சமஸ்கிருதம்:
இதை தேவபாஷை, வடமொழி, ஆரியம், ஆரியபாஷை, கீர்வாணம் என்றும் அழைக்கின்றனர். வடக்கே இமயம் முதல் தெற்கே விந்திய மலை வரை உள்ள பகுதிகளில் இது புழக்கத்தில் இருந்ததாம். எல்லா வேதங்களும் இந்த சமஸ்கிருத மொழியிலேயே இருந்தன. சமஸ்கிருதம் ஆதி மொழி என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு இலக்கணம் வகுத்தவர் யார் என்று கேட்டால், சிவபெருமான் என்கிறார்கள். அந்த இலக்கணநூல்தான் "மகேஸ்வர சூத்திரம்" என்கிறார்கள்.
இந்த முதல் இலக்கண நூலை ஆதாராமாக வைத்துத்தான், பிரகஸ்பதி பகவான் "சத்தபாராயணம்" என்னும் மற்றொரு இலக்கண நூலை இயற்றியிருக்கிறார். இந்த நூலைக் கொண்டுதான், இந்திரன் "ஐந்திரம்" என்னும் இலக்கண நூலை இயற்றி இருக்கிறான் என்கிறார்கள்.
இந்த இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் ரிஷிகள் பல நூல்களை செய்துள்ளனர். அதைப்பின்பற்றி பாணினி என்னும் முனிவர், மகேஸ்வர சூத்திரம் முதல் எல்லா நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு, "பாணினீயம்" என்னும் நூலை இயற்றி இருக்கிறார். பாணினீயம் நூலை ஆராய்ந்தவர்கள் இதை மிக நுட்பமான நூல் என்று பாராட்டி இருக்கிறார்களாம்.
இதைப்பற்றி ஒரு கதையும் உண்டு:
சிவபெருமான் தன்னிடமுள்ள தமருகத்தை (உடுக்கையை) 14 முறை அடித்துள்ளார். அந்த 14 முறையும் அது வெவ்வேறு ஒலிகளை எழுப்பியது. அதைக் கேட்ட ரிஷிகள் தங்கள் அறிவுக்கேற்ப 14 சூத்திரங்களை ஆக்கி உள்ளனர். அவைகளில் முதல் சூத்திரங்கள் அ,இ,உ, என்பன. சிவன் வைத்திருக்கும் இந்த தமருகம் என்னும் உடுக்கையில்தான் இந்த ஒலி வந்ததாம். அந்த உடுக்கையின் ஒருபக்கத்தில் புருஷவடிவம் உண்டாம். மறுபக்கத்தில் சக்தி வடிவம் உண்டாம்.
இவ்வாறு இலக்கணம் செய்யப்பட்ட சமஸ்கிருத நூலில் முதலில் உருவான நூல்தான் "வேதம்" என்கிறார்கள். அதாவது நான்கு வேதங்களான, ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியன.
சமஸ்கிரு மொழியில் உருவாக்கப்பட்ட வேதங்கள், வேதாங்கம், மீமாம்சம், தர்மசாஸ்திரம், புராணம், தர்க்க சாஸ்திரம் இவைகள் உருவாயின. பின்னர், இதன் விளக்கங்களாக, வேதபாஷியம், வியாக்கியானம், பிராம்மணம், மந்திரம், ஆரணியகம், உபநிஷதம், சிட்சை, வியாகரணம், சந்தசு திருத்தம், ஜோதிடம், கற்பம், பிரயோகம், பூர்வ மீமாம்சை, வேதாந்தம், அத்வைத வேதாந்தம், விசிஷ்டாத்வைத வேதாந்தம், சைவ வேதாந்தம், காணபத்தியம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சாங்கியம், யோகம், தர்க்கம், ஸ்மிருதி, ஆசாரம், காலநிர்ணயம், தானம், பிரயோகம், பிராயசித்தம், வியவகாரம், சிராத்தம், நீதி, நிகண்டு, அலங்காரம், பரதம், சங்கீதம், இதிகாசம், சங்கிதை, ஸ்தோத்திரம், கீதை, மஹாத்மியம், காவியம், சம்பு, கதை, சரித்திரம், நாடகம், கணிதம், பூகோள சாஸ்திரம், சிற்பம், சாமுத்திரகம், வைத்தியம், காமசாஸ்திரம், யுத்தசாஸ்திரம், முதலிய பிரிவுகளாக பிரித்து நூல்கள் தனித்தனியே உருவாயின என்கிறார்கள்.
இதில் தர்க்க சாஸ்திரத்தில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் இருக்கிறது என்றால் மற்றவற்றில் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தால் எண்ணிக்கையில் அடங்கா நூல்கள் உள்ளனவாம்.
சமஸ்கிருத சொற்கள், இனிமை, வீரம், கோபம், சோகம், அச்சம், அதிசயம் முதலிய உணர்ச்சிகளை அந்த சொற்களே ஏற்படுத்துமாம்; அதுதான் இந்த சமஸ்கிருதத்தின் சிறப்பாம்.