியே நேரில் தோன்றி, அவர்களை விரட்டி அடித்து இவரை காப்பாற்றுகிறாராம்;

மற்றொரு சமயம், அரசனது சிவிகையைச் சுமக்க ஆள் கிடைக்காமல் இவரை அழைத்துச் செல்கின்றனர்; ஆனால் அரசன் இவரைப் பார்த்ததும் இவரது கால்களில் விழுந்து வணங்கினாராம்:

அதன்பின், அடுத்த பிறவி கிடைத்ததாம், அதிலும் அதே மான் கன்றின் மீது இருந்த கருணை மாறாமல் இருந்ததாம்;
_________

சௌபரி ரிஷி

சௌபரி ரிஷி;

ஞானம் வேண்டி தவம் இருப்பர்; ஆனால் சௌபரி ரிஷி ஒரு வித்தியாசமான பேர்வழி; தனக்கு ஒரு அழகான மனைவி வேண்டும் என்று தவம் இருக்கிறார்; அதுவும் மாந்தாதா என்பவரின் மகளில் ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும் என வேண்டி தவம் இருக்கிறார்; யமுனை ஆற்றங்கரையில் தவத்தில் உட்கார்ந்தவர் பன்னிரண்டு வருடங்கள் போனது தெரியாமல் உட்கார்ந்து விட்டார்; மாந்தாதாவுக்கு இந்த விபரம் தெரிந்து அந்த ரிஷியை வரச் சொல்கிறார்; தனது மகளை அந்த ரிஷிக்கு திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி சொல்கிறார்: தனது மாளிகையின் கன்னி மாடத்துக்கு போய், அங்குள்ள தன் மகள்களில் யார் உங்களுக்கு பிடிக்கிறதோ அவரை கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள்; அவளையே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்கிறார்; 

சௌபரி ரிஷி மாடியில் உள்ள கன்னி மாடத்துக்கு போகிறார்; ரிஷியாகப் போகாமல், மன்மதனைப் போல தன்னை அலங்காரம் செய்து கொண்டு போகிறார்: அங்கு மிக அதிகமாக கன்னிகள் இருக்கின்றனர்; எல்லோருமே மாந்தாதாவின் மகள்தான்; எல்லோருமே அழகிகள்; ரிஷிக்கு ஆசை அதிகமாகிவிட்டது; இவர் மன்மதனைப் போல இருந்ததால் அங்கிருந்த எல்லா கன்னிகளும் இவரை விரும்பினர்; எனவே அவர்களை எல்லோரையும் கீழே அழைத்துக் கொண்டு வந்து இவர்களை அனைவரையும் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்கிறார்; அப்படியே மாமனாரும் செய்கிறார்; அவர்களுடன் இந்த ரிஷி நெடுங்காலம் வாழ்கிறாராம்; 12 வருடம் தவம் வேலை செய்திருக்கிறது போலும்!.

கிருஷ்ணனின் நிரியாணம்

ஜகநாதம்

ஸ்ரீகிருஷ்ணன் நிரியாணம் பெற்று விட்டார்; அவரை தகனம் செய்கின்றனர்; அவ்வாறு அவரை தகனம் செய்யும்போது, சமுத்திரம் (கடல்) பொங்கி தூவாரகைக்கு வந்து துவாரகையையே சூழ்ந்து மூடியது; 

அப்போது, அவர் தகனமாகிக் கொண்டிருந்த அந்த உடலை கடல் நீரானது வாரி எடுத்துக் கொண்டு ஜகநாதம் என்னும் விஷ்ணு கோயில் இருக்கும் இடத்துக்கு கொண்டு போனது; 

அங்கிருந்தவர்கள், இந்த உடல், ஸ்ரீகிருஷ்ணனின் உடல் என்று அறிந்து கொண்டு, அதை ஒரு மரத்தில் சபுடீகரணம் பண்ணி பின்னர் அந்த மரத்தை விக்கிரமாக்கி அங்கேயே ஸ்தாபித்தனர்; 

Monday, December 7, 2015

அஞ்ஞவதைப்பரணி

தத்துவராயரின் அஞ்ஞவதைப்பரணி

தத்துவராயர் குருவைத் தேடி அலைகிறார்; வடமொழி, தென்மொழி இரண்டிலும் மிகப் பெரிய புலமை பெற்ற குரு ஒருவரைத் தேடி அலைகிறார்: தன்னுடன் தன் சக நண்பரான (சகாத்தியர் = கிளாஸ்மெட்) சொரூபாநந்தர் என்பவரையும் சேர்த்துக் கொண்டு தேடித் திரிந்தனர்; எங்கும் கிடைக்கவில்லையாம்; இருவரும் ஒரு போட்டியும் வைத்துக் கொள்கின்றனர்; யார் முதலில் குருவைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவரை, நம்மில் மற்றவர் குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கின்றனர்;

தத்துவராயர் வடநாட்டுப் பக்கமாக போகிறார்; மற்றவரான சொரூபாநந்தர் தென்நாட்டுப் பக்கமாகப் போகிறார்சொரூபாநந்தருக்கு குரு கிடைத்து விட்டார்; அவரிடம் ஞான நூல்கள் எல்லாவைற்றையும் கற்று தெளிந்து, மெய்யுணர்ந்தார்;

போட்டியின் விதிப்படி, தத்துவராயர், சொரூபாநந்தரை தன் குருவாக ஏற்று அவரிடமே கற்கிறார்; தத்துவராயருக்கு இயல்பாகவே பாடும் வல்லமை உண்டு; அந்த திறமையைக் கொண்டு, "சசிவர்ணபோதம், பாடுதுறை, சிவப்பிரகாசர் வெண்பா, தத்துவாமிர்தம், அமிர்தசாகர வெண்பா, சானவியோதன் கலம்பகம், தசரங்கம், நெஞ்சுவிடுதூது, கலிமடல், கலித்துறையந்தாதி, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி என பல நூல்களை இயற்றிவிட்டார்;


அஞ்ஞவதைப்பரணி பாடிய சாதுரியம் மிகவும் அதிசயிக்கத்தக்கதாம்;
______________

திருவாரூர் திருக்குளம்

தண்டியடிக நாயனார்
தண்டியடிக நாயனார் என்பவர் திருவாரூரில் இருந்த மிகச் சிறந்த சிவபக்தர்; இவருக்கு கண் தெரியாது; திருவாரூர் சிவன் கோயில் திருக்குளத்தை தூர்வார எல்லோரும் சென்று வேலை செய்கிறார்கள்; இந்த தண்டியடிக நாயனாருக்கோ கண் தெரியாது; இருந்தாலும், தானும் சிவனுக்கு ஒரு சேவையையாவது செய்ய வேண்டுமென நினைக்கிறார்; 

ஒரு மண் கூடையை எடுத்துக் கொண்டு அதில் மண்ணை நிரப்பி, தடவித்தடவி கரைக்கு வந்து மண்ணை கொட்டுகிறார்; 

இதைப் பார்த்த சமணர்கள் அவரை ஏளனம் செய்கிறார்கள்; இதைப் பொறுக்க மாட்டாமல், சிவனிடம் சென்று அழுகிறார்; 

சிவன், இவருக்கு கண்களைக் கொடுத்ததுடன், சமணர்களை அங்கிருந்து விரட்டியும் விடுகிறார்; சோழ மன்னர் இதை கேள்விப்பட்டு, அந்தச் சமணர்கள் கட்டியிருந்து பாழிகளை உடைத்து அதிலிருந்த கற்களை எல்லாம் கொண்டு வந்து திருக்குளத்தின் கரைகளைக் கட்டிவிட்டார்களாம்;
__________

தண்டியலங்காரம்

 "காவிய தரிசனம்"
வடமொழியில் "காவிய தரிசனம்" என்று ஒரு அலங்கார நூல் உள்ளது; அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த தண்டியலங்காரம் என்னும் அலங்கார சாஸ்திரத்தின் மொழிபெயர்ப்பு நூல்; காவிய தரிசனம் என்னும் வடமொழி நூலை இயற்றியவர் தண்டி என்பவர்; எனவே இது தண்டி அலங்காரம் என்று தமிழில் வழங்கப்படுகிறது;
இந்த தண்டி என்னும் சமஸ்கிருத கவிஞர், கவிச் சக்கரவர்த்தி காளிதாசனின் நண்பர் என்கிறார்கள்; போஜராஜன் என்ற புகழ்பெற்ற மன்னரின் சபையில் மொத்தம் ஒன்பது நவரத்தினங்களாக ஒன்பது கவிஞர்கள் இருந்துள்ளனர்; இதில் இந்த தண்டி கவிஞரும் ஒருவராம்;
தண்டியலங்காரம்: இது பொதுவணி, பொருளணி, சொல்லணி என மூன்று இயலையும் நூற்றிருபத்துமூன்று சூத்திரங்களாக கொண்டுள்ளதாம்;

 ________

தண்டகாரணியம்

தண்டகாரணியம்
இசுவாகுவின் மகனுக்கு தண்டன் என்று பெயர்; இவன், தன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் முரட்டுத்தனமாக திரிந்தான்; எனவே இவனின் தந்தை இசுவாகு, இவனை, விந்திய மலைப் பகுதிக்கு ஓடிப் போகுமாறு விரட்டி விட்டான்;
அங்கிருந்து விந்திய மலைப் பகுதிக்குச் சென்ற தண்டன், தன்னுடன் வந்தவர்களைக் கொண்டு, மதுமந்தம் என்னும் ஒரு பட்டணத்தை உருவாக்கி விட்டான்; அதை அவனே ஆண்டும் வருகிறான்;
இந்த விந்திய மலைப் பகுதியில்தான் சுக்கிரன் இருக்கிறார்; அவரைப் போய்ப் பார்த்த தண்டன், அவருக்கு சீடனாகி விட்டான்; இருந்தாலும் தண்டனுக்கு உள்ள கோணல்புத்தி மாறவில்லை; சுக்கிரனின் மகள் அரசை என்னும் அழகி; இவளைப் பார்த்து இவள்மீது ஆசை கொள்கிறான்  அதனால் அவளைப் பலவந்தப்படுத்தியும் விட்டான்; இதை அறிந்து சுக்கிரனுக்கு அவன்மீது கோபம் வருகிறது;
“தந்தைக்கு அடங்காத பிள்ளை எங்கும், யாரிடமும் அடங்க மாட்டான்போல!”
சுக்கிரன் இவனுக்கு சாபம் இடுகிறார்; "உன் பட்டணம் முழுவதும் மண்-மழை பொழிந்து உன் பட்டணமே அழியட்டும்" என்கிறார்; அதன்படி மண் மழையாகப் பெய்து, அவனின் பட்டணம் அழிந்து விட்டது; அதுதான் தண்டகாரணியம் என்று பெயராம்; இதை தட்சிண தேசம் என்றும் சொல்கிறார்கள்;
சென்னை மழையும் இப்படி ஏதாவது ஒரு சாபத்தால் வந்ததாக இருக்குமோ?

_______